உலகம் பிறந்த கதை/சிறு உயிர் இனங்களின் பவனி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15 சிறு உயிர் இனங்களின் பவனி

இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதிலே தாம் எல்லாரும் நடிகர். வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறோம். இயற்கையின் விளையாட்டாகிய இந்த நாடகம் உலகம் தோன்றிய காள் முதலாக நடந்து கொண்டே யிருக்கிறது. எப்போது முடியும் என்று சொல்ல எவராலும் இயலாது.

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டுடையார்’ என்கிறார் கம்பர்.

இந்த விளையாட்டு மேடை பற்றித்தான் இது வரை சொல்லப்பட்டது. மேடை கண்டோம். அதன் ஜோடிப்பு கண்டோம். 

இனி, நாடகம் தொடங்கப் போகிறது. ஜீவ நாடகம். பல விதமான நடிகர்கள் நம் முன்னே தோன்றப் போகிறார்கள்; தோன்றி நடக்கப் போகிறார்கள்; நடித்து மறையப் போகிறார்கள். நமது உணர்ச்சியைத் தூண்டப் போகிறார்கள். வியப்புக் கடலில் வீழ்த்தப் போகிறார்கள்.

திரை விலகுகிறது. முதல் காட்சி தொடங்குகிறது. ஐம்பது கோடி ஆண்டுகள் முன்னே போகிறோம்.

பழைய ஜீவ யுகம். உலகம் வெறிச்' சென்று இருக்கிறது. பூமியில் புல் பூண்டு எதுவும் இல்லை. பசுமை என்பதே எங்கும் காணவில்லை. மரம் செடிகள்! கொடிகள்! எவையுமே இல்லை.

ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன. சூரியன் வெப்பத்தைப் பொழிகிறான். நீர் கிலைகள் ஆவியாகின்றன. மேகமாகின்றன. பின் மழையாகி மண்ணில் வீழ்கின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன. அலைகள் எழுகின்றன; விழுகின்றன.

உலகின் மீது உயிர் இனம் எதுவுமே இல்லை. கிரீச்” என்று ஒலிப்பதற்குப் பறவை இல்லை. உ.றுமுதற்கு விலங்குகள் இல்லை. அமைதி! அமைதி! எங்கும் ஒரே அமைதி!

மூன்று அங்குல நீளத்திலே ஓர் உயிர் இனம் கடலிலே தோன்றுகிறது. எவ்வளவு பெரிய உயிர் பாருங்கள் ! 'டிரிலோ பைட்' என்று இதற்குப் பெயர்.

மிகப் பெரிசு என்று சொல்லக் கூடிய ‘டிரிலோ பைட்' பதினெட்டு அங்குல நீளமே இருக்கும். இன்றைய நான்கு இனங்களின் மூதாதைகள் இவை.

சுமார் பதினான்கு கோடி வருஷங்கள் கடலிலே தனியரசு செலுத்தியவை இந்த ‘டிரிலோ பைட்' இனங்களே.

முதல் இரண்டு சகாப்தங்கள் முடியும் வரை வாழ்ந்து, பின் ஏற்பட்ட யுகப் பிரளயத் திலே இந்த ‘டிரிலோ பைட்'களும் ஒழிந்தன; ஒழிந்தே போயின.

மூன்றாவதாகிய சிலூரிய சகாப்தம் தோன்றுகிறது. பூமியானது புதிய பொலிவு பெற்று விளங்குகிறது. கடல்கள் உள் வாங்குகின்றன.

கடல்கள் விலகிச் சென்ற சதுப்பு நிலங்களிலே கடற் பூண்டுகள் முளைக்கின்றன. குச்சி போல் நீண்டு ஆகாயத்தை அளாவும் வகையில் மரங்கள் முளைக்கின்றன.

கடலிலே புதிதோர் இனம் தோன்றுகிறது. உயிர் இனம். மீன் போல் இருக்கிறது. இன்றைய சுறா மீன்களின் மூதாதைகள் இந்த மீன்கள். இவற்றிற்குச் கண்களும் பற்களும், முதுகு எலும்பும் காணப்படுகின்றன.

சிலவற்றிற்கு மூன்று கண்கள் காணப்படுகின்றன. நீரிலே வெகு வேகமாக இவை நீந்துகின்றன. துள்ளித் திரிகின்றன. இவற்றிற்குப் பிறகு உயிர் இனங்களின் பவனி வெகு வேகமாக நடைபெறுகிறது.

ஜலமண்டலி, நட்டுவாக்கிளி முதலியவற்றின் மூதாதைகளான கடல் தேள்களும் தோன்றுகின்றன.

போர்! போர்! பெரும் போர்! கடலிலே போர்! பெரிய உயிர் இனங்களுக்கும் சிறிய உயிர் இனங்களுக்கும் போர். பெரிய உயிர் இனங்கள் சிறியவற்றை விழுங்கி விடுகின்றன. சிறியவை அழிகின்றன. பெரியவை கொழுக்கின்றன.

இவ்விதம் மூன்றரைக் கோடி ஆண்டுகள் ஓடிப் போகின்றன. சிலூரிய சகாப்தம் முடிகிறது.

திவோனிய சகாப்தம் தொடங்குகிறது. சதுப்பு நிலங்களிலே மேலும் அடர்ந்த மரங்கள் வளர்கின்றன. காடுகள் தோன்றுகின்றன. கடலிலே கடக்கும் சண்டைக்குப் பயந்து சில மீன்கள் நிலத்துக்கு வருகின்றன, உயிருக்குப் பயந்து வருகின்றன. உணவுக்கு வகை தேடி வருகின்றன. நீரிலே வாழ்ந்த இவற்றிற்கு இச்சதுப்பு நிலம் ஓரளவு ஆறுதல் அளிக்கிறது; ஆதரவு அளிக்கிறது. நீரிலே நீந்தலாம். அந்த மாதிரி சதுப்பு நிலத்திலே நீந்த முடியுமா? முடியாது.

வாழ முடியுமா? முடியாது. போராட்டம்! போராட்டம்! வாழ்வதற்குப் போராட்டம்! தவிக்கின்றன. தத்தளிக்கின்றன. அந்தப் போராட்டத்தினால் அவற்றின் உரு மாறுகிறது. சூழ்நிலைக்குத் தக்கபடி மாறுகிறது, வாழ்க்கைக்குத் தகுந்தவாறு மாறுகிறது! அவற்றின் உடலிலே பக்கவாட்டில் கால்கள் முளைக்கின்றன. அந்தச் சதுப்பு நிலத்திலே இவை தத்தித் தத்தித் திரிகின்றன.

எனினும் இவற்றிற்குப் பிறந்த வீட்டு ஆசை போகவில்லை. அடிக்கடி கடலுக்குச் சென்று திரும்புகின்றன ஏன்? முட்டையிட. தவளைகளின் மூதாதைகள் இவை.

நாலரைக் கோடி வருஷங்கள் செல்கின்றன. திவோனிய சகாப்தமும் முடிகிறது. மிசி சிப்பி, பென்சில்வேனிய சகாப்தங்கள் தொடங்குகின்றன. காடுகள் வளர்கின்றன. மேலும் வளர்கின்றன. அடர்ந்து வளர்கின்றன. வானோங்கி வளர்கின்றன. அசாத்தியமான ராட்சஸ வளர்ச்சி!

சதுப்பு நிலம் எவ்வளவு தான் தாங்கும்! வளர்ந்த மரங்கள் பெயர்ந்து வீழ்கின்றன. சதுப்பு நிலத்தில் அமிழ்கின்றன. இவற்றிற் கிடையே ஓணான் மாதிரி சில உயிர் இனங்கள் தவழ்கின்றன.

அவை எவை? சென்ற சகாப்தத்திலே கடலிலிருந்து வந்தவை. இவற்றிற்குப் பெரு வயிறும் பக்க வாட்டில் கால்களும் இருக்கின்றன. அரணை, பல்லி, ஓணான், முதலை இவற்றின் மூதாதைகள் இவை. வாழ்க்கை அமைதியாக நடக்கின்றது.

சதுப்பு நிலத்திலே வீழ்ந்து அழுகி, மக்கி மண்ணோடு மண்ணான மரங்களே நிலக்கரி ஆயின. ஆகவே, இந்த இரண்டு சகாப்தங்களையும் 'கார்போனிவரஸ்' சகாப்தம் என்று அழைப்பது உண்டு. அதாவது நிலக்கரி சகாப்தம் என்று பொருள்.

நிலக்கரி சகாப்தம் முடிகிறது. பெர்மிய சகாப்தம் தொடங்குகிறது.

முன்பு, கடலுக்குப் போய் வந்த உயிர் இனங்களின் பிறந்த வீட்டு ஆசை இப்போது முற்றும் போய்விட்டது. இவை கடலைப் புறக்கணித்துவிட்டன. சதுப்பு நிலத்திலே விழுந்து கிடக்கும் மரங்களின் இலைகளைத் தின்று வயிறு புடைக்கின்றன. பஞ்சமே இல்லை, போட்டியில்லை. பயம் இல்லை. ஆனந்தமான வாழ்க்கை.

ஆகவே, இந்த ஓணான் இனம் எருமை போல் சேற்றிலே புரண்டு, தழைகளைத் தின்று, சோம்பேறிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஏது?

இவ்விதமாக பழைய ஜீவயுகம் முடிவடைகிறது. நாடகத்தின் முதல் காட்சி முடிகிறது. மொத்தம் முப்பத்து மூன்று கோடி ஆண்டுகள் ஓடிவிட்டன.

இனி, இந்தச் சோம்பேறி ஓணான் பெரிய பெரிய இனமாகி அசுர ஜீவன்களாகி, பூமியையும், கடலையும் அதிரச் செய்த அதிசயத்தைக் காண்போம்.