உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/தனது முன்னவரைத் தேடும் மனிதன்

விக்கிமூலம் இலிருந்து

19. தனது முன்னவரைத்
தேடும் மனிதன்

குரங்குகளுக்குப் பிறகே மனிதன் தோன்றினான் என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?

இதுதான் ஆராய்ச்சியாளர் கேள்வி. ஆகவே, குரங்குகளுக்கும் மனித குலத்துக்கும் இடையே உள்ள எலும்புகளைத் தேடத் தொடங்கினார்கள்.

ஜாவாவிலே ஊராங் ஊட்டாங் என்ற குரங்கினம் இருக்கிறது. ஆங்கே போய் தேடினால் ஏதாவது கிடைக்கலாம் என்று நினைத்தார் ஓர் அறிஞர். அவர் பெயர் டூபி.

ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணுற்று ஓராம் ஆண்டு ஜாவா தீவிலே உள்ள ஸோலோ நதிக்கரையிலே சில மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் கண்டு எடுத்தார் அவர். 'குரங்குகளுக்குப் பின் தோன்றிய ஆதிமனிதன் இவனே' என்றார் அவர்.

‘பித்த கான்த்ரோபஸ் ஏரக்டஸ்' என்று அவனுக்குப் பெயர் கொடுத்தார். ‘பித்தகோ' என்றால் கிரீக் மொழியில் குரங்கு என்று பொருள். அந்த்ரோபஸ்' என்றால் மனிதன்.

இவ்வளவில் நின்றார்களா ஆராய்ச்சியாளர்கள்? இல்லை. தொடர்ந்து தேடினார்கள்.

டாக்டர் பிளாக் என்பவர் ஓர் அறிஞர். அவர் என்ன செய்தார்? சீனாவுக்குப் போனார். பீகிங் அருகிலே சில மனித எலும்புகளைக் கண்டுபிடித்தார். 'ஜாவா மனிதனின் சகோதரன் இவன்' என்றார். சீனா மனிதன் அல்லது பீகிங் மனிதன் என்று இவனுக்குப் பெயரிட்டார்.

அடுத்தபடியாக ஆப்பிரிக்காவிலே தேடத் தொடங்கினார்கள். தென் ஆப்பிரிக்காவிலே ஓரிடம்.

குரோம்டராய் என்பது அந்த இடத்தின் பெயர். அங்கே சில மனித எலும்புகளைக் கண்டுபிடித்தார் டாக்டர் புரூம் என்பவர். அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து எட்டாம் ஆண்டு. 'மனித குலத்தின் மூதாதை இவனே என்றார்.

ஆகவே, குரங்குகளுடன் தோன்றிப் படிப்படியாக மாறி இன்றைய மனிதன் தோன்றினான்.

இவ்விதமாகச் சென்ற ஐம்பது கோடி வருஷ வரலாற்றினை அறிந்தோம். இனி இருள் படிந்த அந்த நூற்றைம்பது கோடி வருஷ சரித்திரத்தைக் கவனிப்போம்.

ஆதியில் எப்படி உயிர் தோன்றியது? கவனிப்போம்.