உலகம் பிறந்த கதை/மனித குமாரன் வருகை
18. மனித குமாரன் வருகை
அவற்றுடன் சேராமல் மலைகளிலே தங்கின சில. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை குரங்குகள்.
‘லெமூர்' என்பது ஒரு வகைக் குரங்கு, இந்த இனம் ‘மடகாஸ்கர்' தீவில்தான் இருக்கிறது. இக் குரங்களின் கையானது நம் கை போலவே இருக்கிறது.
மற்ற எல்லா மிருகங்களுக்கும் கண் பக்கவாட்டில் இருக்கிறது. பறவைகளுக்கும் இப்படியே. ஆனால் குரங்கு இனத்தின் கண் மட்டும் முகத்தின் முன் பகுதியில் இருக்கிறது.
'டார்சியர்ஸ்' என்பவை இன்னொரு வகைக் குரங்குகள். இவை, பார்வைக்குப் பூனை அளவே இருக்கும். ஆனால் இவற்றின் கண்கள் பெரியவை. கிப்பன், ஊராங் ஊட்டாங் போன்ற மனிதக் குரங்குகள் ஜாவாவில் உள்ளன. அவை நம்மைப் போலவே இருக்கின்றன.
அவற்றின் மண்டை ஓட்டுக்கும் நமது மண்டை ஓட்டுக்கும் அதிக வேற்றுமை இல்லை. அவற்றின் கால்களுக்கும் நமது கால்களுக்கும் அதிக வேற்றுமை இல்லை.ஆனால் அவை, நம்மைப் போல் நிமிர்ந்து நேராக நடப்பது இல்லை. அவ்வளவே.
மலைகளிலே தங்கிய இந்தக் குரங்குகள் வெகு வேகமாக ஓடத் தொடங்கின. அதனால் காலிலே பிடிப்பும், கையிலே பிடிப்பும் அவற்றிற்கு உண்டாயின. அதாவது மரக்கிளைகளை இறுகப் பிடிக்கும் சக்தி கால்களுக்கு உண்டாயின: கைகளுக்கும் உண்டாயின.
இந்தக் குரங்குகள் மரக்கிளைகளைப் பிடித்துத் தொங்கின; தாவின. இவ்விதம் கிளைக்குக் கிளை ஊசலாடித் தாவும் வழக்கம் வளரவே அவற்றின் உடல் அமைப்பிலும் மாறுதல் தோன்றின. இடுப்பிலே வலு உண்டாயிற்று. நிமிர்ந்து நிற்கத் தொடங்கின.
இல்விதம் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியவனே மனித குலத்தின் மூதாதை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த மூதாதையர் காலம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் முன்பு எனலாம்.