உலகம் பிறந்த கதை/நமக்கு முன்பு

விக்கிமூலம் இலிருந்து
17. நமக்கு முன்பு

சமீப ஜீவ யுகமானது சுமார் ஆறு கோடி ஆண்டுகள் முன்பு தொடங்கிற்று. அப்போது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் நிலத்தைக் கடல் கொண்டது. வேறு சில இடங்களில் கடல் விலகிப் போயிற்று; நிலம் தோன்றியது. திதியன் கடல் இருந்த இடத்திலே இமயமலை தோன்றியது. ஆல்ப்ஸ் மலையும் தோன்றியது. இன்றைய தினம் நாம் காணும் பூகோள அமைப்பு அன்று ஏற்பட்டதே

பூமி தேவியானவள் மிக்க எழில் பெற்று விளங்கினாள். எங்கு நோக்கினும் மரங்கள்.

செடிகள்! கொடிகள்! மரகதப் பாய் விரித்தது போன்ற பசும் புல் தரைகள் காணப்பட்டன. கருக் கொண்ட காரிகை போல் கவின் பெற்று விளங்கினாள் நில மடந்தை. உண்மை! உண்மை! புதியதொரு சகாப்தத்துக்குரிய உயிர் இனங்களைக் கருக் கொண்டு இருந்தாள் அவள். அதற்கு அறிகுறியாக செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் மலர்களைச் சொரிந்தன. பூமியிலே முதன் முதலாக மலர்கள் தோன்றிய காலம் இதுவே.

புது யுகம்! புது யுகம்! எல்லா வகையிலும் புதுமை! சென்ற யுகங்களை விடப் புதிய வளர்ச்சி.

சென்ற யுகத்திலே இருந்த அசுரப் பிராணிகள் முட்டையிட்டன. அதன் பிறகு அவற்றிற்கும் அந்தமுட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கேயோ முட்டையிட்டு விட்டு எப்படியோ திரிந்து கொண்டிருந்தன அந்த மூர்க்கப் பிராணிகள். தன் இனம் என்ற அறிவு அவற்றிற்கு ஏற்படவில்லை. தன் குஞ்சு என்ற பாசம் 'மிருகஜன்மம்' என்பதற்கு மிகப் பொருத்தமானவை இவைகளே! சுருங்கச் சொன்னால் மூளை இல்லாத பிராணிகள் எனலாம்! மூளை இருந்தது. ஆனால் வளரவில்லை .

அந்த அசுரப் பிராணிகளுக்கு இன உணர்ச்சியே இல்லை. தன் இனம் என்ற உணர்ச்சி இல்லை.

ஒன்றை மற்றொன்று கண்டு விட்டால் போர் முழக்கம் செய்து கொண்டு தின்னத் தொடங்கின. சேர்ந்து வாழும் உணர்வே இல்லை. சப்தங்களின் மூலம் ஒன்றுக் கொன்று உணர்ச்சி தெரிவித்துச் சேர்ந்து வாழும் உணர்வு இல்லை. சகோதரப் பிராணிகளின் உள்ளத்திலே அன்புணர்ச்சி எழுப்பும் திறமையே இல்லை.

பழைய - சென்று போன - யுகத்தின் நிலைமை இது. ஆனால் புது யுகம்- அதாவது சமீப ஜீவ யுகம் இதற்கு நேர் மாறானது.

இந்த யுகத்திலே தோன்றிய பிராணிகள் குட்டி போட்டன; பால் கொடுக்கத் தொடங்கின. பறவைகள் முட்டையிட்டன. முட்டை யைப் பாதுகாத்து தம் குஞ்சு என்ற ஆசையுடன் பேணி வளர்த்தன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இந்த இனங்கள் சென்ற யுகத்திலும் இருந்தன என்றாலும் அந்த அசுரப் பிராணிகளுக்குப் பயந்து அடங்கி, ஒடுங்கி, இருக்கும் இடம் தெரியாமல் இவை இருந்தன. அசுரப் பிராணிகள் மறைந்து ஒழியவே புதிய யுகத்திலே இவை பிரமாதமான உருவும் அறிவும் பெற்று வளர்ந்தன.

ஊர்வன, நடப்பன, பறப்பன ஆகிய எல்லா உயிர் இனங்களும் இந்த யுகத்திலே தோன்றின.

இவை எல்லாம் எப்படித் தோன்றின? எப்படி வளர்ந்தன? நமக்குத் தெரியாது. திட்டவட்டமாக எதுவும் சொல்ல இயலாது.

எனினும் குதிரை யானை ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகள் பற்றிய முழு விபரம் கிடைத்துள்ளது.

குதிரையின் வம்சம் நேற்றுத் தோன்றியது அன்று. சுமார் நாலு கோடி வருஷங்கள் முன்பு தோன்றியது ஆகும்.

தோன்றிய காலத்திலே குதிரை இன்று போல் இருந்ததா? இல்லை. பின் எப்படி இருந்தது? நாய்போல் இருந்தது. நாய் அளவு உயரமே! நாய்க்கு இருப்பது போல காலில் விரல் இல்லை. மிக மெல்லிய கால்கள். வேகமாக ஓடுவதற்கு லாயக்கில்லாதவை. இந்தக் குதிரைக்கு ‘இயோஹிப்பஸ்' என்று பெயர். அதாவது 'உதய காலப் புரவி' எனலாம். இப்படி இருந்த குதிரைதான் சிறிது சிறிதாக மாறி, வளர்ந்து, வளர்ந்து பல தலைமுறைகள் சென்ற பின் இன்றைய நிலை அடைந்துள்ளது.

இந்த விபரம் முழுவதையும் நன்றாக ஆராய்ந்து பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்றைய தினம் நிலத்திலே வசிக்கும் மிருகங்களிலே மிகப்பெரியது எது? யானை.

ஆனால் நான்கு கோடி ஆண்டுகள் முன்பு தோன்றிய யானையின் முன்னோர்கள் இவ்விதம் இல்லை. அவற்றிற்குத் துதிக்கை இல்லை.

அந்தக் காலத்து யானை, ஒரு பெரிய பன்றி போலத்தான் இருந்தது. பன்றி உயரமே! உரமான கால்கள் இல்லை. நீண்ட தந்தங்கள் இல்லை.

இப்படி இருந்த யானைதான் சிறிது சிறிதாக மாறியது. சிறிது சிறிதாகத் துதிக்கை நீண்டது. இப்படிப் பல தலைமுறைகள் சென்றன. கொஞ்சம் கொஞ்சமாக உருவம் பெருத்தது. பேருருவம் பெற் றது. கொம்புகளும் தோன்றின. ஒரு காலத்திலே யானை உடம்பு முழுவதும் ரோமம் அடர்ந்து இருந்தது!