உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அன்பு

விக்கிமூலம் இலிருந்து


உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

1. அன்பு

அழுது கொண்டே பிறக்கின்ற உலகக் குழந்தைகள், இறுதியில் சிரித்துக் கொண்டே இறக்கும் வரைக்கும் வாழ்வியல் அறம் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாளர் திருவள்ளுவர் பெருமான் அன்பு என்ற சுக உணர்வை எவ்வாறு புறம் காட்டுகிறார் என்று நோக்கலாமா? இதோ அவரது குறட்பாவின் பொழிவு!

அன்புள்ள உடல்தான் உயிருள்ளது; அதன் வழியில் நடந்து கொள்கிறவர்களது உடல்தான் உயிருள்ளது; அன்பில்லாத உடல் வெறும் தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளே. இவருடைய காலம் கி.மு. மறுபேச்சுக்கு உண்டா இடம்?

இப்சன் என்பவர் நார்வே நாட்டில் வாழ்ந்த ஒரு நாடக ஆசிரியர். அவர் பல நாடகங்கள் எழுதிப் புகழ்பெற்ற ஒரு புதுமைப் புரட்சியாளர். இவர் கி.பி. 1826-ஆம் ஆண்டில் பிறந்தார். 1906-ஆம் ஆண்டின் இடையில் இறந்தார். இவர், அன்பு என்ற தத்துவத்தைப் பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா? இதோ: "அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது” என்கிறார்.

அதே அன்பு பற்றி எழுதுகின்ற அந்தோனி என்ற அறிஞர் ஒருவர் இப்சன் கருத்துக்கு சற்று முரணாக, “உலகத்தின் மக்களிடம் எவன் ஒருவன் உண்மையான அன்பைக் காட்டி மதிக்கிறானோ, அவனே உண்மையில் வாழ்ந்து காட்டிய மனித நேயன் என்று மதிக்கப் படுபவனாகிறான்” என்கிறார்.

அதே அன்பை, ஆங்கில மகா கவிஞரான 'போப்' என்பவன் எந்த நோக்கத்தில் பார்க்கிறான் பாருங்கள்.

‘வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம் என்று கூறும் இந்த கவிஞர், இங்கிலாந்து நாட்டில் கி.பி.1688-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1744-ஆம் ஆண்டில் மறைந்தவர். அதாவது தனது 56 ஆண்டு காலத்தில் அவர் கண்ட அனுபவ அன்பு அது.

சுவீடிஷ் நாட்டின் அறிஞரான மேட்டர் லிங்க் என்பவர், அன்பு குறித்து கூறும்போது, 'அன்பு மூலமே எதையும் காண முடியும். அன்பு இல்லாமல் எதையும் காண்பவன் இருட்டில் தனது கண்களை இடுக்கிக் கஷ்டப்பட்டுக் காண முயலுகிறவனுக்குச் சமம் அல்லவா? என்று கேட்கிறார் உலகைப் பார்த்து.

இதே 'அன்பை' போர்ன் எப்படி அளவிடுகிறான் பாருங்கள்; வியப்பு புகழும், அன்பு ஊமையாய் இருக்கும் என்கிறார்! ஆனால், மாவீரன் நெப்போலியன், தனது போராட்டக் குணத்தையும் மீறி, 'உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டானாம்.'

அவன், பிரெஞ்சு சக்கரவர்த்தி அல்லவா? போர் வெறியன் என்றல்லவா உலகம் அவனைக் கணிக்கிறது. ஆனாலும் அவன் காட்டும் மனித அன்பைப் பாருங்கள்!

சிறந்த ஆங்கில இலக்கிய மேதையான ரஸ்கின், கி.பி.1819ஆம் ஆண்டு தோன்றி கி.பி.1900-மாவது வருடத்தில் மறைந்து, ஏறக்குறைய 81 ஆண்டுகளாக வைர வாழ்வு வாழ்ந்து காட்டிய அவர், அன்பு பற்றி என்ன பேசுகிறார்?

பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும் என்று நமக்குக் கூறி நமது வாழ்வை மேம்படுத்துகிறான். இல்லையா?

இந்த பேரறிஞனைப் போல அதே காலத்தில் வாழ்ந்த பெய்லி என்ற ஐரிஷ்காரன், அன்பு செய்பவர், பெரிய உண்மைகளை உணர்ந்து கூறுபவர், இவர்கள் எல்லாரும் கவிஞர்களே. எனவே, உண்மைகளில் எல்லாம் தலை சிறந்த உண்மை அன்பு தான்.

அறிவை எத்தனையோ பேர் விலைக்கு வாங்கி விடுகிறார்கள். ஆனால், உணர்ச்சி, அன்பு ஒரு நாளும் நான் தான் அன்பு வருகிறேன் என்று முரசு கொட்டிக் கொண்டு மக்கள் சந்தைக்கு வருவ்து கிடையாது என்கிறார் ஜே.ஆர்.லல்லி என்ற பேரறிஞர். ஆனால், கி.பி.1564-ஆம் ஆண்டில் தோன்றி 1616 - ஆம் ஆண்டில் மறைந்த உலகம் புகழும் பிரபல நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் என்ற மாபெரும் கவிஞர், "மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது" என்று அழுத்தமாக உலகுக்கு அறிவிக்கிறார்.

ஆனால், அறிவியல் தத்துவங்களின் தந்தையான ஆங்கில எழுத்தாளர் பேக்கன் என்பவர், கி.பி.1561-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1616-ஆம் ஆண்டில் மறைந்தவரான அவர், அன்பு பற்றி என்ன சொல்கிறார்? “அன்பை ஆன்மாவின் பெருந்தன்மை என்கிறார். அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு" என்கிறார்.

அன்பு பற்றி அடிக்கடி பேசும் சிறந்த ஆங்கில இலக்கிய வித்தகரான ரஸ்கின் ஓரிடத்தில், அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால் என்கிறார்! புட்டிப் பால் அன்பை அவர் ஓர் அன்பின் அணு அளவாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பும், நம்பிக்கையும் பெற்றிராவிட்டால் அவனது ஆற்றல் அனைத்துமே கூட அழிந்து போய்விடலாம்" என்று கூறுகிறார்.

சிறந்த ஆங்கில கலை விமர்சகராக விளங்கிய இதே ரஸ்கின் என்ற மேதை கி.பி.1819-ஆம் ஆண்டு தோன்றி கி.பி. 1900-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 81 ஆண்டுகள் வாழ்ந்த இந்த இங்கிலாந்து நாட்டுக் கலை, இலக்கிய ஞானியான இவர், அன்பு பற்றி மற்றோரிடத்தில் குறிப்பிடும்போது, 'அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்' என்கிறார். அவ்வாறு ஈகையைச் செய்யும் போது என்ன பயன் உண்டாகிறது என்பதை அவர், "நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி' என்று அற்புதமாகச் சுட்டுகின்றார்.

கி.பி.1631-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1700 ஆவது வருடத்தில் தனது வாழ்நாளை முடித்து மாண்ட ஆங்கில நாட்டின் சிறந்த கவிஞரான 'டிரைடன்' என்பவர், அதே அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அன்பு உண்டு, இரக்கம் இல்லை என்று கண்கட்டுவித்தைக் காட்டமுடியுமா? ஏனென்றால், அன்பும், இரக்கமும் இரட்டைக் குழந்தைகளே” என்று சுட்டிக் காட்டுகின்றார்.

நான் எழுதுகின்ற ஒவ்வொரு சொல்லும் விலை மதிப்பற்றது என்பதையே பெயராகக் கொண்ட மாபெரும் ஆங்கில நாட்டுப் பெருங்கவிஞரான வோர்ட்ஸ் வொர்த் கி.பி.1770-ஆம் வருடம் பிறந்தவர் கி.பி.1850-ஆம் ஆண்டு விலை மதிப்பற்ற தனது எண்பதாண்டு கால உலக வாழ்வுடன் மறைந்தார்.

'அன்பு' என்ற தத்துவம் பற்றி அவர் என்ன கூறுகிறார்? "மனித வாழ்வின் புனிதமான பாகம் அன்பு மறந்து போன அருள்நிறைந்த சிறு அக உணர்வின்செயல்கள் என்று விலை மதிப்பே அற்ற உணர்வை மனிதனுக்குள் சுரக்கச் செய்கிறார்.

ஆங்கில நாட்டின் மாபெரும் எழுத்துலக மேதை என்று அழைக்கப்பட்டவர் மார்லி என்பவர். அவர் கி.பி.1838-ஆம் ஆண்டில் தோன்றி கி.பி.1923-ல் புகழ் எய்தியவர். ஏறக்குறைய 85 ஆண்டுகள் இந்த வையத்தில் வாழ்ந்த அந்த வாழ்வியல் வழிகாட்டியான அவர், "மக்கள் இடையே கருணையும், உடன்பிறப்பு உணர்வுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டிய பேருணர்ச்சி அதுதான் அன்பு எனப்படும் பண்பு' என்று அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

"நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டிடும் அன்பைப் போலவே ஓர் அழியாத உணர்ச்சியின் ஊற்றுக் கண்" என்று, கி.பி.1874ல் தோன்றி, கி.பி. 1936ல் மறைந்த ஆங்கிலப் பேரறிஞரான செஸ்டர்டன் கூறுகிறார் . ஜார்ஜ் எலியட் என்பவர் ஓர் எழுத்துலகப் பெண்ணரசி! சிறந்த ஆங்கிலப் பெருங்கவிஞரான இந்த அம்மையார் கி.பி.1819ஆம் ஆண்டில் பிறந்து கி.பி.1880-ல் ஏறக்குறைய 61 ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு நாவலாசிரியை. அவர் என்ன சொல்கிறார் 'அன்பு' என்ற மனித உணர்வைப் பற்றி! பார்ப்போமே!

'அடக்கமும், அன்பும் துன்பங்களால் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவ உணர்வுகளாம்! எவ்வளவு சுருக்கமாக அந்தப் பெண்மணி கூறுகிறார் பார்த்தீர்களா?

பர்ன்ஸ் என்ற இந்த கவிஞர், ஸ்காட்லாந்து நாட்டிலே கி.பி.1759-ஆம் ஆண்டு பிறந்து கி.பி. 1796ல் மறைந்த மகாகவி. இவர் 'அன்பு' பற்றி விளக்கும் போது,

'தவறு தெரிந்து செய்தாலும், உனது உடன் பிறப்பு என்பதற்காக விட்டுவிடாதே, ஆராய்வாயாக! அதைவிட, உனது உடன் பிறந்தான் உன்னிடம் உன்னதமான பாசத்தோடும், உயர்வான பண்போடும் நடந்தாலும் கூட. தவறு செய்தான் எனப்படும்போதும் ஆராய்வாயாக! ஏன் தெரியுமா? நெறி பிறழ்வது மனித இயல்பு தானே என்று சிந்தனை செய்!

ஆங்கிலப் பேரறிஞர் கார்லைல்; அவர் கி.பி.1795ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1881ல் மறைந்த புகழாளர். ஏறக்குறைய 86 ஆண்டுகள் வாழ்ந்து காட்டிய அறிவு வைரம் அவர் என்ன கூறுகிறார் அன்பு பற்றி.

கண்டிக்க அறியாதவன், தெரியாதவன், எப்படி கருணை காட்டுவான்? கண்டிப்பாக முடியவே முடியாது என்று வினா தொடுத்து விடையை விளக்கிய வித்தகர் அவர்!

ஒருவன் அன்பு செய்தும் கூட அவனால் அந்த அன்பை பெறமுடியாமல் இருப்பது துக்ககரமான ஒரு செயல்! ஆனால், ஒருவனால் அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்கமானதாகும்.

இவ்வாறு கூறியவர் ஒரு நாடக ஆசிரியர். ஐரோப்பிய கண்டத்துள்ளே உள்ள பெல்ஜியம் என்ற நாட்டில் கி.பி.1852-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் நாடகக் கலை திறமைக்காக நோபல் பரிசு பெற்றவர். இந்த அறிவாளர்க்கு அறிவாளியான இவருடைய பெயர் மாட்டர் லிங்க். இவர்தான் அன்பு பற்றிய தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளவராவார்!

உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் என்ற நாவலாசிரியரைப் பற்றி அதிகம் கூற வேண்டியது இல்லை அல்லவா? இவர் ருஷ்ய நாட்டிலே கி.பி.1828-ஆம் ஆண்டு பிறந்தார். கி.பி. 1910-ஆம் ஆண்டு புகழ் பெற்று மறைந்த மாபெரும் எழுத்துலக ஞானி இவர்தான். காந்தியடிகளாருக்கும் வழிகாட்டியாக விளங்கியவர். இவரது போரும் சமாதானமும் என்ற நாவல் உலகப் புகழ் பெற்ற பெருநூல்! இவர் என்ன கூறுகிறார் அன்பு என்ற ஞானம் பற்றி?

"யாருக்கு நாம் அன்பு செய்கிறோமோ, அவரை நேசிக்கிறோம். யாருக்குத் தீமை செய்கிறோமோ அவரை வெறுக்கிறோம்" என்று உணர்ச்சியின் பாவங்களை உருவகப்படுத்தி உரைத்துள்ளார்:

இவர் ஓர் ஆங்கில ஆசிரியர்; அறிவியல் துறை அறிஞர். கி.பி.1561-ஆம் ஆண்டு பிறந்து கி.பி.1626-இல் மறைந்தார்! ஏறக்குறைய 65 ஆண்டு காலம் வாழ்ந்த இந்த மாமனிதர் 'அன்பு' பற்றிக் கூறும்போது, மனிதருக்கும் பல்கள் சங்கமம் அல்ல; எந்த இடத்தில் அன்பு இல்லையோ, அந்த இடத்தில் கூடியுள்ள முகங்கள் எல்லாம் வெறும் படங்கள்தான்! அங்கே பேசப்படும் பேச்சொலிகள் வெறும் கிண்கிணி ஓசைகளே!, என்று கூறிய அவரது பொருள் எவ்வளவு இன்றைய கூட்டங்களுக்கு, அதுவும் அரசியல் கூட்டங்களுக்குப் பொருந்துகிறது பார்த்தீர்களா?

இதோ மறுபடியும் ஆங்கில மகாகவி பேசுவதைக் கேளுங்கள்: "பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக" என்று சாபம் கொடுத்துவிட்டார் போப் என்ற இந்த ஆங்கிலப் பெருங்கவிஞன்!

★ ★ ★