உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா

விக்கிமூலம் இலிருந்து

11. ஆன்மா

உடல்-அது மண்ணேயன்றி வேறன்று ஆன்மா-அது நித்தியத்தின் முகை ஆகும்.

-கல்வெர்வெல்

மனிதனையும் அவன் செயல்களையும் அடக்கியாள்வது ஜட சக்தி அன்று, ஆன்மா சக்தியேயாகும்.

-கார்லைல்

ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.

-ஹோம்ஸ்

அறிவு கண்ணில் விளங்கும்-அன்பு முகத்தில் விளங்கும்-ஆனால் ஆன்மா விளங்குவது மனத்தில் கேட்கும் அந்தச் சிறு குரலிலேயே.

-லாங்பெலோ
மனத்தில் உயர்ந்த எண்ணங்களும் இலட்சியங்களும் இருக்குமானால், ஆன்மா உடம்பில் இருக்கும் பொழுதே ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதாகும்.
-ஸெனீகா

ஆன்மா சூரியனை ஒக்கும். இரவில் அஸ்தமித்து விடுகிறது. கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் வேறிடத்தில் வெளிச்சம் பரப்புவதற்காகவே சென்றுளது என்பதே உண்மை.

-கதே

ஆன்மாவின் செல்வம் அது எவ்வளவு அதிகமாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்; ஆன்மாவின் வறுமை எவ்வளவு குறைவாக உணரும் என்பதைக் கொண்டு அறியப்படும்.

-ஆல்ஜர்

நாகரிக முன்னேற்றத்திற்கு வகுக்கப்பட்டுள்ள கருவிகளில் எந்தக் காலத்திலும் சான்றோரின் ஆன்மசக்தியே தலைசிறந்ததாகும்.

- ஹாரிஸன்


உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது.

-ரஸ்கின்


ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும்-அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது.

-ஜெரிமி டெய்லர்


ஆன்மாவைப் பற்றிய முக்கிய பிரச்சினை அது எங்கிருந்து வந்தது என்பதன்று; அது எங்கே போகிறது என்பதாகும். அதை அறிய வாழ்நாள் முழுவதும் தேவை.

-ஸதே
ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.
-எமர்ஸன்

★ ★ ★