உள்ளடக்கத்துக்குச் செல்

உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/உரையாடல்

விக்கிமூலம் இலிருந்து

32. உரையாடல்

மனித வாழ்வில் கிடைக்கக்கூடிய மகத்தான இன்பங்களில் நல்ல சம்பாஷணையும் ஒன்று. இன்பகரமாய்க் கழிந்த மாலைநேரத்தை வர்ணிக்கப் புகுந்த ஜாண்ஸன் இன்று நன்கு சம்பாஷித்தோம்” என்று கூறி முடித்தார்.

-ஆவ்பரி

பிறரைப் பேசவிடாமல் பேசிக்கொண்டிருப்பவர் தம் குரல் தொனியைக் கேட்க விரும்புபவர், தம் குரல் தொனி இப்படியிருக்கும் என்று அறியாதவர் என இருவகையர்.

-செஸ்டர்ட்டன்

சுமுகமாயிருத்தல் என்பது விலையின்றிக் கிடைக்கும். ஆனால் அதைக்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும்.

-பிராங்க்ளின்

அறிவைவிட அந்தரங்க விசுவாசமே சம்பாஷணையை அதிகச் சோபிதமாக்கும்.

-ரோஷிவக்கல்டு

யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதியுண்டேல் உடனே கண்டித்துவிடு. கண்டிக்க வசதியின்றேல் பார்வையாலும் மெளனத்தாலும் அதிருப்தியைத் தெரிவித்துவிடு.

- எபிக்டெட்டஸ்

பிறர் மனம் புண்ணாகாமல் பேசுவது அவசியமாவது போலவே பிறர் பேச இடங்கொடுத்து மரியாதையாகச் செவிசாய்ப்பதும் அவசியமாகும்.

- ஹெச்.ஏ.

சாமர்த்தியத்தை விடத் தன்னம்பிக்கையே சம்பாஷணையில் ஜெயம் தரும்.

-ரோஷிவக்கல்டு

எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சுக்கொடு. எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.

-ஷேக்ஸ்பியர்

★ ★ ★