உள்ளடக்கத்துக்குச் செல்

உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை

விக்கிமூலம் இலிருந்து

17. கடமை

கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.

-செல்ஸன்

உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.

-கதே

கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.

-அனடோல் பிரான்ஸ்
சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.
-ஆர். எல். ஸ்டீவன்ஸன்

நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

-ஸதே

பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.

-ஆர்.எல். ஸ்டீவன்ஸன்

செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.

-ரொமெய்ன் ரோலண்டு

உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.

-எபிக்டெட்டஸ்

செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.

-ஆவ்பரி

கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.

-டெரன்ஸ்
இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.
-நியூட்டன்

அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.

-ஆப்ரகாம் லிங்கன்

உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.

-ஸெனீக்கா

சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!

கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.

-பால் ரிச்சர்டு

ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.

-ஆவ்பரி

ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே

-மீல்டன்

உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.

-செம்பிராண்ட்
தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.
-இப்ஸன்

★ ★ ★