உள்ளடக்கத்துக்குச் செல்

உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல்

விக்கிமூலம் இலிருந்து

23. குற்றம் காணல்

தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம்.

-தேல்ஸ்

தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான்.

-பென் ஜாண்ஸன்

பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம்.

-ஸிஸரோ

பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம். நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம்.

-ஸெனிக்கா

ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்டதாகும். கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்?

-பால் ரிச்சர்ட்

நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.

-ப்ரெளண்

எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு.

-ஆவ்பரி

பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும்.

-கதே

யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு.

-எபிக்டெட்டஸ்

அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான்.

-பெடிட்-லென்

ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும்.

-டெனிஸன்

குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும்.

-பால்ரிச்சர்ட்

உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு.

-பப்ளியஸ் ஸைரஸ்

உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும்.

-ஆவ்பரி

என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான்.

-பால் ரிச்சர்ட்

கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது.

-ஆங்கிலப் பழமொழி

ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான்.

-வாட்ஸ்

குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர்.

-லெய்ட்டன்

சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.

-கோல்ட்ஸ்மித்

குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம்.

-லா புரூயர்

தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை.

-ஹாட்ஜஸன்

பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும்.

- அடிஸன்

குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர்.

- ரிக்டர்

★ ★ ★