உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம்
9. மதம்
நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு.
-பெர்னார்ட் ஷா
உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.
-தாமஸ் பெய்ன்
மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம்.
-ஜார்ஜ் எலியட்
அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம்.
-ஸவனரோலா
நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை.
-ஸ்விப்ட்
-லார்ட் ஷாப்ட்ஸ்பரி
பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை!
- பென்
சரியாக அறியாத சமயமே நம்மை அழகுக்கு அந்நியமாக்கும். சமயம் அழகைக் கண்டு ஆனந்திக்கும்படி செய்யுமானால், அப்பொழுது சமயம் உண்மை, சரியாக அறிந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம்.
-லெஸ்ஸிங்
எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான். விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம்.
-கதே
எந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால், முதலில் வேண்டுவது சமய சாந்தி, இரண்டாவது கல்வியில் சுவை.
-ஹெர்ஷல்
சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.
- அனடோல் பிரான்ஸ்
சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன், தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான்.
- டால்ஸ்டாய்
-ஸாமுவேல் பட்லர்
சமயம் மாறுபவன் தலை போன பின் இன்ன தெனத்திரும்பிப் பார்க்கும் ஈயை ஒப்பான்.
-பட்லர்
அற உணர்ச்சி அளிக்காத சடங்குகள் அனைத்தும் அழிக்கத் தக்கவைகளே.
-ஸவனரோலா
கிறிஸ்து, மதநூல் எதுவும் எழுதவில்லை. நன்மையான காரியங்களைச் செய்வதிலேயே கருத்தாயிருந்தார்.
-ஹொரேஸ் மான்
கிறிஸ்து தர்க்க சாஸ்திரம் எதுவும் தந்து போகவில்லை. அவர் தந்திருப்பது சில எளிய உண்மைகளே.
-ஹெடன்
கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை.
-டிஸ்ரேலி
-ஜே.ஈ. ஹாலண்டு
அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான்.
-போப்
புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம்.
-பேக்கன்
- ஸெல்டன்
மதப் பிடிவாதி, ஆப்பிரிக்க எருமை போல் இருப்பவன். நேரேதான் பார்ப்பான்- பக்கங்களில் திரும்பான்.
-பாஸ்டர்
ஜனங்கள் சமயத்திற்காகச் சண்டையிடுவர், வாதம் புரிவர், வசை பகர்வர், அயலாரைத் துன்புறுத்துவர், அனலிலும் இடுவர், உயிரைத் துறக்கவும் செய்வர்- சமயத்திற்காக எல்லாம் செய்வர். ஆனால், சமய வாழ்வு வாழ மட்டும் செய்யார். சிலரேனும் வாழ முயலவாவது வேண்டாமோ? அதுகூடக் கிடையாது.
-பிரிஸ்வெல்
விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும்.
-கார்லைல்
நட்பு விஷயத்திற் போலவே மத விஷயத்திலும் யார் அதிகப் பற்றுடையவர்களாகக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்களே அந்த அளவிற்கு உண்மை நம்பிக்கை குறைந்தவர்களாவர்.
-ஷெரிடன்
மதப்பிடிவாதமுடையவர் அவர்கள் வாழ்நாளில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர்.
-தாமஸ் வில்ஸன்
நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்று கருதுவது பெருந்தவறு. இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன்.
-ஹெச்.ஏ.
மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும்.
-ஹோம்ஸ்
மதப் பிடிவாதம், மதத்தைக் கொன்று, அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும்.
-கோல்டன்
மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை, அதனால் யோசிக்க முடியாது; இதயமில்லை, அதனால் உணர முடியாது.
-ஒகானல்