உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/எகிப்து விடுதலை வீரன்
எகிப்து விடுதலை
வீரன் நாசர்!
உலக நாகரிகங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது எகிப்து நாகரிகம்! ஈஜிப்ட் என்று அழைக்கப்படும் இந்த எகிப்து நாடு, உலகத்தின் நதிகளில் மிக நீளமான நதி என்று கூறப்படும் நைல் நதியின் முகத் துவாரத்தின் அருகே உள்ள நாடு.
எகிப்து நாடு, பண்டையப் புகழ்வாய்ந்த, நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய, சிறப்புமிக்க நாடு! அதனால்தான், உலக மகாவீரர்களுள் முதல்வனான ஜூலியஸ் சீசரை தனது மோகவலையில் வீழ்த்தி மயக்கிய உலகப் பேரழகி கிளியோபாட்ரா கூட ‘எனது உயிர் ஈஜிப்டு’ என்று சாகும் வரை போற்றிப் புகழ்ந்த நாடு எகிப்து நாடு!
அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற ஒரு நாடு, உலகத்தில் சீரோடும் சிறப்போடும் போற்றப்பட்ட ஒரு நாடு, வளமிக்க ஒரு நாடாக உலக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு, கடந்த நூற்றாண்டில் சுரண்டல்காரர்களின் வேட்டைக் காடாகி தனது பொலிவையும், வளத்தையும் பறிகொடுத்துக் கொண்டிருந்தது.
எகிப்து நாட்டுமக்கள் உணவுக்கும், உடைக்கும் குந்தியழுது கொண்டிருக்கும் நிலையில், வந்தவர்கள் எல்லாம் அந்நாட்டில் குடியேறி, வாரி வாரிச் சுருட்டிச் சென்று கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு கொள்ளையடித்தவர்களுள் எகிப்தின் வந்தேறிகளான பிரிட்டிஷாரும் அடங்குவர்.
பிரிட்டிஷ் என்ற ஆங்கில ஏகாதிபத்தியக்காரர்கள், எகிப்து நாட்டுக்குள் அலையலையாகச் சென்று அகப்பட்டதையெல்லாம் சுருட்டிய கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள்.
போரிட்டுக் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை; வியாபாரிகளாகச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து, சொந்த நாட்டுக்காரனைச் சொக்கட்டான் சூதுக்காய்களாக நகர்த்தி நகர்த்தி, ஆசைகாட்டி அவர்களை அடிமைப்படுத்தி, பிறகு தனது விருப்பம்போல கிடைப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, இறுதியிலே அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டு, தங்களது ஆதிக்கக் கொடியை அங்கே வானளாவப் பறக்கவிட்டுக் கொண்டு, சொந்த நாட்டாரைச் சோற்றுத் துருத்திகளாக்கி விடுவது பிரிட்டிஷாரின் கைவந்த, நாடு பிடியாசைக் கலைகளுள் ஒன்றாகும்.
எகிப்தில் இவ்வாறு கொள்ளையடித்த பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் சூயஸ்கால்வாய் அடிமையானது. இந்த ஒரு கால்வாயை வைத்தே உலகத்தை ஆட்டிப் படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.
எகிப்து நாட்டை கடந்த நூற்றாண்டின் இடையில் ஆண்ட மன்னன் பரூக். அவன் ஆங்கிலேயர்களின் எடுபிடி மன்னனாக இருந்தான். எப்போதும், எதற்கும் தலையாட்டிப் பொம்மையாக இருந்த பரூக் சுகபோகியாகவும், பெண்பித்தனாகவும் வாழ்ந்து வந்தான்.
அடிமை மன்னனான அவன், தனது எகிப்து நாட்டை பிரிட்டிஷாரிடம் அடகுவைத்து விட்டு, அவர்கள் கொடுத்த பிச்சைக்காசைக் கொண்டு, பெண் போக உல்லாச, கேளிக்கை வாழ்க்கை நடத்தி வந்தான்.
நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான எகிப்து நாட்டு மக்கள் ஒரு வாய் உணவுக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கும் போது, மன்னன் பரூக் மட்டும் மதுவும் மங்கையுமாக பெண்களிடம் சரசமாடிக் கொண்டு நாட்டையும், மக்களையும் மறந்து உலக நினைவே இல்லாமல் போதை மன்னனாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
இந்த மோசமான நிலையில் தனது நாடு நலிந்து உழன்று கொண்டிருக்கும் நேரத்திலேதான் மாவீரன் நாசர் என்பவர் தோன்றி நாட்டிலே புரட்சியை உருவாக்கினார்.
மது மங்கை மன்னனின் அடிமை இருளிலே இருண்டு கொண்டிருந்த எகிப்து நாட்டை, ஒளிவானமாக்கும் எழு ஞாயிறாகத் தோன்றி மக்கள் மனதிலே சுதந்திர ஒளியைப் பரப்பியவர் மாவீரர் நாசர்!
எகிப்திய விடுதலை வீரர் நாசர், கி.பி.1918-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் ஒர் அஞ்சலக ஊழியரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கற்றுத்தேறிய நாசர் திடீரென கல்லூரியின் இறுதி ஆண்டுப் படிப்பின்போது, தனது நாட்டின் படுமோசமான சீரழிவைக் கண்டு சிந்தித்து அரசியல் துறையிலே திடீரென்று புகுந்தார்!
எகிப்து நாட்டை அடிமைப்படுத்திச் சுரண்டும் பிரிட்டிஷ்காரர்களது சுரண்டலை எதிர்த்துப் போராட்டங்களிலே ஈடுபட்டார். அதுபோலவே, எகிப்து நாட்டின் பொருளாதார வளங்களைச் சூறையாடி வந்த வல்லரசு நாடுகளையும் எதிர்த்துப் போராடினார். அதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு மட்டுமன்று, வல்லரசு நாடுகளின் வன்முறைக் கொடுமைகளும் அவரை வாட்டிக்கொண்டே இருந்தன.
நாசரின் தந்தைக்கோ, மகன் புகழ்பெற்ற ஓர் வழக்குரைஞனாக வேண்டும்; அதனால் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை.
ஆனால், மகனுக்கு அதுவன்று ஆசை. ‘நான் ஒரு வீரன், வீரனுக்குரிய இடம் நீதியின் சன்னிதான்மல்ல’ என்று கூறியபடியே நாசர் ராணுவத்திலே சேர்ந்து பயிற்சி பெற்றார்.
எகிப்து இராணுவம் சீர்கெட்டுப் போய், அடிமைக்கும் சுரண்டலுக்கும் வளைந்து கொடுத்துவிட்டு, சொந்த நாட்டுணர்வே இல்லாத ராணுவக் கூனர்களாக முதுகெலும்பு வளைந்து கிடப்பதைக் கண்டு வருந்தினார்! ராணுவ வீரர்களை அடிமைக் கூலி பெறும் கூலிப்படைகள் என்று வேதனைப்பட்டார் நாசர்.
ஆனால், நாசர் ராணுவத்தில் சேர்ந்தது வயிற்றை வளர்க்கவா? நாட்டின் அடிமைத்தனம் என்ற தளையை அறுத்தெறிய ஒரு நல்லவழி ராணுவம் மூலமாவது பிறக்காதா என்ற விடுதலை வேட்கை ஏக்கம் பெருமூச்சுடன் ராணுவத்தில் சேர்ந்தவர் அல்லவா நாசர்! அதனால், அன்றைய அந்த ராணுவ வீரர்களின் நிலையினைக் கண்டு மனம் உடைந்தார் நாசர்.
இராணுவ வீரர்களிடம் பேசும் போதும், உணவு உண்ணும்போதும், பயிற்சி பெறும்போதும், தனது நாட்டின் அவலநிலைகளையும், பரூக் மன்னனின் பேதைத்தனமான சீரழிவுகளையும் எடுத்துக் கூறி, சிறுகச் சிறுக அவர்களது மனதிலே தேசிய உணர்வு என்ற விதைகளை விதைத்து வந்தார் நாசர்
அதனைப்போலவே, அவர் தனது தேசபக்திக் கருத்துக்களைப் புனைப்பெயரில் கட்டுரைகளாக்கி பத்திரிகைகளிலே வெளிவரச் செய்வார்! அதனால் இவரது உணர்வுகளை யாரோ ஒருவர் எழுதுகிறார் என்ற எண்ணத்தில் பத்திரிகைகள் வெளியிடும்!
அதே கருத்துக்களை எகிப்திய குக் கிராமத்து மக்கள் எல்லாம் படிக்கும் படியான உணர்ச்சி ஒட்ட மொழியாலே ஓர் எழுச்சியை உருவாக்கியபடி எழுதினார் நாசர்!
இரண்டாவது உலகப்போர் 1942-ஆம் ஆண்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நடுநிலை நாடாக இருந்த எகிப்து நாடு, பிரிட்டிஷ் நரித்தந்திர சூழ்ச்சியால் நேச நாடுகளின் பிணைப்பிலே சேர்க்கப்பட்டது.
பிரிட்டன் ஏன் இவ்வாறு எகிப்து நாட்டைப் போர்ச் சூழலிலே சிக்க வைத்தது என்றால், சூயஸ்கால்வாய் கப்பற்படைப் போக்குவரத்து முக்கியத்துவம் பறிபோய் விடக் கூடாதே என்ற காரணத்தால் பிரிட்டன் தனது நேச நாடுகள் அணியிலே எகிப்து நாட்டையும் சேர்ந்துக் கொண்டது. அப்போது எகிப்து ராணுவத்தின் கர்னல் என்ற பொறுப்பை வகித்துக் கொண்டிருந்தவர் நாசர். அவர், பிரிட்டன் செய்துவிட்ட படுபாதக நயவஞ்சக சுயநலச் செயலைக்கண்டு மனம் பதைத்தார்!
நாடு இப்படிச் சீரழிகிறதே என்ற கவலையே இல்லாமல் மன்னன் பரூக் சுகபோக மது மங்கைக் களியாட்டங்களிலே மயங்கிக் கிடக்கிறானே என்று நாசர் நெஞ்சம் துடிதுடித்தது.
பிரிட்டன் நயவஞ்சக சுயநிலைப் போக்கையும், மயங்கிக் கிடக்கும் மன்னன் பரூக் மனநிலையினையும் எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று திட்டம் வகுத்தார் நாசர்!
எகிப்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜெனரல் நாகிப் என்ற ராணுவத் தளபதி அப்போது எகிப்து ராணுவத்தின் தலைவர் பதவியை வகித்துவந்தார்.
கர்னல் நாசர் ராணுவத் தலைவரான நாகிப்பைச் சந்தித்து, தனது புரட்சித் திட்டங்களை அவரிடம் கூறி, அனுமதி பெற்றார். இருவரது விவாதமும் தேசபக்தி உணர்விலே மிதந்த அலைகளாயின! எப்படி வெற்றிக்கரை சேரலாம் என்றே இருவரும் சிந்தித்தார்கள். இறுதியாக புரட்சிக் கட்டம் இறுதிக்கு வந்தது.
எகிப்து ராணுவத்தின் மகாப்பெரும் புரட்சி 1952, ஜூலை23-ஆம்தேதி நடைபெற்றது. புரட்சியை நடத்தியது யார் தெரியுமா? நாசர் அல்ல! நாகிப் என்ற ராணுவ மாவீரத் தலைவன்!
இராணுவத் தலைவர் புரட்சியை நடத்தினார் என்ற பெயரும், புகழும் நாகிப்புக்குப் போய்ச் சேர்ந்தது! ஆனால் உண்மையில் இந்த ராணுவப் புரட்சிக்கு மூளையாக, முதுகெலும்பாக, திட்டங்களைத் தீட்டி இறுதிவரை நடத்தியவர் மாவீரன் நாசர்தான்! இந்த உண்மை நாகிப்புக்கு மட்டுமே தெரியும் இந்த இருவரின் ராணுவக் கூட்டுப் புரட்சிப் பணிகளை, உலகம் புரட்சிக்குப் பின்னாலே எது உண்மை என்பதைப் புரிந்து கொண்டது!
இராணுவத் தலைவர் நாகிப் தொடர்ந்து மன வலிமையுடன் செயல்பட ஏதோ ஓர் அச்சத்தால் தயங்கினார். ஆனால் நாசர், இறுதிவரை மனோ தைரியத்துடன் பணியாற்றியதால் நாசரே ஜனாதிபதி என்ற பொறுப்பை ஏற்றார்!
அதற்குப் பிறகு நாகிப், தனது அரசியல் வாழ்வையே துறந்து மறைந்துவிட்டார். நாசர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், நாட்டை விரைவாகச் சீர்படுத்தினார்.
நாட்டின் விளை நிலங்களை எல்லாம் நில முதலாளிகளிடம் இருந்து மீட்டார். உழைக்காத சோம்பேறிகளிடம் இருந்த மற்ற நிலங்களையும் பறித்து, உழைக்கும் மக்களிடம் வழங்கியதால் நாட்டில் விவசாயப் பெருக்கம் ஏற்பட்டது.
மக்களது உணவுப் பஞ்சமும், அவர்களது பொருளாதார நலிவும் நீங்கி, அவர்கள் இடையே வளம் கொழித்தது.
எகிப்து நாட்டின் உயிர்நாடியாக இருக்கும் சூயஸ்கால்வாயை பிரிட்டன் ராணுவப் படைகள் நாற்புறமும் நாசர் பயத்தால் அணிவகுத்துக் காத்து நின்றன. நாசர் அந்தப் படைகளுக்குள்ளே தனது படைகளைப் புகுத்தி விரட்டியடித்தார்! பிரிட்டன் படைகளையும், வல்லரசு சக்திகளையும் அங்கே ஓட ஓடத் துரத்தியடித்தார்.
சூயஸ்கால்வாயை வருமானம் வரும் கப்பல் போக்குவரத்து கடல் பாதையாக்கினார்! எகிப்து நாட்டின் தேசிய சொத்து சூயஸ் கால்வாய் என்று உலகநாடுகள் உணர நாசர் பிரகடனப்படுத்தினார்.
கொதித்து எழுந்தது பிரிட்டன் அரசு விமானப்போரை ஏவித் தாக்கியது; தாய்நாட்டுக்குச் சேவை செய்கிறோம் என்ற தேசபக்திக்கனலிடையே, பிரிட்டிஷ் தாக்குதல் நாசர் படைத்தாக்குதலின் முன்பு சருகுகளைப் போல தீய்ந்து சாம்பலானது. பிரிட்டன் நாசரிடம் பின் வாங்கி ஓடிய சம்பவம் உலக நாடுகள் இடையே நாசரின் செல்வாக்கை உயர்த்தும் படிக்கல்லானது. நாளடைவில் நாசர் அதனால் உலக அரசியலில் புகழ்ச்சிகரமாக விளங்கினார். எகிப்து மக்களும் அவருக்குத் துணையாக நின்றார்கள்.
நாசரின் உலக அரசியல் புகழ் வளர்ச்சி, அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் தீராத எரிச்சலைப் புகையாகப் பரப்பிக் கொண்டிருந்தன. ஆனாலும், இனி எகிப்து நாட்டையும், நாசரையும் ஒன்றும் செய்யமுடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டன.
ஆனாலும் விடுமா வல்லரசுகள் நாசரின் புகழையும், நாட்டையும் சீரழித்துக் குலைப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. குறுக்கு வழியும் கிறுக்கு வழியும் அவர்களது சிந்தனைகளைக் குழப்பிக் கொண்டிருந்ததுதான் மிச்சம்!
இந்த நேரத்தில் சோசலிச நாடுகளான ரஷ்யாவும், யூகோஸ்லேவியாவும் நாசருக்குப் பக்கப் பலமாக நிற்பதைக்கண்ட பிரிட்டனும், அமெரிக்காவும் நிரந்தரமான ஊமைகளாகின. வல்லரசுகளின் சூழ்ச்சித் திட்டங்கள் அதனால் தவிடு பொடியாயின என்றாலும், சொறி பிடித்தவன் கை சும்மா இருக்குமா? திரை மறைவில் வல்லரசுகள் வல்லூறு வேலைகளை வட்டமிட்ட படியே செய்து கொண்டேதான் இருந்தன.
அதே நேரத்தில் நாசர், எகிப்து நாட்டின் விவசாய வளத்தைப் பெருக்கினார். நீர்ப் பாசனத் திட்டங்களை வகுத்தார். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணையொன்றைக் கட்டி விவசாய வளத்தைப் பெருக்கினார்.
அஸ்வான் அணைக்கட்டுக்கு அமெரிக்கா பொருள் உதவி செய்வதாக வாக்களித்தது. யாரைவிட்டது பொறாமை? பொருள் உதவி செய்தால் எகிப்து வறுமையிலே இருந்து வளமேறிவிடுமே என்ற பொறாமையால், வாக்களித்த பொருளாதார உதவியை மீண்டும் வழங்கிட மறுத்துவிட்டது.
அமெரிக்க நய வஞ்சகத்தைக் கண்டு அஞ்சவில்லை நாசர் சோவியத் யூனியனிடம் பொருள் உதவி வழங்குமாறு கேட்டார். ரஷ்யா சோஷலிச நாடல்லவா? பொருளாதார உதவியை ரஷ்யா செய்தது! இந்த விவகாரத்திலும் அமெரிக்கா அவமானப்பட்டது.
எகிப்து நாட்டை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நயவஞ்சகத்தால், அன்று வரை தங்களுக்கென்று ஒருநாடே இல்லாமல் இருந்த யூத இனத்தை எகிப்துக்கு பகையாக உள்ள ஓர் இனத்தை ஊக்குவித்து துண்டிவிட்டு, இஸ்ரேல் என்ற ஒருநாட்டைப் பூகோளத்திலே அமெரிக்கா தோற்றுவித்தது.
அமெரிக்கா அமைத்துத்தந்த இஸ்ரேல் எப்போது பார்த்தாலும் முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடந்துவதே அதன் வேலை. அதனால் எகிப்து நாட்டின் வளர்ச்சியும், வேகமும் தடைப்பட்டு நிற்கும்! அவ்வளவுதான்.
இருந்தாலும், மாவீரன் நாசர் புறத்தாக்குதல்களைச் சமாளித்தார். அதேநேரத்தில் எகிப்து மக்களையும் நாட்டையும் நன்கு செம்மைப்படுத்தினார்.
மாவீரன் நாசர் போதை மன்னர் பரூக்கின் அடிமைத்தனத்திலே, சிக்கிச் சீரழிந்த எகிப்து மக்களுக்கு விடுதலை வழங்கினார்!
பிரிட்டனின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்தும், அடிமைத்தனம் என்ற ஆணிவேரை அறுத் தெறிந்தும் எகிப்து மக்களுக்கு சுதந்திர வாழ்வைப் பெற்றுத் தந்தவர் நாசர்!
வல்லரசு நாடுகளின் பொறாமை வம்படி வழக்குகளை எதிர்த்து, எகிப்து நாட்டைக் காப்பாற்றி, எகிப்து நாட்டையும், மக்களையும் மானத்துடன் சுயமரியாதை வாழ்வு வாழ வழிவகுத்துத் தந்தவர் மாவீரன் நாசர்!