உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/ஆப்கானிஸ்தான் சுதந்திரம்
வசூலுக்கென்று ஒரு தனித்துறை அமைக்கப்பட்டதால் இரட்டை ஆட்சிப் புள்ளிகள் வசூல் பணத்தில் ஒரு பகுதியை மோசடி செய்யும் பழக்கமும் ஒழிக்கப்பட்டது.
அமானுல்லாவின் இந்த வரி வசூல் முறைகள் இரட்டையாட்சி மோசடிப் பேர்வழிகளைக் கடுமையாகப் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டன.
அமானுல்லா கையாண்ட மற்றொரு முக்கிய சாதனை என்ன வென்றால், வியாபாரத்துறையில் புதிய ஒரு முறையைப் புகுத்தியதாகும். ‘ஷர்க்கதா’ என்று அந்நாட்டில் கூறப்பட்ட அநேகக் கூட்டு வணிகக் குழுக்கள் அரசு ஆதரவின் கீழ் நிறுவப்பட்ட முறையாகும்.
ஆனால், அமானுல்லாவின் சீர்திருத்த முயற்சிகளின் முக்கிய திட்டம் பொருளாதாரத்துறையைச் சேர்ந்த ஒன்றாக இருந்தது. பெரிய அளவில் அவர்சாலைகளை அமைத்தார். காபூல் நகருக்கும் பெஷாவர் நகருக்கும் இடையே இந்தோ-ஆப்கான் தொலைபேசி நிறுவனங்களை 1922-ஆம் ஆண்டில் அமைத்தார்.
தொலைபேசிச் சாதனங்கள் மூலம் ஆப்கான் நாட்டு எல்லா முக்கிய நகர்களையும் இணைத்தது. 1925ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் உலக நாடுகளின் கேபிள் யூனியனிலும், உலக அஞ்சல் குழுவிலும் சேர்க்கப்பட்டது அரிய பணிகளாகும்.
வானொலி அமைப்புத் திட்டத்தை 1925-ஆம்ஆண்டில் தொடங்கினார். 1929-ஆம் ஆண்டில் நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுடனும் காபூல் நகரை கம்பி இல்லாதத் தந்தியின் மூலமாக இணைத்தார்.
ஆப்கான் நாட்டு விடுதலைக்கு முன்பு கல்வித்துறைக்கென்று நாட்டில் உண்டாகி இருந்த நிறுவனங்கள் 1904-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அபிபியா உயர்நிலைப் பள்ளியும், ஓர் இராணுவப் பயிற்சிப் பள்ளியும், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், மற்றும் ஒரு சில ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே ஆகும்.
அமானுல்லா பதவிக்கு வந்தபிறகு, மூன்று உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கினார். பெண்கள் பள்ளியை அவர் முதன் முதலாக நிறுவினார். மேற்படிப்புக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடுகளைச் செய்தார்.
ஆப்கான் நாட்டின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவிலிருந்தும், ஐரோப்பா நாடுகளில் இருந்தும் கல்வி நிபுணர்களை அந்த நாட்டிற்கு அழைத்து வந்து கல்வித்துறையை வளர்த்தார். இதனால் வெளிநாட்டுக் கல்விக் கலை நுட்பங்கள் வளர்ந்தன. அதன் உதவியால் மின்சாரம், தீப்பெட்டிகள், சிமெண்ட் பயன்படுத்தும் கட்டடமுறைகள், துணிகளுக்குச் சாயம் போடும் தொழில்கள் சிறு சிறு தொழில்களாக நாட்டில் தோன்றிட வளர்ச்சி பெற்றிட வழிவகுத்தார் அமானுல்லா. பஞ்சு நூற்பாலைகள் திறக்கப்பட்டன. சலவைக் கருவிகள், அச்சு இயந்திரங்கள் சர்க்கரை ஆலை இயந்திரங்கள், போன்றவைகள் நாட்டில் அமைந்து பெருகின.
அமானுல்லா ஒரே நேரத்தில் இவ்வாறு மேற்கொண்ட முயற்சிகள் அளவுக்கு அதிகமாகிவிட்டதால், அவருடைய புதுமையான புதுத் திட்டங்களின் செலவுப் பளுக்கள் அதிகரித்துவிட்டன.
குறிப்பாக, விவசாயிகள் போன்றவர்கள் மீது அந்தச் செலவினப் பளுக்கள் வரிகளாக விழுந்தன. அதிகப்படியான வரிப்பளு அவர்களை வாட்டிவதைத்தது.
இந்த சமூகச் சீர்திருத்தங்கள் ஆப்கான் நாட்டு மக்களை வேதனைகளில் ஆழ்த்தின. அத்துடன், பர்தா என்ற பெண்களின் முக்காடு அணியும் மதச் சடங்கு முறையை அகற்றிவிட்டார். ஐரோப்பா நாடுகளில் உள்ள ஆடைப் பழக்க வழக்க முறைகளை மக்களிடம் புகுத்தினார். இந்த முறைகளை அமானுல்லா நாட்டில் வற்புறுத்தி நுழைத்ததால், மக்கள் தங்களது பொறுமைகளை இழந்து விட்டார்கள்.
இந்தச் சீர்திருத்த முறைகளால் மக்கள் இடையே கலகங்கள் ஏற்பட்டுவிட்டன. குழப்பங்கள் சூழ்ந்தன. இந்த நேரத்தில்தான் 1929-ஆம் ஆண்டு பாச்சா-இ-சேக்கோ என்ற கொள்ளைக்காரன் ஒருவன் காபூல்நகர் மீது படையெடுத்துப் பிடித்துக்கொண்டான்.
சிந்தித்தார் அமானுல்லா. இந்த மக்களுக்கு இவ்வளவு சீர்த்திருத்தங்களையும் ஒரே முறையில் அவசரமாக, அவசியம் என்று நுழைத்தது தவறுதான் என்று தனது கடைசி நேரத்தில் உணர்ந்தார்.
அமானுல்லா என்னென்ன சீர்திருத்தச் சட்டங்களை அந்த நாட்டில் போட்டு அமுல்படுத்தினாரோ, அவை அனைத்தையும் உடனடியாக அவசரம் அவசரமாக பாச்சா-இ-சேக்கோ என்பவன் திரும்பப் பெற்றுக்கொண்டு அனைத்தையும் நிறுத்திவிட்டான். இதன் விளைவு என்னவாயிற்று?
துருக்கி நாட்டிற்கு பள்ளிக் கல்விப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட பெண்கள் அனைவரும் திரும்பி ஆப்கான் நாட்டிற்கே வரும்நிலை ஏற்பட்டது. முக்காடு அணியும் பர்தா முறையே பழையடி பெண்களுக்கு ஏற்பட்டன. மாதர் சங்கங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாகரிக ஆடை அணிகள் முறை தடைசெய்யப்பட்டன.
இராணுவ வீரர்கள் பீர்களைக் குடிக்கலாம் என்ற அனுமதி பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இவை எல்லாம் காலம் கடந்துவிட்ட செயல்களாக மக்கள் இடையே நினைக்கத் தோன்றின. அமானுல்லா முயற்சிகள் எல்லாம் தோற்கும்படி அந்தக் கொள்ளைக்காரன் செய்துவிட்டதால் மக்களிடம் கலகங்களும், குழப்பங்களும் தோன்றி வலுத்துவிட்டன.
இந்த நேரத்தில் அமானுல்லா மக்கள் தரும் குழப்பங்களைத் தாங்க முடியாமல் ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டே ஓடிப்போகும் பரிதாபநிலை ஏற்பட்டுவிட்டது.
காபூலைப் பிடித்துவிட்ட கொள்ளைக்காரன் பாச்சா இ சேக்கோவின் பத்துமாதப் பயங்கர ஆட்சியில் அமானுல்லா மேற்கண்ட சீர்திருத்தச் சட்டங்கள் எல்லாம் பாழாகி விட்டன.
அமானுல்லாவின் சமுதாயச் சீர்திருத்தச் செயல்களை எல்லாம் அந்தக் கொள்ளைக்காரன் பாச்சா நாசமாக்கியதுடன் நில்லாமல், மீண்டும் அமானுல்லா தலைதூக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவருடைய செயல்களை எல்லாம் அழித்துவிட்டான்.
ஆனால், உலகநாடுகள் எல்லாம் இந்த அழிவுச்சக்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் காலம் கடந்துவிட்ட அழிவுச் சக்தியை மீண்டும் தடுத்து நிறுத்த அமானுல்லாவுக்கு உதவிசெய்திட காலம் போதாமல் போய் விட்டது. எனவே, அமானுல்லா தேசப் பற்று, மக்கள் இடையே தோற்றுவிட்டது
ஆனால், உலகப் பத்திரிகைள் எல்லாம் அமானுல்லாவைப் பற்றி என்ன எழுதின தெரியுமா?
“ஆப்கானிய இளைஞர் உலகத்தில் அமானுல்லா சீர்திருத்த விதைகளை விதைத்து விட்டார். அவை ஒரு காலத்தில் முளைத்தே தீரும்.” என்று எழுதி தங்களது ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவித்தன.