உள்ளடக்கத்துக்குச் செல்

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/சுதந்திர சோஷலிசச் சிற்பி

விக்கிமூலம் இலிருந்து

சுதந்திர சோஷலிசச் சிற்பி
மார்ஷல் டிட்டோ!


மார்க்சிய சோஷலிசக் குறிக்கோள் வரவேற்கத்தக்கதுதான்; ஆனால், ரஷ்ய நாட்டு லெனின் நடைமுறைத் திட்டங்கள், சோசலிசத்தை விரும்பும் எல்லா நாடுகளுக்கும் ஏற்றதல்ல என்பது மட்டுமல்ல, பொருந்தவும் பொருந்தாது. சோஷலிச மாளிகையை நிறுவிட, ஒவ்வொரு நாடும் அதனதன் முயற்சியில், நோக்கத்தில் முயற்சி செய்து நிறுவப்படவேண்டும்.

மேற்கண்டவாறு, சோவியத் ரஷ்யாவை எதிர்த்து அதற்குப் புறம்பான திட்டங்களை வகுத்து ஒரு சோஷலிச அரசை யூகோஸ்லேவியாவில் அமைத்து, அந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று வெற்றிக்கொடி நாட்டி உலகை வலம்வந்த சோஷலிசச் சிற்பி மார்ஷல் டிட்டோ.

உலகத்துக்கு ஒரு புதுமையாக, ரஷ்யாவின் ஜார் மன்னனின் முடியரசு ஆட்சியை மக்கள் பலத்தால் சடசடவென சரித்து புரட்சி எனும் புதுமை ஆயுதத்தால் சோஷலிச ஆட்சியை அமைத்த நாடு சோவியத் ரஷ்யா.

கார்ல் மார்க்ஸ் வகுத்துத்தந்த சமநீதி சமுதாய இலட்சிய அடிப்படையில், மாவீரன் லெனின் தீட்டித் தந்த நோக்கங்களின் வழியில் சோவியத் சமநீதிச் சமுதாயம் அமைத்து உலகம் மதித்துப் போற்றத் தகுந்த நல்ல ஆட்சியை நடத்தி வந்த நாடு ரஷ்யா.

அந்த நல்லாட்சி, ரஷ்யாவில் லெனினுக்குப் பிறகு, அஞ்சா நெஞ்சன் ஸ்டாலின் தலைமையில் உலகம் வியக்க நடந்து வந்தது. அந்த ஆட்சியின் செயல்முறைத் திட்டங்களைத் தவறு என்று சொன்ன எவரும் அப்போது உயிர் பிழைத்தது இல்லை.

ஆனால், மார்ஷல் டிட்டோ என்ற யூகோஸ்லேவிய நாட்டு மாவீரன் ஸ்டாலினை மூர்க்கத் தனமாக எதிர்த்தது மட்டுமல்ல; அவர் தப்பி உயிர் மீண்டது மட்டுமன்று; தனியே ஒரு சோஷலிச ஆட்சியையும் பல இடர்ப்பாடுகளுக்கு இடையில் அமைத்து நடத்திக்காட்டிக் கம்பீரமாக நிமிர்ந்து நின்று வெற்றி பெற்றவர் அந்த மாவீரன் மார்ஷல் டிட்டோ என்ற ஒருவர்தான் என்று உலக நாடுகளின் விடுதலை வரலாறு இன்றும் அவரைப் போற்றுகின்றது.

இந்த உண்மையை, புரட்சியில் ஒரு புரட்சியைப் புதுமையாக நடத்திக்காட்டிய செயலை ஏன், உலகத்தையே உலுக்கிக்காட்டிய சோவியத்ரஷ்ய நாட்டையே ஒரு கலக்கு கலக்கிப் புரட்சி செய்து காட்டியவர் இந்த மார்ஷல் டிட்டோ.

இத்தகைய ஒர் அற்புத ராஜதந்திரம் படைத்த சோசலிசச் சிற்பியான மார்ஷல் டிட்டோ, கி.பி.1892-ம் ஆண்டு மே மாதம், 15-ம் நாளன்று ஒரு விவசாயினுடைய மகனாகப் பிறந்தவர் ஆவார். அவருடன் பிறந்த உடன் பிறப்புக்கள் மொத்தம் பதினைந்து பேர்கள். அவர்களுள் இவர் ஏழாவது மகனாவார்.

மார்ஷல் டிட்டோவின் குடும்பம் செல்வச் சீமான்களது குடும்பம் அல்ல; வறுமை ஒன்றே வாழ்வாகக் கொண்ட மிக மிக ஏழைக் குடும்பமாகும். உண்பதற்குக் கூடஒருவேளை உணவும் அற்ற கூலிக் குடியானவர் குடும்பம். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலே தோன்றிய டிட்டோ எந்த வறுமைச் சூழலைப் பற்றியும் கவலைப்படாமல் வளர்ந்துவந்தார். ஏதோ பெயரளவுக்கு கல்வியை ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்திலே படித்து வந்தார்.

அவ்வளவுதான் அவரது கல்வித் தகுதி. அப்படிப்பட்ட குடும்பத்திலே இருந்து வெளியேறி தனியாகவே அவர் அலைந்து திரிந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

டிட்டோ தனது சிறு பிராயத்தில் செய்யாத வேலைகளே இல்லை. ஆடுமாடுகளை மேய்த்தார்; உணவு விடுதிகளிலே வேலை கேட்டு எச்சில் தட்டுக்களைக் கழுவி வயிறு வளர்த்தார். பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கூலிக்காக அந்தப் பத்திரிகைகளை வீதிவீதியாகச் சென்று கூவிக் கூவி விற்று, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு ஒருவேளை உணவு உண்டுகாலம் தள்ளிவந்தார். இறுதியாக ஒரு இரும்புப் பூட்டுக் கடைக்குச் சென்று, அந்த தொழிலில் ஈடுபட்டுப் பூட்டுக்களை வீடு வீடாகச் சென்று விற்றுக் கூலிபெற்று வாழ்ந்தார். இது தான் மார்ஷல் டிட்டோவின் இளமைக்கால கோரவரலாறு.

பூட்டுத் தொழிலில் டிட்டோ ஈடுபட்ட போதுதான், உலகத்தின் உண்மைத் தோற்றம், வாழ்க்கையில் வயிறு வளர்க்கும் நெளிவு சுளிவுகள் எல்லாம் அவருக்குப் புரிந்தது. அப்போது யூகோஸ்லேவியாவில் பரபரப்பான அரசியல் நிலை சூடு பிடித்து நடந்து கொண்டிருந்தது.

அதனால், அரசியல் இயக்கங்களுக்கு இடையே நடந்துவந்த அரசியல் குழப்பங்களைப் பார்த்து. அவரும் அந்த இயக்கங்களை உற்று நோக்கி, தனக்குப் பிடித்த அரசியல்வாதிகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டு, அரசியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார். குறிப்பாக அவர், தொழிற் சங்கங்களிலே சேர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களுடன் நட்புக்கொண்டு உழைத்து வந்தார்.

அரசியல் கிளர்ச்சிகள், போராட்டங்கள், இவற்றிலே தீவிரமாகவும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டு பணியாற்றினார். இதனால் அவருக்கு தொழிலாளர்கள் இடையே ஒருவித செல்வாக்கும் புகழும் ஏற்பட்டது.

அரசியலில் பங்கு கொண்டு உழைத்தால் மட்டும் போதுமா? உணவுக்கும், உடைக்கும், தங்கி வாழ ஓரிடத்துக்கும், பணம் தேவையல்லவா? அதற்கு அவருக்கு வழியேதும் தெரியாமல் திகைத்தார். கிடைக்கும் பணம் கொண்டு பசியும் பட்டினியுமாக அலைந்து திண்டாடினார்.

தான் பிறந்த நாடான யூகோஸ்லேவியாவில் பிழைக்க முடியாது என்பதைத் திட்ட வட்டமாகப் புரிந்து கொண்ட டிட்டோ, ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடினார்.

ஓடிய ஒவ்வொரு நாட்டிலும் கூட, அவர் பிழைப்பதற்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், அந்தந்த நாட்டினுடைய அரசியல் கருத்துக்களும், சமுதாயச் சிந்தனைத் தெளிவுகளும் அவருக்குப் புரியும் ஒருவாய்ப்பு கிட்டியது.

அப்போது முதல் உலகப்போர் துவங்கியது. அந்தந்த நாடுகள் இடையே ராணுவ பலத்தைப் பெருக்கும் பரபரப்புக்கள் ஏற்பட்டன. உடனே டிட்டோ மீண்டும் தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவுக்கு ஓடிவந்தார்.

தாய் நாடு திரும்பிய டிட்டோ ராணுவத்தில் சேர்ந்தார். போர் முனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதால் அவர் படையிலே சேர்ந்து போரிடத் தயாரானார்.

யூகோஸ்லேவியா நாடு அப்போது ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அந்த நாடு ரஷ்யாவுடன்போர் புரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் டிட்டோ கட்டாயப் படுத்தப்பட்டு ராணுவப் போர்வீரனாக களம் நோக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதால் போர்முனை சென்றார்.

போர் முனையில் ரஷ்ய மன்னனான ஜார் படையுடன் யூகோஸ்லேவியாப் படைகள் மோதும்போது, டிட்டோ படுகாயமடைந்ததும், அவர் கைது செய்யப்பட்டார். அதனால் டிட்டோ ரஷ்ய நாட்டிலுள்ள சைபீரியா சிறையிலே அடைக்கப்பட்டார்.

சிறையிலே இருந்த வேதனைகளுக்கு இடையிலே, உலக நாடுகளின் வரலாறுகளையும், அந்தந்த நாட்டு அரசியல் நெருக்கடிகளின் எழுச்சிகளையும், புரட்சிகளையும் உணர்ச்சியோடு படித்து அந்த வரலாற்று வீரர்களைப் போல உருவானார்!

எவருக்கும், எதற்கும் அஞ்சாத மனநிலையும், நேர்கொண்ட போக்கும், சிந்தனைகளின் தெளிவும், முற்போக்குச் செயல் முறைகளும் அவருக்கு ஏற்பட்டன. குறிப்பாக, ரஷ்ய நாட்டின் பேரறிஞர் என்று அப்போது மக்களால் போற்றப்பட்டு வந்த லியோ டால்ஸ்டாயின் நூல்களை ஆழ்ந்து கற்றார்.

மார்ஷல் டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட் சிந்தனையாளன் என்ற கருத்து எப்படியோ ஜார் மன்னன் ஆட்சிக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவரைக் கொலை செய்து விடவேண்டும் என்று ஜார் மன்னனது சிறை அதிகாரிகள் சதிசெய்தார்கள்.

இந்த அரசியல் கொலைச் சதி டிட்டோவுக்குப் புரிந்துவிட்டது. உடனே அவர் தனக்குள்ள மன பலத்தால் சிறையிலே இருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சி வெற்றி பெற்றது. அங்கே பொதுவுடைமை அரசு உருவானது. ஆனாலும் டிட்டோ, ரஷ்யாவிலே இருந்து யூகோஸ்லேவியாவுக்கு தப்பி ஓடிவந்து சேர்ந்தார். அதுமுதல் அவர் ரஷ்யக் கம்யூனிஸ்ட் ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

ரஷ்யாவிலே நடந்துவந்த பொதுவுடைமை ஆட்சியை வீழ்த்திட, அந்த நாட்டின் துரோகக் கும்பல்களும், ஜார் மன்னன் படையினரும் முயன்ற நேரத்தில், யூகோஸ்லேவியாவில் இருந்த டிட்டோ, தன்னுடைய ராணுவ நண்பர்களுடன் ரஷ்யா சென்று ஜார் படைகளையும், துரோகக் கும்பலையும் எதிர்த்துப் போர் செய்து, பொதுவுடைமை ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

இரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சி டிட்டோவின் உள்ளத்தில் ஒரு புதுவித அரசியல் புத்துணர்ச்சியைப் புகுத்தியது.அதனால், தனது தாய் நாடான யூகோவிலும் ஒரு ரஷ்யப் புரட்சியை நடத்தத் திட்டமிட்டார்.

முதல் உலகப்போர் முடிந்ததும், யூகோஸ்லேவியா, ஆஸ்திரிய, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்திலே இருந்து விடுபட்டு தனிமன்னர் ஆட்சியுடன் தனிநாடானது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியைப் போல யூகோவிலும் ஒரு புதுக் கட்சியை டிட்டோ துவக்கினார்! மக்கள் இடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார்; கிளர்ச்சிகளுக்கு வித்திட்டார் ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையை உணர்ந்த யூகோ மன்னராட்சி, டிட்டோவை 1929-ம் ஆண்டில் கைதுசெய்தது ஐந்தாண்டு தண்டனை வழங்கி அவரைச் சிறையில் பூட்டியது.

சிறைக் கொடுமைகளை டிட்டோ மகிழ்ச்சியுடன் ஏற்று அனுபவித்தார்! பின்னர் தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை மன்னராட்சி விடுதலை செய்து, யூகோ நாட்டில் இருக்கக் கூடாது என்று நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவை ஏற்ற டிட்டோ மீண்டும் ஐரோப்பா சென்றார். அங்கிருந்த நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்புகொண்டு திட்டங்கள் தீட்டினார்.

இந்த நேரத்தில், யூகோஸ்லேவிய நாட்டுக்கம்யூனிஸ்ட் கட்சி டிட்டோவைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது. உடனே டிட்டோ தனது தாய் நாட்டுக்குத் திரும்பினார்.

திரும்பிவந்த டிட்டோ, தனது நண்பர்களுடன் தொண்டர்களைத் திரட்டி புரட்சி நடந்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது இரண்டாவது உலகப்போர் துவங்கிவிட்டது. இட்லர் யூகோஸ்லேவியாவைப் பிடித்துக் கொண்டார்.

டிட்டோ தனது தாய் நாட்டை எப்படியாவது இட்லரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். லட்சம் வீரர்களுக்கு மேல் படை திரட்டி ராணுவப் பயிற்சியைக் கொடுத்தார். ரகசியமாக ராணுவம் தயாரானது. அந்த வீரர்களை மலைக் குகைகளிலே மறைத்து வைத்து, திடீர் திடீரென்று தோன்றி இட்லர் படைகளுடன் போரிட்டுக் கடும் சேதத்தை விளைவித்தார்.

டிட்டோவின் இந்த எதிர்பாராத தாக்குதல்களை இட்லர் படைகளால் சமாளிக்க முடியவில்லை. 1944-ஆம் ஆண்டில் மாவீரன் இட்லரது படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடின. அதனால், டிட்டோ தனது தாய்நாட்டை மீட்டு அந்தநாட்டிற்கு அவரே தலைவரானார்.

தலைவராகிவிட்டதோடு நில்லாமல், டிட்டோ யூகோஸ்லேவியாவை ஒரு குடியரசு நாடு என்று பிரகடனப்படுத்தினார்.

சோவியத் ரஷ்யாவில் என்னென்ன திட்டங்கள் அந்த நாட்டை முன்னேற்றுவிக்கப் பயன்பட்டனவோ, அதே திட்டங்களைக் கொண்டு தனது தாய் நாட்டையும் முன்னேற்றினார். மிகக் குறுகிய காலத்தில் யூகோ நாடு புயல்வேக முன்னேற்றங்களுடன் உலகில் தலை நிமிர்ந்து நின்றது.

யூகோஸ்லேவியாவைத் தொடக்கக்காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஓர் அங்கம் போலவே எண்ணிச் செயல்படுத்தினார் டிட்டோ. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் எப்படியெல்லாம் ரஷ்யாவை முன்னேற்ற அரும்பாடு பட்டாரோ, அந்த உழைப்புக்களை எல்லாம் டிட்டோ மதித்தார் மரியாதை கொடுத்துப் பின்பற்றினார்.

ஆனால், போகப் போக சோவியத் யூனியன், தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவைப் புறக்கணித்து, அடிமை கொள்ள நினைக்கிறதோ என்ற ஓர் அச்சமும் டிட்டோவுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால், சோவியத் யூனியன் ஆட்சியை லட்சியம் செய்யாமல், தனது மனப்போக்கோடு. தனது தாய் நாட்டை முற்போக்குச் சிந்தனைகளோடு ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

டிட்டோவின் இந்தத் தன்னிச்சைப் போக்கு ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஸ்டாலின் டிட்டோவைத் துரோகி என்று வசை பாடினார்! சோவியத்அரசுப் பத்திரிகையான ‘ப்ராவ்தா’ டிட்டோவை முதலாளிகளின் கைக்கூலி என்று கடுமையாகத் தாக்கி எழுதியது. பிறகு யூகோஸ்லேவியா நாட்டை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்து பிரித்துவிட்டது.

ரஷ்யாவைச் சார்ந்து வாழும் கம்யூனிஸ்ட் நாடுகள், டிட்டோவிற்கு எல்லையற்ற தொல்லைகளையும், தீராத கஷ்டங்களையும் பல குறுக்கு வழிகளிலே நயவஞ்சகமாகச் செய்து டிட்டோ ஆட்சியைக் கவிழ்க்கச் சதிசெய்தன.

அந்த எதிர்ப்புக்களை எல்லாம் மார்ஷல் டிட்டோ என்ற தன்மானச் சிங்கம் தவிடுபொடியாக்கிவிட்டது.தனது யூகோ நாட்டை தனி நாடாக்கி தன்நிகரில்லா ஏறு நடைப்போட்டார் டிட்டோ. எந்ந அரசியல் சூழ்ச்சிகளாலும் டிட்டோவைக் கவிழ்க்க முடியாது என்ற சவால் விடுத்து, ஸ்டாலினின் எதிர்ப்புத் தொல்லைகளை, அரசியல் சதிகளை வீழ்த்திக் காட்டிவிட்டார்.

அதற்குப் பிறகு, ரஷ்யாவே டிட்டோவைத் தட்டிக் கொடுத்து, தனது நாட்டுடன் கூட்டுறவை வைத்துக்கொள்ள இடமளித்தது என்றாலும், டிட்டோ அதற்கெல்லாம் ராஜதந்திரமாக நடந்துகொண்டு தனது தாய்நாட்டை சுதந்திர நாடாக வாழவைத்தார்! இட்லர், ஆஸ்திரியா, ஹங்கே சோவியத் யூனியன் போன்ற நாடுகளின் ஆதிக்கப் பிடிப்பிலே இருந்து யூகோஸ்லேவியா நாட்டை மீட்டு, அதை ஒரு சுதந்திர பூமியாக உலகிலே நடமாடவைத்து மறைந்தவர் மாவீரன் மார்ஷல் டிட்டோ.