உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/21. பணிகள் ஆற்றவே பதவி

விக்கிமூலம் இலிருந்து

21. பணிகள் ஆற்றவே பதவி

தொழில்கள் எப்படி வளம் பெறும் என்பது, நாட்டிலே அமுலாக இருக்கும் அய்ந்தாண்டுத் திட்டத்தைப் பொறுத்தது; ஆனால் அய்ந்தாண்டுத் திட்டம் எப்படி அமையுமென்பது மத்திய அரசிடம் இருக்கின்றது.

மத்திய அரசிடம் போராடி-வாதாடித்தான் திட்டங்களைப் பெற வேண்டுமானால், நாங்கள் அதற்குத் தயாராய் இருக்கிறோம்!

புதியவர்கள் என்பதற்காக மட்டுமல்ல-பிரச்சினைகளும் பழையது! பழைய பிரச்சினைகளுக்குப் புதியவர்கள் தீர்வு காண்பதென்பது சாதாரணமானதல்ல!

என்னால் முடியாவிட்டால் 'முடியவில்லை' என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வதற்கு நான் தயங்க மாட்டேன்! காரியம் ஆற்றுவதற்காகத்தான் பதவியே தவிர பதவிக்காகக் காரியம் என்பது கிடையாது!

பதவிப் பொறுப்புகளில் இருப்பதைவிட, உங்கள் இதயங்களில் இருப்பதைத்தான் பெருமையாக நினைப்பவன் நான் என்பதனை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்!

நீந்தத் தெரியாதவர்கள் கயிற்றின் உதவியுடன் நீரில் இறங்குவதைப் பார்த்திருப்பீர்கள்; புதியவர்களாகிய நாங்கள் நீரில் இறங்கியுள்ளோம்; எங்களுக்கு உதவியாகப் "பதவி" என்கிற கயிறு உங்கள் கரங்களில்தான் இருக்கிறது, நீங்களாகப் பார்த்துத்தான், எங்களை நீரில் இறக்கியிருக்கிறீர்கள்; நாங்கள் நீந்தக் கற்றுக் கொள்ளும் வரையில், கயிறு உங்கள் கைகளில்தான் இருக்கும்; எனவே அதைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் உங்களுடையதுதான்!

"நீந்தக் கற்றுக் கொண்டு விட்டீர்கள்" என்று நீங்களாகப் பார்த்துக் கயிற்றை அவிழ்த்து விடுகின்ற வரையில், அது உங்கள் பாதுகாப்பில்தான் இருக்க வேண்டும்!

நீங்களெல்லாம் ஒருவகை அமைப்புகளின் கீழ்க்கொண்டு வரப்பட்டிருக்கும் தொழிலாளர்கள்; ஆனால் உங்களை விட மிகப் பெரும்பான்மையானவர்கள் முறையான அமைப்பின் கீழ்க் கொண்டு வரப்படாமல் உரிமை உணர்வுகள் அற்றுப்போய்-அரசியல் சூதாட்டத்துக்கு ஆளாகி, வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது!

தொழிலாளர்கள் வாழ்ந்தால்தான், நாட்டில் செல்வம் வளர்ந்தால்தான், நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குச் சந்தை கிடைக்கும்!

நீங்கள் ஒரு டைப்ரைட்டரைச் செய்கிறீர்கள் என்றால், அதை வாங்கும் நிலையில் மக்கள் இருக்க வேண்டும்; அடி மட்டத்தில் இருப்பவர்கள் மிச்சப்படுத்தும் நிலையில் இல்லையென்றால், உங்கள் உற்பத்திக்கு வழி இல்லாமல் போய்விடும்!

உரிமைகளுக்காக-வசதிகளுக்காக நீங்கள் எடுத்து உரைக்கிற கோரிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம்!

(14-3-67ல் சிம்சன்குரூப் தொழிலாளர்களுக்கிடையே அண்ணா)