உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/23. மார்க்கசீயம் பற்றி அண்ணா
23. மார்க்கசீயம் பற்றி அண்ணா
"கம்யூனிஸ்டுகள், இங்கு, காரல் மார்க்ஸ் - அவர் காலத்திலிருந்த நிலைகளை வைத்துக்கொண்டு கூறிய வர்க்கப் போராட்டத் தத்துவத்தைப் பேசினார்கள் -பேசுகிறார்கள்.
நாட்டிலே காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த மக்கள், நாட்டு மக்களாக - நாகரிகமான வாழ்வு பெற்றவர்களாக - ஒரு சமுதாயமாக வாழத் தலைப்பட்டுத் தொழில் வளர்ச்சியும் தோன்றிய காலத்தில், சமுதாயம் இரு கூறுகளாகப் பிளவுபட்டது; முதலாளிச் சமூகம் - பாட்டாளிச் சமூகம் என்ற கூறுகள் தோன்றின!
இந்த நிலையை, தனக்கிருந்த பரந்த அறிவினால் உணர்ந்த காரல் மார்க்ஸ் 'எதிர்காலத்தில் இந்த இரண்டு வர்க்கங்களும் மோதிக்கொள்ளும். முடிவு, தொழிலாளி வர்க்கத்திற்கு வெற்றியே' என்று கூறினார்.
அவர் கூறிய காலத்தில், சமுதாயம் ஏறத்தாழ இந்த இரண்டு கூறுகளாகவே இருந்தது; ஆனால், இப்போது அந்த நிலையில் இல்லை; இந்த இரண்டு கூறுகளுக்கிடையில் ஒரு வர்க்கம் - நடுத்தர வகுப்பு தோன்றியுள்ளது.
ஆனால் கம்யூனிஸ்டுகள் இன்னும் இந்த இரண்டு சமுதாயங்களைப் பற்றி மட்டுமே எண்ணுகிறவர்களாக இருக்கிறார்கள்.
பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டு மட்டுமே முதலாளி சமூகத்தை ஒழித்துவிடலாம் என்கிறார்கள்; ஆனால் நாம்,'இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில் உள்ள நடுத்தர வகுப்பினர், முதலாளி பக்கம் இழுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று கூறுகிறோம்.
இந்த நடுத்தர வகுப்பினர், அச்சத்திற்கும் ஆசைக்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவர்கள்!
'நிலை தாழ்ந்தால், எங்கே பாட்டாளியாகி விடுவோமோ' என்ற அச்சமும், ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் 'முதலாளி ஆகமாட்டோமா' என்ற ஆசையும் அவர்களைப் பிடித்தாட்டுகிறது
இந்த நடுத்தர வகுப்பினர் இன்று, பல ஐரோப்பிய நாடுகளில் ஆளும் கட்சியை அமைத்திருக்கின்றனர்!
அமெரிக்காவில் முதலாளிமார்கள் ஆட்சி நடத்துகிறார்கள்; இரஷ்யாவில் தொழிலாளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்; ஆனால் வேறு ஐரோப்பிய நாடுகளில் மத்திய தர வகுப்பார் ஆளும் கட்சியினராக உள்ளனர்!
இந்த நாட்டிலும் நடுத்தர வகுப்பார் இருக்கின்றனர்; இழுக்கப்படாமலிருந்தால்தான், தொழிலாளர்கள் விரும்புகிற ஒரு அரசு அமைய முடியும்.
'நடுத்தர வகுப்பாரே இல்லை' என்றோ, அல்லது, 'அவர்கள் ஒரு சக்தியே அல்ல' என்றோ கூறப்படுமானால், இந்நேரம் இந்த நாட்டில் புரட்சி மூண்டிருக்க வேண்டும்; முதலாளி சமூகம் சாய்ந்திருக்க வேண்டும்; பாட்டாளி அரசு மலர்ந்திருக்க வேண்டும்; இல்லையே-ஏற்பட வில்லையே!
அதனால்தான் நாம் கூறுகிறோம் தொழிலாளர்களுக்கும் நடுத்தர வகுப்பாருக்கும் இடையே ஒரு அன்புச் சங்கிலித் தொடர்பு வேண்டும்' என்று!
தொழிலாளருக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதை நடுத்தர வகுப்பாருக்குச் சொல்ல, அவர்கள் தொழிலாளருக்கு விரோதமாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அப்படி நடுத்தர வகுப்பார் தயாரிக்கப் பட வேண்டும்.
அப்போதுதான், தம்மையும் அறியாமல் நடுத்தர வகுப்பார் முதலாளி பக்கம் இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க முடியும்.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், கடையில் சில சாமான்களை வாங்கி அதை ஒரு கூலிக்காரன் தலையில் வைத்து வீட்டிற்கு வந்து நாம் ஆறணா கூலி கொடுப்பதாயும், அந்தத் தொழிலாளி இன்னும் இரண்டணா கூடக் கேட்பதாயும் வைத்துக் கொள்வோம்; உடனே நமது தாயார் கூறுகிறார்கள் 'இந்தக் கூலிக்காரர்களே இப்படி'த் தான் என்று!
இதுதான், 'நம்மையும் அறியாமல், நடுத்தர வகுப்பார் முதலாளி பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்' என்பது
இரயில்வேத் தொழிலாளர்கள் ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு வேலை நிறுத்தம் செய்தனர்; அந்த வேலை நிறுத்தத்தைத் திறம்பட நடத்த கம்யூனிஸ்டுகள் இல்லாமற் போகவில்லை; வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எத்தகு அடக்குமுறைகளையும் தாங்கிக் கொள்ளும் உள்ள உரம் இல்லாமற் போகவில்லை; அதற்கு ஆதரவாக நாம் துணை நிற்காமல் போகவில்லை!
நாம் என்றால்- அன்று திராவிட கழகமாக இருந்தோம். பெரியார் கூட, 'ஆதரவு தரவேண்டாம்' என்றார்; நான்தான், 'ஆதரவு தந்தாக வேண்டும்' என்று கூறினேன்; அப்போதே கூட, எனக்கும்-பெரியாருக்கும் கருத்து வேறுபாடு!
இப்படி, கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்தினர் தொழிலாளர்கள் உறுதியுடன் நின்றனர்-நாம் துணை நின்றோம்; என்றாலும் அந்த வேலை நிறுத்தம் முறியடிக்கப் பட்டது எதனால்? எப்படி?
இதை நான் அப்போதே நண்பர் ஜீவானந்தத்திடம் கூறினேன்; அவர், 'அண்ணாதுரை - நீ ஒரு அவசரக்காரன்' என்று கூறிவிட்டார்!
அன்று நடுத்தர மக்களையே, 'வேண்டாம்; அவர்களின் ஆதரவே தேவை இல்லை' என்று பேசியவர்கள், இன்று 'பிர்லாவே வருக; கேரளத்தில் தொழிற்சாலைகளை அமைத்துத் தருக' என்று பேசுகிறார்கள்.
அன்று, 'நெடுஞ்செழியனைச் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்; 'கூடாது; இவர்களெல்லாம் மத்திய தர வகுப்பினர்; இவர்களைச் சேர்த்துக் கொண்டால், தொழிலாளர் இயக்கத்தின் தூய்மை கெட்டுவிடும் என்று பேசினார்கள். இன்று பிர்லாவையே அழைக்கிறார்கள்!
காரணம் கேட்டால், 'தொழிற்சாலையை நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தருவதற்காகவே அழைக்கிறோம் என்கிறார்கள்!
நாகப் பாம்பை படுக்கை அறைக்குள் விட்டுவிட்டு, 'இது நாகப் பாம்புதான்; ஆனால் ஒன்றும் செய்யாது; இதன் ஆட்டத்தை எனது மனைவி நாகவல்லி பார்த்துக் கற்றுக் கொள்வதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறேன்' என்பது போல் இருக்கிறது அவர்கள் கூறுவது!
பத்து வருடங்களுக்குமுன், நடுத்தர வகுப்பினரையே, 'வேண்டாம்' என்றவர்கள், இன்று முதலாளிமார்களையே அழைக்கின்றனர்; 'நடுத்தர வகுப்பார் ஆதரவும் வேண்டும் என்று உணர்ந்து வருகிறார்கள்!
ஆயிரம் தவறுகள் செய்வார்கள்; ஆனாலும், எவ்வளவு அவசரமாகத் தவறுகளைச் செய்வார்களோ அவ்வளவு அவசரமாகத் தவறுகளைத் திருத்திக் கொள்ளக் கூடியவர்கள் கம்யூனிஸ்டுகள்! இந்திய அரசியலிலேயே, செய்கிற எண்ணற்ற தவறுகளை மிக மிகத் திருத்திக் கொள்ளக்கூடியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான்!” 'நம்நாடு'
முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை !
ஒரு சிலரின் ஆசைக்கு மிகப் பலரைப் பலியாக்குவது தான் முதலாளித்துவத்தின் முடிந்த கொள்கை! சக்திக் கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி என்பதுதான் சமதர்மத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்!
மாளிகைக்கு அருகே மண்மேடு இருக்கக் கூடாது! மந்தகாச வாழ்வுக்கருகே மனிதப் புழுக்கள் உலவக் கூடாது! சோம்பேறிச் சீமைகள் ஒரு புறமும், சோர்ந்து விழும் அனாதைகள் மற்றொரு புறமும் இருக்கக்கூடாது! இதற்குப் பெயர்தான் சமதர்மம்!
சாதி மத-குல பேதங்கள், நம் மக்களை முன்னேற ஓட்டாதபடி மூச்சுத் திணறும்படி - முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன! இந்நிலையில், நம் நாட்டில் சமதர்மம் மலருவது எங்கே? சமத்துவம் தோன்றுவது எப்படி? அதன் முழுப் பயனாகிய தோழமையைக் காண்பது எங்ஙனம்?
சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம்! சாதிப்பது கடினம்!
வெளியே நின்று வேதனைப்படும் நிலை ஏன்?
"கடற்கரையில் அதுல்யா கோஷூம் காமராசரும் பேசியதாகப் பத்திரிகையில் செய்தி வந்தது; 'உழுபவனுக்கே நிலம் - தொழிலாளிக்குத்தான் ஆலை' என்ற அதுல்யா கோஷ் பேசினாராம்.
"உழுபவனுக்கு நிலம் என்றால், பட்டாக்காரரிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் எப்படி வந்தது? வலிவலத்தாரிடம் ஏராளமான நிலம் இருக்கக் காரணம் என்ன? குன்னியூர் சாம்பசிவம் எப்படி இவ்வளவு நிலங்களைப் பெற்றார்?"
"உழுபவனுக்கு நிலம்" என்றால், உழுபவர்களுக்கு அல்லவா நிலம் சொந்தமாகி இருக்க வேண்டும்?
"தொழில் செய்யும் தொழிலாளிக்கும் ஆலையில் பங்கு" என்றால், இங்கு ஆலைகள் நெடுங்காலமாக மூடிக்கிடப்பானேன்? உள்ளே இருந்து வேலை செய்ய வேண்டியவர்கள், வெளியே நின்று வேதனைப்படுவானேன்?
-அறிஞர் அண்ணா
(1966ல், கோவை-நரசிம்மாபுரத்தில் நடைபெற்ற
தொழிலாளர் கூட்டத்தில் ஆற்றிய உரையில்)