ஊசிகள்/பக்கம் 25-35

விக்கிமூலம் இலிருந்து
(ஊசிகள்/பக்கம் 25-34 இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொறாமை





ஓ! ஒ! செல்வம்
உடைய பெரியீர்!
உங்களால்தாம்
பாரி ஆக
முடிய வில்லையே...

அதுகளேனும்
நக்சல்
பாரி ஆகிப்
போனால் என்ன?

புழுங்கி ஏன்நீர்
பொறாமைப்படுகிறீர்?



சிவப்பு நாடா?



கண்ணன் சொல்கிறான்

சிவப்பு நாடா எங்கும்....
சீராக்க வேண்டும்....
சீராக்க வேண்டும்....

ஊராட்சி ஒன்றியப்
படிக்கட்டிலிருந்து
தலைமைச்செயலக
உச்சி வரையில்
சிவப்பு நாடா எங்கும்....

நிர்வாகத் தோட்டத்தில்
நிரூற்றத் தவறும்
அதிகாரவர்க்கத்தின்
அலட்சியப் போக்கால்
நாங்கள்
நட்டு வைத்த
நல்ல இலட்சியம்
பட்டுப் போவதைப்
பார்க்கிறோம்... பதைக்கிறோம்.

திருநீலகண்டர்தம்
திருக்கை படாமல்
பலகைமேல் கொஞ்சமும்
'கட்டு'(க்)குலையாது
காட்சியளிப்பதால்

நாங்கள்
தேனாய் நினைத்துத்
தீட்டிய திட்டம்
ஈனாதிருப்பதைப்
பார்க்கிறோம்... இளைக்கிறோம்.
சிவப்பு நாடா எங்கும்
சீராக்க வேண்டும்... டும்... டும்.



மீரா கேட்கிறாள்


இது என்ன
சிவப்பு நாடா?

அடியேன் பறைவது...



எனக்குத் தெரிந்த வரைக்கும்
இலட்சக் கணக்கில் இங்கே
உனக்குத்தானே மாபெருங் கூட்டம்

கூட்டம்
திரண்டு வருவதைத்
தெரிந்து கொண்டும்
தேர்தல் வருவதைப்
புரிந்து கொண்டும்
இப்படிச்சிலையாய்
இருக்கின்றாய்ஏன்?

ஏன் ஏன்?

இப்போது கூடக்
காலம் வீணாய்க்
கடத்தாமல் புதுக்
கட்சியைத் தொடங்கினால்
கண்டிப்பாக
ஆட்சியைப் பிடிக்கலாம்...
அடியேன் பறைவது
மெய்யப்பா-
ஐயப்பா!

பெருங்காயம்?



சிந்தனைக் குரிய
செய்திகள் மூன்று:

மேகமலையில்
விமான விபத்து......
மூன்று பேர்க்கு
முதுகில் காயம்.

ஜெஸ்ஸார்முனையில்
நடந்த சண்டையில்
முப்பது பேர்க்கு
முகத்தில் காயம்

சித்திரை வீதியில்
சினிமா நடிகை
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீயைத்
திக்கு முக்காடச்
செய்த கும்பலில்
சிக்கிய அறுபது பேர்க்கு
முதுகில் முகத்தில்
நெஞ்சில் காயம்!

ஜனநாயக சோஷலிசம்




ஐந்து வருடம்
முடிந்தால் தேர்தல்
எனபதை மாற்றி
இங்கே
வருடா வருடம்
வைத்தால் போதும்.

பெரும் பெரும்
புள்ளிகள் எல்லாம்
வெள்ளிப்பணத்தை
அள்ளி இறைப்பார்
ஆடிக் கரைப்பார்


சுலப மாகச்
சோஷ லிசத்தை
அடையும் வழியிது;
அற்புத வழியிது.

குப்பையிலே மாணிக்கம்



கருப்புப் பணத்தைக்
கண்டு பிடிக்கும்
அதி தீவிர
அதிகாரிகள்
பம்பாய் நகரில்
பகலிலுங் கூடப்
பளபளக்கும்
ஒரு
நட்சத்திரத்தின்
பங்களாவுககுள
ஒரு
கோடியில் கிடந்த
குப்பைக் கூடையில்
மதிப்பு மிக்க
மாணிக்கங்களைத்
தேடி எடுத்துத்
திகைப்படைந்தார்களாம்!

'குப்பையிலே
மாணிக்கம்’
என்று நம் முன்னோர்
சும்மாவா சொன்னார்:


முடிவெட்டுவோர்
முணுமுணுப்பு




முன்பெல் லாம்
முடிவளர்ப் பார்கள்...
திருப்பதி பழனி
திருச்செந்தூர்போய்
மொட்டை அடிக்க!

இப்போதெல்லாம்
நாகரிகத்தை
வளர்க்கிறோம் என்று
முடிவளர்ப்பார்கள்
எங்களை
மொட்டை அடிக்க!



பறக்க விடலாம்




கோட்டும் சூட்டும்
போட்டுக் கொண்டு
வீட்டுப் படியை
மிதித்த போது
கையில் என்ன
என்றான்தம்பி

கண்ணில் ஏறிக்
கர்வம் நிற்க
வேந்தர் மூவர்
வெற்றிக்காகத்
தந்த பட்டம்
என்று கூறிப்
பார்த்தேன்; தம்பி
பாய்ந்தான் புலியாய்!

எங்கே என்றுநான்
இரைந்து கேட்டேன்...

'நூல் வாங்க......
நூல் வாங்க...”

இரண்டு பிணங்கள்



இரண்டு பிணங்கள் எதிரெதிரே!

மருத்துவர் வந்தார்
அறுத்துப் பார்த்தார்
தற்கொலை என்றார்... சென்றார்
இரண்டு பிணங்கள் எதிரெதிரே!

நடைப்பினமாக
நாளைக் கழித்து
நாடகம் முடித்த தொன்று...
கடைப்பிணமாகக்
காசைப் பெருக்கிக்
கதையை முடித்த தொன்று...
இரண்டு பிணங்கள் எதிரெதிரே!

மூட்டைதூக்கிப்
பிழைக்கவும் முடியாப்
பூச்சி,
மூட்டைப் பூச்சி மருந்தைக்
குடித்தான்... உடனே
குளிர்ந்துபோனான்... போனான்

வைர வியாபாரி
மன்னார்சாமி-

வாயில்
வைரக்கடுக்கனைநுணுக்கிப்
போட்டான்...உடனே
விறைத்துப் போனான்...
போனான்...



ஓ. . . . . .
செத்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_25-35&oldid=1013715" இலிருந்து மீள்விக்கப்பட்டது