எக்கோவின் காதல்/அத்தை வீட்டில் பேய்

விக்கிமூலம் இலிருந்து

2
அத்தை வீட்டில் பேய்!

'போங்களத்தான்! எப்பொழுது பார்த்தாலும் உங்களுக்குக் கேலிதான். இனிமேல் என்ன கேட்டாலும் நான் கொண்டு வந்து தரமாட்டேன் போங்கள்!' என்று அன்பும் நாணமும் கலந்த கொஞ்சுங் குரலில் கூறிவிட்டு ஓடி விட்டாள் ஊர்மிளா.

ஊர்மிளா என் அத்தை மகள். படித்துக் கொண்டிருக் கிறாள். 'பச்சைக்கிளி என்றால் 'பச்சைக்கிளியேதான்' மங்கைப் பருவம் தன் வருகையை எப்படி எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அப்படியெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தமையால் அழகு பூரித்து வளர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு அழகுள்ள அவளுக்குக் கூந்தல் மட்டும் கொஞ்சம் நீளத்தில் குறைவாகவே இருந்தது. அந்த ஒரு குறையைத் தவிர அழகிலும் குணத்திலும் வேறு குறை காண முடியாது. அந்தக் குறைகூட இந்தக் காலத்தில் 'பாஷன்' என்றாலும், தமிழ் இலக்கியங்களில் படித்தபடி பெண்களுக்குக் கூந்தல் அடர்ந்து நீண்டு இருக்க வேண்டுமென்பது என் ஆசை. தாழ்குழல் - தோகை போன்ற குழல் என்றெல்லாம் வருணிக்கப் பட்டிருப்பதைப் படித்த எனக்கு அது குறையாகத் தோன்றியதில் வியப்பில்லை. இருந்தாலும் ஏனைய நிறைவுகள் அந்தக் குறையை மறைத்து விட்டன. ஊர்மிளாவின் தாய் என் தகப்பனாருடன் பிறந்த அத்தை. வாழ்க்கைப்பட்ட இடம் பெரிய இடம். பல வேலி நிலங்கள் உண்டு. வீடு வாசல், சொத்து சுகம் எல்லாம் நிறைந்த இடம். அவ்வளவு பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டிருந்தாலும் தன் மகளை எனக்கே கொடுக்க வேண்டும் என்பது என் அத்தையின் ஆசை.

எனக்கும் அங்கேயே மணஞ் செய்து கொள்ள வேண்டுமென்றுதான் விருப்பம்; பணத்துக்கு ஆசைப்பட்டன்று, ஊர்மிளாவின் உள்ளமும் உடலும் என்னை அந்த உறுதிக்குக் கொண்டு வந்தன.

வழக்கம் போல இந்தத் தடவையும் முதற்பருவ விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்திருந்தேன்.

'ஊர்மிளா கொஞ்சம் குடிக்கத் தண்ணிர் கொண்டு வா!' என்றேன்.

'நான்தான் இனிமேல் கொண்டுவர முடியாது என்று சொல்லி விட்டேனே; நான் கொண்டு வரவேமாட்டேன்’ என்றாள் அவள்.

'சீ! கழுதை! கேட்டால் கொடுத்தால் என்னவாம் மாட்டேன் என்றா சொல்வது? இதுவா மரியாதை? என்று எனக்காகப் பரிந்து பேசினாள் என் அத்தை.

'இல்லம்மா! அத்தான் சும்மா சும்மா கேலி பண்ணுதம்மா'

'கேலி செய்தால் என்ன! அத்தான் தானே, போம்மா போ! தண்ணீர் கொண்டு போய்க்கொடு'

தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து தந்தாள். வாங்கிக் கொண்டே 'திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படியெல்லாம் மாட்டேன் என்று சொல்ல முடியுமோ?' என்றேன்.

'பாரும்மா’ என்று சொல்லிவிட்டு ஓடி விட்டாள்.

'அத்தை! உன் பெண் என் வீட்டிற்கு வந்த பிறகு ஊர்மிளா என்ற பெயரை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக் கொள்ளப் போகிறேன்.'

'அத்தான்! தமிழ்ப் பண்டிதர் குணத்தைக் காட்டி விட்டீர்களே என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே உள்நுழைந்தான் முருகன் - ஊர்மிளாவின் உடன் பிறந்தான்.

'ஆம் அப்பா! உங்கள் சொந்த மொழியில் பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னால் அது இழிவாகத்தான் தோன்றும்’

'விளையாட்டுக்குச் சொன்னேன் அத்தான். கோபித்துக் கொள்ளாதீர்கள், எழுந்திருங்கள், சாப்பிடலாம்'

உணவை முடித்துக் கொண்டு பலவாறு பேசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றேன்.

இரவு மாடியில் படுத்திருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு உறக்கமே வரவில்லை, பல வகையான எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன.

மாடிப்படியில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டேன். ஏறி வருஞ் சத்தம் நின்றது. ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சிறிது நேரத்தில் எனக்குப் பக்கத்தில் ஒருவித சத்தம் கேட்டது. மிகமிகக் கூர்ந்து கேட்டேன். உஸ்ஸ் ...... உஸ்ஸ' என்ற சத்தம். மனம் படபட என்று அடித்துக் கொண்டது. மூச்சு வெகு வேகமாயிற்று. சத்தம் வந்த பக்கம் மெதுவாகத் தலையைத் திருப்பினேன். ஏதோ வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. படபடப்பு இன்னும் அதிகமாயிற்று 'பேயோ' என்று எண்ணினேன். 'குப்' என்று வியர்த்து விட்டது. வெள்ளை உருவம் வரவரப் பெரிதாகத் தெரிந்தது. அது என்னை நெருங்கி வந்துகொண்டிருந்தது நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது. கூச்சல் போட எண்ணினேன். அனால் கேலி செய்வார்களே என்று எண்ணிக் கொண்டே எழுந்தேன். தலையணை தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்தவுடன் 'குடுகுடு' என்று ஒடும் சத்தம் கேட்டது. மறுபடியும் மாடிப்படியில் சத்தம். சே! இனிமேல் இங்கிருப்பது தவறு என்றெண்ணிக் கீழே இறங்கிவந்து திண்ணையில் படுத்துக் கொண்டேன்.

மறுநாட் காலை, 'மாடியில் பேய் நடமாட்டம் இருக்கும் போலிருக்கிறது' என்று அத்தையிடம் சொன்னேன்.

'அத்தான்! அதுதான் பயந்து போய்த் திண்ணையில் படுத்து விட்டீரோ?' என்றான் முருகன்.

‘எல்லாம் உனக்கு விளையாட்டுத் தானப்பா, நேரில் பார்த்தேன் - அப்புறமென்ன?'

'எதைப் பார்த்தீர்கள்? பேயையா!'

'ஆமாம்; பேயைத்தான். பன்னிரண்டு மணி இருக்கும். படியில் யாரோ ஏறிவருஞ் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பக்கத்தில் 'உஸ்ஸ்- உஸ்ஸ்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வெள்ளையாக ஓர் உருவம் தெரிந்தது. வரவரப் பெரிதாயிற்று. அதை என் கண்ணாரப் பார்த்தேன். அதன் பிறகுதான் இங்கு வந்து படுத்தேன்!

'அத்தான்! பேயுமில்லை பிசாசுமில்லை; வேறு எதையோ பார்த்து இருட்டிலே பயந்து விட்டீர்கள்!'

'முருகா! உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான். நான் நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன். நீ - என்னவோ சொல்லுகிறாயே!'

'சரி அத்தான், உடனே விளக்கைப் போட்டுப் பார்த்தீர்களா?'

‘விளக்கைப் ...... போடவில்லை ...... அதை எதற்கு நாம் அவ்வளவு கவனிக்க வேண்டும் என்று பேசாமல் வந்து விட்டேன்'

'அத்தான்! அப்படியானால் அது உறுதியாகப் பேயில்லை. எதையோ பார்த்திருக்கிறீர்கள். இருட்டானதால் அது உங்கள் கண்ணுக்குப் பேய் போலத் தோன்றியிருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாருங்கள்'

'அது என்ன?' - என்று வாங்கிப் படித்தேன்:

"திருஷ்டாந்தரமாக, பேய் பிடித்த வீட்டின் சம்பவமொன்றை எடுத்துக் கொள்ளுவோம். பாதி இரவில் ஒரு சப்தம் கேட்டதாக இருக்கட்டும். இந்தச் சப்தம் யாரால் வந்தது? சாதாரணமாகக் காற்றால் சப்தம் உண்டாயிருக்கலாம். அல்லது ஏதாவது சாமான் விழுந்ததால் உண்டாயிருக்கலாம். அல்லது சப்தம் கேட்பது போல் எண்ணியுமிருக்கலாம். அல்லது காதின் பலவீனத்தால் சப்தத்தைக் கேட்ட மாதிரியிருக்கலாம். இத்யாதி காரணங்களால் சப்தம் என்ற சம்பவம் உண்டாவது சகஜம் ...... சப்தம் உண்டான காரணம் தெரியாதபடியால் பழக்க வாசனையால் அந்தச் சப்தம் தெய்வத்தாலோ. பேயாலோ, பிசாசாலோ உண்டாயிற்றென்று தீர்மானிக்கிறோம்.”

'இது என்ன பத்திரிகை? ...... சரிசரி! 'திராவிட நாடா' நீ எப்போ இதிலே சேர்ந்தாய்? இந்தக் கூட்டத்திலே சேர்ந்த நீ எங்கே பேய் பிசாசை நம்பப் போகிறாய்?'

'அத்தான்! சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குகிறது என்று பூரணமாக நம்பும் பண்டிதர் கூட்டத்தைச் சேர்ந்த நீங்கள் எங்கே நான் சொல்வதை நம்பப் போகிறீர்கள்!'

'சரி தம்பி! நேரமாகிறது, காப்பி சாப்பிட எழுந்திரு! அவன் அப்படித்தான் குறும்பாகப் பேசுவான். சாமியே இல்லை என்று சொல்கிறவர்களோடு கொஞ்ச நாளாய்ச் சேர்ந்திருக்கிறான்' என்று சொல்லி, என் அத்தை எங்கள் வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

அன்று, இரவு வண்டிக்குப் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

மூன்று மாதங்களை எண்ணிக்கொண்டேயிருந்தேன். இரண்டாம் பருவ விடுமுறையும் வந்தது. அத்தையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஊர்மிளாவைக் காண ஆவலோடு வந்தேன். அவளைக் காண முடியவில்லை. பாவாடை, தாவணியைத் தாங்கியிருந்தாலல்லவா அவளைப் பார்க்க முடியும். அவள் பருவநிலை, சேலைக்கு உறைவிடமாயிருந்தது. சமயற் கட்டில் அவள் அங்குமிங்கும் செல்லும் பொழுது அரைகுறையாகப் பார்த்துக்கொண்டேன். அவ்வளவு தான். அவளும் சில வேளை, சாளரத்தின் வழியே சந்திரனைக் காட்டுவாள். நான் பார்த்து விட்டால் சட்டென்று சந்திரன் மறைந்துவிடும்.

அன்று மாலை அத்தை, கோவிலுக்குச் சென்று விட்டார்கள். மாமாவும் முருகனுங்கூட இல்லை. நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று சமையற்கட்டுள் நுழைந்தேன்.

'அய்யையோ' - என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தாள் கதவின் பின்புறம்.

கதவை இழுத்தேன்.

கைத்தாமரையால் முகக்தாமரையை மூடிக்கொண்டாள். தாமரையை வலியமலரச் செய்தன என் கைகள்.

'அம்மா வந்து விடுவார்கள், போங்கள்' என்று அவள் கூறும்போது அந்தக் குரலில் கோபம், நாணம், அச்சம், அன்பு எல்லாங் குழைந்திருந்தன.

'ஊர்மிளா' என்று தளர்ந்த குரலில் அழைத்தேன். என் குரலில் கரகரப்பும் கலந்திருந்தது.

'அத்தான்!' - என்றாள். பாதாளத்திலிருந்து பெரு மூச்சுடன் வெளிவந்தது அந்த ஒலி. அவள் நிமிர்ந்து என்னைப் பார்க்கும் பொழுது அந்தக் கண்கள் என்ன என்னவோ பேசின. நீர்நிறைந்த பார்வை.

இருவரிடையேயும் அமைதி.

‘என்னை மணப்பதில் தடையில்லையே? விருப்பந்தானே?' என்றேன். 'இல்லை என்று ஒருவரிடமும் சொல்லவில்லையே'

'தடை இல்லை என்றா?'

'இல்லை இல்லை; விருப்பம் இல்லை என்று சொல்லவில்லையே என்றேன் ...... சரி ...... போங்கள் ... அம்மா .......'

'போகிறேன். இரவு மாடிக்கு வருகிறாயா? சில செய்திகள் தனிமையில் உன்னிடம் சொல்லவேண்டும்’ என்றேன். அவளுடைய முறுவல் பூத்தமுகத்தை நாணம் வந்து கவ்விக் கொண்டது.

'ஊர்மிளா!' என்று அவள் முகத்தை நிமிர்த்தினேன்.

'வருகிறாயா?'

உடன்பாட்டைத் தலையசைப்பின் மூலம் தெரிவித்தாள்.

அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு. அத்தையும் வந்து விட்டார்கள். ஆனால் பாழும் அந்த இரவுதான் விரைந்து வரக் காணோம். அப்பொழுதுதான் இலக்கியத்திற் கண்ட ‘விரகதாபம்' இன்னதென்று உணர்ந்தேன்.

எப்படியோ இரவும் வந்துவிட்டது. நள்ளிரவும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவள்தான் வரவில்லை. வந்துவிடுவாள் வந்துவிடுவாள் என்று என் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டேயிருந்தன. அவள் வந்தால் எப்படிப் பேசவேண்டும், அக நானூறு முதலியவற்றிற் கண்ட இலக்கிய இன்பம் எவ்வாறுளது என்று காணவேண்டும் - என்றெல்லாம் கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

மாடிப் படியில் சத்தம் கேட்டது. ஆம் அவள்தான் வருகிறாள் - மெதுவாகக் காலடியை எடுத்து வைத்து வருகிறாள் - சத்தம் மேல் படிக்கு வந்துவிட்டது. படிச்சத்தமும் நின்றுவிட்டது. சரி, வந்துவிட்டாள். நாம் உறங்குவது போல் பாசாங்கு செய்யலாம். நம்மை எப்படி எழுப்புகிறாள் பார்ப்போம் என்று எண்ணிக் கண்களை மூடிக் கொண்டேன். சத்தம் அருகில் கேட்டது. என் துடிப்பு மிக வேகமாயிருந்தது. ஆனால் அவள் என்னை எழுப்பவில்லை. என்னால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடியவில்லை. நாமே ...... என்று கண்விழித்தேன்.

'உஸ்ஸ் - உஸ்ஸ்' சத்தங் கேட்டது. அன்புக்காகத் துடித்த துடிப்பு. அச்சத் துடிப்பாக மாறியது. திரும்பினேன். அந்தப் பழைய வெள்ளை உருவம் தெரிந்தது. அசைந்து அசைந்து ஆடியது. இடையிடையே 'உஸ்ஸ்' சத்தம். திடீரென்று வெள்ளை உருவம் கீழே உட்கார்ந்தது. மனம் பதறியது. உடல் நடுங்கியது. எழுந்து 'லைட்' போட நடந்தேன். மூன்றே மூன்று அடிதான் கால் வைத்திருப்பேன். என் மேல் ஓர் உடம்பு மோதியது. அய்யோ என்றலறிக் கீழே சாய்ந்து விட்டேன். உடனே பட்டப்பகல் போல வெளிச்சம் தெரிந்தது. 'எலக்ட்ரிக் ஸ்விட்ச்'சிலிருந்து கையை எடுத்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா

'ஏன் இப்படிச் சத்தம் போட்டீர்கள்?’ என்று மெதுவான குரலிற் கேட்டாள்.

'ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டு வெள்ளை உருவம் உட்கார்ந்த பக்கம் பார்த்தேன். ஒன்றையுங் காணவில்லை. ஆனால் அந்த இடத்தில் ஒரு வேட்டி கிடந்தது. அப்பொழுதுதான் உண்மைப் 'பேயை'க் கண்டுபிடித்தேன். அந்த மூலையில் கொடியிற் காய்ந்து கொண்டிருந்த வேட்டி காற்றில் அசைந்தது, அஞ்சிய என் கண்ணுக்கு ஒர் உருவமாகப் புலப்பட்டிருக்கிறது. அது கீழே விழுந்தது, உட்கார்ந்தது போலத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அந்த 'உஸ்ஸ்' எப்படி வந்தது? மாடிப் படியில் சத்தங் கேட்டதே அது எப்படி வந்தது?

'ஏன் இப்படி ஒரு மாதிரி மிரள மிரள விழிக்கிறீர்கள்? என்னைக் கண்டு பயந்து விட்டீர்களா?'

'சேச்சே! பயமாவது ஒண்ணாவது' - என்று சொல்லிக் கொண்டே போய் அந்த வேட்டியை எடுத்து உதறினேன்.

உதறினேனோ இல்லையோ மூலையிலிருந்த உளுந்து மூட்டைக்குப் பின்னாலிருந்து இரண்டு பெருச்சாளிகள் 'உஸ்ஸ்’ என்று சத்தமிட்டுக் கொண்டே 'குடுகுடு' வென்று வெளியே ஓடின. உடனே படிகளிற் சத்தங்கேட்டது. அப்பொழுதான் என் 'பயம்' விட்டது.

மாடிப்படிகள் மரப்படியானதால் பெருச்சாளிகள் ஏறும்பொழுதும் இறங்கும்பொழுதும் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது. ஊர்மிளா வந்து 'லைட்' போடாமல் இருந்தால் பெருச்சாளி, பேயாகி என்னைக் கொன்றிருக்கும். அறிவு வெளிச்சம் ஏற்பட்டால் அல்லவா அறியாமை இருள் நீங்கி உண்மை வெளிப்படும். அதை விடுத்து இருளில் அகப்பட்டுக் கொண்டு ஒன்றை மற்றொன்றாக எண்ணிக் கொண்டிருந்தால் மடியவேண்டியதுதான் என்ற 'சித்தாந்தம்' அந்த வெளிச்சத் திற்றான் எனக்கு ஏற்பட்டது.

வேட்டியைக் கொடியில் போட்டுவிட்டு வியர்வையையும் துடைத்துக் கொண்டு, 'ஊர்மிளா! வா! உட்கார்!' - என்று கையைப் பிடித்தேன்.

'ம்ம், தொடாதீர்கள் அத்தான்!' என்றாள். 'பின் ஏன் இங்கு வந்தாய்?' என்றேன்.

'நான் வருவேன் என்று விழித்துக் கொண்டிருப்பீர்களே சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்.'

'இதற்கு வந்திருக்க வேண்டாமே' என்று கொஞ்சங் கோபமாகப் பதில் சொன்னேன்.

'சரி நான் வருகிறேன். அம்மா விழித்துக் கொள்வார்கள்' என்றாள்.

‘போவதாயிருந்தால் போகலாம்' என்று சற்றுக் கடுமையாகவே சொன்னேன். அவள் கண்களிலிருந்து இரண்டு முத்துகள் உதிர்ந்தன.

'ஊர்மிளா' என்று அனைத்தேன்.

'அத்தான்' என்று மார்பிற் சாய்ந்து கொண்டாள்.

அடடா! இன்பம்! இன்பம்! இலக்கிய இன்பம்!

வெளியிற் சென்று உலவிவிட்டு வந்து, வீட்டிற்குள் நுழையும்போது அத்தையும் மாமாவும் ஏதோ உரத்துப் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. என்னைப் பற்றிப் பேசுவதாகத் தெரிந்தது. சட்டென்று நின்று கேட்டேன்,

'முடியவே முடியாது, நீ எவ்வளவு சொன்னாலும் நான் சம்மதிக்க மாட்டேன். ஏன் சொத்தென்ன - கெளரவமென்ன - ஏன் பெண்ணை போயும் போயும் ஒரு தமிழ் வாத்தியாருக்கா கொடுப்பது? ஒருக்காலும் முடியாது. இன்னொருமுறை இந்தப் பேச்சை என்னிடம் பேசாதே!' தலை சுழன்றது. எவ்வளவுதான் சம்பளத்திலும் மற்ற வகையிலும் தமிழ் ஆசிரியன் தாழ்த்தப்பட்டிருந்தாலும், அவனுக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? அவனும் மனிதன்தானே! பணம் இல்லை - அழகில்லை - இப்படி ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை. 'தமிழ் வாத்தியார்' அட! அஃது என்ன அப்படிக் கேவலமான தொழிலா? கள்ள மார்க்கெட்டு - இலஞ்சம் - குடிகெடுத்துக் குபேரனாவது - இவற்றையெல்லாம் உயர்வாகக் கருதுகிறார்களோ? ஆம், பணந்தானே உயர்வு தாழ்வைப் படைக்கிறது. அஃது எந்த வழியால் வந்தாலென்ன! பணம் இல்லாத காரணத்தால் பாவம் 'தமிழ் வாத்தியார்' இவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான். போகட்டும்.

இவ்வளவு தாழ்வாக என்னைக் கருதும்போது எனக்கு இங்கென்ன வேலை? என்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப்புறப்பட்டு விட்டேன். 'ரயிலி'ல் வரும்பொழுதுதான் ஊர்மிளாவின் நினைவே வந்தது. அடடா! அவளிடங்கூடச் சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று வருத்தப் பட்டேன்.

ஆறு ஏழு மாதங்களாக நான் அங்கே போவதில்லை. ஒருநாள் திருமண அழைப்பு வந்தது. திருமண அழைப்பைப் பிரித்துப் பார்த்தேன். ஊர்மிளாவிற்கும் உலகநாதனுக்கும் திருமணம் என்றிருந்தது. என் சீற்றத்தைக் கையிலிருந்த அழைப்பிதழில் காட்டினேன்.

'ஊர்மிளா! என்னை ஏமாற்றி விட்டாய்! அன்று இரவில் கூறியதெல்லாம் பொய்தானா? அவ்வளவும் உண்மை என்று நம்பி விட்டேன். 'உங்களுக்குத்தான் என் உயிர் உடல் அனைத்தும் சொந்தம்' என்று கூறினாயே! இன்று உலகநாதனுக்கு உல்லாசப் பொருளாகப் போகிறாய்! அன்று பெருச்சாளியைப் பேய் என்று எண்ணினேன். ஆனால் அது தவறு. பெண்ணுருக்கொண்ட பேய் நீதான். என் வாழ்வு முழுதும் ஆட்டி வைக்கும் பேயாகிவிட்டாய்” என்றெல்லாம் திட்டினேன். திட்டி என்ன செய்வது; அவள் தகப்பன் பணஆசை பிடித்தவன். அதனால் அப்படிச் செய்து விட்டான். அதற்கு அவள் என்ன செய்வாள். அவன் அப்படியிருந்தாலும் அவள் ஏன் உடன்பட வேண்டும்? இப்படியெல்லாம் உழன்றது என் மனம்.

திருமண நாள் நெருங்கிவிட்டது. நாளை எண்ணிப் பார்த்தேன். நாளைக் காலைதான் திருமணம். அவள் மணக்கோலம் என் கண்முன் தெரிந்தது. நானும் அவள் அருகில் இருந்தேன். மறுபடி அவளருகில் உலகநாதன். மேள ஒலி வீட்டையே அதிரச் செய்தது. அவள் அவனைக் கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவன் முறுவல் பூத்த முகத்தை அவள் பக்கமாகத் திருப்புகிறான்.

'அய்யா! தபால்’

திடுக்கிட்டு எழுந்தேன். கற்பனை கலைந்தது. தபாலை வாங்கிப் பார்த்தேன்.

'ஊர்மிளா நேற்று இரவு சிவலோகப் பிராப்தி அடைந்து விட்டாள்'.

எனக்குப் பதற்றமோ பரிதாபமோ ஏற்படவில்லை. ஆனால் என் உள்ளம் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது.

‘என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறதென்று எண்ணினேன். ஆனால் அது பெருச்சாளியாயிற்று. பெருச்சாளி பேய் என்னை கொல்ல இருந்தது. ஆனால் ஊர்மிளா என்னைக் காப்பாற்றினாள். இப்பொழுது உண்மையிலேயே என் அத்தை வீட்டில் பேய் இருக்கிறது. அது பணப்பேய் - இல்லை- பணப் பெருச்சாளி. அந்தப் பெருச்சாளி பேயாக மாறி அவளைக் கொன்றுவிட்டது. அவளை அந்தப் பேயிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டேன். அவள் சந்தித்ததுபோல, நான் வரும் பொழுது அவளைச் சந்தித்திருந்தால் அவளைக் காப்பாற்றி இருப்பேன்.....

அவள் விருப்பப்படி அவளுடைய காதலனை அடைய தடுத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் கொலைக் குற்றத்துக்கு உடந்தையாயிருந்து விட்டுச் சிவலோகமாம் - பிராப்தியாம் சொல்கிறார்கள் வெட்கமின்றி, அந்தச் சொற்களைப் பார்க்கப் பொறாத என் கண்கள் நீரை சிந்தி அந்த எழுத்துகளை அழித்துவிட்டன.

□ □ □