எக்கோவின் காதல்/அழிந்து விடுமோ?

விக்கிமூலம் இலிருந்து
10
அழிந்து விடுமோ?

கவிஞர் மறைந்தார்.

கவிஞர் கண்ணனும், அவர் நண்பரும் கட்டு மரத்தில் ஏறிக் கடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கட்டுமரம் கவிழ்ந்து விட்டது. கவிஞரைக் காணவில்லை. நண்பர் மட்டும் உயிரோடு கரை சேர்ந்தார்.

விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வீறு நடை கொண்ட கவிதைகளைத் தமிழகத்திற்குத் தந்த கவிஞர் இவர். கற்பனைச் செறிவும், உவமை நயமும், புதுமைப் பொலிவும் இவர் கவிதைகளிலே மின்னித் தவழ்ந்து விளையாடும். இத்தகைய கவிஞர் மறைவு தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

-வானவில்

சாதி சமயங்களை மோதித் தகர்த்தெறிய வேண்டு மென்பது அவன் எண்ணம். ஏழைகளின் துயரத்தை - அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளை - உடைமைகளை அஞ்சாது எடுத்துச் சொல்லுவான். பெண்மையைப் பாழ்படுத்தும் பேதமையை வெறுப்பான். புதியதொரு சமுதாயத்தை அமைக்க - புத்துலகைக் காணத் திட்டம் தருவான். கண்மூடித்தனங்கள் மண் மூடிப்போக வேண்டும் என்பான். சமூகம் - பொருளியல் - அரசியல் மூன்றிலும் புரட்சி வேண்டும் என்று எக்காளமிடுவான். இவ்வளவும் அவன் கூறுவது உரை நடையிலே அன்று, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிதையிலே.

முன்னோர் காணாத உவமைகள் தாண்டவமாடும் அக் கவிதையிலே. உயிர்ப்புள்ளது - உணர்ச்சியுள்ளது - ஒப்பில்லாதது அவன் கவிதை. அவன் கவிஞன். புரட்சிக் கருத்துள்ள புதுமைக் கவிஞன். புறாவை - கடலில் காணும் சுறாவை, உழவனை - உணவின்றி வாடும் கிழவனை, மாலையை - ஆலைத் தொழிலாளியின் வேலையைப் பாடுவான், வைதிகரின் மமதையைச் சாடுவான். விதவைச் சகோதரிகளின் அழுகுரல் கேட்கும் அவன் பாட்டில். காலத்துக்கேற்ற கருத்துகள் ஓடி ஓடிச் சிரித்து விளையாடும். ஆனால் .... அவன் கவிதையின் பெருமையை - அறிவின் திறனை யார் அறிகின்றார்? அறிந்தாலும் போற்றுவார் யார்?

வறுமையிலே வாடுகிறது அவன் உள்ளம். அதையும் தாண்டித்தான் தருகிறான் புரட்சிக்கவிதைகளை. உண்மையான கவிஞன் உள்ளம், காசு பணத்தைப்பற்றிக் கவலைப்படாது. என்னும் உண்மையை அவன் வாழ்க்கையிலே தான் படித்தறிந்தேன்.

அவன் என் உயிர் நண்பன். அவனைப் பற்றி - அவன் கவிதையைப் பற்றி - வறுமையைப் பற்றி - அடிக்கடி எண்ணுவேன். அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற உணர்ச்சி என்னைத் தூண்டும். ஆனால் என்னிடமும் பொருள் இல்லை என்பதை, சிந்தனை முடிந்த பின்புதான் உணர்வேன். பணமிருந்தால் அந்த எண்ணம் தோன்றுவது கொஞ்சம் அரிதுதானே! பணம் இல்லாவிடினும் எப்படியேனும் அவனை உலகுக்குக் காட்ட வேண்டும் - அவன் கவிதையால் என் நாட்டிலே சமதர்மத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். பல பத்திரிகைகளுக்கு அவன் பாடல்களை அனுப்பினேன். சில நாளில் என்னிடமே திரும்பி வந்துவிட்டன. மக்கள் மன்றத்திலே மலரட்டும் என்று எண்ணினேன். தோல்வி! ஏன்? தமிழ் நாட்டிலே பிறந்த ஒரே குற்றத்திற்காக அந்தத் தோல்வி. அவன் வேற்று நாட்டிலே பிறந்திருந்தால் ஒவ்வொரு எழுத்தும் பொன்னாற் பொறிக்கப்படும்: இங்குப் பிறந்ததால் அவன் கவிதைகள் போற்றுவாரின்றி அழிந்து விடுமோ? என்று வருந்துவேன்.

அறிஞர்களை - அல்லல் எதுவரினும் மக்களுக்கே தொண்டு செய்யும் பெரியார்களை அலட்சியப் படுத்துவது - அவமானப் படுத்துவது தானே நம் நாட்டு மக்களின் பெருந்தன்மை! உண்ணும்போது - உறங்கும் போதுஉலவும்போது எப்பொழுதும் அவனைப்பற்றிய எண்ணந்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். முடிவின் விளைவுதான் மேலே கண்ட - வானவில் - என்ற பத்திரிகைச் செய்தி.

பத்திரிகைச் செய்தி வந்த சில தினங்களில் கண்ணன் கவிதை வராத பத்திரிகை ஒன்றேனும் இந்நாட்டில் இல்லை! புகழத் தொடங்கிவிட்டன. "புரட்சிக்கவி” “தென்னாட்டுத் தாகூர்” இப்படி ஏதோதோ பட்டங்கள் வழங்கின. 'வாழ்வுக்கு வழி' 'மங்கையர் மாண்பு' 'விடுதலை வேண்டுமா?' என்ற தலைப்புகளிலே புலவர் பெருமக்களால் மேடைகளிலே பேசப்பட்டன அவன் கவிதைகள். இதைக் கண்ட எனக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், மக்களின் நிலைமை கண்டு வருத்தம் ஒரு பக்கம், என்ன உலகம் இது! அவன் உயிரோடு இருக்கும்பொழுது உணவின்றிக் கழித்த நாள் எத்தனை! அன்று ஆதரவு தருவாரில்லை . இன்று ! ....பேசுவது - எழுதுவது - பாடுவது எல்லாம் அவனைப்பற்றி. சீர்திருத்த வாதியை உயிரோடு வாட்டுவது - இறந்தபின் உருவச்சிலை நாட்டுவது-அவனைப் பலபடப் போற்றுவது! இது மக்களியல்பாகிவிட்டது.

உலகப் பெரும்போர் முடிந்தது. சிங்கப்பூரிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கப்பல் புறப்பட்டு விட்டது. அதிலே தமிழ்நாட்டு மக்கள் தம் தாயகத்திற்குத் திரும்பினர். அதே கப்பலில் என் நண்பன் கண்ணனும் வந்து சேர்ந்தான்.

“மறைந்த கவிஞர் மாளவில்லை. இழந்த மாணிக்கத்தைப் பெற்றுவிட்டோம். அவருக்குச் சென்னையிலே வரவேற்பும் பாராட்டும் நடைபெறும். கவிஞர் கண்ணன் வாழ்க”.

- வானவில்

இதைக்கண்ட என் நண்பனுக்கு மண்ணில் இருக்கிறோமா - விண்ணில் பறக்கிறோமா? என்ற அய்யம் ஏற்பட்டு விட்டது. கொஞ்சம் சமாளித்துக் கொண்டு “நண்பா! இது என்ன வேடிக்கை!” என்றான்.

"கண்ணா! உன்னைச் சிங்கப்பூரிலுள்ள என் நண்பன் கோபாலனிடம் அனுப்பினேன் அல்லவா. நீ அங்கு போய்ச் சேர்ந்தாயோ இல்லையோ போர் மூண்டு விட்டது; நின்றபாடில்லை . இதுதான் சமயம் என்று எண்ணி நீ கடலில் மறைந்தாய் என்று விளம்பரம் செய்தேன். அதன் பின்புதான் உன் பாடல்களுக்கு மதிப்புக் கிடைத்தது மக்களிடமிருந்து. என் கனவு நனவாயிற்று. பாராட்டுக் கூட்டத்திலே நான் சொல்கிறபடியே பேசி விடு. அது தான் நீ எனக்குச் செய்யவேண்டிய கைம்மாறு”.

கடல்போன்ற கூட்டம். பெருத்த கைதட்டலுக்கிடையே எழுந்து நின்றான் கண்ணன் சிங்க ஏறுபோல.

"தோழர்களே! அறிஞர்களே!”

எனக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துப் பெருமைப் படுத்திய உங்கள் அனைவருக்கும் வணக்கம், கடலில் கவிழ்ந்ததும் கட்டு மரத்துண்டு ஒன்றைப்பிடித்த வண்ணம் மிதந்து கொண்டிருந்தேன். அப்பொழுது சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று என்னைக் காப்பாற்றிச் சிங்கப்பூரில் கொண்டு சேர்த்தது. போர் முடிந்ததும் என் நாட்டையும் என் இனத்தையும் காண்கிறேன். மீண்டும் உங்களுக்குத்தான் எனது மூச்சு வணக்கம்.”

கண்ணன் நான் கூறியபடியே பாராட்டுக் கூட்டத்திலே பேசிவிட்டான். அப்பப்பா எவ்வளவு புகழ்மாலைகள்!

பிறகு நாட்டுமக்கள் “நிதியளிப்பு” “படத்திறப்பு” அனைத்தும் செய்யத் தொடங்கினர் என் நண்பன் கண்ணனுக்கு .

கவிஞனுக்குப் புகழ் வளர்ந்து கொண்டிருந்தது. அன்று வறுமையில் வாடிய கண்ணன் இன்று செல்வத்திலே புரள்கிறான். “இளமையை வறுமையிலே நனைத்து நனைத்துக் கெடுத்து விட்டேன். பணம் மக்களின் நன்மைக்குத் தானே. இதையறியாமல் முன்பெல்லாம் பணம் கூடாது என்றிருந்துவிட்டேன். இனிமேலாவது நன்றாக அனுபவிக்க வேண்டும்”, என்று முடிவு கட்டினான்.

பணம்...... பணம் ......ஆம் அவன் மனம் பணத்திலே சென்று கொண்டிருந்தது. அந்த ஆசை எழுந்த பின்பு கேட்கவா வேண்டும். சினிமாக்காரர்கள் வீசிய வலையிலே எளிதிலே சிக்கிவிட்டான். அம்மட்டா? அரிவையரின் கடைக்கண் வீச்சிலே சொக்கிவிட்டான். என்னை மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான். இப்பொழுது அவனுக்கு என்னைவிடச் சிறந்த தோழர்கள் கருப்பு - சிவப்பு - வெள்ளைச் சீசாக்கள்தாம். அவன் மாறினான். ஆனாலும் கவிதையின் எழில் மாறவில்லை. உயிர்ப்பும் உணர்ச்சியும் பின்னிக் கிடந்தன.

ஒருநாள் தற்செயலாக அவனைக் கண்டேன்.

"கண்ணா! புராணங்களைப் பொசுக்கச் சொன்ன உன் பேனா முனை இன்று அவைகளுக்கு அரணாவதா? உன் கற்பனை, சினிமாவிலா நுழைய வேண்டும்? அது சீர்திருத்த உருவிலே நுழைந்திருந்தாலும் நான் மகிழ்ந்திருப்பேன். மக்களை மறுபடியும் மடமைக்கு இழுத்துச் செல்கிறதே உன் கற்பனை!” என்று வருந்திக் கேட்டேன்.

"நண்பா! என்ன இப்படிப் பேசுகிறாய்! உலகமே உனக்குத் தெரியவில்லையே! பணம் நிறையக் கிடைக்கிறது. அதனால் படத்துறையில் இறங்கினேன் புராணத்தை எழுதினாலும் என் பெயர் அங்கே பொறிக்கப்பட்டிருக்காது; அப்படியிருக்க நீ ஏதோ குடிமூழ்கிவிட்டது போலப் பேசுகிறாயே!” என்று மிகவும் சாதாரணமாக விடை தந்தான் "கண்ணா ! நீயா பேசுகிறாய்! பணத்திற்கு உன் உள்ளம் பணிந்து விட்டதா? உன் பெயர் பொறிக்கப் பட்டிருக்காது என்றால் மக்களை ஏமாற்றும் எண்ணமா உனக்கு? பணத்தை அன்று வெறுத்தாய். ஆனால் இன்று..? எத்துறையிலும் அடிமை கூடாது என்ற நீ, இன்று பணத்திற்கு அடிமையாக்கினாய் உன் உள்ளத்தை. அவ்வளவில் நின்றாயா? மாதர்கள் மையலிலும் மனத்தை அழுந்த விட்டு விட்டாயாமே? உன் போன்ற கவிஞனுக்கு இது அழகா? என்று மறுபடியும் கேட்டேன்.

"ஆம் நண்பா! நான் கவிஞன். கவி உள்ளம் என்பால் இருக்கிறது என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய். அழகு எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் மனத்தைப் பறிகொடுத்து விடுவான் கவிஞன். காக்கைச் சிறகினிலே - காட்டு மயில் தோகையிலே - எந்தப் பொருளிடத்தும் அழகைக் காண்கிறான் கவிஞன். அப்படியிருக்க இயல்பாகவே அமைந்த எவர் - கண்ணுக்கும் புலனாகின்ற மங்கையர் அழகு மட்டும் கவிஞன் கண்ணுக்கு மறைந்தா நிற்கும்? அழகில்லாத பொருளிடத்தும் அதைக்கண்ட நான் அரிவையர்பால் அழகின் வரம்பைக் கண்டேன். அழகை அனுபவிக்கிறேன். இதில் என்ன குற்றம்? அவர்களே வலியவரும்பொழுது.............. என் மனம் என்ன கல்லா? அழகு எதற்கு? மனிதன் நுகரத்தானே?”

"கண்ணா ! என்ன பித்துப் பிடித்தவன் போலப் பிதற்றுகிறாய்! ஏன் இப்படிக் கெட்டுவிட்டது உன் மனம்? குற்றங்களை உன் புலமையால் மறைக்கப் பார்க்கிறாய். அது பொருந்தாது. இதனுடன் குடிக்கவும் பழகி விட்டாயாமே? அதற்கும் சமாதானம் சொல்வாயோ? வேண்டாம் கண்ணா! மக்கள் உன்னை நம்பியிருக்கிறார்கள்; அவர்கள் வாழ்வுக்கு வழி கோலுவாய் என்று எண்ணினேன். ஆனால், நீ செல்லும் வழி...?”

"நண்பா! குடிப்பது கெடுதல் என்றா எண்ணுகிறாய்! இன்னும் நீ பத்தாம் பசலியாக அல்லவா இருக்கிறாய்! இதைக் கெடுதல் என்றால் காப்பியும் குடிதான். காப்பியிலாவது கெடுதல் உண்டு. நான் பயன் படுத்துவது பழச்சாறு. அவ்வளவும் இரத்தம் - உடலுக்கு உறுதி. பழச்சாறு கெடுதல் என்பது பைத்தியக்காரத்தனம்”. என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்தோ! அவன் வறுமையிலேயே இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ வளமான பாடல்களைப் பெற்றிருக்குமே தமிழகம்! பணம் அவனைக் கெடுத்துவிட்டது..... இல்லை .... நான் தான் அவனைக் கெடுத்து விட்டேன். பணக்காரனாக்கியது நான்தான். அதனால்தான் அவன் கெட்டுவிட்டான்.

போற்றுவாரின்றி அழிந்து விடுமோ இந்தப் புரட்சிக் கவிதைகள் என்று அன்று வருந்தினேன். இன்று அவன் புகழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இவன் மாறியதால் புரட்சி அழிந்துவிடுமோ - மக்கள் விழிப்புணர்ச்சி அழிந்து விடுமோ - என்று துடிக்கிறேன்.

“கண்ணா ! எதிரிகள் ஏசுவார்களே! உன் இனத்தை இழிவுபடுத்தும் கூட்டம் தூற்றிவிடுமே! உனக்காக நான் கூறவில்லை. உன் நாட்டிற்காக -- உன்னை நம்பிப் பின்பற்றும் மக்களுக்காகக் கூறுகிறேன். அதற்காகவாவது இந்தப் பழக்கங்களை விட்டுவிடும். கண்ணா ! கண்ணா!” அத்தான்! அத்தான்! என்று என் மனைவி என்னை எழுப்பினாள். உறக்கம் கலைந்து எழுந்தேன். “ஏன் இப்படி உளறுகிறீர்கள். ஏதோ கண்ணா , கண்ணா , என்று சத்தமிட்டீர்களே. குசேலர் நினைவோ? கோவிலுக்குப் போகாதே என்று எனக்கு அறிவுரை சொல்லிவிட்டு நீங்கள் இரவில் அந்தரங்க பஜனை செய்கிறீர்களோ?” என்று கிண்டல் செய்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“அந்தக் கண்ணனை நான் அழைக்கவில்லை. என் நண்பன் கண்ணனும் நானும் நேற்று மாலை கடற்கரையில் அவன் கவிதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உணர்ச்சி - உள்ளத்துடிப்பு நிறைந்திருந்தது அக் கவிதைகளிலே. நாட்டு மக்களைத் தட்டி எழுப்பிச் சமதர்மத்தின் வழியிலே அழைத்துச் செல்வது அவன் பாடல். அவற்றை வெளியிட . மறுத்தான். நான் எப்படியும் அவற்றை நாட்டிற்கு அளிக்க எண்ணினேன். அதே சிந்தனையில் உறங்கிவிட்டேன். அவனைப்பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன். நீ எழுப்பிவிட்டாய்”

“எப்படிக் கனவு கண்டீர்கள்?”

கனவைக் கூறினேன். அவளும் சிரித்தாள். நானும் சிரித்தேன்.