உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கே போகிறோம்/7. கால்நடை பொருளாதாரச் சிந்தனைகள்

விக்கிமூலம் இலிருந்து


 

7. கால்நடை
பொருளாதாரச் சிந்தனைகள்

மனித வாழ்க்கையில் கால்நடைகள் வகிக்கும் பங்கு மிகவும் பெரியது ஆகும். மனிதனுக்கு உற்ற தோழமையாக வளர்ந்து, வாழ்ந்து அவனுக்கு ஊட்டம் தருவனவாகவும், ஆக்கம் தருவனவாகவும் விளங்கும் பெருமை கால்நடைகளுக்கே உண்டு.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளாகிய உணவு, உடை, களிப்பு, மகிழ்ச்சி, காவல் என துறைதோறும் கால்நடைகள் முக்கியமான இடத்தைப் பெற்று வந்து உள்ளன; பெற்று வருகின்றன. விவசாயத் தொழிலுக்கும் கால்நடைகள் தேவை. நிலத்திற்கு வளம் காக்கும் தொழு உர உற்பத்திக்குக் கால்நடைகள் மிகவும் தேவை மட்டுமல்ல, இன்றியமையாதவையுமாகும்.

கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை; உணவு இல்லை; ஏன் மனிதகுல வாழ்க்கையின் ஆதாரமே கால்நடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு “மாடு” என்று பெயர் சூட்டியது வள்ளுவம்.

தமிழர் தம் அகத்திணை வாழ்விலும் கூட ஏறுதழுவுதல் என்ற துறை அமைந்துள்ளது. தொன்மையான சிவநெறியில் எருது சிறப்பான இடத்தை, சிவபெருமானுக்கு ஊர்தியாகவும், உயர்த்திப்பிடிக்கும் கொடியாகவும், சிறப்பிக்கப் பெறுகிறது. தைத் திங்களில் பொங்கலின் போது, மாட்டுப் பொங்கலும் உண்டு.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடைகளின் பங்கு சுமார் 9 விழுக்காடு இருந்து வருகிறது. இந்தியாவில் வேளாண்மைத்துறை மூலம் கிடைக்கும் வருவாயில் 30 விழுக்காடு கால்நடைகள் மூலம் கிடைக்கிறது. இது தவிர, தோல் மற்றும் தோல் அடிப்படையில் ஆன பொருள்களின் உற்பத்தி 2600 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைப் பொருளாதாரத்தின் பங்கு கணிசமாக இருக்கிற்து. நமது நாடு, அந்நியச் செலாவணியாக 50 கோடி ரூபாய் வரையில் கால்நடைகளின் தோல், தோல் அடிப்படையிலான பொருள்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டுகிறது. ஆதலால், தரமான கால்நடைகளை-மாடுகளை வளர்ப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைக் கூடுதலாக ஈட்ட முடியும்.

நிலங்களில் பணப்பயிர்கள் சாகுபடி செய்து அடையும் இலாபத்தை விட கால்நடைகளுக்குள்ள தீவனப்புல் வளர்த்து, கால்நடைகளையும் வளர்த்தால் அதிக இலாபம் கிடைக்கும்.

மூன்று கலப்பின ஜெர்சி கறவை மாடுகள், 5+1 அளவுள்ள தலைச்சேரி இன வெள்ளாடுகள் கொண்ட ஒரு யூனிட் வைத்து வளர்த்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 22,800 கிடைக்கும். சாதாரணமாகச் செய்யும் சாகுபடியில் ரூ. 8,450 தான் கிடைக்கும். இந்த மாதிரி பண்ணைகளுக்கு “ஒருங்கிணைந்த பண்ணை” என்று பெயர்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் வேலை நாட்களும் குறைவு. பால் உற்பத்தியை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணையில் பால் மூலம் கிடைக்கும் ரொக்கப் பணம் மொத்த வருமானத்தைக் கூடுதலாகத் தரும். அதுமட்டுமன்றி ஆண்டு முழுவதும் வருமானம் தரும்.

நாட்டினை வளப்படுத்தும் பாதையில் பலதரப்பட்ட தொழில்கள் இருந்தாலும் விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும்தான் இன்னும் முன்னணியில் உள்ளன.

கால்நடை வளர்ப்புக்கு அனுசரணையான வேளாண்மைக் காடுகளிலும் அதைச் சார்ந்த தொழில்களிலும் நாட்டின் 60 விழுக்காடு மக்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டு மக்கள் தொகையில் 60 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது கால்நடைகள் வளர்ப்பும், கால்நடை சார்ந்த தொழில்களுமே யாம்.

நமது நாட்டு மக்களுக்கு-விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு அறிவியல் சார்ந்த தொழில் என்பதை உணர்த்த வேண்டும். கால்நடைகளை அறிவியல் சார்ந்த வகையில் வளர்க்காவிடில் போதிய பயன் தாரா, வருவாயும் தாரா.

பழங்காலத்தில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையின் துணைத் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று, கால்நடை வளர்ப்பு, வியாபார நோக்கத்துடன் கூடிய ஒரு தொழில் என்ற நிலைக்கு வளர்ந்து விட்டது.

கால்நடைகளில் கலப்பினம், கால்நடை வளர்ப்பில் புதிய நெறிமுறைகள்-உத்திகள், நோய்த் தடுப்பு முறை, கால்நடை அடிப்படையிலான புதிய புதிய தொழில்கள் ஆகியன நாளும் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் வளரும்.

இத்தகு அறிவியல் சார்ந்த பேணலால்-பராமரிப்பால், 1970-1971-ல் 93,400 டன்னாக இருந்த பால் உற்பத்தி, 3,37,500 டன்னாக உயர்ந்துள்ளது. இது தவிரக் கோழிப் பண்ணை வளர்ப்புத் தொழிலால் 1961-ல் 650 கோடி ரூபாய் மதிப்பிலிருந்தது, 1989-ல் ரூ. 34,54 மில்லியன் ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றையும்விட இந்தியாவில் கால்நடைகள் அதிகம். உலகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையில் சற்றேறக் குறைய 21 விழுக்காடு நமது நாட்டில் உள்ள கால்நடைகள்.

கால்நடைகளில் முதன்மையானது பசு. நமது சமுதாய மரபுப்படி பசு, பூசனைக்குரியது. ஆயினும் பசுக்கள் வளமாக வளர்க்கப்படுவதில்லை.

நமது நாட்டில் 17.6 கோடி பசுமாடுகள் உள்ளன. எருமைகள் 5.3 கோடி உள்ளன. ஆக 22.9 கோடி மாடுகள். இவற்றில் காளை-கிடா ஆகியவற்றைக் கழித்துக் கணக்கிட்டதில் 8 கோடி பால்மாடுகள் உள்ளன.

இந்த 8 கோடி பால் மாடுகளில் 2.4 இலட்சம் பால் மாடுகள்தான் தினசரி 2 லிட்டருக்கு மேல் பால் கொடுக்கின்றன. பாக்கி 5.6 இலட்சம் பால் மாடுகள் தினசரி 2 லிட்டருக்கும் குறைவாகவே பால் கறக்கின்றன.

நம் நாட்டுப் பசுக்கள் வருடம் சராசரி 175 கிலோ கிராம்தான் பால் கறக்கின்றன. எருமைகள் வருடம் சராசரி 440 கிலோ கிராம் பாலே கறக்கின்றன. இந்த அளவு, அறிவியல் சார்ந்த முயற்சியால் 5431 லிட்டராக உயர்த்தப்பெற்றுள்ளது.

நமது தமிழ்நாட்டில் 107.75 இலட்சம் பசுக்களும் 28.79 இலட்சம் பால் கறக்கும் எருமைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு பசுமாடு ஓர் ஆண்டுக்குக் கொடுக்கும். பாலின் சராாரி அளவு 200 லிட்டர்; ஓர் எருமை 283 லிட்டர். ஓர் ஆடு 20 லிட்டர். ஆயினும் நம்முடைய தேவையை நோக்க, பற்றாக்குறையே!

ஒரு மனிதனுக்குச் சராசரி ஒரு நாளைக்கு 280 கிராம் பால் தேவை. தமிழ்நாட்டில் கிடைப்பதோ சராசரி 61 கிராம்தான். இந்தப் பற்றாக்குறையைப் போக்க, தரமான கால்நடைகளை வளர்க்க வேண்டும்.

நவீன அறிவியல் சார்ந்த பராமரிப்பு முறைகளைக் கையாண்டு பால் உற்பத்தியைக் கூட்ட முயலவேண்டும். அப்போதுதான் நமது பொருளாதாரம் மேம்பாடுறும்.

நமது தேவையில் 37.5 விழுக்காடு பாலே இப்போது உற்பத்தியாகிறது. பால் உற்பத்தி மும்மடங்கு உயர்ந்தால்தான் சுயதேவை பூர்த்தியாகும். மக்களுக்கு நலம் சார்ந்த வாழ்க்கை கிடைக்கும்.

பண்ணைகளில் வளர்க்க, பசுக்கள் சிறந்தவையா? எருமைகள் சிறந்தவையா? கணக்கின்படி பார்த்தால் பசுவைவிட, எருமை அதிகப் பால் கறக்கிறது. பசுவின் பாலில் உள்ளதைவிட எருமைப் பாலில் இரண்டு மடங்கு வெண்ணெய் அதிகமாக இருக்கிறது. பண வருவாயை நோக்கின் பசுவைவிட எருமைதான் நல்லது.

ஆனால், பசு தூய்மையாக இருக்கும். எருமை அசுத்தமானது. எருமைகள் வளர்ப்பதால் நோய் பரவுவதற்குரிய வாயில்கள் மிகுதி. மக்களின் நீண்ட நெடிய நல்வாழ்வு நோக்கில் பசுமாடுகள் வளர்ப்பே நல்லது.

மாடுகளின் வளர்ச்சி 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு அவை வளர்ச்சி அடைவதில்லை. பசுமாட்டின் சராசரி வயது 20 முதல் 23 ஆண்டு களாகும். எருமை மாட்டின் சராசரி வயது 23 முதல் 25 ஆண்டுகளாகும்.

ஆகவே, மாடுகளின் வளர்ச்சிப் பருவமாகிய கன்றுகளாக இருக்கும் பருவ காலத்தில் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொடுத்து நன்றாக வளர்க்கவேண்டும். கன்றுகளுக்கும் புரதச் சத்துள்ள உணவு அதிகம் தேவை.

ஒரு பால்மாடு சராசரி தினசரி 10 முதல் 15 லிட்டர் வரை பால் கொடுக்காது போனால் பால்மாடு வளர்த்தல் தொழில் ரீதியாக அமையாது. பண வருவாய் குறையும்; செலவு கூடும். சராசரி 8 லிட்டராவது கறக்கவேண்டும். 2 லிட்டருக்கும் பால் குறைந்தால் அந்தப் பால்மாடு வளர்ப்பவருக்குச் சுமையேயாகும்.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் 60 லிட்டர் வரை ஒரு மாடு கறக்கிறது. நமது நாட்டிலும் பழைய காலத்தில் குடத்தில் பால் கறந்ததாக ஆண்டாள் நாச்சியார் கூறுகின்றார். இப்போது பால் கறப்பது செம்புகளிலும், உழக்குகளிலும்தான்!

பால்மாட்டு வளர்ப்பு மிகவும் பொருளாதார அம்சம் உடையது. ஒரு பசுவின் கறவை மறவைக் காலம் அதாவது ஒரு கன்று ஈனுவதற்கும் அடுத்த கன்று ஈனுவதற்கும் உள்ள கால இடைவெளி குறையவேண்டும். சராசரி, ஓர் ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுதல் வேண்டும்.

ஆனால், நமது நாட்டில் 12 மாதம் முதல் 18 மாதம் வரைகூட, சினைபிடிக்கக் காலதாமதமாகிறது. கறவை மறவைக் காலத்தைக் குறைத்தால்தான் கால்நடை வளர்ப்பில் இழப்பைத் தவிர்க்க இயலும்.

இரு கன்றுகளுக்கிடையில் 60 நாள்கள் பால் வற்றியிருந்தால் போதுமானது. இப்போது நடைமுறையில் 60 முதல் 150 நாள்கள் வரையில் கறவை மறவை நீடிக்கிறது. பல இடங்களில் கூடுதலாகவும் இருக்கிறது.

நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் இளம் வயதிலேயே பருவம் அடைந்துவிடும். கலப்பினப் பசுக்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனும். ஆதலால், நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் அதிகப்படியான கன்றுகளை ஈனுகின்றன.

கலப்பினப் பசுக்கள் கன்று ஈன்ற மூன்றாவது மாதத்திலேயே சினைப்பட்டு விடுவதால் சராசரி ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனுகின்றன. அதிகமான கன்றுகளை ஈனுவதோடு மட்டுமின்றி அதிகமான பாலையும் கறந்து தருகின்றன.

ஆதலால், வளர்ப்புக்கு-பொருளாதார ரீதியில் கலப்பினக் கால்நடைகளே நல்லது. கலப்பின மாடுகளைப் பராமரிக்க அதிகக் கவனமும், அக்கறையும், முயற்சியும் தேவை. பயனை நோக்கும்போது இது பெரிதல்ல.

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது பசுந் தீவனமாகும். தமிழ்நாட்டிலுள்ள கால்நடைகளுக்குத் தற்சமயம் பசுந்தீவனப் பற்றாக்குறை 50 விழுக்காட்டுக்கும் கூடுதல் ஆகும். இந்த விவரம் புள்ளியியல்படியாகும் உண்மையில் இந்த அளவைவிட, பசுந்தீவனப் பற்றாக்குறை கூடுதலாகவே இருக்கும்.

பொதுவாக நமது நாட்டு விவசாயிகள், தங்களுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கால்நடைகளுக்குப் பயன்படக் கூடிய பசுந்தீவனங்களைப் பயிரிடுவதில்லை; பயிரிட விரும்புவதும் இல்லை.

பொதுவாகக் கால்நடைகளுக்கு, வேளாண்மைக் கழிவுப் பொருள்களையே தீவனமாகத் தருகின்றனர். இவற்றில் பிரதான இடத்தில் இருப்பது வைக்கோல்.

வைக்கோல், கால்நடைகளுக்கு மிகவும் தேவையான நார்ச்சத்து மிக்க உணவு. ஆனால், வைக்கோலின் மூலம் மாடுகளுக்குக் கிடைக்கும் ஊட்டம் மிகவும் குறைவேயாம். வைக்கோலின் பயன், மலக்குடல் இயக்கத்திற்கு அமுக்கத்திற்கு உதவியாக இருந்து சாணத்தை வெளித் தள்ளுதலேயாகும்.

ஆதலால், பால் மாடுகளுக்கு இன்றியமையாதனவாக உள்ள பசுந்தீவனப் பயிர்களை வளர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும். நமது நாட்டு விவசாயிகளில் 80 விழுக்காடு விவசாயிகள் 2½ ஏக்கர் நிலமும் அதற்குக் குறைவான நிலமும் வைத்திருப்பவர்களேயாம். இந்தச் சிறு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு மிகுதியும் பயன்தரக் கூடியதும், பண வருவாய் உடையதுமான உபதொழில் பால்மாடு வளர்த்தல். ஏன்?

வருவாய்க்கு உத்தரவாதம் உடைய தொழிலாகவும் அமையும். சிறு விவசாயிகள் தங்களது நிலத்தில் 0.80 ஹெக்டேர் நிலத்தை விவசாயத்திற்கும் 0.20 ஹெக்டேர் நிலத்தை கால்நடைத் தீவனம் பயிர் செய்வதற்கும் என்று ஒதுக்கி, அப்பகுதியில் சோளம், மக்காச் சோளம், கோ 1, கினியாகோ 2, போன்றவைகளை வளர்த்தால் பசுந் தீவனப் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்.

மேலும் பயறு வகைளை வளர்த்தால் மனிதருக்கும் உணவாகும். பயறு வகைத் தழைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படும். நிலத்திற்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

பசுந்தீவனத்தில் புரதச் சத்துள்ள சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி, துவரை, வேலிமசால் போன்றவற்றை வளர்க்கலாம். இவற்றில் சுபா தழை மட்டும் சில விதிமுறைகளுடன் மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். 10 பங்கு சுபா தழையும் 2 பங்கு இதர பசுந்தழைகளுமாகக் கொடுக்க வேண்டும். தனி சுபா புல் மட்டும் தருவது நல்லதல்ல. தனி சுபா புல் மட்டும் கொடுத்தால் மாடுகள் கழியும்.

கால்நடை வளர்ப்பில்-பொதுவாகப் பால்மாடுகள் வளர்ப்பில் பசும்புல் முக்கிய இடத்தை வகிக்கிறது. எல்லா வகையான பசும் புற்களிலும், பயிர்களிலும் புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன.

சினியாப் புல், எருமைப் புல், யானைப் புல், கொழுக்கட்டைப் புல், அருகம்புல், மக்காச்சோளப் புல், சோளப் பயிர் ஆகியவைகள் பயன்படும். மேலும், புரதச் சத்து அதிகமாக உள்ள குதிரை மசால், பில்லி பெசரா, பர்சி ஆகியவைகளும் பசுந்தீவனமாகப் பயன்படும்.

கால்நடைகளுக்குக் கலப்புத் தீவனம், பசும்புல், வைக்கோல் ஆகியவைகள் தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும். மாட்டின் எடையில் ஒவ்வொரு கிலோ கிராமுக்கும் ஒரு கிலோ காய்ந்த புல்லும் மூன்று கிலோ பசும்புல்லும் கொடுப்பது நடைமுறை. இத்துடன் 1.5 கலப்புத் தீவனமும் தரவேண்டும்.

பால் தரும் மாடுகளுக்குத் தீவனம் தரும்பொழுது அவற்றின் எடை, கொடுக்கும் பால் அளவு, பாலின் கொழுப்புச் சத்து போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தீவனங்கள் தரவேண்டும்! பசுக்களுக்குப் புரதம், எரிசத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்து மற்றும் தாதுக்கள் ஆகியவை நாள்தோறும் தேவைப்படும்.

ஆயினும், புரதம், எரிசத்து, தாதுச்சத்துக்கள், சுண்ணாம்பு மணிச் சத்துக்களுக்கு மட்டுமே முதன்மையான இடமளிக்கப் பெறுகிறது. தாதுக்களும், உப்பும் மாடுகளுக்குத் தேவை. உப்புச் சத்து குறைந்துபோனால், மாடுகள் சுவர்களில் உரசும். சிறுநீரை விரும்பிக் குடிக்கும்.

இதைத் தவிர்க்க மாடுகளுக்கு உப்பைத் தீவனத்தில் சேர்க்க வேண்டும். இந்த உப்பை மாடுகளுக்குத் தர, தமது நாட்டு தேசிய ஆராய்ச்சி நிறுவனம். “உப்புக் கட்டி” (Cattle lick) ஒன்றைக் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த உப்புக்கட்டியைப் பால் மாடுகளுக்கு எதிரே கட்டித் தொங்கவிட்டு விட்டால் பால்மாடுகள் அதை நக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உப்புக்கட்டி குன்றக்குடி பால் உற்பத்தி சங்கத்தில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு பால் மாட்டுக்கு நாள்தோறும் சராசரி 13 முதல் 15 கிலோ பசும்புல், 9 முதல் 10 கிலோ இலை, 2 கிலோ வைக்கோல் உணவாக வழங்கவேண்டும்.

பசும்புல் பயிர் செய்ய இயலாத காலத்தில் பயன் படுத்துவதற்காகப் பசும்புல்லை. Selaje முறையில் பாதுகாத்துப் பயன்படுத்தலாம்.

செலேஜ் முறையாவது அரை அடி இடைவெளிகள் விட்டு குழிகளை வெட்டி அதன் அடிப்பகுதியில் வைக்கோற் படுக்கை அல்லது பாலிதீன் பேப்பரை விரித்து, குழியின் பக்கங்களிலும் பாலிதீன் பேப்பர்களைத் தடுப்பாக வைத்து, புற்களை ஒருமுழ நீளத் துண்டுகளாக வெட்டி, பரப்பி வைத்து, அதன்மேல் ஆலைக் கழிவுக் கரும்புச் சக்கைகளை உப்புடன் சேர்த்துப் பரப்ப வேண்டும்.

இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாகத் தேவையான அடுக்குகளை வைத்தபின், மேல்பாகத்தில் பாலிதீன் பேப்பரால் மூடி, காற்றுப் புகாதபடி மண்ணைப் பரப்பிக் குழியை நிரப்பிவிட வேண்டும். மூன்று மாதத்திற்குப் பிறகு, குழியில் வைக்கப்பட்ட புற்களை எடுத்துக் கால் நடைகளுக்கு வழங்கவேண்டும்.

பசும்புல்லை விரும்பி உண்பதைப் போல, மர இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. அதனால், தொடக்க காலத்தில் பசும் புற்களுடன் தழைகளைச் சேர்த்து அளித்துக் கால்நடைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

மர இலைகளை 12 மணி நேரம் நிழலில் உலர்த்திக் கொடுத்தாலும் கால்நடைகள் விரும்பி உண்ணும். மர இலைகள் மேல் உப்புக் கரைசலைத் தெளித்து அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைத் தெளித்துத் தந்தாலும் மாடுகள் விருப்பத்துடன் தின்னும்.

கால்நடைகளின் வளர்ப்பில் வேளாண்மைக் காடுகளின் பங்கு மகத்தான்து. எவ்வளவு புல் தீவனம் போட்டாலும் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலில் ஏற்படும் திருப்தி வராது. ஆதலால், ஊர்தோறும் மேய்ச்சல் தரைக்ள் அமைக்க வேண்டும். ஒரு மாடு, சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மேய 1 முதல் 14 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

கால்நடைப் பொருளாதாரத்தில் செம்மறி ஆடுகள் உரிய இடத்தைப் பெற்று விளங்குகின்றன. ஆழ்கூள முறையில் வெள்ளாடுகள்-தலைச்சேரி ஆடுகளை வளர்ப்பது நல்ல இலாபகரமான தொழில். வெள்ளாடுகளை ஆழ்கூள முறையில் வளர்க்க வேண்டும். இதனை ‘கொட்டில் வளர்ப்பு’ என்றும் கூறுவர். இதனால் வெள்ளாடுகளால் ஏற்படக் கூடிய காடுகள் பாதிப்பைத் தவிர்த்திடலாம்.

அடுத்து, கால்நடைப் பொருளாதாரத்தில் நமது கவனத்தை ஈர்ப்பது கோழி வளர்ப்பு. கோழிகளைக் கடுமையாகப் பாதித்த “கம்போரா” நோய்க்கு எதிராக நவீன தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 310 முட்டைகள் என்ற நிலைமை மாறி, தற்போது கூடுதல் முட்டையிடும் புதிய கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகக் கோழி முட்டைகள் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை கூடியதன் வழி முட்டை உற்பத்தி 682 மில்லியனிலிருந்து 1821 மில்லியனாக உயர்ந்துள்ளது. கோழி வளர்ப்பிலும் ஆழ்கூள முறை அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளது.

கால்நடை பொருளாதாரத்தில் மீன் வளமும் அடங்கும். நீண்ட கடற்கரைகளையுடைய நமது நாட்டுச் செல்வத்தில் மீன் வளத்திற்குரிய பங்கு மிகப் பெரிது, கடல் மட்டுமல்ல. உள்நாட்டு நீர் நிலைகளிலும் மீன் வளர்ப்புப் பண்ணைகள் உண்டு.

ஒருங்கிணைந்த பண்ணைகளில் குட்டை இருந்து மீன் வளர்த்தல் நல்ல வருவாய் கிடைக்கும். மீன்கள் அடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப் பெற்றுள்ளன.

நமது நாட்டில் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் அதிகமாகப் பிடிபடும் மீன் வகைகளில் லோமியேர் வகையும் ஒன்று. இந்த மீனிலிருந்து ஊறுகாய் தயாரிக்கும் முறை-தொழில் நுட்பம் வந்துள்ளது. இங்ங்னம் தயாரிக்கப்பெற்ற ஊறுகாய் 240 நாள்கள் வரையில் கெடாது. ஏற்றுமதிக்கும் உரியது.

அண்மையில் பரவலாகப் பேசப்படுவது இறால் மீன் இறால் மீனின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. செல்வவள நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியைத் திரட்டப் பயன்படுவது இறால் மீன் பண்ணைகள். இறால் மீனுக்குரிய பொருளியல் மதிப்பின் காரணமாகி இறால் “பழுப்புத் தங்கம்” என்றழைக்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைகள் வகிக்கும் பங்கு அளப்பரியது. கால்நடைப் பொருளாதாரம் பன்முனைப் பகுப்புடையது. கால்நடைகள், அறிவியல் தொழில் நுட்பத்துடன் வளர்க்கப் பெற்றால் நல்ல இலாபம் தரக்கூடிய் தொழில்.

குறைந்த முதலீட்டில் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கக் கூடியது. அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துத் தரக்கூடியது. உள்நாட்டில் மக்களின் உணவுப் பொருள்களாகப் பயன்பட்டு, நீண்ட நெடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவி செய்யக்கூடிய சிறந்த தொழில்.

பால் மாடுகள், எருதுகள் விவசாயிகளுக்கு முழுமையாகப் பயன்படுகின்றன. மாடுகளின் தோல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணியை அதிகரிக்க உதவி செய்கிறது.

ஆடுகளும் கம்பளி உற்பத்திக்கும், வெறிநாய் தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கும் பயன்படுகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் (C tgut) தயாரிக்க உதவுகிறது. பன்றிகளின் இறைச்சி இருதய வால்வுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இங்ஙனம் குடும்பப் பொருளாதாரத்திலும் நாட்டுப் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதும், மனித குலத்துக்கு எண்ண்ரிய நன்மைகளைச் செய்து வருவதுமாகிய கால்நடைகளைப் போற்றுவோம்! வீடுகள்தோறும் பசுமாடுகளை வளர்த்து வளமுடன் வாழும் திசையில் செல்வோம்!


24-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை