உள்ளடக்கத்துக்குச் செல்

எங்கே போகிறோம்/8. பொருளாதார வளர்ச்சியில் - கூட்டுறவின் பங்கு

விக்கிமூலம் இலிருந்து


 

8. பொருளாதார வளர்ச்சியில்
கூட்டுறவின் பங்கு

மனித சமுதாயத்தில் மதிப்பீட்டுக் கொள்கை காலந்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அரச பதவிகள் மதிக்கப் பெற்றன. ஆட்சித் திறனும் செங்கோன்மையுமே மதிக்கப்பெற்றன. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அரசர்கள் எல்லோரையும் மனித குலம் மதிக்கவில்லை. புலமைக்கு, திறமைக்கு, தவத்திற்கு மதிப்பு என்றெல்லாம் இருந்து வந்துள்ளன.

இன்றைய சமுதாயத்தில் பணத்திற்கே மதிப்பு. இதனால் இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு உடமை சேர்க்கும் சமூகத்தின் பழைய போக்குகள்-மதிப்புக்கள் இன்னமும் மாறவில்லை. இந்த மதிப்புக்குப் பதிலாகப் புதிய மதிப்புக்கள் தோன்ற வேண்டும். அதாவது மனித மதிப்பீட்டுக் கொள்கைகள் உருவாக வேண்டும்.

நமது நாட்டில் ஏழைகளின் தொகுதி மிகுதி. இந்த ஏழைகளுக்கு வாழ்க்கையில் ஆக்கமும், பாதுகாப்பும் தரக்கூடியதும், மனித மதிப்பீட்டுக்குச் சமுதாயம் உருவாகத் துணை செய்வதும் கூட்டுறவு ஒன்றேயாம்.

ஜனநாயக முறையில் பொருளாதார முன்னேற்றம் காண்பதில் பகை வராது. வன்முறைக்கு அதில் வழியில்லை. அமைதியான சகோதர அன்பின் அடிப்படையில் எளிதாகப் பொருளாதார முன்னேற்றம் காணக் கூட்டுறவு துணை செய்யும்.

ஆதிக்கம், இலாபம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் சிரத்தை உள்ளூர முரண்பாடுடையது. இலாபம், ஆதிக்கம் இவற்றில் நாட்டமுடையோர் இலாபத்திற்குத் தரும் முதன்மையை எப்போதும் அன்புக்கும், உறவுக்கும் தரமாட்டார்கள். எவரையும் எப்படியும் தன்னுடைய இலாபத்திற்காகச் சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக்கொள்வர்.

ஆனால், அவர்கள் மற்றவர்களுக்கு உபயோகப்பட மாட்டார்கள். உள்ளூர முரண்பாடான சிந்தனைகளைக் கொண்டிராத மனிதர்கள் அடங்கிய அமைப்புக்களில்தான், கூட்டுறவு வளரமுடியும்; நிலைபெற முடியும்.

பொருளியல் இயற்றுவதில் தனியார் துறை, அரசுத் துறை அதாவது பொதுத்துறை, கலப்புப் பொருளாதார அமைப்பு, கூட்டுறவுத் துறை என அமையும். மனித குலத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய சமுதாய அமைப்பே நமது இலட்சியம்.

சோஷலிச சமுதாய அமைப்பை-சர்வோதய சமுதாய அமைப்பை அமைக்க விரும்பினால், அதை நிறைவேற்றத் தனியார் துறை இடமளிக்காது. பொதுத்துறை இடமளிக்கும் என்ற நம்பிக்கை சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது. இப்போது இந்த நம்பிக்கை குறைந்து வருகிறது.

கலப்புப் பொருளாதாரத்திற்கும் இதே கதிதான். சோஷலிச இலட்சியத்தை அடைய-சர்வோதய சமுதாயத்தை அமைக்கக் கூட்டுறவுத் துறையே துணை செய்யும். இது உறுதி.

நமது நாட்டில் உள்ள இன்றைய கூட்டுறவு அமைப்புக்களின் மூலம் இதனைச் சாதிக்க இயலாது. இன்றைய கூட்டுறவு இயக்கம் அரசாங்க இயந்திரத்தின் இரும்புப் பிடியில் சிக்கியிருக்கிறது.

இழப்புக்கும், ஈட்டத்திற்கும் பொறுப்பேற்காதவர்கள் மேலாண்மைப் பொறுப்பை ஏற்கிறார்கள். கூட்டுறவில் அமைந்துள்ள உள்ளீடான ஜனநாயக மரபுகள் அழிக்கப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் கூட்டுறவு வடிவமைப்பைக் கொண்டுள்ளனவே தவிர, உணர்வால் கூட்டுறவு நிறுவனங்களாக விளங்கவில்லை. இந்தக் குறைபாட்டிலிருந்து ஓரிரு கூட்டுறவு நிறுவனங்கள் விடுபட்டிருக்கலாம். அதற்கு, நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அரசு அலுவலர்களின் சமூகச் சிந்தனையும், ஆர்வமுமே காரணம்.

கூட்டுறவு இயக்கங்களை மக்களே கண்டு, தொடக்கத்திலிருந்து நடத்தி, நேரிடையாக என்று பங்குகொள்கிறார்களோ, பயனடைகிறார்களோ, அன்றுதான் கூட்டுறவு இயக்கம் வெற்றி பெறும்.

நமது நாடு விடுதலை பெற்ற நாள் முதல் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டு வருவது “நமது இலட்சியம் கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” என்பது. ஆனால், இந்தத் திசையில் இன்று நாம் செல்லவில்லை. வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ சமுதாய அமைப்பை நோக்கியே நாடு போய்க்கொண்டிருக்கிறது. வறுமைக் கோடு என்று ஒன்று நீளுகிறது. அல்லது உயர்கிறது. இந்தப் போக்கு மாற “கூட்டுறவுப் பொதுநலச் சமுதாயம்” காண்பதே வழி; வேறு வழி இல்லை.

மக்கள் எந்தச் சூழ்நிலையிலும், பொருளாதார அடிப்படையில், ஒருவரைச் சார்ந்தில்லாமல், தாமே வாழ முடியும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த, கூட்டுறவுப் பொருளாதாரச் சமுதாயத்தினால் மட்டுமே இயலும்.

மேலும் பிற பொருளாதார அமைவுகளில் பொருள் கிடைத்தாலும் ஆன்மா வளர்வதில்லை: ஆட்சித்திறன் வளர்வதில்லை. சமூகம் ஒருங்கிணைந்து வாழ்வதற்குரிய பண்பு நலன்கள் வளர்வதில்லை. கூட்டுறவுத் துறையில் மட்டுமே ஒருங்கிணைந்த வளர்ச்சி உண்டு. ஒரு நல்ல கூட்டுறவாளன் வறியோரை- நலிந்தோரை அவமதிக்க மாட்டான்.

பொருளாதார முயற்சிகளில் கூட்டுறவுக்கு என்று தனியே எதுவும் இல்லை. எத்துறையிலும் கூட்டுறவு அடிப்படையில் பொருளாதார முயற்சிகளைத் தொடங்கலாம். குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சிறுதொழில் முதலியன கூட்டுறவு முறையில் தொடங்கலாம்.

நமது நாட்டில் வேளாண்மைத் தொழில் கூட்டுறவு முறையில் அமைவது நல்லது. நமது நாட்டில் மிகச் சிறு விவசாயிகளும், சிறு விவசாயிகளுமே எண்ணிக்கையில் மிகுதி. இந்த விவசாயிகள் தங்களின் சிறு சிறு துண்டு நிலங்களில் நவீன சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. வேலை நாட்களும் அதிகம் பிடிக்கும். இதைத் தவிர்க்க 1000 ஏக்கர் நிலப் பரப்பளவில் ஒரு கூட்டுறவு விவசாயப் பண்ணை என்று அமைத்துக் கொண்டால் நவீன விவசாயக் கருவிகளை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியும். ஒரு விவசாய விஞ்ஞானியைக் கூட முழுநேரப் பணியாளராக அமைத்துக் கொள்ள இயலும். விவசாய வேலையில் நாள்களும் குறையும்.

தரமான கூடுதல் விளைச்சலைத் தரக்கூடிய அளவுக்கு விவசாயத்தைப் புதிய தொழில் நுட்பத்துடன் செய்ய இயலும். இன்று இந்த வாய்ப்பு இல்லை. “கூட்டுறவுப் பண்ணைகளை ஆரம்பிக்காவிடில் நாம் விவசாயப் பலன்கள் எதையும் பெறமுடியாது” என்று காந்தியடிகள் கூறியதை நினைவு கூர்க.

கூட்டுறவுப் பண்ணையில் இரண்டுமுறை இருக்கிறது. உரிமைக்குப் பாதகமில்லாமல், நிலத்தையே கூட்டுறவுப் பண்ணையில் ஒப்படைத்து விடுவது ஒருமுறை. இன்று நமது நாட்டு நிலப்பரப்புகளில் வரப்புக்கள் அதிகம்.

நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு குறைந்தது ஒரு ஏக்கர்-உச்ச பட்சம் பத்து ஏக்கர் என்ற அளவில் நன்செய்க் கழனிகளாகப் பிரித்து, சாகுபடி செய்யப்பெறும். மகசூல் தொகுக்கப் பெற்று, ஏக்கர் அடிப்படையில் பங்கிட்டுத் தரப்பெறும். இது முற்றாகக் கூட்டுப் பண்ணை. இந்த முறையில் பயன் மிகுதி.

பிறிதொரு முறை விவசாயிகள் கூட்டுப்பண்ணை. 1000 ஏக்கர் நிலத்தைக் குறியீட்டு எல்லையாகக்கொண்டு ஒரு விவசாயக் கூட்டுறவுப் பண்ணை அமைப்பது. இங்கு நிலம் பண்ணையில் சேரவில்லை. விவசாயிகள் மட்டுமே சேர்கிறார்கள். இந்தப் பண்ணை அமைப்பிலும் புதிய விவசாயக் கருவிகள் முதலியன கிடைக்கும். ஆனால், பங்குத் தொகைக்கு ஏற்பவே கிடைக்கும்.

விவசாயப் பொறுப்பு, விவசாயினுடையதே. விவசாயிக்கு வேலை நாள் கிடைக்கும். பல தனி முயற்சிகள் தேவைப்படும். நல்லமுறை தான். ஆனாலும் பயன் குறைவு. பல தனி முயற்சிகள், ஒரு மாபெரும் கூட்டு முயற்சிக்கு. ஈடாகாது என்பதை நாம் உணரும் பொழுதே கூட்டுறவின் இன்றியமையாத் தேவையை உணர்வோம்.

நமது நாட்டின் விவசாயிகளில் 60 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்கின்றனர். அவர்களிடம் உள்ள நிலம் மிகச் சிறிய அளவே. இந்த நிலத்தைக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கையை நடத்த இயலாது. ஆதலால், விவசாயிகள் ஆண்டுதோறும் கடன்படுகிறார்கள்.

இன்று விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரில் நான்கில் ஒரு பங்கினரை வேறு வேலைகளுக்கு மடை மாற்றம் செய்வது விவசாயப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தரும். இங்ஙனம் வேறு தொழிலுக்கு மாறும்பொழுது கூட்டுப் பண்ணை முறையிருப்பின் அந்தப் பண்ணை அவருடைய நிலத்தை விவசாயம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.

ஆதலால், கூட்டுப் பண்ணை முறை மிகவும் ஏற்றது, குறைந்த அளவு பயன்தரக்கூடிய விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தையாவது அமைத்து நமது வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு ஆக்கம் தந்து நமது நாட்டைத் தற்சார்புடையதாக்க வேண்டும்.

அடுத்து, நமது வாழ்க்கையில் இடம்பெறுவது உற்பத்தி செய்த பொருள்களை விற்பது. நமக்குத் தேவையான நுகர் பொருள்களை வாங்குவது. இவ்விரண்டும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பவை.

உற்பத்திப் பொருளுக்கு நியாய விலை கிடைக்க வேண்டும். இன்று அது கிடைப்பதில்லை. உற்பத்தியாகும் பண்டங்களை, பொருள்களைப் பாதுகாத்து சீரான விலைக்கு விற்கும் பணியையும், நுகர்வுப் பொருள்களை நியாயமான விலைக்குக் கிடைக்கச் செய்யும் பணியையும் செய்வது கூட்டுறவுப் பண்டக சாலை.

இது இன்று நாள்தோறும் நஞ்சென ஏறிவரும் விலை ஏற்றத்தைத் தடுக்கக்கூடியது. கூட்டுறவுப் பண்டக சாலை உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இலாப நோக்கில்லாது இயங்கித் தொண்டு செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல. கலப்படமில்லாத சுத்தமான பொருள்களுக்கும் உத்தரவாதம் தரும்.

ஊர்தோறும் கூட்டுறவுப் பண்டக சாலையைக் காண்போம்! உற்பத்திப் பொருள்களுக்கு நியாய விலை பெறுவோம்! கலப்படமில்லாத நுகர் பொருள்களைப் பெறுவோம்! நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களையும், மருந்துகளையும், உடுத்தும் ஆடைகளையும் பெறுவோம்!

கூட்டுறவு இயக்கம் முதன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கியது. இங்கிலாந்தில் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல் என்ற நெறிமுறையில் வாழ்வோர் சிலர் தோன்றினர். இவர்களில் முதன்மையானவர் ஓவன். ஓவன் அவர்களைக் “கூட்டுறவுத் தந்தை” என்று பாராட்டுவர். கூட்டுறவு இயக்கம் கி.பி, 1844-ல் தோன்றியது.

நமது நாட்டில் 1924-ல் தொடங்கியது. இலட்சிய நோக்குடைய சிலர் கூடி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்படுவது கூட்டுறவு. அச்சிலர் காலப்போக்கில் பலராகவும் அமையலாம்.

ஆயினும், சமூகச் சிந்தனை இலட்சியப் போக்கு, கருத்தொற்றுமை உடையோர்களே கூட்டுறவில் உறுப்பினராகச் சேரவேண்டும். இங்ஙனம் அமையாவிடில் வண்டியின் நுகத்தடி தெற்கு நோக்கியும், வண்டி வடக்கு நோக்கியும் போகவேண்டும் என்று எண்ணுவதைப் போல் முடியும்.

கூடி வாழ்தல் என்பது எளிதன்று. சுய நலமும், தன் முனைப்பும் மனிதனைக் கூடிவாழ, கூடித் தொழில் செய்ய அனுமதிக்காது. ஒருமையுளராகி உறவுகளைப் பேணி வளர்க்கத் தெரியாதார் குற்றங்களை முயன்று காண்பர், இயல்பாகக் குற்றங்கள் இல்லையெனினும் படைப்பர்; சிறுமை தூற்றுவர். இத்தகு மனப்போக்குடையோர் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டார்கள்.

நோயும், மரணமும் துரத்தினாலும், எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவர்களை நாடுகின்றோம்; மந்திரங்களை நாடுகின்றோம்; சாமிகளைக் கும்பிடுகின்றோம். அதுபோலத்தானே மனித உறவிலும் பிரிவுகள் தோன்றுவது! இந்தப் பிரிவுகள் உடனுக்குடன் மருத்துவம் செய்யப் பெற்றுச் சீர்செய்யப் பெறாவிடில் கூட்டுறவு வளராது.

கோடிக்கணக்கான செங்கற்களைக் கொண்டுதான் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றில் அடுக்கப் பெறும் கற்கள் ஒன்றையொன்று தழுவித் தாங்கிக் கொள்வதன் மூலமே சுவர்கள் எழும்புகின்றன. அதுபோல, நாம் ஒவ்வொருவரும் பிறிதொரு நபரைத் தழுவித் தாங்கி அழைத்துக்கொண்டு போனால் கூட்டுறவு தோன்றும்; சமூகமும் தோன்றும்.

அதுமட்டுமா? கொத்தனார் சுவர் கட்டும்பொழுது இடைவெளியைச் சரிசெய்ய சல்லிக் கற்களைப் போடுவார். சல்லிக் கற்கள் கிடைக்காது போனால் முழுக்கல்லை உடைத்துச் சல்லியாக்கிப் போடுவார். ஆனால், சுவரில் சல்லி இருப்பது தெரியாது. சுவரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தெரியும். சுவர் தன்னுள் அடங்கியிருக்கும் சல்லிகளைக் காட்டாது. முழுத் தோற்றத்தை மட்டும்தான் காட்டும்.

அதுபோல, மனிதருள்ளும் குணக் கேடர்கள் சிலர், இருக்கத்தான் செய்வர். பலவீனர்கள் இருப்பர். நலிந்தோர் இருப்பர். மனித சமூகத்தின் இந்தக் குறைகள் வெளியே தெரியாமல் நடந்துகொள்வது தான் கூட்டுறவின் நோக்கம், வல்லவர்களும், வல்லமையற்றவர்களும், ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், ஒருங்கு சேர்ந்து தடத்தும் இயக்கமே கூட்டுறவு.

கூட்டுறவில் அங்கத்தினர்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ, முதலீடு செய்யலாம். ஆனால் முதலீட்டின் அளவால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. எல்லாருக்கும் ஒரே வாக்குத்தான் கூட்டுறவு சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட நடுவு நிலையைப் பேணுதல் வேண்டும். அதுமட்டுமல்ல. கூட்டுறவில் செய்யப்பெறும் முதலீட்டுக்குச் சந்தை வட்டிகூடக் கிடைக்காது. குறைந்த வட்டிதான் கிடைக்கும்.

ஆதிபத்திய நஞ்சுக்கு மாற்று கூட்டுறவேயாம். கூட்டுறவு பயன் அளிப்பது, அதன் இயக்கத்தைப் பொருத்தது. கூட்டுறவு அமைப்பிலுள்ள அங்கத்தினர்கள் அதன் செயற்பாட்டிற்கேற்ப, பயன் அடைவர்.

கூட்டுறவு ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுவது, கூட்டுறவு வெற்றி பெற அதன் அங்கத்தினர்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கும் கூட்டுறவே சிறந்தது. கூட்டுறவு மூலம் தான் கடை கோடி மனிதனையும் கடைத்தேற்ற இயலும்.

கூட்டுறவாளர், குறிப்பாகச் சுய நலமற்றவராக இருக்க வேண்டும். இந்தப் பண்பினைப் பெறுதல் எளிதன்று. குறைந்தபட்சம் நிர்வாணத் தன்மையுடைய சுய நலத்தையாவது தவிர்க்க வேண்டும். பொது நன்மைக்கு விரோதமான சுயநலம் உடையவர்கள் கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதில் அர்த்தமில்லை.

கூட்டுறவில் அங்கத்தினராகச் சேர்வதன் நோக்கம் பலரின் துணை கொாண்டு சுய நலத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல். அதுபோலவே பலருக்கு இவரும் உதவ வேண்டும். பரஸ்பர உதவியின் மறுபெயரே கூட்டுறவு.

கூட்டுறவாளனின் விருப்பமும், விழைவும், பிறர் நலம் சார்ந்ததாகவே இருக்கும். கூட்டுறவாளன் பிறருக்குச் செய்யும் உதவியைக் கடமையாகவே கருதுவான். அந்த உதவிக்குக் கைம்மாறாகப் பிறிதொரு உதவியையோ, நன்றியையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கக் கூடாது.

கூட்டுறவாளன் எப்போதும் சொல்ல முந்தமாட்டான்; கேட்பதிலேயே ஆர்வம் காட்டுவான்; அவசியம் ஏற்படும்பொழுது சில சொல்லுவான்; பலர் வாயிலாகவும் கேட்கவே விரும்புவான். கூட்டுறவாளனின் உரிமைகள் பின் தள்ளப் பெறும்! எந்தச் சூழ்நிலையிலும், கடமைகளே முன் நிற்கும்! எல்லோருடனும் ஒத்துப் போவதே கூட்டுறவாளனின் கடமை.

செல்வத்தைச் சம்பாதிப்பதால் மட்டும் செல்வராகி விடமுடியாது, அப்படிச் செல்வரான வரலாறும் இல்லை. வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை, செலவு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்தான் செல்வராக முடியும்.

வரவு-உத்தரவாதமில்லாதது. கையில் வந்த அல்லது வரப்போகிற உத்தரவாதம் செய்யப் பெற்ற வரவுக்கேற்ப செலவு செய்ய வேண்டும்; சிக்கனப்படுத்த வேண்டும். அதேபோழ்து நலமுடைய வாழ்க்கையும் நடத்த வேண்டும்.

அதனால்தான் கூட்டுறவில், முதலில் பண்டக சாலைகள் தோன்றின. நியாயவிலையில் கலப்பட மில்லாத, நுகர் பொருள்கள் கிடைக்கக் கூட்டுறவுப் பண்டக சாலைகள் உத்தரவாதமளித்தன. தேவைக்குரிய பொருள்களும் எளிதில் கிடைத்தன.

பொருளாதாரத்தில் மிகப் பெரிய அம்சம் சிக்கனம்தான். “வாழ்க்கைச் செலவுக்கே போதவில்லை. எப்படிச் சிக்கனப்படுத்துவது?” -இது இன்று பலர் கேட்கும் கேள்வி உண்மையைச் சொல்லப் போனால் ஒருவர் செய்யும் செலவுகளில் முதற் செலவாகச் சேமிப்பே அமையவேண்டும். இங்ஙனம் சேமித்த பொருள் எய்ப்பினுள் வைப்பாக உதவி செய்யும்.

அடுத்து, கூட்டுறவில் பொருள் உற்பத்தி. வேளாண்மைப் பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு பற்றி முன்பே கூறினோம். அடுத்து, கூட்டுறவு முறையில் சிறு தொழில்களைத் தொடங்கி இயக்குதல். சிறுதொழில் கூட்டுறவு சங்கங்கள் நமது நாட்டில் வேலை வாய்ப்புக்களை வழங்க உதவி செய்யும்.

இன்று நமது நாட்டின் முதல் பிரச்சனை வேலையின்மையே. வேலையைத் தேடி அலையும் இளைஞர்கள் பல இலட்சங்கள் கைம்மாறி ஒரு சிறு பணி வாங்குவதற்குப் பதிலாக கூட்டு முயற்சியில் சிறுதொழில்களைத் தொடங்கினால் அவர்களுக்கும் வேலை கிடைக்கும்; வேறு சிலருக்கும் வேலை வாய்ப்பளிக்கலாம். சிறுதொழில் கூட்டுறவுகளுக்கு மைய-மாநில அரசுகள் நிறைய ஊக்கமளிக்கின்றன.

பிரதமர் நேரு யோஜனா சுய வேலை வாய்ப்புத் திட்டத்தில் நபருக்கு ஒரு இலட்ச ரூபாய் 40 விழுக்காடு மானியத்துடன் தருகிறார்கள். இந்தத் திட்டத்தில் பத்து இளைஞர்கள் ஒருங்கிணைந்து. உதவியைப் பெற்றுச் சிறுதொழில் தொடங்கலாம்.

மேலும் முதலீட்டுக்கு-கூட்டுறவு அமைப்பினுடைய பங்கு மூலதனத்துக்கு, 10 பங்கு வங்கிகள் தரும். சிறப்பாகத் தொழிற் கூட்டுறவு வங்கி, தரும். ஆதலால், இன்று வாழும் முயற்சியிருப்பின் பணத்திற்குப் பஞ்சமேயில்லை.

இந்தச் சலுகைகளைக் கருவியாகக் கொண்டு கடன் வாங்குவோர் பலர். ஆனால் சிலர்தான் முழுமையாகப் பயன்படுத்துகின்றனர். கூட்டுறவைக் கடன் வாங்குவதற்குரிய சாதனமாகக் கருதாமல், பொருளாதார முன்னேற்றத்திற்குரிய சாதனமாகப் பயன்படுத்தினால் நிச்சயமாக வாழ்க்கையில் வளம் பெருகும்.

ஆர்வம் நிறைந்த அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய கூட்டுறவு முயற்சிகள் தோன்றின், பொருளாதாரம் வளரும். குறைந்த முதலீட்டில் வியக்கத்தக்க பொருளா தார முன்னேற்றத்தைக் காண முடியும். அதுமட்டுமல்ல. முதலாளி - தொழிலாளி என்ற சமூக அமைப்பு முறை மறையும், எல்லோரும் ஓர் நிலையே என்ற கொள்கை மேவும்.

மக்கள் புவியை நடத்தவேண்டும் எனில், பொதுவில் நடத்தவேண்டும் எனில், அதற்குரிய ஒரே ஒரு சாதனம் கூட்டுறவுதான்! அதனால், சோவியத்தில் புரட்சிக்குப் பின் புனர் நிர்மாணத்தில் ஈடுபட்ட மாமேதை லெனின், கூட்டுறவு இயக்கத்தில் தனிக் கவனம் செலுத்தினார். கூட்டுறவின் வளர்ச்சியே சோஷலிசத்தின் வளர்ச்சிக்கு ஒப்பாகும். என்றார். பொருளாதாரச் சீரமைவுடைய சமுதாய அமைப்பு காலூன்றக் கூட்டுறவே சாதனம் என்றார்.

மக்களின் சிந்தனைப் போக்கையும் செயல்களையும் மாற்றிச் சமுதாயத்திற்குப் பயன்படுபவர்களாக மாற்றுவதில்தான் கூட்டுறவின் வெற்றி இரகசியம் இருக்கிறது. சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் கூட்டுறவு இயக்கத்திற்கு அர்த்தமுண்டு.

கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் நமது நாட்டின் பொருளாதாரம் பலமான அஸ்திவாரத்தில் அமையும். நாட்டின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு ஏற்படும்.

இன்று நமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் வலிமையாக இல்லை. ஏன் பொதுவாகச் சிற்றூரிலிருந்து டில்லி வரை ஆட்சியிலும், பொருளாதார முயற்சிகளும் ஜனநாயக மரபுகள் வழி நடக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் நோக்கம். ஊராட்சி, கூட்டுறவு அமைப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.

இன்று நம்முடைய நாட்டில் ஊராட்சி மன்றங்களிலும், கூட்டுறவு அமைப்புகளிலும் மக்கள் பங்கேற்க முடியாமல் அரசு, அதிகார வர்க்கத்தின் கையில் ஒப்படைத்து விடுகின்றது. காடு பாதி, நாடு பாதி என்பது போலத்தான் கூட்டுறவு இயக்கம். தங்களுடைய உரிமை பறிக்கப்பட்டமை குறித்து மக்களிடத்தில் கோபம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அந்த அமைப்புக்கள் இயங்கியபோது, அங்கத்தினர்கள் அந்த அமைப்புக்களில், ஆவேசிக்கப் பெற்றுப் பங்கு பெற்றிருந்தால் கோபம் வந்திருக்கும். பல கூட்டுறவு அமைப்புகளில் தூங்கும் அமைப்புகளே மிகுதி. மகாசபைக் கூட்டத்திற்கு அங்கத்தினர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கும். “கோரத்தை வைத்தே தப்பித்துக் கொள்வார்கள் நிர்வாகிகள்.”

இன்று நமது நாட்டுக் கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் அதிகம். கூட்டுறவு நிர்வாகத்தில் அரசின் தலையீடுகள் குறையவேண்டும். கூட்டுறவு நிறுவனங்களிலே கூட இரண்டு சாதி முறையிருக்கிறது. அரசின் அலுவலராகப் பணி செய்பவர்களுக்குக் கை நிறைய ஊதியம். கூட்டுறவு சங்கத்தின் சிப்பந்திகளுக்குச் சம்பள விகிதம் மிகவும் குறைவு.

மேலும் கூட்டுறவுத் துறையில் வேலை பார்க்கும் சில அரசு அலுவலர்களுக்குக் கூட அரசுத் துறையைப் போல ஊதியம் இல்லை என்பது ஒரு குறை. ஆதலால் இன்று நமது கூட்டுறவுத் துறை பலமாக இல்லை . கூட்டுறவுத் துறையைச் சீரமைக்க உடனடியாக மக்கள் முன்வர வேண்டும்.

மைய அரசு, கூட்டுறவுத் துறை குறித்து, கொண்டுவர இருக்கும் நாடு தழுவிய கூட்டுறவுச் சட்டம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போமாக! கூட்டுறவு அமைப்பில் இன்று சரியான அடித்தளம் இல்லை. ஆனால் மேல் மட்ட அமைப்பு பலமாக இருக்கிறது, இதைத் தவிர்த்து அடிமட்ட அமைப்புகள் பலமானவையாக அமையும்படி செய்யவேண்டும்.

நமது நாட்டுப்புற மக்களின் முன்னேற்றதிற்குக் கூட்டுறவுத் துறையைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். சிறியவர்களையும், பலவீனமானவர்களையும் பாதுகாத்துப் பயன்படுத்துவதே குறிக்கோள். நமக்குக் கதி கூட்டுறவேயாம். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகம் முழுவதும் - வளம்பெற்று வாழ்வதற்குரிய முயற்சிகளுக்குத் துணையாக அமையக் கூடியது கூட்டுறவுதான்! உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவு அடிப்படையில்தான் என்பது வரலாறு. இந்த நினைப்பு-சிந்தனை, நமக்குக் கூட்டுறவின் பால் ஈடுபடத் தூண்டும்.

சில இடங்களில் கூட்டுறவு தோல்வி அடையலாம். இந்தத் தோல்விக்குக் காரணம் உள்ளார்ந்த கூட்டுறவு உணர்வு இல்லாமையே. தோல்விகளைக் கண்டு துவள வேண்டிய அவசியம் இல்லை. உயிர்ப்பும், உறவும், கூட்டுறவுப் பண்பும் உடையவர்கள் எந்தச் சூழ்நிலை யிலும் வெற்றி பெற்று விடுவார்கள். இது உறுதி.

ஒன்று சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வோம்!
ஒன்று சேர்ந்து உண்போம்!
ஒன்று சேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்று சேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!

கூட்டுறவின் வழி வளம் காண்போம்! வாழ்விப்போம்! வாழ்வோம்! இதுவே நாம் செல்லவேண்டிய வழி-தடம்!


1-10-94 அன்று மதுரை வானொலியில் ஒலிப்பரப்பான உரை