எச்சில் இரவு/வார்த்தை வாசல்
வார்த்தை வாசல்
1958-ஆம் ஆண்டில் நான் வெளியிட்டு வந்த ‘இலக்கியம்’ என்னும் இதழிலும்; அதற்குப் பிறகு 1966-ல் வெளி வந்த ‘சுரதா’ என்னும் இதழிலும் நான் எழுதி வந்த இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகிய ‘எச்சில் இரவு’ என்னும் இந்நூல், இன்றைய இளைஞர்களுக்கும், இலக்கியச் சிந்தனையாளர்களுக்கும், திரைப்பட எழுத்தாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் மிகவும் பயன்படும் எனக் கருதுகிறேன்.
நான் எழுதிய ‘தேன் மழை’ என்னும் நூலை நண்பர்கள் வரவேற்றது போலவே, இந்நூலையும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
இந்நூலை வெளியிட்ட சுரதா பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் கல்லாடன் அவர்கட்கும், சிறப்பாக அச்சிட்டுத் தந்த ஜீவன் பிரஸ் உரிமையாளர் திரு. கே. எம். ஜான் அவர்கட்கும், இந்நூலில் இடம் பெற்றுள்ள புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் தொகுத்துக் கொடுத்த என் இனிய நண்பரும், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் ஒருவருமாகிய புலவர் இளஞ்செழியன் பி.லிட்., அவர்கட்கும், பதுமினி சாதிப் பெண்ணின் அழகான பல் வரிசையைப் போன்று, அழகாகவும், ஒழுங்காகவும் அச்சாகும்படி பார்த்துக் கொண்ட என் நண்பரும் இலக்கியச் சுவைஞருமாகிய ஃபோர்மேன், எம். லாரன்ஸ் அவர்கட்கும், உளங்கனிந்த என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் கருணாநிதி நகர்,
சுரதா
சென்னை-600 078.
30–1–1980