உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டு நாட்கள்/பொன் மொழிகள்

விக்கிமூலம் இலிருந்து

பொன் மொழிகள்

நமது குறிக்கோளும் நாம் திரட்டும் வலிவும் !

தேங்காயை தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று உடைத்து அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முடியை அர்ச்சகருக்குக் கொடுத்து விட்டு, இன்னொரு முடியை வீட்டுக்குக் கொண்டு செல்பவர்களும் உண்டு.

இன்னும் சிலர், வீட்டு விசேடத்தின் போது 'திருஷ்டி கழிப்பதாகக் கூறி, நடுவீதியில் சூறைக்காய் உடைப்பது போல--உடைப்பார்கள். அதைப் பொறுக்கச் செல்பவர்களில் சாமர்த்தியம் உள்ளவனுக்கு நல்ல தேங்காய் கிடைக்கும்; மற்றவர்களுக்கு வெறும் ஓடுதான் கிடைக்கும்.

இன்னொரு விதமும் உண்டு--தேங்காயைத் தாய்மார்களிடம் கொடுத்தால், அதை உடைத்துப் பதமாகத் திருகி எந்தப் பண்டத்தில் சேர்த்தால் இனிப்போடு சுவை தரும் என்பதறிந்து பக்குவமாகச் சேர்த்துப் படைப்பார்கள்.

கட்சிகளும் அப்படித்தான்; பயன்படுத்துகிற விதத்தை யொட்டித்தான் பலனும் இருக்கும்.

மூன்றாவது சொன்னேனே, அந்த விதத்தைச் சேர்ந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

சில கட்சிகள், தங்களுக்கிருக்கும் செல்வாக்கை சூறைக்காய் உடைக்கிறதைப் போல பயன்படுத்தி வருகின்றன. உடைக்கும்போது சிலருக்கு மண்டைகளும் உடைகின்றன; சாமர்த்திய முள்ளவனுக்குத் தேங்காய் கிடைக்கிறது; நோஞ்சலாயுள்ளவன் ஓட்டை எடுத்துக் கொண்டு போகிறான்.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் செல்வாக்கை அவ்வப்பொழுது பலப் பரீட்சை நடத்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், ஒருவரோடு இன்னொருவர் மோதிக்கொள்ள உதவாமல் பயன்படுத்த வேண்டும். வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்க வலிவைத் திரட்டுவதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும்.

வலிமையை எந்தப் பெரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்த வேண்டும். தி. மு. கழகம் தன் வலிமையைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சமயம் வரும்போது இதை பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டோம். ஆனால், 'சூறைக்கா'யாகவும் ஆக்கிவிட மாட்டோம்.

தமிழர் என்ற உணர்ச்சியையும், திராவிடம் என்னும் இலட்சியத்தையும் மக்களிடம் ஊட்டிவிட்டால் பிறகு வெற்றி பெறுவது மிக எளிது!

மாசெனத் தூற்றியோர் மனம் மாறிவிட்டனர் !

நமக்கு மிகமிக சகிப்புத் தன்மை வேண்டும்; வளர்ந்திருக்கின்ற சக்தியைக் கட்டிக் காக்க திறமை பெற்றாக வேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலே நம்மைத் தாக்கிப் பேசினால், அவர்கள்மீது கோபம் வருவதைவிட, என்னைப்பற்றி நானே வெட்கப்படுவேன்--எவ்வளவு பன்னிப்பன்னிச் சொல்லியும், எவ்வளவு ஆதாரங்களை--விளக்கங்களை அழகாக எடுத்துரைத்தும், அவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் சொல்ல முடியவில் லையே; அதனால்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கருதுகிறேன்.

நாம் கொண்டிருக்கிற நோக்கம் சாமான்யமானதல்ல--நாட்டை மீட்கும் ஒரு பெரிய பிரச்சினை.

நாம் இதற்கு இரத்தம் சிந்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், வியர்வையையும் கண்ணீரையும் மட்டுமே சிந்தி நாட்டைப் பெறவேண்டும். பர்மாவும், இந்தோனேஷியாவும் சுதந்திரம் பெற்றதுபோல் யாராவது ஆயுதம் கொடுப்பார்களா என்றோ, நாகர் நாடு கோருபவர்களுக்கு எங்கிருந்தோ ஆயுதங்கள் கிடைக்கின்றன என்கிறார்களே அதைப்போல கிடைக்குமா என்றோ, நாம் காத்திருக்கவில்லை.

அறிவுச் சுடரைக் கொளுத்தி சுதந்திரம் பெற வேண்டும்; ஏழை எளியவர்கள் குடிசைகளைக் கொளுத்தியல்ல!

என்னை ஒரு கொட்டடியிலும், ஈழத்தடிகளை ஒரு கொட்டடியிலும். அருணகிரி அடிகளை ஒரு கொட்டடியிலும், பெரியாரை பெல்லாரி சிறையிலும் அடைத்து வைத்திருந்தபோது, கனவாவது கண்டிருப்போமா-- 'இதே ஆச்சாரியார் இப்படி இந்தியை நம்முடன் சேர்ந்து எதிர்ப்பார்'-- என்று ? அல்லது அவர்தான் எண்ணியிருப்பாரா ? மும்முனைப் போராட்டத்தின்போது இதே ஆச்சாரியார்தான், ஈ, எறும்புபோல இவர்களை நசுக்கி விடுவேன்' என்று கூறினார். இவர்கள் இயக்கத்தைப் பழங்கதையில் சேருமாறு செய்துவிடுவேன் என்றார். அப்படிப் பேசியவர்தான் அண்மையில் மைலாப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசுகையில், 1990 வரை இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்னும் சுப்பராயனின் கோரிக்கையைப் பிய்த்தெறிந்து இருக்கிறார். அவருடைய பேச்சு முழுவதையும் நீங்கள் பத்திரிகையில் படித்திருக்க முடிந்திருக்காது. நான், நண்பர் ஒருவர் மூலம் அவரது அந்தப் பேச்சை 'டேப்ரிகார்டு' செய்துவரச் செய்து கேட்டேன். அவர் பேச்சில், இந்தித் திணிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்பராயன் போன்றவர்கள் சொல்லுவது முறையல்ல. உதாரணமாக; ஒரு கிழவி, என்னைக் கல்யாணம் செய்து கொள்' என்று ஒரு வாலிபனிடம் வந்து கேட்டால்,இப்பொழுது வேண்டாம். இன்னும் 10 ஆண்டு கழித்துப் பார்த்துக்கொள்ளலாம்' என்று வாலிபன் பதில் கூறுவதுபோல இருக்கிறது இந்தக் கோரிக்கை!" என்று பேசியிருக்கிறார்.

இந்த அளவு வந்த அவர், ஏன் திராவிட நாடு கேட்பதிலும் நம்முடன் சேரமாட்டார்? அவர் அன்றையப் பேச்சில், தென்னாட்டைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், 'நாகபுரிக்குத் தெற்கே உள்ள பிரதேசம்' என்றே குறிப்பிட்டுக்கொண்டு வருகிறார். இதன் அர்த்தமென்ன ? திராவிட நாடு என்று பச்சையாகச் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். இறுதியில் ஒரு இடத்தில் வந்து, 'திராவிடியன் கண்ட்ரி' என்றும் சொல்லி விட்டார். வசிஷ்டர் வாயால் பிரிம்மரிஷி பட்டம் விசுவாமித்திரனுக்குக் கிடைத்ததுபோல், ஆச்சாரியார் வாயால், 'இந்தி இப்பொழுது மட்டுமல்ல. எப்போதுமே வேண்டாம். அது உத்தியோக மொழியானால் தமிழர் உருப்படவே முடியாது. திராவிடர்களுக்கு அது வேண்டாம்' என்று பேசுவார் என யார் எதிர்பார்த்தார்கள்?

நமக்கும் அவருக்கும் அதிக உறவு கிடையாது. ஒரே ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். அவ்வளவு தான். நான் சந்தித்ததும், பெரியார் கூட ஏதேதோ சந்தேகப்பட்டார். புராணத்திலே ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பார்களே, அதைப்போல, நானும் அவரும் சந்தித்த உடனே அவர், 'திராவிடத்தைக் காப்போம்' என்று எழுதிவிட்டார். அடுத்து, 'இந்தி கூடாது' என்று பேசுகிறார். 'காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது' என்பார்களே, அதைப் போல நடந்துவிட்டது.

1,000 பேரைச் சிறையில் தள்ளியவர் ஏன் மாறினார் ? கிருத்துவக் கல்லூரியில் அவர் பேசுகையில், 'மனிதன், தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளக்கூட உரிமை இல்லையா ?' என்று கேட்கிறார். அதே முறையில்தான், இன்று யார் யார் சுயநலத்துக்காக நம் கருத்தை ஐயப்பாட்டுடன்--அச்சத்துடன் கவனிக்கிறார்களோ, அவர்களெல்லாம் நம்முடன் நெருங்கிவரப் போகிறார்கள். அதற்கு நம்மிடம் கட்டுப்பாட்டு உணர்ச்சி வேண்டும்.

விசித்திரங்களில் ஒன்று !

பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் நடிக்கவும் நடிகர்கள் பொதுவாழ்வில் ஈடுபடவுமான சூழ்நிலை உண்டாகிவிட்டது. இதற்குக் காரணம் நான்தான், நாடகத்தின் மூலமாகத்தான் நல்லவிதத்தில் முன்னேற்றத்தைக் காண முடியும் நாட்டில் என்பதால்தான் இதைச் செய்ய வேண்டியதாயிற்று

வேகமாக ஓடித் தேவைப்படும் இடத்தில் கொண்டு போய்விடும் குதிரைக்குக் கொடுக்கப்படும் கூலியை இது வரையில் வண்டிக்காரனே வாங்கி அனுபவித்தான். தனக்குத் தேவையானதைத் தேடிக்கொண்டான் என்பது மட்டுமல்ல, குதிரைக்காக வாங்கப்படும் கொள்ளையும் அவனே சமைத்துச் சாப்பிட்டுவிட்டான். பரிதாபத்துக்குரிய குதிரைகள் பகுத்தறிவற்ற ஜந்துக்களாக இருப்பதால் அவை இளைத்து நோஞ்சான்களான போதும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. ஆனால் இதே நிகழ்ச்சி ஒரு அரசியல் கட்சியிலும் நிகழ்ந்தால்...? மிருகங்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் மனிதர்களால், அதுவும் மானமுள்ளவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்த ஏமாளிகள் பணங் கிடைக்கவில்லை என்று ஏங்கவில்லை--நினைத்தால் ஆயிரக்கணக்கில் தங்கள் காலடியில் கொண்டுவந்து கொட்டச் செய்யும் சமத்தும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. புகழ், பெருமை, முகஸ்துதி இவற்றில் பங்கில்லையே என்று கலங்கவில்லை--இவையெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே நாட்டிலே கிடைத்தது. ஆனால் அவர்கள் உழைப்பு ஒத்துக்கொள்ளப்படவில்லை வாழ்வைப் பலியிட்டு வதைபட்டவர்கள் மேல் நம்பிக்கை உண்டாக வில்லை. எப்படியோ முளைத்து, எதற்காகவோ சேர்ந்து வாழ்ந்த ஜீவன்கள்மேல் ஏற்பட்ட நம்பிக்கை கூட இந்த இரங்கத்தக்க தியாகிகள்மேல் ஏற்படவில்லை. அவர்கள் உழைத்தார்கள் - வாழமுடியாதவர்களா ! பொறுக்க முடியாத நிலை வந்ததும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினர்.

சினிமாத் துறையில் சேர்ந்து பணத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள். பள பளப்பான வாழ்வு நடத்துகிறார்கள்--பவுடர் மோகினிகளோடு சேர்ந்து சுற்றுகிறார்கள்.

கருத்து வேறுபாட்டால், எதிர்க்க வேறு காரணம் இல்லாமல் கதறிக்கொண்டிருக்கும் கன்றாவி உருவங்களைப் பற்றியல்ல நான் குறிப்பிடுவது. கையாலாகாதவர்கள் குலைக்கத்தான் செய்வார்கள்! ஆனால், கருத்தும் கொள்கையும் குறிக்கோளும் ஒத்திருந்தும், உயருகிறார்களே என்ற பொறாமையால் உளறிக் கொட்டும் உதவாக்கரைகளைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

இத்தகையோர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்--பணம், பத்திரிகை பக்தர்கள் பலத்தால் ! விழியிலே பழுதிருப்பது வேறு--விழிகளே இல்லாதிருப்பது வேறு. ஆனால், விழிகளில் பழுதிருப்பவர்களுக்கு விழிகளே இல்லாத கூட்டம் பாதை காண்பிக்கப் பாடுபடுவது இந்த நாட்டின் விசித்திரங்களில் ஓன்று.

உறவும் உதாசீனமும் !

அமைச்சர் பக்தவத்சலம் சட்டசபையில் சொன்னார்--'காமராசர் பெரியாரைப் போய் பார்க்கமாட்டார்'--என்று அழுத்தந் திருத்தமாக அதைச் சொன்னார்.

தேர்தலுக்கு முன்னால் 'காமராசர் இங்குதான் உட்கார்ந் திருந்தார்; இந்த நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார்'--என்றெல்லாம் சொல்லி, அந்த இடத்திலே யெல்லாம் திராவிடக் கழகத் தோழர்கள் பூசை செய்யக்கூடிய அளவுக்கு பக்தி கொண்டிருந்தார்கள் -- இன்னும் இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, காமராசர் ஏன் போய் பெரியாரைச் சந்திக்க வில்லை? தேர்தலுக்குப் பிறகு அவர் தேவையில்லை -- எனவே, சந்திக்கவில்லை.

முரட்டுக் கணவன்மார்கள், தேவைப்பட்ட நேரத்தில் உள்ளே சென்று மனைவியிடம் பேசி, கொஞ்சிவிட்டுத் தெருத் திண்ணையிலே வந்து படுத்துக் கொள்கிறார்களே, அவர்களுக்கும் காமராசருக்கும் என்ன வித்தியாசம் ?

காமராசர், பெரியாரைச் சந்திக்க வேண்டுமென்று நான் சொன்னதற்கு, அமைச்சர் சொன்ன பதில் வெட்கப்படக் கூடியதாகும். 'பெரியாருக்கு காமராசர்மீது ஆசை; ஆனால் காமராசருக்குப் பெரியார்மீது ஆசை இல்லை' என்றார் அவர். இதற்கு என்ன பொருள்?

அதன் பிறகுதான் அவர் சொன்னார்--'அண்ணாதுரையே பெரியாரைப் போய்ப் பார்த்து, சமரசம் செய்யவேண்டும்'--என்று.

நான் போகமாட்டேன் என்று சொல்லவில்லை. பெரியாரிடத்திலே இன்று தொத்திக்கொண்டிருக்கும் பிள்ளைகளும், தத்துப் பிள்ளைகளும், நான் அவர் வீட்டுக்குள்ளே நுழைந்தால் வழிவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்; சமரசம் பேசவும் முடியும். ஆனால், அதுவரை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டதும் அமைச்சருக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. சட்டத்தை நிறுத்தி வைக்கவும் முடியவில்லை. இக்கட்டான நிலைமை ஏற்பட்டது அவருக்கு ! காரணம் சட்டசபை இப்படிப்பட்ட சட்டங்களைக் கண்டதில்லை, சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. காரணம் சட்டத்தை நிறுத்திவைக்கும் அளவுக்கு என் கரத்துக்கு வலுவு இல்லை.

நான் நெஞ்சத் தூய்மையோடு சொல்லிக் கொள்கிறேன்--15 பேருக்குமேல் அதிகம் சட்டசபைக்கு வந்திருந்தால் இந்தச் சட்டம் வந்திருக்காது.

இந்தச் சட்டத்தை, எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை.

சர்க்கஸ்காரர்கள், புலிகளுக்கு நடுவே புள்ளி மான்களை நிறுத்துவதுபோல, நாங்கள் மட்டுமே அத்தனை பேருக்கும் மத்தியில் நின்று சட்டத்தை எதிர்த்தோம்.

மதயானை

முதலாளித்வம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, 'பார், பார் ! நான் முதலாளித்வத்தைக் கட்டிப் போட்டுவிட்டேன்' என்று கூறினால் சரியாகாது !

யானை ஒரு இழுப்பு இழுத்தால் அதன் கட்டு அறுந்து விடும். அதுமட்டுமா? விடுபட்ட யானை தான் கட்டப்பட்டிருந்த வாழைமரத்தையே கூட வாயில் போட்டுக் கொள்ளும், அது யானை என்ற காரணத்தால். ஆகையால் வெறும் நாரினால். வாழைமரத்தில் யானையைக் கட்டுவதில் பயனில்லை என்று கூறுகிறோம் நாம். 'அரசாங்கமே, யானையை அடக்க வாழை மரத்தில் கட்டாதே !' என்று அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகிறோம். நாட்டைப் பிரித்துவிட்டால், வெளிநாட்டு முதலாளிகள் தலைகாட்ட முடியாது திராவிடத்தில் ! முதலாளிகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுதலையடையும் திராவிடம். அந்தத் திராவிடத்தை அடைவதுதான் நமது இலட்சியம்.

ஆங்கிலத்தின் அவசியம் !

ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசியத் தோழர்கள்--தங்களுடைய தேசியம் முற்றிவிட்ட காரணத்திலே என்று நான் கருதுகிறேன் -- ஆங்கிலம் அன்னிய மொழி. ஆகவே, ஆங்கிலம் ஆகாது என்று !

அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவையில்லை யென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான். கார்டு, கவர்களை அன்னியன் காலத்திலேதான் பார்த்தோம், தபால்--தந்தி அன்னியன் காலத்திலேதான் கிடைத்தது. ஆப்ரேஷன்,,இஞ்செக்ஷன் அன்னியன் காலத்தில் வந்தவை தான். இவைகளெல்லாம் இருக்கலாம் ஆனால். அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.

ஆகையினாலேதான், ஆங்கிலத்தை அன்னிய மொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற மொழி--என்று கருதுகிற காரணத்தால் நாம் அதை விலக்க முடியாது.

நமது கருத்து

பாட்டாளி மக்களே பெரிதும் சுரண்டப் படுகிறார்கள், முதலாளிவர்க்கத்தாலும் புரோகிதவர்க்கத்தாலும். தொழிலாளர் கிளர்ச்சிகளின் போது பொருளாதாரப் பிரச்னையை மட்டுமே கவனித்தால் போதும் என்று எண்ணுகிறார்களேயொழிய புரோகிதப் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியைப் புறக்கணித்து விடுகின்றனர்.

திராவிட இனத்திலே மிகப் பெரும் பகுதியினர் பாட்டாளிகளே. ஆரிய இனமோ பாடுபடாத பிறவி, முதலாளி வர்க்கம். ஆகவே, ஆரிய--திராவிடப் போர் என்பது அடிப் படையிலே பார்த்தால் பொருளாதார பேத ஒழிப்பு திட்டந்தான்.

ஜாதி முறை, சடங்கு முறை என்பனவெல்லாம் தந்திரமாக அமைக்கப்பட்ட பொருளாதார சுரண்டல் திட்டமே யாகும். ஆகவே ஜாதி முறையை ஒழிப்பதும் சமதர்ம திட்டந்தான்.

தொழிலாளர்கள் ஆரிய ஆதிக்கத்தை அகற்றாமல் பொருளாதாரத் துறையிலே எவ்வளவு முன்னேறினாலும் அவர்களுடைய வாழ்வு மலரமுடியாது. ஆகவே அவர்கள், ஆரிய ஆதிக்கத்தை அகற்றவேண்டும்.

பாட்டாளிகள் என்றால் ஆலைத்தொழிலிலே ஈடுபட்டு சங்கம் அமைத்துக் கொண்டு, கூலி உயர்வு, குடியிருக்கும் வீட்டுவசதி. சுகாதார வசதிகள் ஆகியவைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்துபவர்கள் மட்டுமல்ல. பண்ணைவேலை செய்பவன், கல் உடைப்பவன், கட்டை வெட்டுபவன், குப்பை கூட்டுபவன் போன்ற சங்கமோ கிளர்ச்சி செய்யும் உணர்ச் சியோ கூட பெறாமல் சிதறி வாழ்க்கையை சிதைத்துக் கொண்டுள்ள கோடிக்கனக்கான தொழிலாளரையே குறிப்பதாகும்.

தொழிலாளர்கள் அவல வாழ்வு பெற்றிருப்பதற்கு பெரிதும் காரணமாக இருப்பதும் அவர்கள் எழுச்சிபெற்று உரிமைப் போருக்கான வகை தேடிக்கொள்ளாமல் இருப்பதற்கும் காரணமாயிருப்பது மதத்தின் பேரால் அவர்கள் மனதிலே திணிக்கப்பட்டுள்ள மூட நம்பிக்கைகளே ஆகும். ஆகவே அவற்றினின்றும் விடுபடுவது தொழிலாளர்களின் விடுதலைக்கு முக்கியமான முதற் காரியமாகும். இதனைச் செய்யாமற் போனால் இன்று தொழிலாளர்களின் மனதிலே குடிகொண்டுள்ள பழயகால நம்பிக்கைகளை உபயோகப்படுத்திக்கொண்டு தந்திரக்கார தன்னல அரசியல் கட்சிகள் புரோகித வகுப்பாரின் கூட்டுறவுடன் தொழிலாளரை நசுக்கிவிட முடியும்.

திராவிட நாடு திராவிடருக்கு ஆகவேண்டும் என்று கூறும்போது பாடுபடும் இனத்தைப் பாடுபடாத இனம் சுரண்டும் கொடுமையும் பாடுபடும் இனம் தன்னுடைய மனதிலே பூட்டிக்கொண்ட தளைகளால் அடிமைப்பட்டுக் கிடக்கும் கேடும் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தையே தான் வேறு வார்த்தைகளால் கூறுவதாகப் பொருள். சம தர்ம நாடு, சமூக சமதர்மம் என்ற அடிப்படைமீது கட்டப் பட்டால்தான் நிலைக்கும். இந்த ஒரு அம்சம் இந்த நாட்டுக்கு மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் ஜாதியின் பேராலே பொருளாதாரச் சுரண்டல் முறை ஏற்பட்டிருக்கவில்லை.

தன்னாட்சி பெற்ற திராவிட நாட்டிலே ஆரிய ஆதிக்கம் இராது என்றால் தந்திரத்தால் ஏழைகளையும் உழைப் யாளரையும் ஏமாற்றி உழைக்க வைத்து, மதத்தின்பேரால் கட்டிவிடப்பட்ட கற்பனைகளைக் காட்டி ஏமாற்றி, தங்களை மேல் ஜாதி யென்று காட்டிக்கொண்டு பாடு படாமல் வாழும் சுரண்டல்காரர்களின் கொட்டம் இராது என்றே பொருள்.

திராவிட நாட்டிலே உற்பத்தி சாதனங்கள், பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்துத் தொழில், லேவாதேவி முதலிய பெரும் லாபந்தரும் தொழில்கள் தனிப்பட்ட முதலாளிகளிடம் இராது. சர்க்காரே நடத்தும். ஆகவே முதலாளித்வம் இராது.

தேன் குடத்திலே தேள் !

வெள்ளைக்கார முதலாளியிட மட்டுமே தகராறு நடத்தலாம். நமது சர்க்கார் நடக்கும்போது கூலிக்காகவோ, உரிமைக்காகவோ வேலை நிறுத்தம் போன்ற தகராறுகளில் இரங்கக்கூடாது என்று யோசனை கூறுவது அசல் பெர்லின் வாதம் ! விழிப்புற்ற தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரிடையாக நிற்பது இடுப்பொடிந்த ஏகாதிபத்யமல்ல. முறுக்கேறிய மூலபலம் உள்ள படைபலம் மிகுந்த தேசியம் அன்புடன் சொந்தம் கொண்டாடி, பாட்டாளிகளே வளர்த்த தேசியம். தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்பாராத விபத்து ! எங்கு ஆதரவு கிடைக்குமென்று அவர்கள் மனமார நம்பினார்களோ அதே இடத்திலிருந்து எதிர்ப்பு ! தேடியெடுத்த தேன்குடத்திலிருந்து தேள் கிளம்பி, கொட்டுகிறது ! தேசியம் நாசிசமாக மாறுகிறது

சிறைக்குள் தள்ளி கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசும் வரலாற்றில் இடம் பெற்றதில்லை. பாஸிசத்தின் முதல் அடி பயங்கரமானதாகத்தான் இருக்கும். ஆனால் அதன் வீழ்ச்சி எதிர்பாராத நேரத்தில் இருக்கும். திடீரென்று சரியும்.

பொதுமக்களின் மனதை பிரசார பலத்தாலும், நியாயமான காரணங்களுக்காக போராடுபவர்களின் சக்தியை அடக்கு முறையாலும், முன்னதை மயக்கவும் பின்னதை முறியடிக்கவும் இன்றுள்ள ஆளவந்தார்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

நல்ல தலைவர்கள் தேவை

படித்த உங்களிலிருந்து பண்பும் பயிற்சியும் பெற்றவர்கள் பலர் தொழிலாளர் தலைவர்களாக வரவேண்டும். தொழிலாளர்களிலும் திறமையுள்ளோர் தலைவர்களாக வரவேண்டும். உங்களைப் போன்ற நடுத்தர வகுப்பினர் உள்ளன்பு வைத்து உங்களிலேயே தக்கவரை தலைவராக ஆக்கவேண்டும். தலைவர்களை உங்களிலேயே உற்பத்தி செய்யுங்கள்.

வயலிலே ஓயாது உழைக்கின்ற விவசாயி சிந்தனை செய்ய முடியாது, சிக்கலான பிரச்னையைப்பற்றி. நேரமில்லை அவனுக்கு உழைப்பு அதிகமென்பதால், ஆலையில் வேகின்ற தொழிலாளி அதிக நேரம் செலவிட முடியாது இத்தகைய பிரச்னைகளிலே. ஆனால் படித்த குமாஸ்தாக்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்களல்ல; உங்களுக்கு வாழ்க்கையில் ஓரளவு சௌகரியம் உண்டு. ஓய்வாக யோசிக்க முடியும். பொறுப்பு என்ன, இன்றைய குறைகளைத் தீர்க்க வழி என்ன என்று!

ஆலைத் தொழிலாளிகளையும், வயலிலே ஓயாது உழைக்கும் விவசாயிகளையும், வண்டி ஓட்டுபவரையும். வீதிகூட்டுவோரையும், சிறு கடை தொழிலாளரையும். கட்டை வெட்டுவோர் போன்ற எல்லாவகை தொழிலாளர்களையும் பற்றி கவலைகொண்டு ஒன்று திரட்டி நீங்களே நடத்தலாம். விஷய விளக்கமும் தரலாம். அறிந்திருப்போர், அறியாதவ ருக்கு அறிவித்தல் நல்லது. தெரிந்திருப்போர் தெளிவில்லாதவர்க்கு தெளிவுபடுத்தலாம் பற்பல பிரச்னைகளைப் பற்றியும். உங்களை நீங்களே காத்துக்கொள்ளும் நிலைபெற்றால் பிற அரசியல் சூதாட்டக்காரர்களுக்கு வேலை ஏது உங்களிடம் ! எனவே, உங்களிலேயே உண்மைத் தலைவர்களை உண்டாக்குங்கள்.

தொழிலாளர் !

விதைத்துழுது அழுகிறாய் ;
வதைத்தறுத்துச் செல்கிறான் !
கொண்டு சென்று குவிக்கிறாய் ;
கொட்டிப் பூட்டி வைக்கிறான் !

பார், பாட்டாளித் தோழனே நன்றாகப் பார் ! இதயத்தை உறுத்துகிறதா... மூடிக்கொள்ளாதே கண்களை விழித்துப் பார் ! வேதனை எழும்புகிறதா ? யார்...நீதான் பார்க்கவேண்டும்...கண் மூடிக் கிடந்தவனே, நான் காட்டுவது தெரிகிறதா ? நீதான் அவன்...அதை நினைத்த வண்ணம் இக்காட்சிகளைப் பார் !

ஏர்பிடித்துழுகிறாய் ;
மார்பிலுதைத்து வதைக்கிறான் !
பாடுபட்டு நெய்கிறாய் ;
பட்டுடுத்தி மகிழ்கிறான் !

ஏன் கண்களை மூடிக்கொள்கிறாய்? கடினமாக இருக்கிறதா ?...நீதானப்பா நாட்டின் தேனீ, நடமாடும் தெய்வம் !...? இந்தக் காட்சிகளைக் கண்டதுமே, தவிக்கிறாயே ! இத்தனை நாள் வேதனை உன்னை சந்தித்த போதெல்லாம் எங்கே மறைந்து போய்க் கிடந்தது, இந்த ஆத்திரம்? இன்னுங் கொஞ்சம் பார் !

கருவிகளைக் காண்கிறாய் ;
கைக்கொண்டவன் ஆள்கிறான் !

அதோ, அடிக்கிறானே கம்பு; அது ஏது தெரியுமா ? நீ வெட்டித் தந்ததுதான் ! சுட்டுப் பொசுக்குகிறானே அந்தத் துப்பாக்கிகள்; அவை நீ அன்று செய்து தந்தவைதான் !

காதுகளை மூடிக்கொள்கிறாயே, உழைத்து ஓடான உத்தமனே ! என் பேச்சு உன் இதயத்தைச் சுட்டெரிக்கிறதா? பாவம் ! நீ, என்ன செய்வாய்? உனக்கு யாரும் இந்தக் காட்சிகளைக் காட்டவில்லை, இது நாள்வரை !

ஆகவேதான் இந்தக் காட்சிகளை கண்டதும் துடிக்கிறாய்! தொல்லை செய்வோரின் துடுக்கடக்குவேன் என்று உன் இதயம் துடிப்பது என் கண்ணுக்கு நன்றாகக் தெரிகிறது!

உத்தமனே, அவசரப்படாதே ! இன்னும் கொஞ்சம் கேள்! உன்மீது சவாரி செய்யும் பிரபுக்களின் ஆணவப் பிடரியை நீ ஆட்டவேண்டும் என்பதுதான் எனது ஆசை !

ஏன் இப்படி உனது கண்கள் சிவப்பேறுகின்றன? எனது வார்த்தைகள் உன் கோபாக்கினியை கிளறுகின்றனவா? மகிழ்ச்சி நண்பா, எனக்கு இரட்டை மகிழ்ச்சி ! உன் இதயத்தில் எரிமலை உதயமாக வேண்டும் என்பது தானப்பா என் ஆசை ! அது ஏற்பட்டுவிட்டதென்றால் என் லட்சியம் நிறைவேறும்; நிம்மதி பெறுவேன், கிளி கூண்டை விட்டுப் புறப்பட்டுவிட்டது ! காளை கட்டவிழ்த் துக்கொண்டது ! வீரன் விலங்கை முறித்துக் கிளம்பி விட்டான் என்று எக்காளம் முழக்குவேன் ! அதில்தான் நண்பா, உன் வாழ்வே இருக்கிறது !

"சரி. என்னை நான் புரிந்துகொண்டேன். இப்போது என்ன செய்வது நான்? என்னை வேதனையிலாழ்த்தியவனை விரைவாகப் போய் வீழ்த்திவிட்டு வந்துவிட்டுமா ? கட்டளையிடும் கரங்களைக் கண்டதுண்டமாக்கி, கர்ஜனையிடும் வாயை இரண்டாகப் பிளந்து, உதைக்கும் காலை ஓராயிரம் துண்டு போட்டு, உழைக்காது மெருகேறி மினுமினுக்கும் அவன் 'சதைமலை மீது ஏறி கோரத் தாண்டவம் செய்யட்டுமா ? இத்தனை நாள் என் இரத்தமெல்லாம் உறிஞ்சிக் கொழுத்தானே, அதை வட்டி போட்டு வாங்கி, நான் உழைத்து அலுத்த இப் பூமிக்கு அர்ப்பணம் செய்யட்டுமா ?' என்று கேட்கிறாய்...வேண்டாமப்பா, வேண்டாம் ! வேதனைகளை எடுத்துக்காட்டி விளக்கியதும், வெடித்த எரிமலையாகி விட்டாயே! வெடித்த எரிமலை, விரைவில் தன் கோரச் சப்தம் இழந்து அடங்கிவிடுமாம், அது தெரியுமோ உனக்கு ? உன் உணர்ச்சி அப்படியாகி விடக்கூடாது ! ஆத்திரம் அறிவை அழித்துவிடும் ! வேகம் விவேகப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் ! கொதித்துஎழுந்து கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குந்திவிடுவது பெரிய காரியமல்ல; வெட்டி வீழ்த்தி ரத்தம் சிந்திவிட்டுப் போய்விடுவது பிரமாதமல்ல; உனது இந்தப் புது உணர்ச்சி புது வாழ்வு காணப் பயன்படவேண்டும் !

"உணர்ச்சியைக் கிண்டிவிட்டு உபதேசம் செய்யக் கிளம்பி விட்டாயா ?" என்று என்னை இப்படி எரித்து விடுவதுபோலப் பார்க்கிறாயே ! வேண்டாம் இவ்வளவு கோபம், வேதனைப்பட்டவனே ! அவசரத்துக்கு அடிமையாகாதே ! நான் உபதேசம் செய்ய வரவில்லை. உபதேசியாக 'உருத்திராட்சம்' உருட்டும் வீணன் நானல்ல என்பது தான் உனக்குத் தெரியுமே ! உன் வாழ்வு செம்மைப்பட வேண்டும் ! உயரப்பனும் ஓட்டப்பனும் ஒன்றாக வேண்டும் ! உன் உரிமைகளை நீ பெற்றுத் துன்பமற்று வாழவேண்டும் என்ற ஆசையினாலேதான் சொல்கிறேன் !

உழைப்போனே ! உன் நிலையைப் பார்; சிந்தி; 'ஏன்' என்று கேளேன்; சக்திகளைத் திரட்டு; உரிமைப் போரில் இறங்கு; உன்னை அடிமைப்படுத்தும் அறியாமையை எதிர்த்து. ஜாதீய முறையைத் தகர்த்து முதலாளித்துவத்தை முறியடித்து வெற்றி காணப் புறப்படு! அவசரப் பட்டு ஆபத்துக்கு இரையாகாதே ! வெண்ணெய் திரளுவதற்குள் தாழியை உடைத்துவிடாதே !

உலகம் உழைப்பாளிக்குத்தான்

திராவிடநாடு திராவிடர்க்கே என்று கூறுவது உலகம் உழைப்பாளிக்கே என்ற முழக்கம் போன்றதே. குறிச்சொல் மட்டுமே வேறு. குறிக்கோள் ஒன்றுதான் ! உலகம் உழைப்பாளிகளுக்கே. உலுத்தர்களுக்கல்ல. பிறர் உழைப்பை உண்டு கொழுப்பவர்க்கல்ல, சுரண்டி வாழுபவர்க்கல்ல. முதலாளித்வத்துக்கல்ல. ஆம்; அதே குரலில் தான் திராவிடநாடு திராவிடருக்கு. ஆரியருக்கல்ல. அண்டிப் பிழைக்க வந்து நம்மை மண்டியிடச் செய்த மத தரகர் ஆட்டத்துக்கல்ல, வடநாட்டு முதலாளித்வத்துக்கல்ல. உழைக்கும் உத்தமர்களாகிய திராவிடர்களுக்கே.

வறுமைக்கு காரணமென்ன ?

மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம் பொருளாதார யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள். யந்திரக் கோளாறு நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக் குக் காரணம்தான், ஆனால் ஏன் இத்தகைய சுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்டது, எப்படி ? யாரால் ? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர் ? ஏன் இன்னும் சகித்துக் கொள்கின்றனர் ? என்றுகூறி கஷ்டப்படும் மக்களை சுரண்டுபவர்கள் மயக்கியும் அடக்கியும் வைப்பது ஏன் ? என்பன போன்றவைகளை திராவிட இயக்கம் மக்கள் மன்றத் துக்குக்கொண்டுவந்து நிறுத்துவதுடன் சிந்திக்கவும் தூண்டுகிறது. அந்தச் சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய பொருளாதார புரட்சியினால் மட்டும் புதுவாழ்வு கிடைத்துவிடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவே தான் நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும் அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்படவேண்டும் என்பதையும் நமது பிரசாரத்திலே முக்கிப் பகுதியாக வைத்துக்சொண்டிருக்கிறோம்.

அவர்கள் பணி

மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியம் என்பதை உணர்ந்து ஐரோப்பா கண்டத்திலே பேரறிஞர்களான வால்டேர் ரூஸோ போன்றார் அறிவுத் துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.

திராவிடனுடைய உழைப்பை மூன்று முனைகளிலிருந்து மூன்று சக்திகள் பறித்துக்கொள்கின்றன. ஆங்கிலேயன் ஆள்பவனானான். செல்வம் கொண்டு சென்றான்; ஆரியன் ஆலய வேந்தனானான், பொருளைத் தூக்கிச் சென்றான்; வடநாட்டான் வணிக வேந்தனானான். பொருளைச் சுமந்து செல்கிறான்; இவ்வளவுக்கும் இடமளித்த திராவிடன் எக்கதி அடைய முடியும்! தேம்புகிறான், திகைக்கிறான்.

நம் வளர்ச்சி !

தி. மு. கழகத்தின் இன்றைய வளர்ச்சி நம்முடைய நண்பர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது; நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்--எனக்கு இந்த வளர்ச்சி பெருமை யும் மகிழ்ச்சியும் அளிக்காமல் இல்லை; ஆனால் அதே நேரத்தில் பயத்தையும் கவலையையும் கூடவே அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. இவ்வளவு வளர்ந்திருக்கின்றோம் நாம்; இவ்வளவு பெரிய கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்கு நாமெல்லாம் ஆற்றல் உள்ளவர்களா என்ற எண்ணம். என்னுடைய உள்ளத்திலே அவ்வப்போது உறுத்திக் கொண்டிருக்கின்றது.

உங்களிடத்திலே வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதிலே நான் வெட்கமடையவில்லை; சட்ட மன்றத்திலே திறமை பெற முடியுமா முடியாதா என்பதைப்பற்றி எங்களுடைய உள்ளத்திலே என்றைய தினமும் ஐயப்பாடு ஏற்பட்டதில்; அதிலே, 'நல்லவர்கள் அல்ல' என்ற பெயர் எடுத்தாலும் கவலையில்லை; ஆனால். இவ்வளவு இலட்சக்கணக்கான மக்கள் - சிற்றூர்களிலேயுள்ள மக்கள்--பேருரிலே வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள்--மதிப்புக் குரிய தாய்மார்கள் பொறுப்புள்ள பெரியவர்கள்--ஆர்வங் கொண்ட இளைஞர்கள்--படித்த வாலிபர்கள்-நல்ல அலுவல்களிலே உள்ளவர்கள்--இவர்களெல்லாம் ஆதரவு தருகிற அளவுக்கு இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி, முழுப் பலனை நாடு அடையத்தக்க வகையிலே நடத்திச் செல்லுவதற்கேற்ற ஆற்றல் எனக்கு உண்டா என்பதில் தான் எனக்கு ஐயப்பாடு !

ஏழையினுடைய வீட்டில் அழகான பெண் பிறந்து, அவள் 10-வயதாகி, திருமணம் ஆகாவிட்டால், அந்த ஏழையினுடைய உள்ளத்தில் எப்படிக் கவலைதோன்றுமோ அதைப் போல வளர்ச்சியடைந்த இயக்கத்தைப் பார்க்கின்ற நேரத்திலெல்லாம் நான் கவலையடைகின்றேன். ஏழையினுடைய வீட்டில் பெண் பிறந்தால் ஆபத்து ! அந்தப்பெண் அழகாகவும் இருந்தால் அதிகமான ஆபத்து !

நாம் மிகச் சாமான்ய மானவர்கள்; நம்மிடத்திலே கிடைத்திருக்கின்ற இந்த இயக்கம் நம்முடைய கட்டுக்கும் அடங்காத அளவுக்கு இன்றைய தினம் வளர்ந்திருக்கின்றது. வளர்ச்சிக்கேற்ற அளவுக்கு நம்முடைய இயக்கத்திலே பலனைப் பெறவேண்டு மென்றால் -- நான் சாதாரணக் கணக்கைச் சொல்லுகின்றேன் -- திங்கள் ஒன்றுக்கு தலைமைக் கழகத்தில் 5,000 ரூபாயாவது செலவிட்டால்தான் முடியும். அந்த அளவுக்குப் புதிய பொறுப்புகள் -- அந்த அளவுக்குப் புதிய நிலைமைகள் -- அந்த அளவுக்குப் புதிய வேலைகள் நம்முடைய கழகத்திற்கு ஏற்பட்டு விட்டன. அன்றாடம் வருகின்ற கார்டு. கவர்களுக்கு மட்டும் நம்முடைய கழகத் தோழர்கள் பதில் எழுதுவதென்றால் ரூ.10-க்கு தபால் கார்டு வாங்கினால்தான் முடியும்.

இன்றையதினம் இந்த ஊரிலிருந்து புறப்படுகின்ற நானோ, மற்ற எந்தத் தோழரோ, நாளைக்கு ஒரு ஊர் -- மறு நாள் ஒரு ஊர் என்று தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு, மறுபடியும் இந்த ஊருக்கு வரவேண்டுமென்றால் --நீங்கள் நான் சொல்லுவதிலே ஆணவம் இருப்பதாகக் கருதாதீர்கள்; உண்மையிருக்கிறதென்பதை ஆராய்ந்து பார்த்தால் உணர்ந்து கொள்வீர்கள் -- 5 வருடத்திற்குப் பிறகு தான் வர முடியும். அத்தனை இடங்களில் வேலை இருக்குகிறது.

உங்களுக்கு நான் சொல்லுவேன் -- நான் சொன்ன அந்த ஏழை, தன்னுடைய வயிற்றிலேயே பிறந்த நல்ல அழகான பெண் பருவமடைந்து விட்டாள் என்று தெரிவதற்கு முன்னாலேயே, அவள் பருவமடைவாள் --திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கின்ற பொழுதே, அவன் தான் கஷ்டப்பட்டு சேர்க்கின்ற சொத்தில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சப்படுத்தி, அடுத்த தைக்குக் கல்யாணம்--அடுத்த தைக்குக் கல்யாணம் என்று சேர்த்து வைப்பதைப் போல், இங்கே கூடியிருக்கின்ற நீங்களும், இங்கே வர முடியாமலிருக்கின்ற மற்றவர்களும் சீமான்களல்ல என்பது எனக்குத் தெரியும்; நீங்களெல்லாம் கஷ்ட குடும்பத்திலே உள்ளவர்கள்--நான் உணர்ந்திருக்கின்றேன். நாமெல்லாம் நடுத்தரக் குடும்பத்தார்கள் --இதிலே ஒருவர்க்கொருவர் பெருமை பேசிக்கொள்ளத் தேவையில்லை; கஷ்ட ஜீவனத்தில் இருப்பவர்கள் -- ஆனாலும், ஏழை எப்படி தன் மகளுடைய திருமணத்திற்காகக் கொஞ்சம் கொஞ்சம் பணத்தை அவ்வப்போது சேர்த்துக்கொண்டு வருவானோ அதைப்போல், தொழிலில் ஈடுபட்டிருக்கின்ற தி. மு. கழக ஆதரவாளர்கள் தொழிலிலே கிடைக்கின்ற வருமானத்திலே ஒரு சிறு பகுதியையாவது தி. மு. கழக வளர்ச்சிக்கென்று -- தி.மு.கழகப் பொறுப்புக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டே வந்தாகவேண்டும்.

நீங்கள் அப்படிப்பட்ட விதத்திலே எங்களுக்குக் கை கொடுத்தால்தான் பெரிய வளர்ச்சியடைந்துவிட்ட பிறகு--வளர்ச்சி பெற்றுவிட்ட இந்த இயக்கம், அதன் வளர்ச்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், இலட்சியத்தை அடைய தற்கான முயற்சிகளை எடுத்துக்கொள்ளவும் பயமின்றி ஈடுபட முடியும் !

வாழ்வை வளைக்கும்

முதலாளி, தொழிலாளி என்ற பேதம் பொருள் சம்பந்தமானது, உடலை வறுத்தக்கூடியது. வாழ்வை வளைக் கக்கூடியது. ஆனால் ஆரியர் திராவிடர் என்ற பேதம் உயிரைக் கெடுக்கும். தற்கால வாழ்வையும் கெடுக்கும் தகைமை உடையதாக இருப்பதை ஆராய்வோர் காண்பர். ஆலைகளும் தொழிற்சாலைகளும் ஆங்காங்கு தோன்றினால்

முதலாளி--தொழிலாளி என இரு வர்க்கம் பிரியக் காண்கிறோம். ஆனால் இந்த ஆரிய திராவிடர் என்ற வர்க்க பேதம் பிறக்கும்போதே இருக்கக் காண்கிறோம்

தொழிலாளி ஆரியராக முடியுமா?

தொழிலாளி முதலாளியாக மாற மார்க்கம் உண்டு. மாறின பலரைப் பலர் அறிவர். அதுபோலவே முதலாளி தொழிலாளியாக மாறினதைக் கண்டதுண்டு, ஆனால் ஆரியனாக முடியாது. படித்து, பணம் படைத்து, உயர் பதவி பெற்றிருப்பினும் அவன் உயர் ஜாதியென கொள்ளப்படுவதில்லை. ஆசார, அனுஷ்டானங்களும் அவனை ஆரியருடன் ஆரியராக அமரும் நிலையைத் தருவதில்லை. பிறவி முதலாளிகளாக உள்ள ஆரியர்களின் ஆதிக்கத்தை அகற்ற உணர்ச்சியும் ஆற்றலும் பெற்று, அந்த ஆதிக்கத்தை அகற்றிவிட்டால் பின்னர் பொருள் படைத்ததால் முதலாளியாகி, பொருளிழந்தால் தொழிலாளியாகி விடக் கூடிய கூட்டத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதென்பது மிக எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய காரியமாகும். பிறவியிலேயே இருப்பதாகக் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வு நீங்கும்படி செய்துவிட்டால் பிறவியின் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்களை போக்கிவிட்டால், பின்னர் பணம் காரணமாக கற்பிக்கப்படும் பேதங்கள் பஞ்செனப் பறக்கும் சமுதாய அபேதவாதம் நிலை நாட்டப்பட்டுவிட்டால் பொருளாதாரத் துறையில் அபேதவாதத்தைக் காணலாம். கஷ்டமான காரியமாகத் தோன்றாது. எனவேதான் முதலாளி தொழிலாளி என்ற பேதத்தைவிட மிக நீண்ட நாளையதும் நிரந்தரமானதாக இருப்பதும் வேத சாஸ்திர, புராண, இதிகாச சம்மதம் பெற்றதெனப்படுவதும், மாறுதலுக்கு இடமே அளிக்காததுமான ஆரிய--திராவிட பேதம் மிக அவசர மாக முதலில் தீர்க்கப்படவேண்டும். இந்த மூலம் உணர்ந்து தான் திராவிடர் இயக்கம் சமூகக் கோளாறு, பொருளாதாக் கோளாறு எனும் இரண்டினையும் தாக்கும் போக்கைக் கொண்டிருக்கிறது.

தொழிலாளர் பிரச்னை

உலக அரங்கில் மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக் கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை வளர்ந்து விட்டது. நீதியையும் நேர்மையையும் சமுதாயத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும் தொழிலாளர் பிரச்னையை அலட்சியப் படுத்தியோ அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ண முடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டும் புதுப்புது உருவங்களைக் காட்டிக்கொண்டும் இருக்குமே ஒழிய, தானாக மங்கிவிடவும் செய்யாது; தாக்குதலால் தளர்ந்தும் போய்விடாது. பொது அறிவும் ஜனநாயசு உணர்ச்சியும் வளர வளர பிரச்னை பலம் பெற்றுக்கொண்டு தான் வரும்.

விழிப்பு

பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கொழில் முறை மாறிவிட்டது. உலகிலே அதற்கு முன்பு எந்த நாட்டிலும் குடிசைத் தொழில் முறையும் தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்தி செய்து கொள்வதுமாக இருந்துவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்டு, குடிசைத் தொழில்முறை மாறி யந்திரத் தொழில்முறையும், ஒரு சிலர் பலரை வேலைக்கமர்த்தி தொழில் நடத்தி உற்பத்தியைப் பெருக்கி பண்டங்களை விற்று லாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால் ஓரிடத்தில் ஏராளமானவர்கள் கூடி தொழில் செய்யும் முறையும் அந்தத் தொழிலின் லாபம் தங்களுக்குக் கிடைக்கும் கூலிபோக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும் தொழிலாளர்களுக்கு விளங்கலாயிற்று.

முரண்பாடு

ஒரு புறம் வேலையில்லாத் தொழிலாளர்கள் தொகை தொகையாக இருப்பர். மற்றோர் புறம் தேவைக் கேற்ற அளவு சரக்கு கிடைக்காததால் தவிக்கும் மக்கள் இருப்பர். முதலாளியின் லாப நோக்கம் சில சமயம் சரக்குகளைத் தேக்கிவைக்கும். வேறு சில சமயங்களிலே சரக்குகளை மார்க்கெட்டை விட்டு விரட்டியடிக்கும் அவசியமானது; ஆகவே, செய்யப்பட வேண்டியது என்பதல்ல முதலாளித்வம்; லாபகரமானது, ஆகையால் செய்யப்படவேண்டியது என்பதே தத்துவம். 'மார்க்கெட்' நிலவரத்துக்குத் தக்கபடி முதலாளியின் டெலிபோன் பேச்சு அமையும். அந்தப் பேச்சின் விளைவாக எவ்வளவோ தொழிலாளரின் வாழ்வு சிதையும். சிதையும் வாழ்வை செம்மைப் படுத்துவது முதலாளித்வ முறையல்ல, ஆகையால்தான் முதலாளித்வ முறையுள்ள இடங்களிலே பண்டங்களின் தேக்கமிருந்தும் பட்டினி ஒருபுற மிருக்கிறது. பணம் சில இடங்களிலே குவிந்திருந்தும் பராரிகளின் பட்டியல் வளருகிறது தொழில் அபிவிருத்திக்கு வழியும் தேவையுமிருந்தும் வேலையில்லதார் உள்னர். முதலாளித்வம் முரண்பாடு நிறைந்த முகாம் !

உலக வரலாறு

வளமையினருகே வறுமை; பலத்தினருகே பயம். இது ஏன்? இந்தக் கேள்வி சாதாரண மக்களையல்ல, கருத துலகின் காவலர்களாக விளங்கியவர்கள் அனைவரையும் கதிகலங்க அடித்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானியின் காலத்திலிருந்து கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மார்க்ஸ் காலத்திற்கு முன்வரை, மக்களின் நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளனைத்தும் நம்பிக்கையான முடிவை அளிக்கவில்லை. பெரும்பகுதி வெறும் சொல்லாராய்ச்சியாகவும், வேதாந்த விசாரணையாகவும், சமாதானத்தையளிக்காத சமரச கீதமாகவும், நாட்டுக்குதவாத, ஏட்டுரையாகவும் முடிந்தது.

இருட்டறையில் இன்னலுற்ற மக்கள் இன்பங்காண விழைந்த ஒவ்வொரு சமயமும் ஒடுக்கப்பட்டனர். ஆண்டை--அடிமை, உயர்ந்தவன்--தாழ்ந்தவன், மதகுரு--பக்தன். மிராசு--உழவன், பிரபு--பணியாள், முதலாளி--தொழிலாளி, இவர்களிடையே ஏற்பட்ட வர்க்கப் பேராட்டங்களே உலக வரலாறாகும்,

நம்பிக்கை ஒளி

இந்தப் போராட்டங்களின் வரலாற்றை நன்றாக அலசிப் பார்த்தவர் மார்க்ஸ். பிரபுக்கள்--முதலாளிகளின் கொடுங்கோன்மை வெகுநாளைக்கு நிலைக்காதென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால்தான் உழைப்பாளர் உலகு மலரும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அவருடைய தெளிந்த முடிவு ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை ஒன்று. சேர்த்தது. நலிவுற்ற உள்ளத்தை புலியுளமாக்கியது. கசங்கிய கண்கள் கனலைக் கக்கின. மேதினி விழித்தது. மேதினம் பூத்தது.

ஏழை என்றும் பணக்காரன் என்றும் இருவர்க்கம் இருப்பது பொதுவாகவே சமூகத்துக்குக் கேடு, ஆபத்து என்று எடுத்துக்கூறி, பாட்டாளியின் துயரைத் துடைக்கப் பாடுபட்டார்கள். சமதர்ம நோக்குடையத் தலைவர்கள். அந்த அரும்பணியின் ஆரம்பவேலை, தொழிலாளரின் உழைப்பு, காலம் அளவு கட்டுதிட்டம் இன்றி முதலாள களால் சூறையாடப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று துவக்கப்பட்ட முதல் முயற்சி மேதினம்.

முதலாளித்வ முறை

முதலாளித்வ முறை லாபம் கிடைக்கும் வரையில் வேலை தரும் தொழிலாளர்களுக்கு. லாபம் இல்லையேல். வேலையுமில்லை என்று கூறிவிடும். பால் தரும் வரையில் பசு தொழுவத்திலே யிருக்கிறது. பால் தருவது தீர்ந்ததும் கிராமத்துக்கு துரத்தப்படுகிறதே அதுபோல. நாட்டு வளம், இயற்கை சக்தி, பாட்டாளி உழைப்பு யாவும் சேர்ந்து இந்த முதலாளித்வத்துக்கு பெருவாரியான லாபம் தருகிறது. விஞ்ஞானத்தை விலைக்குவாங்கி தொழிலாளியைக் கொண்டு மட்டுமல்லாமல் விஞ்ஞானத்தையும் துணைகொண்டு லாபம். தேடக் கிளம்பிவிட்டனர் முதலாளிகள்.

சிலருடைய தயாள குணத்தினால் ஒரு பெரிய கூட்டத்தில் வளர்ந்து வரும் தொல்லைகளைப் போக்கிவிட முடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலே வறுமை கொட்டலாயிற்று. வாட்டம் அதிகரித்தது. அதே போது, தொழில் முறை மாறி பண்ட உற்பத்தி அதிகரித்து செல்வம் கொழித்ததால் வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரீகம் மேலோங்கி விட்டது.

சிறிய நாடுகளில்

முதலாளிகள் இன்றைய உலகில் பெரிய நாடுகளில் தான் இருக்கிறார்கள். சிறிய நாடுகளில் முதலாளிகள் இல்லை.

நார்வே நாட்டிலே முதலாளிகள் இருக்கிறார்களா? இல்லை, கிரீஸில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்வீடனில் முதலாளிகள் உள்ளனரா? ஸ்விட்ஜர்லாந்தில் முதலாளிகளைப் பார்க்க முடியுமா? ஸ்பெயினில் முதலாளிகள் வாழ்கிறார்களா? பாரீஸில் பார்க்க முடியுமா முதலாளிகளை? அமெரிக்காவில் முதலாளியிருக்கிறான் அடுத்தபடி இந்தியாவில் வளர்கிறான். நான் குறிப்பிட்ட சிறிய நாடுகளில் முதலாளிகள் ஏன் இல்லை தெரியுமா? அந்த நாடு இந்தியாவைப்போல் மிகப் பெரியதல்ல. அந்த நாட்டிலிருக்கும் வியாபாரி ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடுகளுக்கு இடை யேதான் வியாபாரம் செய்யவேண்டும் எனவே அவன் பெரிய முதலாளியாவதில்லை.

தேசியமயமாக்கு

டாட்டாக்களும் பிர்லாக்களும், பஜாஜிகளும், டால் மியாக்களும் இந்த பெருத்த லாபந்தரும் தொழிற்சாலைகளை நடத்துவதினாலேயேதான் உண்டாகின்றனர். முதலாளித்வம் இந்த முறையினாலே உண்டாகிறது. தொழிலாளர் துயரம் வளருவதற்கு இதுவே காரணம். எனவே பெருத்த லாபந் தரக்கூடியதும், பெரிய தொகையான முதலும், பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைப் பொறுத்தும் இருக்கும், இந்த மூலாதாரமான தொழில்களை தனிப் பட்டவர்களின் உரிமைகளாக விட்டால் அதன் மூலம் முதலாளித்வம் வளர்ந்து பொருளாதார பேதம் மிகுந்து போகும் நிலை வரக்கூடுமாகையால் இவைகளை சர்க்காரே நடத்துவது சாலச் சிறந்ததாகும். இவை மூலம் கிடைக்கக் கூடிய லாபம் நாட்டு மக்களுக்கே வந்து சேரும்! வாழ்க்கைத் தரம் உயரும்.

அபாயக் குறி

ஏழ்மையைக் கண்டு உலகம் இகழ்கிறது, வெறுக்கிறது என்பது தெரிந்து, தன் ஏழ்மையை மறைக்கப் பார்க்கும் ஏழ்மையின் நிலைமை மிக மிக வேதனை நிரம்பியது. இடிந்த வீட்டுக்கு மண் பூச்சு, கிழிந்த கோட்டுக்கு ஒட்டு வேலை, சரிந்த சுவருக்கு முட்டுக் கொடுத்தல் போன்றவைகளை செய்யும்போது. அந்த ஏழையின் நிலைமையைக் காண்போர் இரத்தக் கண்ணீர்விட வேண்டி நேரிடும். இருக்கும் ஏழ்மையை விளக்கமாகப் பலர் அறியும்படி தெரிவித்து, அதன் மூலம் உலகின் கருணை தன் பக்கம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் ஏழை பரிதாபத்துக்குரிய சோக சித்திரம். ஏழை பல ரகம், நிலைக்கு ஏற்றபடி அவனைக் கொடியவன், முரடன், முட்டாள், வேஷக்காரன், கபடன், போக்கிரி என்று பலவாறு ஏசிப்பேசும் உலகம் அவனுடைய அப்போதையை நடவடிக்கையை கவனிக்கிறதேயொழிய, ஏன் அவன் முரடனானான், ஏன் கபடனானான், முட்டாளாகவேண்டிய காரணமென்ன? என்று யோசிப்பதில்லை. இப்படிப்பட்ட ஏழைகளின் ரகங்களிலே எந்த ரகத்திலேயும் தாங்கள் தள்ளப்படாமலிருக்க வேண்டுமே என்ற கவலை, திகில் மற்றவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. ஆகவே அவர்கள் தங்கள் தங்களின் நிலைமை கெடாதபடி பார்த்துக் கொள்ளும் சுயகாரியத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து விடுகின்றனர். ஏழை அழுகிறான். ஏழையின் தொகை வளருகிறது. ஏழையின் ரகங்கள் வளருகின்றன. கவனிப்பார் இல்லை. சமுதாயத்திலே ஏழைகளின் தொகை பெருகுவது, படகுக்கு அடியிலே ஏற்படும் வெடிப்புகள் என்பதை உணருவதில்லை ஓடத்திற்கு அலங்காரப் பூச்சுத் தேடுகிறார்கள். உல்லாசப் பயணத்துக்கு, நான் நீ என்று முந்திக் கொள்கிறார்கள். அவர்கள் அறியவில்லை ஒடத்துக்கு அடியிலே ஏற்படும் ஓட்டைகளை !

ஏழை என்ற ஒரு சொல்லிலே அடங்கி இருக்கும் ஆபத்தை உணராமலேயே, சமூகத்தின் காவலர்கள் என்ற நிலை பெற்றவர்கள் தத்தம் காரியத்தையே கவனித்துக் கொண்டு போகின்றனர்.

ஏழை, இன்று அழுகிறான் ! இன்னும் கொஞ்ச நாட்களில் அவன் கண்கள் வறண்டுவிடும். நீர் வராது.

ஏழை சிரிக்கப்போகிறான் ! தன் சகாக்களின் தொகை பெருகியதுகண்டு ! பலரகமான ஏழைகள் இருப்பதுகண்டு; அதைக் கண்டு சீமான்கள், பயந்து பதுங்குவது கண்டு. ஊரெங்கும் ஏழை, பெருவாரியாக ஏழைகள், இடையே சிறு கூட்டம் செல்வவான்கள் என்றால் அதன் பொருள் என்ன ? இன்று உணர மறுக்கின்றார்கள் உடைமைக்காரர்கள். பிரபுக்களைச் சூழ்ந்துகொண்டு பட்டினிப் பட்டாளம் நிற்கிறது என்றுதான் அதற்குப் பொருள். பிரபுவின் அலங்காரத்தை ஏழையின் அலங்கோலம் கேலிசெய்யும், பிரபுவின் பன்னீர் வாடையை ஏழ்மையின் துர்நாற்றம் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துவிடும் ! இல்லாதார் தொகை ஏறுகிறது.

இதன் உண்மையான கருத்து, சமூகம் எனும் மாளிகையின் சுற்றுச் சுவர் சரிகிறது என்பதுதான் ! பூந்தோட்டத்தை நோக்கிப் புயல் வருகிறது என்று பொருள்.

கடமை என்ன ?

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது முதலாளி இலாபம் குறைகிறது என்று குறை கூறுகிறான். சார்க்கார் அமைதி கெடுகிறது என்று கூறுகிறது. தனம் படைத்த தலைவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்று பேசுகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் வீட்டிலே துயரம், பட்டினி சூழ்ந்து கொள்கிறது. இதனைக் கவனிக்க மனம் இல்லை. உரிமைக்காக உணவுக்காகப் போராடும் தொழிலாளியை லாபத்துக்காகப் பாடுபடும் முதலாளி அடக்கும்போது பொதுமக்கள் கடமை என்ன? தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும். அவர்களின் உழைப்பே சமூகத்தின் உயிர் நாடி. அவர்களின் வேதனை நமது வேதனை.

உரிமை எது ?

மக்கள் தங்கள் உபயோகத்துக்காக விலை கொடுத்து வாங்கும் பண்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதிலே இருசாராருக்கு மிடையில் அதாவது முதலாளி, தொழிலாளி ஆகிய இருசாராருக்குயிடையே ஏற்படும் சச்சரவு இது -- நமது பணம் -- நாம் கொடுத்த தொகை -- ஆகவே அது பற்றிய பிரிவினைத் தகராறு வருகிறபோது நமக்கும் அந்தப் பிரச்னையிலே சம்பந்தம்கொள்ள, அபிப்பிராயம் கூற, சிக்கலைப் போக்க முழு உரிமையிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் பொது மக்கள் மனதிலே. இரு சாரார் கூறும் வாதங்களில் யார் கூறுவது நியாயம் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், சீர் தூக்கிப் பார்த்து நியாயம் என்று மனதிலே படுவதை தைரியமாக எடுத்துக் கூறவேண்டும். பண்டம் வாங்குபவன் நான், பணம் கொடுப்பவன் நான்.,நான் கொடுத்த பணத்தை யார் யார் எந்தெந்த அளவு எடுத்துக் கொள்வது என்று நியாயம் கூற நான் வருவேன். எனக்கு அந்த உரிமை உண்டு. ஏனெனில் எந்தப் பணத்தில் பங்கு விகிதத்துக்காக சச்சரவு வந்ததோ அந்தப் பணத்தைத் தந்தவனே நான் என்று கூறும் உரிமையை பொதுமக்கள் மறக்கக் கூடாது. இந்த உரிமையை பொது மக்கள் உணரவும் உணர்ந்து நியாயம் கூறவும் தகராறுகளைத் தீர்க்கவும் முன்வருமாறு பொது மக்களை அழைக்கும் பணியினை திராவிடர் இயக்கம் செய்து வருகிறது.

மக்கள் மன்றம்

தொழிலாளருக்கும் பொது மக்களுக்குமிடையே ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுத்தும் அரிய காரியம் இது--அந்தக் காரியத்தைச் செய்ய வேறு கட்சிகளும் இல்லை. தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி என்று இரண்டு கிளம்பி மோதிக் கொள்வதும் மோதுதலின் போது ஒழுங்கையும் சட்டத்தையும் அமைதியையும் நிலை நாட்டுவது எங்கள் கட்சி என்று கூறிக் கொண்டு சர்க்கார் கிளம்புவதுந்தான் காண்கிறோம், பொதுமக்கள் முன்பு கொண்டு வரப்படவேண்டய பிரச்னை இது என்பதும் கவனிக்கப்படுவதில்லை. பொது மக்கள் மன்றத்தின் முன்பு வழகுக்குரைத்து நீதி வழங்கும்படி கேட்கும் காரியத்தை திராவிடர் இயக்கம் செய்வதன் மூலம் பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துகிறது.

போரும் பொதுநலமும்

தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டுமே இருக்கும் நிலைமாறி அவன் தொழிற்சாலைகளிலே பங்காளியுமாக்கப்பட்டால் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

பொதுநலம் பாட்டாளி ஆட்சியிலேதான் மலர முடியும். அந்த ஆட்சியின் வெற்றியினால் மட்டுமே உழைப்பு ஊரழிக்கும் காரியமாகாது தடுக்கவும், விஞ்ஞானம் விபரீதத்தைப் பொழியாது நன்மைகள் பயக்கக்கூடியதாக அமையவும் வழி பிறக்கும்.

போர் என்றால் ரத்தம் என்று களத்திலே உள்ளவர் கூறுவர். நாட்டிலே உள்ள ஏழைகள் போர் என்றால் அளவு அரிசியும் வேறு பல அவதியும் என்று கூறுவர். ஆனால் முதலாளிக்கோ லட்சக்கணக்கில் லாபம். நம்பிக்கை ஒளி, தொழிலுக்கு வளர்ச்சி.

நல்கதி நாடுவோரே!

கோடி கோடியாக லாபம் குவிந்தாலும் முதலாளிமார்கள் குமுறும் தொழிலாளியிடம் குளிர்ந்த முகத்துடன் நடக்க முன் வருவதில்லை. கோகிலவாணிகளுக்குக் கொட் டித்தரவும், கோலாகலமான வாழ்க்கை நடத்தவும், கோயில் கும்பாபிஷேக செலவு செய்யவும் மனம் வருகிறதே தவிர தொழிலாளிகளுக்கு போனஸ் தருவதற்குக்கூட மனம் சுலபத்தில் இடந்தருவதில்லை. ஏழையின் வயிற்றிலடித்து திரட்டிய பணத்தை உருட்டி வைத்துக் கொண்டிருக்கும் செல்வந்தர்கள் பணத்தை பகுத்தறிவுக்கோ பயன்தரும் பணிக்கோ செலவிடும் திருந்திய மனம் உடையவர்களல்ல. போக போக்கியத்துக்கும் போகிற கதி நல்லதாக இருக்கவேண்டுமே என்பதற்காக மட்டுமே பணத்தைச் செலவிடுவார்கள்.

கூட்டணி தேவை

தொழிலாளியின் வாழ்வு முதலாளியின் நாக்கு நுனியில் இருந்து வந்தது. வேலையில்லை என்றால் இல்லைதான். 'ஐயா சொன்னால் சொன்னதுதான் !' இந்த முறை சங்க ரீதியாக இருக்கும் தொழில் ஸ்தாபனங்களில் இருப்ப தென்றால் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்களின் ஜீவாதார உரிமை பாழ்படும்.

குறைகளை உணர்ந்து அவைகளுக்கு காரணம் யாவை என்பதற்குரிய விவாதத்திலே ஈடுபட்டு, உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து, பிறகு அவைகளைப் போக்கிக்கொள்ள முயற்சித்துப் பார்த்து முடியாதுபோன பிறகு தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபன ரீதியாக தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தங்கள் வாழ்க்கை முறையும் தொழில் முறையும் தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைகளும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் ஒரே விதமானதாக இருக்கக் கண்டு அனைவருக்கும் உள்ளது ஒரேவகை வியாதி என்று தெரிவதால் அனைவருக்கும் ஒரே வகை மருந்து தேடவேண்டும் என்ற முடிவு செய்து ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்குமட்டும் ஸ்தாபனம் அவசியமானது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும்.

ஐக்யம் குலைவதேன் ?

தொழில் ஸ்தாபனங்களில் ஐக்யமும் பலமும் கெடாதிருக்க வேண்டுமானால் ஐன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர்போல ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும் கவனித்து கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த முறையை கவனியாததால் தொழிலாளர் ஸ்தாபனங்களிலே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டு அதன் விளைவாக அதனுடைய போரிடும் சக்தி சிதறிவிட்டதுண்டு.

தாங்கும் சக்தி தாக்கும் சக்தி இரண்டும் ஒருசேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கு ஏற்ற வகை யிலே அந்த அமைப்பு இருக்கவேண்டும், இருக்கவேண்டுமானால் இருவகை சக்திகளையும் திரட்டவும் திரட்டியதை உபயோகிக்கவும் ஏற்ப தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்க வேண்டும்.

அடிப்படை வேண்டும்

தொழிலாளர் ஸ்தாபனம் மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும் ஏற்பட்டுவிடுவதுண்டு. இவை சரியான அடிப்படையல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம். ஆனால் வாழ்வு இல்லை ! உழைக்காது வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்குத் தங்கு தடையில்லை ! 'வாழ்வோம் அனைவரும், வாழ உழைப்போம். ஒருவன் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம்' என்ற அடிப்படைகளின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள், இந்த உன்னதமான லட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக் கொண்டு, ஸ்தாபனத்தின் நடைமுறையில் உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கிற காரியம் இன்னார்க்கு சரியென்ற நிலை ஏற்படாத வகையிலும் ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு நேரிடாத முறையில் நடத்திச் சென்றால் ஐக்கியம் கெடாது. பலனும் நிச்சயம் விளையும்.

கம்யூனிஸ்ட் பூச்சாண்டி

தொழிலாளர் ஸ்தாபனத்தைத் திறம்பட நடத்தி தொழிலாளரின் அன்புக்குப் பாத்திரமாக வேண்டுமானால், அவர்களின் குறைகளை நீக்கியாக வேண்டும்...அந்தக் குறைகளை ஆராயும் எவரும், அவைகளை நீக்கவேண்டு மென்று பாடுபட முயற்சிக்கும் எவரும், அவர்களுக்காக வாதாட முன் வருபவர் யாரும், அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ கம்யூனிஸ்ட் ஆகித் தீரவேண்டும் -- இல்லையேல் தொழிலாளர்களின் தோழமையை இழந்து தீரவேண்டி நேரிடும். போலிச் சங்கங்களை வைத்துக்கொண்டு, முதலாளிக்கு நண்பனாக இருந்துகொண்டு, தன் சுயநல சொக்கட்டான் ஆட்டத்துக்குத் தொழிலாளர்களைப் "பாய்ச்சிகை "யாக்கி கொள்ளலாம் என்ற முறையில் சிலர் கிளம்பினாலும் கொஞ்ச நாளே அந்தக் கூத்து நடைபெற்ற பிறகு கொட்டகை காலியாகும்.

மனித உரிமையான ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களான கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, கிளர்ச்சியுரிமை ஆகியவற்றோடு தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமையும் நிச்சயம் தேவை. ஆனால் அது இரு பக்கம் கூர் உள்ளது. அந்த சக்தியைப் பெறுவதற்காக எண்ணற்ற தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்தியுள்ளனர்.

கூலி உயர்வு ஏன் ?

கோடி கோடியாக இலாபமடித்த முதலாளியை, நாடி நரம்பு முறியப்பாடுபடும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள் என்றால் தொழிலாளர்கள் தங்கள் மாளிகையிலே உள்ள மூன்றாவது மாடிக்குப் பளிங்குக் கல் அமைக்கப் பணம் கேட்கவில்லை. குடிசையில் படுத்து உறங்கும் போது பசியால் சிறுகுடலைப் பெருங்குடல் தின்றுவிடாதபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே கூலி கொஞ்சம் கூட்டிக் கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

தொழிலாளர் வாழ்க்கையிலே இப்படி வறுமைத் தேள் கொட்டும்படி செய்துவிட்டுப் பிறகு அவர்கள் கட்டுக்கு அடங்குவதில்லை, வேலை நிறுத்தம் செய்து தொழில் பெருக்கத்தை கெடுக்கிறார்கள் -- கலவரம் செய்கிறார்கள் -- என்று குறை கூறுவதும் சரியாகுமா?

எங்கும் கிளர்ச்சி

ஆலைத் தோழர்கள் முதற்கொண்டு அரசாங்க உத்தியோகஸ்தர் வரையிலே சம்பள உயர்வுக்காகவும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் தமக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கிளர்ச்சி செய்து, கஷ்ட நஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு, சிற்சில சமயங்களில் தோல்வி அடைந்தபோதிலும், பொதுவாக ஓரளவு வெற்றி பெற்று வருகிறார்கள். பொருளாதார முறையிலே காணப்படும் பேதத்தின் பலனாக, உத்தியோக மண்டலங்களில் ஒருசிலர் உச்சியில் அமர்ந்துகொண்டு, கொழுத்த சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை அமுலுக்குக் கொண்டுவர உழைக்கும் எண்ணற்ற சிறு உத்தியோகஸ்தர்கள், குறைந்த சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, குடும்ப பாரம் தாங்கமாட்டாமல் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

வேலை நிறுத்தம்

எவ்வளவோ நாட்களுக்கு சகித்துக்கொண்டிருந்து விட்டு தொல்லை தாங்கமுடியாமல் போய்விட்டதால், கெஞ்சிப் பயன் ஏற்படாமல் போனதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கியிருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். எவ்வளவு பொறுக்க முடியுமோ அவ்வளவையும் பொறுத்துப் பார்த்து கடைசியில் 'வருகிற கஷ்டம் வரட்டும், அனுபவிப்போம். வேலை நிறுத்தம் செய்தே தீரவேண்டும்' என்று தீர்மானிக் கிறார்கள். வேலை நிறுத்தம் என்று தீர்மானித்தவுடனே தொழிலாளர்களின் மனக்கண் முன் ஆத்திரமடைந்த முதலாளி, சீறிடும் சர்க்கார், சட்டத்துக்காக தடியடி தர முன்வரும் அதிகாரவர்க்கம் ஆகியவர்கள் தோன்றாமலில்லை. பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கலகங்கள், தடியடி, சிறைப்படுதல் போன்ற காட்சிகள் அவர்கள் மணக்கண் முன் தோன்றாமலுமில்லை. அணைந்த அடுப்பு, அழுகின்ற மனைவி, அலைகின்ற குழந்தைகள் இந்தச் காட்சிகளும் தெரிந்தும் வேலைநிறுத்தம் செய்கின்றார்கள் !

வீம்பு போராட்டமல்ல

வேலை நிறுத்தம் தொழிலாளியின் வீம்பு போராட்டமல்ல--ரத்தக் கண்ணீர் ! அவன் வேதனைப் புயல் ! விம்முதலின் எதிரொலி ! வீட்டுக்குள்ளே சென்றால் பசிவேதனை, வெளியே சென்றால் அடக்குமுறை அச்சம். வீட்டுக்குள்ளே தரித்திரம், வெளியே அடக்குமுறை தர்பார் என்ற நிலை நாட்டில் ! எனவே நெருப்போடு விளையாட தொழிலாளி பொறுப்பற்றவனல்ல. முதலாளியின் முகத்திலே இருக்கும் ஜொலிப்பும் தொழிலாளியின் வாழ்க்கையிலே காணப்படும் தவிப்பும் கண்டால் போதும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை உணர.

அந்த சக்தி

முன்பெல்லாம் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால், வேலை நிறுத்தம் ஏற்பட்டால், சட்டம் சமாதானம் ஒழுங்கு அமைதி என்ற காரணம் கூறிக்கொண்டு, அதிகார வர்க்கம் அமுல் நடத்தும், 144 செக்ஷன் பிறக்கும். தடியடி துப்பாக்கிப் பிரயோகம், சிறை முதலியன நடைபெறும். தொழலாளர்கள் இவ்வளவு தாக்குதல்தளை சமாளித்தாக வேண்டும்--முடிந்தது. வெற்றிகரமாகவே முன்னேறிச் சென்றனர். அவர்கள் மீது சட்டம் சீறியபோது, அடக்கு முறை வீசப்பட்டபோது, அவர்களிடம் அன்பு காட்டவும் ஆதரவு தரவும் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் பொதுமக்கள் முன்வந்தனர். எனவே அந்த பலத்தைத் துணைக்கொண்டு. அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தொழிலாளர்களுக்கு இருந்தது. பட்டினிக் கொடுஞ்சிறையில் இருக்க முடியாது என்று பரணி பாடிக்கொண்டு எழுந்தனர் பாட்டாளி மக்கள். ஆதரவு திரட்டித்தந்தனர்--அனுதாபப்பட்டனர்.

இரட்டைக்குழல் துப்பாக்கி

கத்தி வீச்சைத் தடுக்கக் கேடயம் இருந்தது ! குண்டு பாய்ந்து செல்ல முடியாத கவசம் கிடைத்தது. போரிடுவதற்குத் தேவையான ஆர்வம் தருவதற்கு வீரரசம் தரப்பட்டது. எனவே அவர்களால், தாக்குதல்களைச் சமாளிக்க முடியும். இப்போது நிலைமை வேறு. மாறிவிட்டது விபரீதமான முறையில், வேதனையான விளைவுகள் ஏற்படும் முறையிலே. இப்பொழுது தொழிலாளர்கள்மீது இரட்டைக்குழல் துப்பாக்கி நீட்டப்படுகிறது. தொழிலாளர் இருதயத்தின்மீது.

அன்றும் இன்றும்

தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஒரு பக்கமும் பிரச்சாரம் மறுபக்கமும் வீசப்படுகிறது. அதாவது அடக்கு முறை சக்தி, அறிவிக்கும் சக்தி இரண்டும் கொண்டு சர்க்கார் தாக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கிடையாது, போலீசைக்கொண்டு அடக்குவர் பாட்டாளிகளின் கிளர்ச்சியை. ஆனால் உடனே பிரச்சார பீரங்கிகள் முழங்கத் தொடங்கும் ஆட்சியாளரை நோக்கி. இந்த வசதி இன்று தொழிலாளருக்கு இல்லை. இப்போது இரண்டு வகையான ஆயுதங்களும், போலீஸ் பிரசாரம் இரண்டும், ஒரே கரத்தில் உள்ளன.

நாஜிசப் பாதையில்

இத்தகைய இரட்டைக் குழல் துப்பாக்கியின் துணை கொண்டு நடத்தப்படும் ஆட்சிக்குத்தான், நாஜிசம் என்று பெயர் ! அதன் தாக்குதலை பாட்டாளி உலகு தாங்க வேண்டும்--நிச்சயமாகத் தாங்கமுடியும் என்று மட்டுமல்ல இறுதியில் இரட்டைக்குழல் துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்துபோய் களத்திலே அதனைப் போட்டுவிட்டு ஓடுமளவுக்கு நாஜிசத்தைப் பாட்டாளி வர்க்கம் முறியடிக்கத்தான் போகிறது.

பிரச்சாரபலம், அதிகாரபலம் இரண்டும் இருக்கும் காரணத்தாலேதான் வேலை நிறுத்தங்கள் ஒவ்வொன்றின் போதும் ஆளவந்தார்கள் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளைகளாகி பாட்டாளி மக்களை அடக்குகிறார்கள். தொழிலாளிக்குத் தடியடி, கண்ணீர் குண்டு, துப்பாக்கிப் பிரயோகம் சகலமும் நடக்கிறது. ஜனநாயக உணர்ச்சியை அடக்குமுறை கொண்டு ஒழித்துவிட முடியாது. அந்த ஜனநாயக உணர்ச்சி ஏற்படவேண்டுமானால். பலப்பட வேண்டுமானால், நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் வேண்டும். பழைமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்கவேண்டும்.

முற்றும்