எண்ணித் துணிக கருமம்/தனிநாடு 3
எந்தக் கட்சியும் மேற்கொள்ளும், நேரடி நடவடிக்கை கட்சியில் கணிசமான ஒரு தொகையினர், ஈடுபடத்தக்கதாக இருக்க வேண்டும் - கட்சியின் மதிப்பு காப்பாற்றப்பட வேண்டுமானால்.
பத்தே பேர் கிடைப்பதானாலும் சரி – அது போதும் – மற்றவர்கள் வராவிட்டால் கவலை வேண்டாம் – அவர்கள் போலிகள் – பயங்காளிகள் – சுயநலக்காரர் – என்று கூறுவது, பேச, கேட்க, சுவையாக இருக்கும்.
ஆனால் பத்தேபத்து பேர்தானா! என்று கேட்டு, எதிரிகள் ஏளனம் செய்யும்போது, கிளர்ச்சியில் ஈடுபடாதவர்கள் மட்டுமல்ல, கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் கூட, தலைகுனிய வேண்டிவரும்.
இவ்வளவு பெரிய கழகத்தில் இவ்வளவே பேர்தான், நேரடி நடவடிக்கையில் ஈடுபட முன்வந்தனர்; இருந்தால் என்ன? எண்ணிக்கையைக் கவனிக்க வேண்டாம்! எதற்கும் தாயாராகிவிட்ட எங்களைப் பாரும்!! - என்று கேட்கலாம் – அதனைப் பொருள் உள்ளதாக, ஆட்சியினர் கருத மாட்டார்கள் – உலகு மதிக்காது.
உலகின் போக்கு ஒருபுறம் இருக்கட்டும்; நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, தடைமீறி, சிறைபுக, சிறு தொகையினர் முன்வந்து, மிகப் பலர், அதிலிருந்து ஒதுங்கியிருப்பின் அவர்கள் நிலை என்ன ஆகும், கேலிப்பொருளாவர், கண்டிக்கப்படுவர்.
ஆனால், கேலியும் கண்டனமும் அவர்கள் மீது பாய்வதால், நமது கொள்கைக்கு உரமோ, கழகத்துக்கு மதிப்போ, ஏற்படுமா? இல்லை!
கேலி, கண்டனம் கேட்டுத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அவர்கள் கழகத்தைவிட்டு விலகுவர்; பொதுவாழ்க்கையைவிட்டுப் போய்விடுவர்; பிற கட்சிகளில் சேர்ந்து கொள்வர்; நம்மைப் பகைத்துக் கொள்பவர்களாகி விடக் கூடக் கூடும். இந்த நிலை, எந்த விதத்திலும், நமக்குச் சாதகமானது ஆகாது.
மிகத்தெளிவாக நமக்குப் புரிகிறது, தடைமீறிச் சிறைபுகக் கூடியவர்கள், கழக உறுப்பினர்களின் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மிக மிகச் சிறு தொகையினராக இருப்பர்.
தொகை பற்றி, நான் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் கழகத்தவரிடம் கேட்கும் போது, தயக்கம், திகைப்பு, அச்சம் இவைதான் மேலோங்கித் தெரிகின்றன.
மொத்தம் எவ்வளவு பேர் சிறைப்பட்டால், மதிப்பாக இருக்கும் என்று ஒரு மாவட்டச் செயலாளர் கேட்டார்.
இவர், ஆர்வத்தில் குறைந்தவர் அல்ல.
ஆனால் நான், பிரச்சினையை விளக்கி விளக்கிக் காட்டியதால், நிலைமையை நன்கு உணர்ந்து கொண்டவர். நான் சொல்லுவானேன்? வந்திருக்கும் தடை, நமது மூலாதாரக் கொள்கைக்கு. நாமோ 15 ஆண்டுகள் வளர்ந்துள்ள கழகம். உறுப்பினர்களோ சில இலட்சம். வாக்கு கொடுத்தவர்களோ 34 இலட்சம். M. L. A. க்கள் 50. M. P. க்கள் 8. இதைக் கவனத்தில் கொண்டு இப்படிப்பட்ட ஒரு கழகம், இப்படிப்பட்ட நிலைமையில், மதிப்பு பெற வேண்டுமானால் எத்தனை ஆயிரம் பேர் வேண்டும் என்று நீயே கணக்குப்பார்த்துச் சொல்லேன் என்று நான் கேட்டேன்.
சிரமப்பட்டு யோசித்து அவர் சொன்னது, ஜில்லாவுக்கு நூறு பேராவது கிடைத்தால்தானே நன்றாக இருக்கும் என்பதாகும்.
இது மிகக்குறைவான கணக்கு என்று வாதாட சிலர் முன்வரக்கூடும். நான் இதன் தொடர்பாக, மற்றொன்றும் கூற விரும்புகிறேன்.
கழக உறுப்பினர்கள், கொள்கைப் பிடித்தம் கொண்டவர்கள் ஆனால் கழக அமைப்பிலும், சமூக அமைப்பிலும் குறிப்பிடத்தக்கவர்கள் என்ற வரிசையில் இல்லாதவர்கள், பலப்பல ஆயிரம், சிறை செல்ல, வழி செய்து, கழகம் பெருமை தேடிக்கொள்வதிலே பொருள் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. காரணம், முதலாவதாக, அத்தகையவர்கள், ஆர்வ மிகுதியால், விளைவு பற்றி இப்போது எண்ணிப் பார்க்காமல் சிறை புகுந்துவிடுகிறார்கள், பிறகோ வெளியே சென்றுவிட வழி தேடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறையும், குடும்ப நிலையும், அவர்களை அந்தப்படி நடந்துவிடச் செய்கிறது.
அதிகம் பேர், சிறை செல்லவில்லை என்பதால் ஏற்படும் இழிவைக் காட்டிலும், சிறை சென்றவர்களில் பலர், மன்னிப்பு கேட்டு வெளிவந்துவிட்டனர் என்ற நிலை, கொடுமை நிறைந்த இழிவாக நான் கருதுகிறேன்.
காரணம் ஆயிரம் காட்டினாலும், ஜூலை கிளர்ச்சியின்போது, ஏற்பட்ட வெளிவரும் படலம், என் நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது; அந்தக் கசப்பான அனுபவம் என் மனதை விட்டு அகல மறுக்கிறது. இரண்டாவதாக, குறிப்பிடத்தக்கவர்கள் குறைவான எண்ணிக்கையில் சிறை செல்வதால், கிடைக்கும் ஆதரவு, குறிப்பிடத்தக்கவர்களல்லாத நிலையில் உள்ள, தொண்டர்கள் பெரும் அளவிலே செல்வதால் ஏற்பட்டுவிடாது.
பெரிய தொகையினர் சிறை சென்றனர் என்ற கணக்கு, கட்சியின் வளர்ச்சி எவ்வளவு பெரிது என்பதைத்தான் காட்டும்; வேறு பலன் இல்லை.
ஆனால் குறிப்பிடத்தக்கவர்கள் சிறைப்படுவதன் மூலமாகத்தான், பொதுமக்கள் மனதிலே மரியாதை உணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, ஜில்லாவுக்கு நூறு என்ற கணக்கு, மிகக்குறைவு என்பதல்ல எனக்கு உள்ள கவலை. அந்தத் தொகையாவது கிடைக்குமா என்பதும், அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா, என்ற கவலையும்தான்.
தொகையும் ஜில்லாவுக்கு 100 என்று இருந்து, ஆட்களும் வெறும் தொண்டர்கள்தான் என்றும் இருந்துவிட்டால், மதிப்பும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை, பொருளும் இல்லை, பயனும் இல்லை. குறிப்பிடத்தக்கவர்களில் சிலரிடம் பேசிப்பார்த்ததில், எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் பிறக்கவில்லை.
மிகக்குறைவான பகுதியினரே, குறிப்பிடத்தக்கவர்களில், கிடைப்பார்கள் என்று தெரிகிறது.
அப்படிப்பட்டவர்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டியதுதான்! அம்பலப்படுத்திவிட வேண்டியதுதான்! அப்புறப்படுத்திவிட வேண்டியதுதான்! என்று பேசுவோர் உளர்.
எனக்கு அந்தப் பேச்சு பிடிக்காது என்பதுடன், அப்படிப் பேசுவர்களை மட்டும் துணை கொண்டு, ஒரு கழகத்தை நடத்திச் செல்ல முடியாது என்றும் எண்ணம் கொண்டுள்ளேன்.
இதைச் சாதகமான சந்தர்ப்பம் ஆக்கி, கட்சியிலே இருந்து பலர் மீது கரி பூசி வெளி அனுப்பும் போக்கு எனக்குப் பிடிக்காதது, மட்டுமல்ல, அது நீண்டகாலப் பலன் தரக்கூடியதுமல்ல.
இந்தப் போக்கிலே நாம் நடந்து கொள்ளப்போவது தெரிந்ததுமே, பலர், தாமாகவே கழகத்தை விட்டு வெளியேறிவிடுவர், அவர்களில் சிலரையாவது எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு, நம் மீது பழி சுமத்தும் - மொத்தத்தில் கழகத்துக்கு அதனால் இழுக்குதான் ஏற்படும்.
அந்த முறையையும் நான் விரும்பவில்லை.
சோதனை ஏற்படும்போது சிறை செல்ல வேண்டும், அந்த வீர உணர்ச்சியும், தியாக உள்ளமும் வேண்டும், அந்த இயல்பு போற்றப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்பவன், ஆனால், அத்தகையவர்கள் மட்டும்தான் ஒரு கட்சியில் இருக்க வேண்டும், அதற்கு தயாராக இல்லாதவர்களால் கட்சிக்குப் பலனே ஏற்படாது என்று நான் கருதுபவன் அல்ல. கழகம், ஒவ்வொரு விதமான நிலையினர், இயல்பினர் அவரவர்க்கு இயன்ற அளவிலும் வகையிலும் துணைபுரிவதால், தொண்டாற்றுவதால், வளருவது; சிறைபுகும் ஆற்றலை மட்டும் காட்டுவோர் கொண்டதாக இருந்திட வேண்டும் என்பது, பொதுவிதியும் அல்ல, விரிவான ஒரு இயக்கம் நடத்தும் முறையும் அது அல்ல.
சிறைபுக இயலாத நிலையினர் மீது பாய்ந்திடுவது, இருபக்கம் கூருள்ள கத்தியுடன் விளையாடுவதாக முடியும்.
அதிலே சிலர், நமது கொள்கையே சரியில்லை, அல்லது பிடிக்கவில்லை என்று காரணம் காட்டி, விலகக்கூடும்.
அப்படிப்பட்டவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு மாற்றுக் கட்சியினர், கொண்டாடி, பொதுமக்கள் மனதைக் குழப்பிடக் கூடும். இவைகளெல்லாம், விரும்பத்தகாத நிலைமைகள்; தவிர்க்கப்பட வேண்டியவைகள்.
இயலாமை காரணமாக, சிறை வராதிருப்போரைப் பழிப்பதும், பகைவர்களாக்கிக் கொள்வதும், நல்லது அல்ல.
மிகச்சிறிய தொகையினர் சிறைபுக வருவர்.
மிகப்பெரிய தொகையினர் சிறைபுக வரமாட்டார்கள். இது எந்த அமைப்புக்கும் உள்ளது; அதிலும் நமது கழகத்தில், இது தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது.
இந்த நிலைமையை, நாமும் எடுத்துக்காட்டி, நையாண்டிக்கு இடம் ஏற்படுத்திக் கொள்வது அறிவுடைமை ஆகாது.
இதனை, உள்ள நிலைமை என்றுகூட நான் வெளியில் கூற விரும்பவில்லை, மாறாக இது நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட நிலைமை, வகுத்துக் கொண்ட முறை என்றுதான் கூறுவேன்.
ஏனெனில், அப்போதுதான், கழகத்தின் மீது இழிவு படராமல் இருக்கும்.
மிகப் பெரும்பாலோர் சிறைபுக மறுத்து விட்டனர் - இவ்வளவுதான் இந்தக் கழகத்தின் இலட்சணம் என்ற பேச்சு, அடக்குமுறையைவிட வேகமாக, கழகத்தை அழித்துவிடும்.
ஆகவே, சிறைபுகத் துணிவு கொள்வோர், என் பாராட்டுதலைப்பெறுவர், ஐயமில்லை, ஆனால் அவர்கள், சிறை புகாதவர்களைப் பழிக்கவும், பழிதீர்த்து கொள்ளவும் முனைவதை நான் விரும்ப மாட்டேன். சிறைபுக முன்வருவோர், சிறைபுகுவது மட்டுமல்ல, சிறைபுகாதவர்களின் மீது பகை காட்டாமல் இருப்பதையும், தமக்குரிய பண்பு ஆக்கிக் கொள்ள வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் - சிறை புகும் துணிவுடையோர் மட்டும் கொண்ட அமைப்பு அல்ல. பல்வேறு இயல்புடையார், திறனுடையார், கொண்ட அமைப்பு.
ஆக எனக்கு உள்ள கவலை,
மிக்குறைவான தொகையினர் மட்டுமே சிறை புகுவார்களே
என்பது மட்டுமல்ல,
அவர்கள், சிறைபுகாதவர்களை அம்பலப்படுத்தி, பகை எழுப்பி, அதன் காரணமாக, கழகத்துக்கு மேலும் சரிவு ஏற்படுத்த முனைவார்களோ என்கிற அச்சமும் உண்டு.
பிறர் கேட்கும் முன்பு நானே கூறிவிடுகிறேன்,
நான் சிறைபுகும் வரிசையில் இருக்கிறேன். வெளியில் இருக்கும் வரிசையினன் அல்ல. ஆனால் வெளியே இருந்திட வேண்டிய நிலையில் உள்ள கழகத் தோழர்களை, வெறுத்திட, குறைவாகப் பேசிட, அம்பலப்படுத்திட, பகை மூட்டிட, விரட்டிவிட, நான் விரும்புபவன் அல்ல.
பலகாலமாக கூறி வந்ததை மீண்டும் கூறிகிறேன், நான் பத்து, பதினொன்று ஆவதை விரும்புபவன், பத்து, எட்டு ஆக்கப்படுவதை விரும்புபவன் அல்ல.
இது என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புப் பிரச்சினை அல்ல.
கழகம் வளர, இது முறை என்று நான் நம்புகிறேன். கழகத்தை நடத்திச் செல்லும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வரையில், இந்த முறை இருக்கும்.
இதனைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஏனெனில்
சிறைபுகும் உயர்ஜாதி
சிறை புகாத மட்ட ஜாதி
என்ற நிலை, கழகத்தில் ஏற்பட்டுவிட இடமளிக்கக் கூடாது.
1963ல், வாழ்க்கை நிலை, தொழில் நிலை, குடும்ப நிலை, மனநிலை காரணமாக, சிறைபுக இயலாது இருக்கும் ஒரு கழகத் தோழர், 1965ல் சிறைபுகும் நிலை பெறக்கூடும்.
இதற்கு நேர்மாறாக, 1963ல் சிறைக்கு அஞ்சாது இருக்கும் ஒருவர், 1965ல் சிறை செல்ல முடியாத நிலையினராகிவிடக்கூடும்.
எனவேதான், ஒரு குறிப்பிட்ட கட்டத்தின்போது சிறை செல்ல இயலாதவராக, ஒருவர் இருப்பதை, நிரந்தரமான பலகீனமென்றோ, மாறவே முடியாத இயல்பு என்றோ எண்ணிக் கொண்டு அவரால் கிடைக்கக் கூடிய வேறுபல துணைகளை, பயன்களை, இழந்திடும் முறையில், அவரை, விரட்டுவது, யூகம் ஆகாது; நியாயமும் அல்ல என்பது என் கருத்து.
சிறைபுக இசைவோரின் தன்மையும் தொகையும் ஒருபுறமிருக்க, இவர்கள், தடை மீறிச் சிறை புகுவது, தி. மு. கழகத்தவர் என்ற முத்திரையுடன்தான் இருக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
தி. மு. கழகம், தடைச்சட்டத்தை மீறுவது என்று நாம் முடிவெடுத்து, அந்த முடிவின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட அளவினர், தடை மீறுவர், மற்றவர், கழகத்தை நடத்திச் செல்வர், என்ற நிலை இருக்க, சட்டம் இடமளிக்கவில்லை.
தி. மு. கழகம், தடைச்சட்டத்தை மீறும் என்று நாம் முடிவு எடுத்துவிட்டால், மீறுவோர், மீறாதவர் என்ற பாகுபாடு பற்றி, சர்க்கார் கணக்கெடுத்து, மீறுவோரை மட்டும் சிறைப்படுத்தி, மீறாதவர்களை கழகம் நடத்த விட்டுவைக்கும் என்று எண்ணி ஏமாறக்கூடாது. கழகம் என்ற அமைப்பே அழிக்கப்பட்டுவிடும். கழகத்தவர் என்ற நிலையே எவருக்கும் இருந்திடாது.
கழகமும் அழிந்து, கழகத்தவரில் மிகமிகச் சிலர் மட்டுமே சிறைப்பட்டனர் என்ற நிலை ஏற்படும்.
இந்த நிலை எந்தவிதத்திலும் பயன் தருவது ஆகாது.
ஆக நாம் மீண்டும் அடிப்படைக்கு வருகிறோம் - தடை மீறுவோரின் அளவு இருக்கட்டும் - கழகம் என்ற அமைப்பு, தடை மீறும் செயலுக்குப் பிறகும் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினைக்கு வருகிறோம்.
வேண்டாம் என்று நாம் கருதினால், பிறகு, நாம் மீண்டும் சந்திக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. முன்பு நான் கூறியபடி, அது தற்கொலைத்திட்டம் ஆகிவிடுகிறது.
சிலர் அது போலாகி, கழகமும் கலைந்த பிறகு, மீதம் உள்ளவர்கள் கூடி, புதிதாக ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு இயங்கட்டுமே என்று கூறத் தோன்றும்.
அப்படி இயங்க முன்வரும் அமைப்பு, திராவிடநாடு கேட்பதாக இராது என்பதை மறந்துவிட வேண்டாம்.
நாமெல்லாம் பதினைந்து ஆண்டுகள் பாடுபட்டு எந்த வடிவத்தைக் கழகம் பெறச் செய்திருக்கிறோமோ அந்த வடிவம், புதிய அமைப்பு, நம்முடைய பணியும் இல்லாத நிலையில், பெற, எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இவை இரண்டையும் எண்ணிப் பார்க்கும்போது; நமக்கு மகிழ்ச்சியோ, நமபிக்கையோ பிறக்க வழி இல்லை.
தடைச்சட்டத்தால் கழகம் கலைந்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மட்டுமல்ல, காங்கிரசின் எதிர்க் கட்சிகளும் விரும்புகின்றன. – எதிர்பார்த்துக் கொண்டுள்ளன.
தடைச்சட்டம் மீறப்படுவதால், கழகம் நடாத்துவோர் சிறையில் தள்ளப்பட்டு கழகமும் கலைக்கப்பட்டுப் போனால் கடும் நடவடிக்கைக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத நிலையினரும், கழக ஆதரவாளரும், தமக்குரிய இடம் இழந்து, அலைவார்கள், அப்போது அவர்களை இழுத்துப் போட்டுக் கொண்டு, புதிய வலிவு பெறலாம் என்று எண்ணிப் பல கட்சிகள் பல் விளக்கிக் கொண்டுள்ளன.
நமக்கு ரோஷம் ஊட்டிச் சிலர் பேசுவதும், இங்கு, தலைமையினர் தயக்கம் காட்டுகிறார்கள், தொண்டர்கள் துடிக்கிறார்கள், என்று கதைக்கட்டிப் பேசுவோரும், இந்த அற்ப ஆசையால் உந்தப்பட்டவர்கள்.
பதினைந்து ஆண்டுகளாக, நாம் ஊட்டி வைத்திருக்கின்ற, காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சி, நாம் சிறை சென்று, கழகம் கலைக்கப்பட்டுப் போன பிறகும், நாட்டிலே உலவியபடி இருக்கும்.
அந்த உணர்ச்சியைத் தமக்குச் சாதமாகத் திருப்பிப் பலன்பெற வேண்டுமென்று அந்த கட்சிகள், தவம் கிடக்கின்றன.
யோசிக்காமல், தீரமாக நின்று, தடையை மீற வேண்டும் என்று நமக்கு அவர்கள் ‘கட்டளை’ பிறப்பித்துக் கொண்டிருப்பதுகூட, நாம் இருக்கும் வரையில், நமது கழகம் இயங்கும் வரையில், தாங்கள் வளர முடியாது என்பதால்தான்.
வீட்டுக்கு உரியவர் வெளியூர் சென்று விட்டால், பூட்டை உடைத்துப் பொருளைக் கொள்ளையிடலாம் என்று எண்ணும் கள்ளர் போலவும், கிழவன் சீக்கிரம் கண்ணை மூடிக்கொண்டால் சேர்த்து வைத்துள்ள சொத்தைப் பெற்று சுகவாழ்வு நடத்தலாம் என்று எண்ணும் ‘மைனர்’ போலவும், இந்த அரசியல் கட்சிகள், கழகம் கலையட்டும், கழகம் நடத்துவோர் சிறைப்படட்டும் என்று கார்த்துக் கொண்டு உள்ளனர்.
இவர்கள், நாம் கொண்டுள்ள கொள்கையை அல்ல, நாம் சேகரித்து வைத்துள்ள, ‘காங்கிரஸ் எதிர்ப்புணர்ச்சி’ எனும் சொத்தைக் கொள்ளையிட்டுக் கொழுத்திட முனைபவர்கள்.
நாம், அவசரப்பட்டு முடிவெடுத்து, இவர்களின் சூதுக்கு இரை தேடிக் கொடுப்பது, கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுப்பதாகும். இது தவறு மட்டுமல்ல; பைத்யக்காரத்தனம்; மக்களுக்கு நம்மையும் அறியாமல், நாம் இழைக்கும் துரோகமாகவும் முடியும்.
இது மிகமிகக் கூர்ந்துபார்க்கப்பட வேண்டிய பிரச்சினை.
எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும், யாரோ பலன் பெற்றுக் கொண்டு போகட்டும் என்று நாம் விட்டுவிடுவது, பொறுப்பற்ற செயலாகும்.
நாம் சிறை சென்று, நமது கழகம் கலைந்து, நாம் சேர்த்து வைத்துள்ள ‘உணர்ச்சி’, நம்மை உள்ளூற வெறுத்துக் கிடக்கும், இடர்தேடிகட்குப் போய்ச் சேர வழி அமைத்துக் கொடுப்பது, நியாயமுமல்ல, தேவையுமல்ல.
தி. மு. கழகம், தடைச்சட்டம் காரணமாக, அழிக்கப்பட்டு போனால், அதன் அளவுக்குக் காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் வேறு ஒரு கட்சி இன்று இல்லை, இன்னும் இருபது ஆண்டுகளுக்கு ஏற்பட முடியாது.
அவ்விதம் வேறோர் கட்சி வடிவமெடுத்தாலும், அதன் கொள்கை, தி. மு. கழகத்திடம் பரிவு காட்டுவதாக இருக்காது.
ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது, நமது கழகத்திடம் காங்கிரசுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கும் அதைவிட அதிகமாகவும், பிறகட்சிகளுக்கு உள்ளன.
எனவே, தி. மு. கழகம் மறைகிறது என்றால், ஆளுங்கட்சியும், மற்ற எதிர்கட்சிகளும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்.
மற்றக் கட்சிகள்கூட, காங்கிரஸ் போலவே, அகில இந்தியா என்ற திட்டத்தை ஏற்றுக் கொள்பவை.
தி. மு. கழகம், பிரிவினை கேட்பதால், நாட்டினில் ஏற்பட்டுள்ள விழிப்பையும், எழுச்சியையும் பார்த்து, மக்களை ஓரளவுக்காகிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அந்த கட்சிகள், தென்னாட்டுக்கு பொருளாதார வளர்ச்சி வேண்டும், உரிய பங்கு வேண்டும் என்று பேசுகின்றன. தி.மு. கழகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால், அந்தப் பேச்சையும் அந்தக் கட்சிகள் விட்டுவிடும். தென்னாட்டின் உரிமைகளுக்காக வாதிட ஒரு கட்சியும் முன் வராது.
தி. மு. கழகம் மறைந்து அப்படிப்பட்ட கட்சிகள் வலிவும் செல்வாக்கும் பெறுவதால்
தென்னாட்டுக்கும் இலாபம் இல்லை, ஜனநாயகத்துக்கும் வளர்ச்சி இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, பாராளுமன்றத் துறையில் குறிப்பிடத்தக்க நிலையை பெற்றுவிட்டதால், அது பலருக்கு மிகச் சாதாரணமானதாகத் தோன்றுகிறது - எத்துனை பாடு பட்ட பிறகு, அந்த நிலை கிடைத்தது என்பதைக் கவனித்தால் மட்டுமே அந்த நிலையின் மேம்பாடு புரியும்.
சென்ற தேர்தலில், ஆளுங்கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 50 இலட்சம்; தி. மு. கழகத்துக்கு 34 இலட்சம்.
இந்த அளவு, ஆளுங்கட்சியுடன் நெருங்கி வந்துள்ள எதிர்க்கட்சி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை, என்பது சர்வசாதாரணமான விஷயம் அல்ல. பெற்றுவிட்ட பிறகு இது சிலருக்கு அல்பமானதாகக்கூடத் தெரியும்.
காங்கிரஸ் பெற்றது 50 இலட்சம் வாக்குகள் என்றால், அவை 200 தொகுதிகளிலும் தேர்தலில் ஈடுபட்டு. தி. மு. கழகம் பெற்ற 34 இலட்சம் வாக்குகளும் 140 தொகுதிகளில் மட்டும் ஈடுபட்டுப் பெறப்பட்டவை.
இந்த கணக்கு காட்டும் பாடத்தை, பெற்றுவிட்ட நாம் மிகச்சாதாரணமானது என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அரசியல் வட்டாரம், இதனை மிகப் பெரிய சம்பவமாக்க் கருதுகின்றனர்.
இந்த அளவு; அடுத்த தேர்தலில், வாக்குகள் பெறத்தக்க நிலையில், வேறு எந்த கட்சியும் வளர்ந்து இல்லை.
தி. மு. கழகம், தடைச்சட்டம் காரணமாக, கலைகிறது என்றால், சிறை சென்றவர் போக மீதமுள்ளவர்கள் மட்டுமல்ல, ஆதரவு காட்டி வாக்களித்த பல இலட்சக்கடக்கானவர்கள், எவர் பக்கம் தமது ஆதரவினைத் திருப்புவர்; அவர்களின் நடவடிக்கை எவ்விதம் இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
அவர்களில் மிகப் பெரும்பாலோர், சிறைப்பட்டுள்ள தி. மு. கழகத்தவரிடம், உண்மையாகவோ, போலியாகவோ, பரிவு காட்டிப் பேசுகிற கட்சிக்குத் தமது வாக்குகளைத் தருவர். அந்த வாய்ப்பு, இன்று, சுதந்திரக் கட்சிக்கு இருக்கிறது. அந்தக் கட்சிதான் நமது கொள்கையை ஏற்க மறுத்த போதிலும்; பரிவு பேசியும் மரியாதை காட்டியும் வருகிறது. நம்மை ஆதரித்து வந்த வாக்காளர்கள், நாம் இல்லாத நிலையில், தமது ஆதரவை சுதந்திர கட்சிக்குத் தருவார்கள்.
கம்யூனிஸ்டு கட்சி சீனப் பிரச்சினை காரணமாக, அடுத்த தேர்தலில், மக்கள் ஆதரவைப் பெற இயலாத நிலையைத் தேடிக் கொண்டுவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியும் இதர கட்சிகளும், தி. மு. கழகத்தையும் அதன் தலைவர்களையும், தரக்குறைவாகப் பேசி, நமது ஆதரவாளர்களின் கசப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாகிவிட்டன. எனவே, அடுத்த தேர்தலில் நாம் இல்லை என்றால், வாய்ப்பு சுதந்திர கட்சிக்கு என்று ஏற்படுகிறது. இது எந்த விதத்திலும், பாட்டாளி, நடுத்தர வகுப்பினருக்கு நலன் தருவதாகாது. இதுவும் ஒரு அகில இந்திய கட்சி ஆதலால், தென்னாட்டு உரிமைக்கு இதனாலும் ஒரு பயனும் ஏற்படாது. ராஜகோபாலாச்சாரியாருக்குப் பிறகு, சுதந்திரக் கட்சியின் தலைமையும் வடநாட்டுக்குத்தான் போய்ச் சேரும். எனவே அந்தக் கட்சியின் வளர்ச்சி, நமது மக்களுக்கு எந்தவிதமான பலனையும் தந்துவிடாது.
தி. மு. கழகம் மறைய நேரிட்டால், நம்மையும் அறியாமல், என்னென்ன அரசியல் விபத்துகள் ஏற்படக் கூடும் என்பதைச் சுட்டிக்காட்ட, இதனைக் கூறுகிறேன்.
தடைச்சட்டத்தை மீறிவிடுவதால், தி. மு. கழகம் எனும் அமைப்பு அழிக்கப்பட்டுவிடுகிறது என்பதால், ஏற்படக்கூடிய நிலை இது.
இதற்காக, தடைச்சட்டத்தை மீறாமல், அதற்கு உட்பட்ட முறையில் கொள்கையைக் குறைத்துக் கொண்டால், என்ன நேரிடக் கூடும் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
கொள்கை போன பிறகு, மற்ற எதைப்பற்றி என்ன கவலை என்பது, கொள்கைப்பற்று காரணமாக ஏற்படும், தூய்மையான எண்ணம்.
அந்த எண்ணத்திலே துளியும் தவறில்லை. ஆனால், தவறு எதிலே இருக்கிறது என்றால், தடையை மீறி விடுவதால் மட்டும் கொள்கை காப்பாற்றப்பட்டுவிடும், வளர்ந்து விடும் என்று எண்ணிக் கொள்வதிலேதான் இருக்கிறது.
தடையை மீறுவதால், கொள்கை வளர வழி கிடைக்கப் போவதில்லை, மீறுகிறவர்களின் பேரும் புகழும் நிச்சயம் வளரும் - மீறுகின்றவர்களின் இதயத்தில் ஒரு பெருமிதம் எழும் - வரலாற்றில் பொறிக்கப்படத்தக்க வீரச்செயலில் ஈடுபட்டோம் என்ற திருப்தி ஏற்படும்.
கொள்கை வளராது; வழி கிடைக்காது என்று ஏன் கூறுகிறேன்?
கொள்கை வளர்ச்சி என்பது, தொடர்ந்து நடத்தப்படும் பிரசாரத்தினால் மட்டுமே ஏற்படும்.
அந்தப் பிரசாரமும் ஒரு அமைப்பின் மூலம் செய்யப்பட வேண்டும்.
அந்த அமைப்பும், வளர்ந்தபடி இருக்க வேண்டும்.
அந்த அமைப்புக்கு மக்களின் ஆதரவு பெருகியபடி இருக்க வேண்டும்.
மக்களின் ஆதரவு பெருகியபடி இருக்கிறதா என்ற கணக்குப் பார்க்க தேர்தல் ஒரு வகையான கருவி.
எனவே கொள்கை பிரசாரம் – அமைப்பு – மக்கள் ஆதரவு வளர்ச்சி எனபவைகளைப் பொறுத்தே வெற்றிக்கான வளர்ச்சியும் வலிவும் பெற முடியும்.
தடைச்சட்டத்தின்படி, ஏற்படும் நிலைமையில், கொள்கையை, தடைமீறி பேசுவது என்பது, வீரச்செயல், தியாகத்துக்கான வாய்ப்பு என்று ஆகுமே தவிர, கொள்கை வளர்ச்சி ஆகி விடாது.
எனவே, தடை மீறுவதன் மூலம் கொள்கை தானாக வளரும் என்று எண்ணுவது தவறு.
ஆனால் கொள்கையைக் குறைத்துக் கொண்டால், கழகம் மதிப்பு இழந்து, மங்கி, பிறருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, கேலிப் பொருளாகி குன்றிப் போய்விடாதா, என்ற கவலையும் கலக்கமும், கழகத்திடம் நிரம்பப் பற்று கொண்டவர்களுக்கு ஏற்படத்தான் செய்யும்.
ஒருவிதமான சரிவும் ஏற்படாது என்று கூறவும் நான் தயாராக இல்லை.
சரிவு ஏற்பட்டால் என்ன என்று வாதிடவும் போவதில்லை.
சரிவு ஏற்படத்தான் செய்யும் – எதிரிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கழகத்தைத் தாக்கத்தான் செய்வர். அத்தாக்குதலை அலட்சியப்படுத்தவும் கூடாது.
ஆனால், கழகத்தைத் தாக்கிப் பேசிவிட்டு, கொள்கையை விட்டுவிட்டார்கள் என்று குற்றம் கூறிவிட்டு, அவர்களில் எவரும், தீவிரமாகவோ, தீரமாகவோ, அந்தக் கொள்கையை மேற்கொண்டுவிடப் போவதில்லை.
எனவே அவர்களின் தூற்றல், அவர்களுக்கும் பலனைத் தராது, கொள்கையைக் கழகம் விட்டுவிட்டதே என்ற கவலை கொண்டவர்களுக்கும் பலன் கிடைக்காது.
அந்தத் தூற்றல், கழகத்தை எப்போதும், தூற்றிக் கொண்டு வருகிற முறையிலே ஒரு பகுதி என்ற நிலையை த்தான் அடையும்.
ஆனால் அதைக்கூறி எனக்கு நானே சமாதானம் தேடிக்கொள்ளப் போவதுமில்லை, உங்களுக்கும் அதனைச் சமாதானமாகக் கூறவில்லை.
தூற்றக்கூடியவர்களின் தரம் அப்படிப்பட்டது என்பதைக் காட்ட மட்டுமே அதைச் சொன்னேன்.
எனக்கு உள்ள கவலை, தூற்றுபவர்களைப் பற்றி அல்ல - அவர்களின் துரிதத் தன்மையையும் தீவிரத் தன்மையையும் நான் மிக நன்றாக அறிவேன்.
பாகிஸ்தான் தர வேண்டும் என்றால், சுயராஜ்யமே வேண்டாம் என்ற உறுதி கடைசியில் என்ன ஆயிற்று என்பது நமக்குத் தெரியும்.
என் பிணத்தின் மீது நின்று கொண்டுதான் பாகிஸ்தான் பிரிக்கப்பட முடியும் என்று பேசியவர்களையும் நான் அறிவேன்.
என்னென்ன நிலையில் எந்தெந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், கொள்கைகளைக் குறைத்துக் கொண்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.
பெரியாரின் பொது உடைமைப் பிரசாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தைக் கொளுத்த தீவட்டியைத் தயாராக பெட்ரோல், டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும், எனக்கும் தெரியும் - உங்களுக்கும் தெரியும்.
எனவேதான், தி. மு. கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன். எனக்கு உள்ள கவலை, அவர்கள் என்ன ஏசுவார்கள் என்பது அல்ல, என் மனம் என்ன பாடுபடும், என்பதுதான். கொள்கையிலே எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு, வெறுப்பு ஏற்பட்டு, மாற்றிக் கொள்வதானால், மனம் பாடுபடாது.
பார்ப்பனீயம் என்று நாம் பேசினோம் - நாம் பார்ப்பனருக்கு அடிமையாகி விட்டோம் என்று பெரியார், பலத்த பிரசாரம் செய்தார் – மிகக் கேவலமான முறையிலே பேசினார் – நாம் பயந்துவிடவுமில்லை – நமது வளர்ச்சி பாதிக்கப்படவுமில்லை. நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிடவும் இல்லை - பார்ப்பனருக்குக் கடைசியில் ஓட்டு சேகரிக்க ஊரூராக சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல. பிள்ளையாரை உடைக்கப்போவதில்லை என்று கூறினோம் - உடனே பெரியார், பார்! பார்! இவர்கள் சுயமாரியாதையை விட்டுவிட்டார்கள், வைதீகர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஏசினார் - நாம் அஞ்சிவிடவுமில்லை, நமது வளர்ச்சி குன்றிவிடவுமில்லை.
சட்டசபைக்குச் சென்றாலே, காங்கிரசின் காலடியில் வீழ்வார்கள் என்றார் பெரியார், நாம் அப்படி விழுந்துவிடவுமில்லை, சட்டசபையை விட்டு விடவுமில்லை.
தூற்றி நம்மை தொலைத்து விட்டிருக்க முடியுமானால், பெரியாரின் பிரசாரத்தின் காரணமாக, நாம் புதைக்கப்பட்ட இடத்திலே புல் முளைத்து விட்டிருக்க வேண்டும்.
தூற்றலுக்காக நான் துளியும் அஞ்சவில்லை - அஞ்சப்போவதுமில்லை.
நாம் அழுத்தமாக நம்பிக்கொண்டிருக்கும் நாட்டுப் பிரிவினைக் கொள்கையை விட்டுவிட, நமது மனம் எப்படி இடம் கொடுக்கும். மாற்றிக் கொண்டால், மனம் எப்படி நிம்மதி பெற முடியும் என்பதுதான்.
எனவேதான் நாம் நம்பும் கொள்கையை விட்டுவிடவும் கூடாது, அதேபோது, நாம் கட்டி வளர்த்துள்ள கழகம் என்ற அமைப்பையும் அழிந்து போகவிடக் கூடாது என்று எண்ணுகிறேன்.
இரண்டிலும் நான் தொடர்பு கொண்டவன் என்பது மட்டுமல்ல, இரண்டும் இந்த அளவு வளர்ச்சி பெறப் பாடுபட்டவன் என்ற நெகிழ்ச்சியுடன் பேசுகிறேன்.
கொள்கையை விட்டுவிடுவோம் என்று சிலர் கூறும் போது, என் இதயம் வெடித்துவிடுவது போலாகிறது; அது போலவே விளைவுகளை ஆராயாமல், அல்லது எது நேரிட்டாலும் சரி என்ற போக்குடன் தடையை மீறுவோம் என்று சிலர் பேசும்போது, எனக்கு வேதனை பீறிட்டுக் கொண்டு வருகிறது.
கொள்கை தூய்மையானது – ஓர்நாள் வெற்றி பெற்றே தீரும் என்ற தன்மை வாய்ந்தது. கழக அமைப்பு இதுவரை எங்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் எவரும் சுட்டிக்காட்டாத உன்னதத்தன்மை வாய்ந்தது. எப்படி மனம் வந்து அது உடைபட்டுப் போகட்டும் என்று பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. கண்ணை இமை காப்பது போல இத்தனை ஆண்டுகளாக, காங்கிரஸ் எதேச்சதிகாரத்தின் தாக்குதல், பெரியாரின் பயங்கர தாக்குதல், நமக்குள்ளாகவே மூட்டிவிடப்பட்ட சதிச்செயல், இவைகளிலிருந்து கழகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.
என்னைப் பொறுத்த வரையில், கழகத்தை வளர்த்து வருவதிலே நான் கண்ட, கொண்ட மகிழ்ச்சி, பெருமையைவிட, வேறு எதிலும் கண்டதுமில்லை, கொண்டதுமில்லை.
கழகக் கூட்டங்களின் அளவு பெரிதாகிறது, எண்ணிக்கை வளருகிறது என்பதைக் காணும்போது ஒரு களிப்பு.
கழகப் பேச்சாளர்களின் தரம் உயருகிறது. மக்கள் அவர்களிடம் காட்டும் ஆதரவு வளருகிறது என்பதைப் பார்க்கும்போது ஒரு பூரிப்பு.
கழக ஏடுகள் எழில் பெறுகின்றன, என்பதைப் பார்க்க ஒரு களிப்பு.
கழகத் தோழர்கள் பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரையில் இடம் பெற்றது காணும்போது ஒரு பெருமிதம்.
கழகத்தவர் மேயரானார், நாசருடன் கை குலுக்கினார், கழகத்தவர் மேயரானார், மாஸ்கோவில் வரவேற்பு பெற்றார், என்று படிக்கும் போது ஒரு பரவசம்.
இவைகளெல்லாம் இன்பக் கனவுகளா இன்றைய நிகழ்ச்சிகளா என்று மலைக்கும்படியான ஓர் நிலை ஏற்படுகிறது.
இந்தக் கழகத்தை, அது எப்படியோ ஆகட்டும் என்று கூற எப்படி மனம் இடம் தருகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
தடைச்சட்டத்தை மீறினால், கழகம் என்ற ஒரு அமைப்பு உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுமே அதற்கு என்ன செய்வது என்று கேட்டால், போகட்டுமே என்று பதில் சிலர் கூறும்போது, நான் உள்ளபடி, சொல்லொனாத துயரத்துக்கு ஆளாகிறேன்.
ஆனால் அதேவிதமான வேதனை, மன உளைச்சல், கொள்கையை விட்டுவிடுவது என்பதிலே ஏற்படவில்லையா என்றும் அதைவிட அதிகம் எற்படுகிறது.
சிலருக்கு மட்டும் ஏனோ, அதுபோல இரு விஷயங்களிலும், எனக்கு ஏற்படுவது போன்ற மனக்குமுறல், வேதனை ஏற்படவில்லை. அத்தகைய மனப்போக்கைக் காணும்போதுதான், நான் மிகுந்த வேதனைக்கு ஆளாகிறேன்.
கொள்கையைக் காத்திட கழகம் அழிந்துபடட்டும் என்று கூறுவதும் சரி, கழகம் காத்திட கொள்கை அழியட்டும் என்று சொல்லுவதும் வேதனை தரத்தக்கன.
மிகப் பெரிய சிக்கலுக்கு, இதுவரை எங்கும் எந்தக் கட்சியும் பார்த்திராத ஒரு சிக்கலுக்கு, மிக அவசரப்பட்டு, எளிதான ஒரு பரிகாரம் தேட முற்படுவதன் விளைவு இது. பரிகாரம் தேடுவதிலே அவசரம் காட்டப்படுவது மட்டுமல்ல, நமக்குத் தோன்றுவது, நமக்குத் தெரிவது மட்டுமே பரிகாரம் காணப் போதுமானது என்ற எண்ணமும் மேலோங்கிக் காணப்படுகிறது.
நிலைமை அப்படிப்பட்ட - அவசர முடிவுக்கு நம்மைத் துரத்துவதும் கூடாது. முடிவு எடுக்க நமக்குத் தோன்றிவிட்ட எண்ணம் மட்டுமே போதும் என்றும் இருந்துவிடக் கூடாது.
எனக்கு ஏற்பட்டுள்ள கவலை, இந்தச் சிக்கலைப் போக்க, நமது தோழர்கள் செலவிட்டுள்ள சிந்தனை போதுமானதாக இல்லை என்பதுதான்.