எது வியாபாரம், எவர் வியாபாரி/005-017

விக்கிமூலம் இலிருந்து



திருக்குரானில் வணிகம்

பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் இவ்வுலகில் 62 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள். அதில் முன்னே 40 ஆண்டுகள் எல்லோரைப் போலவும் வணிகத் தொழில் நடத்தியும், பின்னைய 22 ஆண்டுகள் நபித்துவம் பெற்று, உலக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். என்றாலும் முன்னைய 40 ஆண்டுகளில் கூட நம்மில் பலரிடம் காண முடியாத அருங்குணங்களையும் பெருஞ்செயல்களையும் உலக மக்கள் அவரிடம் கண்டு களித்திருக்கிறார்கள். அவர் செய்து வந்த வணிகம் ‘ஒட்டக வணிகம்.’

வியாபாரி ஒருவர் அவரிடம் வந்து, ஒட்டகத்தின் விலைகளைக் கேட்டார். முதலில் ஒட்டகத்தைப் பார்த்து வாருங்கள்; விலை பேசலாம் என்றார் பெருமானார். வியாபாரியும் அப்படியே ஒட்டகத்தைப் போய்ப் பார்த்து வந்து பெருமானார் அவர்களிடம் ஒட்டகத்தின் விலையைக் கேட்டார். எத்தனை ஒட்டகங்கள் வேண்டுமென்று பெருமானார் கேட்க, ‘மந்தையிலுள்ள 40 ஒட்டகங்களையுமே எடுத்துக் கொள்ளுகிறேன். அத்தனைக்கும் விலையைக் கூறுங்கள்’ என்றார் வந்தவர்.

பெருமானார் புன்சிரிப்போடு சிரித்து, “40 ஒட்டகங்களில் ஒரு ஒட்டகம் நொண்டி ஆயிற்றே! அதனால் நடக்கமுடியாதே! அதுவுமா உங்களுக்குத் தேவை?” என்று திருப்பிக் கேட்டார். வந்தவர் அதிர்ச்சியடைந்து தான் அதை கவனிக்காததற்காக வெட்கப்பட்டுப் பெருமானார் அவர்களுடைய நாணயத்தைப் பார்த்துக் கதிகலங்கிச் சிறிது நேரம் பேச முடியாமலிருந்து பிறகு பெருமானாரை நோக்கி அந்த ஒட்டகத்தையும் சேர்த்தே எடுத்துக் கொள்கிறேன். அது மற்ற ஒட்டகங்களுடன் சேர்ந்தே இருக்கட்டும் அதற்கும் சேர்த்தே விலை கூறுங்கள்” என்றார்.

அதற்குப்பெருமானார், 'அந்தநொண்டி ஒட்டகத்தைத் தவிர மற்ற 39 ஒட்டகங்களின் விலை இவ்வளவுதான். இதைக் கொடுத்தால் போதும். நீங்கள் விரும்பினால் அந்த நொண்டி ஒட்டகத்தை இலவசமாகக் கூட்டிப் போகலாம், அல்லது இங்கேயே விட்டுப் போகலாம். நான் அதற்குத் தீனி போட்டுட் பாதுகாப்பேன். நீங்கள் அதை அழைத்துப் போனால் எனக்கு செலவு இராது. ஆகவே அதற்கு விலை தேவையில்லை' என்று கூறி முடித்தார்கள். அப்படியே நடந்து முடிந்தது.

அரிசியில் கல்லும், உளுந்தில் களிமண்ணும் நல்லெண்ணெயில் கடலை எண்ணெயும், கடலை எண்ணெயில் இலுப்பை எண்ணெயும், மண்ணெண்ணெயில் தண்ணீரும் கலந்து விற்கின்ற இந்தக் காலத்து வணிகத்தையும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பெருமானார் செய்த ஒட்டகவணிகத்தையும் ஒப்பு நோக்குவகள்.

இந்த வணிக முறையைத் திருக்குரானில் காணும் போது நமது உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நல்ல வணிக முறை எப்படியிருக்கும் என்பதை திருக்குரான் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. இதனை நம் வணிகர் ஒவ்வொருவரும் பின்பற்றி நடப்பதே நாட்டுக்கும் நமக்கும் பெருமையளிப்பதாக இருக்கும்.