உள்ளடக்கத்துக்குச் செல்

எது வியாபாரம், எவர் வியாபாரி/007-017

விக்கிமூலம் இலிருந்து



கோலாலம்பூரில் வணிகம்

என் தந்தை இறந்தபோது எனக்கு வயது 30. குடியிருக்க அரை வீடும் சோற்றுக்கு ஒரு ஏக்கர் நிலமும் தான் இருந்தன. வேறு சொத்து ரொக்கம் எதுவும் இல்லை. வியாபாரத்தில் எங்களுக்கு வரவேண்டிய நிலுவை ஏழாயிரமும் கொடுக்க வேண்டிய கடன் ஏழாயிரமும் இருந்தன. வரவேண்டிய நிலுவை ஏழாயிரத்தில் ரூ. நான்காயிரம் பிநாங்கு, சிங்கப்பூரிலும், கொடுக்க வேண்டிய கடனில் திருச்சிராப்பள்ளியில் ஒரு சேட்டிடம் மூன்றாயிரமும் ஆக இருந்தது எப்படிக் கடன் கட்டுவது? எப்படிச் சம்பாதிப்பது? என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் கதி கலங்கிப் போனேன். என்றாலும் கோலாலம்பூரில் உள்ள ஒரு நகரத்தார் கடைக்கு மூன்றாவது ஆளாக மூன்று வருடத்திற்கும் சேர்த்து ரூ. 3000/- சம்பளம் பேசி, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்வது என்றும் மூன்றாவது வருடம் அந்த சேட்டுக்குப் பணம் கொடுத்து விடுவது என்றும் ஒரு முடிவுக்கு வந்து, புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் சேட் கடைக்குச் சென்று என் முடிவைத் தெரிவித்தேன். அந்த சேட்டும் வருத்தப்பட்டு, “உள்ளுரிலேயே வேறு எங்கும் வேலை பார்க்க முடியாதா?” என்று கேட்டார். “பார்க்கலாம்.” சுருட்டு, புகையிலைக் கடைகளில் ரூ 15 மட்டும்தான் மாதச்சம்பளம், பெரிய கணக்கப்பிள்ளைக்கு. நகை ஜவுளி கடைகளில் ரூ. 25/- மட்டும் சம்பளம் கொடுக்கிறார்கள். எப்படி வேலை பார்ப்பது? எப்படிக் குடும்பம் நடத்துவது? எப்படிக் கடன் கட்டுவது? எவ்வளவு காலம் கடன் கட்டுவது? என்று சேட்டிடம் கூறி, “நான் வெளி நாட்டுக்கு ஒடிப் போய்விட்டேன் என்று கவலைப் படாதீர்கள். என் சொந்த வீடு ரூ. 5000/- பெறும். இந்தப் பத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் என் வியாபாரிகளிடம் போய்க் கடனை வசூலிக்கப் பார்க்கிறேன். வசூலானால் அங்கிருந்தே உங்களுக்குத் தொகையை அனுப்பி வைப்பேன். இல்லையானால் மூன்றாம் வருடத்தில் ரூ. 3000/- கொண்டு வந்து கொடுத்து இப்பத்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வேன்” எனக் கூறி, வீட்டுப் பத்திரத்தை அவரிடம் கொடுத்தேன். சிறிது நேரம் அங்கிருந்த மேலாள், நடு ஆள், கடை ஆள் மூவரும் கலந்து பேசினார்கள். கடைசியாக அவர்கள் சிரித்துக் கொண்டே பத்திரத்தை வாங்க மறுத்து விட்டு, “வெற்றியோடு போய் வாருங்கள். தொகையும் வசூலாகிவிடும் . திரும்ப இந்தியாவிற்கே வந்து தொழில் செய்யுங்கள். நாங்கள் உதவி செய்கிறோம். உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அவர்களுக்குநன்றி கூறிவிட்டு ‘S.S.ரஜூலா’ என்ற கப்பலில் கோலாலம்பூருக்கு 1930-ல் பயணமானேன். கோலாலம்பூரில் இறங்கிய உடனேயே பாக்கிக்காரர் ஒருவர் ரூ. 725/- பணத்தைக் கொடுத்து மேலும் இரண்டு மூட்டைப் புகையிலை அனுப்பவும் ஆர்டர் கொடுத்தார். அன்றைக்கே அப்பணத்தை செட்டிப்பிள்ளைகள் உண்டியல் மூலம் சேட்டுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் மற்றொரு வியாபாரி ரூ. 470/- பாக்கியைக் கொடுத்து அவரும் 2 மூட்டைப் புகையிலை அனுப்ப ஆர்டர் கொடுத்தார். மூன்றாம் நாள் கடைவீதியைப் பார்க்கப் போனேன்.

அங்கு ஒரு சீனன் கடையில் ஒரு சிவப்பு வெல்லெட்டுத் துணியில் பொன் சரிகையால் இரண்டு படுதாக்களில் எழுதி இரண்டு தூண்களில் செங்குத்தாகத் தொங்க விடப் பட்டிருந்தன. அது மலாய் மொழியில் இருந்தது. என்னுடன் வந்தவரை அதைப் படிக்கச் சொன்னேன். ஒரு தூணில் தொங்க விடப்பட்டிருந்தது, ‘உயர்ந்த சரக்கு’ என்றிருந்தது. அடுத்த தூணில் எழுதப் பெற்-றிருப்பது ‘குறைந்த விலை’ என்றிருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் அதைப் படித்தவர் “அதிக விலை” என்று படித்தார். இப்படி ஒரு வியாபாரமா ? என்று என் தலை சுற்ற ஆரம்பித்தது. மற்ற வேலைகளை யெல்லாம் விட்டுவிட்டு அந்தக் கடையில் போய்க் கடையிலுள்ள சரக்குகளைப் பார்க்கத் தொடங்கினேன். அரிசி-பருப்பிலிருந்து, கடுகு, மிளகு, சீரகம் வரை, கருவாடு, மீன், காய் கறிகள், விறகு, வேட்டி, கூடை, முறம் தட்டு முட்டுச் சாமான்கள் உட்பட 160 சாமான்கள் அந்தக் கடையில் விற்பனையாகிக் கொண்டிருந்தன. விறகு என்றால் 14 அடி நீளம்தான் இருக்கும்; காய்ந்தும் இருக்கும். அரிசி என்றால் சன்னமாக இருக்கும். கல் இராது. பருப்பு என்றால் தூசி இராது. எல்லாம் உயர்ந்த சரக்குகள். அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அந்தக் கடையிலுள்ள சாமான்கள் 160க்கும் விற்பனையாளர்கள் 160 பேர். கடையின் வியாபார நேரம் காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை தான். விற்பனையாளர்கள் அனைவருமே பகுதி நேர ஊழியர்கள். அரசாங்கத்திலும் ரயில் நிலையங்களிலும் பணி புரிகின்றவர்கள். ஒவ்வொரு பொருளுக்கும் முன்னால் ‘கியூ’ வரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கு கின்றார்கள். 60 பேர் நிற்கிறார்கள். 30 பேர்களுக்கு மட்டுமே சரக்குகள் கிடைக்கின்றன.

முட்டை , இறைச்சி வரிசையில் 80 பேர் நிற்கிறார்கள். 55, 60 பேர்களுக்கு மட்டுமே பொருள்கள் கிடைக்கின்றன. மீதம் 20 பேர் ஏமாற்றமுடன் திரும்பிப் போய் விடுகின்றனர். முடிவாகக் கூற வேண்டுமானால் விற்பனைக்காக வந்த அந்த 160 சாமான்களும் அன்றன்றே விற்பனையாகி விடுகின்றன. ஒரு சரக்கும் மிஞ்சுவதில்லை.

கோலாலம்பூரில் நல்ல நெய் இந்தக் கடையில்தான் கிடைக்கும் என அறிந்து நெய் வாங்குவதற்காக காலை 7.00 மணிக்குப் போய் ‘கியூ' வரிசையில் நின்றேன். நான் 21வது ஆள். சரியாக 7.15 மணிக்கு நெய் விற்பவர் ஒருபடி நெய்யைக் கொண்டு வந்து ஆளுக்கு 1. வீசமபடி வீதம் 16 பேருக்குக் கொடுத்து விட்டு நெய் விற்குமிடத்தை மூடி விட்டுப் போய் விட்டார். எனக்கு முன்னே நின்றிருந்த ஐந்து பேர்களும் எனக்குப் பின்னே இருந்த 7 பேர்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து திரும்பிவிட்டோம். அந்த கோலாலம்பூர், சீனரின் வணிக முறை என்னை வியப்படையச் செய்தது. உயர்ந்த சரக்குகளை அதிக விலை கொடுத்தாலும் வாங்க முடியவில்லையே என மனம் வருந்தினேன். நாமும் இப்படி ஏன் தொழில் செய்யக் கூடாது? எனச் சிறிது நேரம் எண்ணினேன்.

மூன்றாம் நாள் சிங்கப்பூருக்குச் சென்றேன். அங்கும் இரண்டு கடைகளில் ரூபாய் 690 ம் ரூபாய் 430 ம் ஆக 1120 வசூலாயிற்று. அதோடு சில ஆர்டர்களும் கிடைத்தன. அத்தொகையை அங்கிருந்தே திருச்சி சேட்டுக்கு அனுப்பி மகிழ்ந்தேன்.