எது வியாபாரம், எவர் வியாபாரி/012-017

விக்கிமூலம் இலிருந்து


சிக்கனம்

ஒரு சிறந்த வியாபாரி கைக்கெள்ளவேண்டியது சிக்கனக் கொள்கை. சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு; சில வியாபாரிகள் சிக்கனத்தைக் கருமித்தனம் என்றே கொள்கிறார்கள். இது தவறு.

சுறுசுறுப்புக்கும் படபடப்புக்கும் உள்ள இடைவெளி, பொறுமைக்கும் அசமந்தத்துக்கும் உள்ள இடைவெளி, வீரத்திற்கும் போக்கிரித்தனத்துக்கும் உள்ள இடைவெளி, அன்பாய் இருப்பதற்கும் அடிமையாய் இருப்பதற்கும் உள்ள இடைவெளி சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் உண்டு.

ஒரு பெரியவர் நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் கட்டுவதற்காக ஒரு பணக்காரரிடம் சென்று பணம் கேட்கப் போயிருந்தார். அப்பணக்காரர் பத்து பருப்பு சிந்திய ஒரு வேலைக்காரனை பத்து குத்து குத்திக் கொண்டிருந்தார். பத்துச் சொட்டு எண்ணெய் சிந்திய மற்றொரு வேலைக்காரனைச் சவுக்கால் அடித்து, பத்துச் சொட்டு இரத்தத்தை எடுத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெரியவர் “இந்தக் கருமியிடம் எப்படிப் பணம் கேட்பது என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் நான் கேட்ட தொகைக்கு மேலேயே அவராக விரும்பி அதிக தொகை கொடுத்து அனுப்பினார். எனக்கு இதன் விவரம் புரியவில்லையே” என்று பெருமானரிடம் கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் அவன் சிக்கனமாக வாழ்ந்து சிக்கனக் கொள்கையை கடைப்பிடித்து எந்தப் பொருளையும் வீணாக்காமல் சேர்த்து வைத்ததால்தான் அப்பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்பட்டது. அவன் சிக்கணக்காரன்; நீ அவனைக் கருமி என்று கருதியது உன் தவறு” என்று கூறினார்.

சிக்கனக் கொள்கைக்கு ஒரு இலக்கணமும்கூட உண்டு. அது தேவைக்கு மேல் செலவு செய்வது டம்பம். அது தேவையில்லாதது. தேவையின் அளவு செய்வதுதான் சிக்கனம். இது விரும்பத்தக்கது. தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம். இது வெறுக்கத்தக்கது.

ஐந்து மைல் தூரம் செல்வதற்கு வாடகைக் காரை கூப்பிடக்கூடாது. முப்பது நாற்பது செலவாகும். அது டம்பம். அதிகச் செலவு, ரு. 1-25 செலவில் பேருந்தில் ஏறி இறங்கி வேலையை முடித்து வரலாம். 1¼ ரூபாய் தான் செலவாகும். இது சிக்கனம். இதைத்தான் கொடுப்பானேன் என்று அரையனாவிற்குப் பட்டாணிக் கடலை வாங்கிக் கொண்டு நடந்து செல்கிறானே! அதுதான் கருமித்தனம். இவ்வாறே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அளவுகோல் வைத்துச் சிக்கனக் கொள்கையைக் கையாள வேண்டும். இதை மற்றவர்கள் பின்பற்றா விட்டாலும் வியாபாரிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும.

ஒரு வியாபாரி முன்னே இருக்கிற தொலைபேசி அவன் வருமானத்தைப் பாழாக்கும் கருவியாக இருக்கக்கூடாது. தேவையானபொழுதுமட்டும் அதைக் கையாண்டு தொலைபேசிச் செலவை குறைத்தாக வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கின்றோமோ அவ்வளவுக்கு நல்லது. நாளைக்குத் தொலைபேசியால் பேசுகிற செய்தியை இன்றைக்கே அஞ்சலில் தெரிவித்தால் ஒரு ரூபாய் செலவோடு போய்விடும். கடிதம் எழுத வேண்டிய காலத்தில் எழுதாமல் அதைக் கைவிட்டுவிட்டு, காலம் தவறித் தொலைபேசியில் பேசிப் பொருளை வீணாக்குவது நல்லதல்ல. அவசரமானதையும் அவசியமானதையும்தான் பேசவேண்டும். பேசுகின்ற பேச்சு சுருக்கமாகவும் தெளிவாகவும் இருப்பது தொலைபேசிச் செலவைக் குறைக்க, வழிவகுக்கும். தேவையில்லாத பேச்சுக்களை எல்லாம் அடிக்கடித் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை விலக்குவது நல்லது.

இது மட்டுமல்ல. வாழ்க்கையின் எல்லாத்துறையிலும் சிக்கனத்தைக் கையாள்வது வணிகத்துக்கும் வணிகர்க்கும் நல்லது. “எண்ணி, செட்டுப்பண்ணு; எண்ணாமல் வெள்ளாமை” என்பதும், “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பதும் நம் நாட்டுப் பழமொழி என்பதை வியாபாரிகள் உணர்ந்தாக வேண்டும்.