எது வியாபாரம், எவர் வியாபாரி/013-017
ஒருநாள் என் தந்தையார் தாய் மாமனிடம் சொன்ன கதை இது:
“எனக்குத் திருமணம் ஆனதும் மாமியார் வீட்டுக்கு மணப்பெண்ணையும் என்னையும் அழைத்துக் சென்றார்கள். அங்கு சாப்பாட்டில் மூன்று பணம் வெற்றிலை பாக்குடன் வைத்தார்கள். அதை எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு, தாய் வீட்டிற்கு (மறு வீடு) அழைத்து வந்தார்கள். என்னையும் பெண்ணையும் வாசலில் நிறுத்தி ஆரத்தி எடுத்த என் தாய், “மாமியார் வீட்டில் வைத்த பணம் எங்கே” எனக் கேட்டு, கையை நீட்டினார்கள். நான் சட்டைப் பையிலிருந்து அப்பணத்தை எடுத்துத் தாயாரிடம் கொடுத்தேன். அதில் கால் பணம் செலவு செய்து விட்டதால், மீதி இரண்டே முக்கால் பணம்தான் இருந்தது. அதை எண்ணிப் பார்த்து அத்தனைபேர் முன்னே, மாப்பிள்ளையாக இருந்த என் தலைமீது ஆரத்தி எடுத்த அந்தத் தாம்பாளத்தாலேயே அடித்தாள். எனக்கு வயது 15. என் தந்தையார் மற்றொருவரிடம் கீழ்க்கண்டவாறு கூறிக் கொண்டிருந்தார்;
“ஏண்டா கால் பணம் வெட்டிச் செலவு செய்தாய்” என்று அதட்டிவிட்டு, “இந்தக் காலத்துப் பிள்ளைகளெல்லாம் தாய் தகப்பனைக் கேளாமலேயே செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். யார் அவர்களைக் கேட்பது?” என மனம் வருந்திக் கூறி கொண்டுடிருந்தார்கள்.
என் தந்தையார் எனக்குக் கூறிய இந்தக் கதையை மற்றவர்கள் கருத்தில் கொண்டார்களோ என்னவோ, என் கருத்தில் இது ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு எனது 21வது வயதில் என் திருமணம். என் திருமணக் காலத்தில், மாமியார் வீடு செல்லும் போதும், திரும்ப வரும்போதும் பெரியவர்கள் வெற்றிலைபாக்கில் கால் ரூபாயை வைத்து “கும்பிடு பணம்” என சொல்லிக் கொடுப்பது உண்டு அதைச் செலவு செய்யாமல் சேமிக்க எண்ணினேன். பெண்ணும் செலவு செய்துவிடக் கூடாது எனக் கருதினேன். புதுப்பெண்ணிடம் கும்பிடு பணத்தைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. ஆகவே எனக்கு வந்த பணத்தைப் புதுப்பெண்ணிடம் கொடுத்து, “இது பெரியவர்கள் வாழ்த்திக் கொடுத்த பணம்; உன் பணத்தோடு இப்பணத்தையும் சேர்த்துச் சேமித்து வை” என்று கூறிக் கொடுத்து வந்தேன். கும்பிடு பணம். சாப்பாட்டுப் பணம் எல்லாம் தாய்வீட்டிலும், மாமியார் வீட்டிலும் தடவை ஒன்றுக்கு ஆறு ரூபாய் ஆறரை ரூபாய், வீதம் மூன்று அழைப்புகளுக்கும் ரூபாய் 21¼ சேர்ந்தது. அதை மணப்பெண்ணிடம் வாங்கிக் கொண்டேன்.
கோலாலம்பூர் வியாபாரி ஒருவர் ரூ. இருபத்தைந்து அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆக இந்த ரூபாய் நாற்பத்து ஆறேகால் ரூபாயை ஒரு மஞ்சள் துணியில் கட்டி மனைவியையும் அழைத்துக் கொண்டு என் தந்தையிடம் (ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்ன கதையை நினைத்து) கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து விழுந்து கும்பிட்டேன். என் தந்தையார், ‘இது என்ன பண முடிப்பு’ என்று கேட்டார். “திருமணக் காலத்தில் நம் வீட்டிலும், பெண் வீட்டிலும் பெரியவர்கள் கொடுத்த கும்பிடு பணம் ரூபாய் நாற்புத்து ஆறேகால் சேர்ந்தது. அதைக் தங்களிடம் கொடுக்க வந்தேன்” என்றேன்.
என் தந்தையார் சிரித்து, மகிழ்ந்து, “நீ கெட்டிக்காரன்” என்று சொல்லிக் கொண்டே, தன் பையிலிருந்து மேலும் மூன்றே முக்கால்ருபாய் எடுத்துப்போட்டு ரூபாய் 50 ஆகப் பெருக்கி, “இது பெரியவர்கள் வாழ்த்திக் கொடுத்த பணம் அப்பா. அதைச் செலவு செய்து விடாமல் மனைவியின் பெயரில் ஒரு வங்கியில் போட்டு வை. இது வளரும்” என்று கூறினார்கள். அவ்வாறே செய்தேன்.
அக்காலத்தில் ஆயிரம் சுருட்டுகளுக்கு தாள் சுற்றினால் காலணா கிடைக்கும. 6000 முதல் 7000 வரை தாள் சுற்றுவேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை அணா அல்லது ஒன்றே முக்கால் அணா கிடைக்கும். பத்து வயது முதல் மாதம் மூன்று ரூபாய் வீதம் வருடம் 36 வீதம் சேமித்தேன்
அதையும் வங்கியில் போட்டேன். பழைய மிதிவண்டி ஒன்றை ரூ 35/-க்கு விற்றேன். அதையும் வங்கியில் போட்டேன். அவற்றை ஒரு ஒட்டுவில்லை வீட்டின் மீது, மாதம் ஒரு ருபாய் வட்டிக்குக் கொடுத்து வைத்திருந்தேன். அது வட்டியோடு வளர்ந்தது.
நான் எனது பதினைந்தாவது வயதில் சிறிய கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்தபோது மாதம் ரூபாய் ஏழரை சம்பளம். அதில் மாதம் இரண்டரை தனியாக எடுத்துச் சேமித்து அதையும் வங்கியில் போட்டேன். எல்லாம் 500 ஆனது. கோவை பங்கஜா ஆலையில் இந்த ரூபாய் ஐநூறையும் கொடுத்து ஐந்து பங்குகள் வாங்கினேன். மறுபடியும் சிறுகச் சிறுகச் சில்லரையாக சேர்த்து இதே போன்று நூறு ரூபாய் போட்டு பங்கு 20 வாங்கினேன். ஆக மொத்தம் 25 பங்கிற்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு ஆயிற்று. இந்த பங்குகள் விலை ஏற ஆரம்பித்தது. நூறு ரூபாய் பங்கு, நூற்று நாற்பது, நூற்று ஐம்பது நூற்று அறுபது என்று நூற்று எழுபத்து ஐந்து வரை வந்தது. இப்பங்குகளைப் பலர் கேட்டார்கள் நான் கொடுக்கவில்லை.
சில காலம் சென்று நூற்று எண்பத்து ஐந்திற்குக் கேட்டார்கள். ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கான பங்குகளை ரூபாய் ஐயாயிரம் ஆனாதான் கொடுப்பேன் என மறுத்து விட்டேன். மூன்று மாதங்கள் சென்ற பிறகு விற்று விடலாம் என பங்கு விற்பனையாளர் எனக்கு எழுதியிருந்தார்.
"ரூபாய் ஐயாயிரத்திற்கு ஒரு காசு குறைந்தாலும் விற்க மாட்டேன்” எனக் கூறி மறுத்துவிட்டேன். மேலும் ஒருமாதம் கழித்து, கடையில் தபால்களைப் பிரித்துப் பார்க்கும் பொழுது, “உங்கள் பங்கு 25யும் ரூபாய் ஐயாயிரத்திற்கு விற்றாகி விட்டது. உங்கள் பங்கு பத்திரத்தை அனுப்பிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றொரு கடிதம் வந்திருந்தது. நானும் அவ்வாறே செய்தேன். பத்தாம் நாள் ருபாய் ஐயாயிரத்திற்கு வங்கி நேர்முகக் காசோலை ஒன்று வந்தது. அதை என் மனைவியிடம் கொடுத்தேன். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேஇல்லை.
பங்குகள் விற்று வந்த ருபாய் ஐயாயிரத்திற்கு திருச்சிக்கு அருகாமையில் உள்ள வேங்கூர் என்னும் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கினேன். வருடம் நூறு மூட்டை நெல் குத்தகையாக வந்தது. மூட்டை மூன்று ரூபாய் வீதம் நூறு மூட்டை நெல்லையும் ரூ 300/-க்கு விற்று சேமிப்பு நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின் பணம் ரூபாய் 3000/- ஆகச் சேர்ந்தது. நிலத்தின் மதிப்பும் உயர்ந்து விலையும் ஏறியது. பிறகு 5 ஏக்கர் நிலத்தையும் ரூபாய் 30,000/-க்கு விற்று அப்பணத்தை என் மனைவியிடம் கொடுத்தேன்.
மாதம் நூற்றுக்கு ஒன்று வட்டி கொடுத்தாலும் வட்டிக்கு வட்டி சேர்த்து ஆறு ஆண்டுகளில் அப்பணம் இரட்டிப்பாகச் சேரும். அதற்குப்பின் நாற்பது ஆண்டுகளில் ஏழு, ஏழு தடவைகளில் இரட்டிப்பாகி என்னால் கணக்குச் சொல்ல முடியாத அளவுக்கு நிதி உயர்ந்தது.
நான் சொல்லுவது இதுதான். என் பையன்கள் மூவருக்கும் என் பணத்தைச் செலவு செய்து திருமணம் செய்து வைத்தேன். ஆனால் என் பெண்கள் ஐவருக்கும் என் கணக்கிலிருந்து ஒரு காசும் செலவிடப் பெறவில்லை. 5 பெண்களுக்கு நகை, திருமணச் செலவு, சீர் செலவு அத்தனையும் என் மனைவியின் கணக்கிலிருந்து செலவு செய்து ஒவ்வொரு மகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் வீதம் பணமும் கொடுத்து விட்டு இன்னும் ரூபாய் ஐம்பதினாயிரம் ரொக்கம் வைத்திருக்கிறாள்.
எப்படிக் கும்பிடுபணம் ரூ. 46¼ இத்தனை லட்சமாக வளர்ந்தது? எப்படி நான் கடைப் பிடித்த சேமிப்புக் கலை?
இதைப் படிக்கும் அன்பர்கள் குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சிக்கனத்திலும் சேமிப்பு வழியிலும். இம்முறைகளைப் பின்பற்றினால் அது அவர்களின் வாழ்வு வளமாகும் என நம்புகிறேன்.