எனது கதைகளின் கதைகள்/என்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
என்னுரை


ஒரு படைப்பாளி, தன்னையும் சேர்த்தே படைப்பாக்குகிறார்.

மேட்டுக்குடியினரால் புறந்தள்ளப்பட்ட, நமது நாட்டுப்புறப் பாடல்களுக்கு புத்துயிர் வழங்குபவர்களில் ஒருவரான கவிஞர். குருவிக்கரம்பை சண்முகம், இந்த முன்னுரை எழுதுவது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சியில் ரத்தினச் சுருக்கமாக தெரிவித்த கருத்து, நான் எழுதும் இந்த உரைக்கு முதல் வரியானது. ஆனாலும் —

ஒரு படைப்பாளி, தன்னை எப்படி அந்தப் படைப்பில் சேர்த்துக் கொள்கிறார் என்பதே முக்கியம். இது அவரது படைப்பை மேன்படுத்தலாம் அல்லது வீணடிக்கலாம். இதனால்தானோ என்னவோ, எனது மானசீக இலக்கியக் குருவான லியோடால்ஸ்டாய், “அனுபவம் முக்கியமல்ல... அனுபவத்தில் படிப்பினை கிடைப்பதே முக்கியம்” என்றார். இதை மேலும் புரிய வைப்பதற்காக, “வாழ்க்கை என்பது ஒரு சாளரம். அதன் வழியாக தெருவைப் பார்க்க வேண்டுமேயன்றி அதுவே தெருவாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தப் பின்னணியில்தான், இந்த நூல், உங்களின் மேலான பார்வைக்கு வருகிறது. எனது அனுபவங்களில், சமூக வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ளாமல் இந்த சமூகத்திற்குள், அவற்றை ஊடுருவ விட்டிருக்கிறேன்.

அனுபவம் எவ்வளவு முக்கியமோ, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும் முக்கியம். அனுபவம் என்ற ஆசானால், எனது இளமைக் கால வாழ்க்கையை, கசப்போ இனிப்போ இல்லாமல் அசைபோட முடிகிறது. பின்னர் ஏற்பட்ட அனுபவங்கள் எனது சமூகக் கண்ணோட்டத்திற்கு நங்கூரம் ஆகின்றன. ஒரு மூத்த படைப்பாளி என்ற முறையில் இப்போது விழுதுகள் விட்டுக் கொண்டிருக்கும் நான், எனது வேர்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டியதும் அவசியமாகிறது... கடமையாகிறது.

கல்லூரிக் காலத்திலே...

பல்வேறு நல்லதும், கெட்டதுமான அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு, கல்லூரி காலத்திலேயே ஏற்பட்டது. அப்போது கொடிகட்டி பறந்த திராவிடக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு, சுய சிந்தனையுள்ள ஒரு மாணவ தேசியவாதியாக இருந்தேன். அன்றைய 1960-ம் ஆண்ட காலக் கட்டத்தில், “தேசிய முழக்கம்” என்ற வாரப்பத்திரிகையில் ஒரு கவிதை எழுதினேன். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவரும், கல்லூரியில் என் மூத்த சகாவுமான திரு.ச. ராசமாணிக்கம் (செந்தில்நாதனின் அண்ணன்) என்னைக் “கண்டெடுத்து”, வடசென்னையில் கோவிந்தப்பன் நாயக்கன் தெருவிலுள்ள ‘தேசிய முழக்கம்’ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே, தாய்மொழி மலையாளம் ஆனாலும், தன்னைத் தமிழ்மணி என்று ஆக்கிக் கொண்ட சகாவுடனும், தெலுங்கரான பகத்சிங், பிராமணரான கரிகாலன், மற்றும் பலராமன், நேருதாசன், தர்மலிங்கம் போன்ற தேசிய தோழர்களின் நட்பு கிடைத்தது. பின்னர் நேருதாசனை ஆசிரியராகக் கொண்ட ஐக்கிய இந்தியா என்ற பத்திரிகையில், “முட்கலூர் அழகி”, என்ற முற்றுப்பெறாத சரித்திர தொடர்கதையையும், ‘சாண்டில்யன் பாணியில்’ எழுதினேன். கல்லூரி பேச்சுப் போட்டிகளில் திராவிட இயக்க மாணவர்களோடு, நட்பு குறையாமல், எனக்குக் கிடைத்த வெற்றி தோல்விகள் என்னை ஒரு சமூக சிந்தனையாளனாக மாற்றியது. இந்தப் பின்னணியில்தான் பல்வேறு கதைகளை எழுதினேன். இதற்குப் பிறகு பல்வேறு கட்டங்களில் எனக்குக் கிடைத்த தோழமை, என்னை நாடறிந்த நல்ல எழுத்தாளனாக மாற்றி விட்டது.

நண்பர் வட்டத்தில்...

பழுத்த தமிழ் அறிஞர்களும், சிறந்த இலக்கியவாதிகளுமான, பேராசிரியர் பாக்கியமுத்து, பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து ஆகியோர் நடத்திய ‘நண்பர் வட்டத்தில்’, 1988-டிசம்பர் முதல், 1993-மே வரை என் கதைகளின் கதைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல், அந்தப் பத்திரிகையின் பக்க கட்டுப்பாட்டைக் கருதி, குறிப்புகளாக எழுதப்பட்டவை. அந்த நேர உணர்வுகளை, பிரதிபலிக்கும் வகையில் அவற்றை மாற்றாமல், அப்படியே சேர்த்திருக்கிறேன் (மூட்டம் நாவல் மட்டும் இதற்கு விதிவிலக்கு) கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் பாக்கியமுத்து. இந்தச் சங்கத்தின் இனிய பொதுச் செயலாளரான டாக்டர் தயானந் பிரான்சிஸ் அவர்கள் என்னை இன்னும் கெளரவப்படுத்திக் கொண்டு இருப்பதை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது.

ஆனந்த விகடனில் என் சிறுகதைகளை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் என்றால், அதை வெளியிட உதவியவர்கள் தாமரைமணாளன், ஜே.எம். சாலி, வி.எஸ்.வி. ஆகியோர். இதேபோல் குமுதத்தில் என் கதைகள் வர காரணமானவர் எஸ்.ஏ.பி. அவர்கள். இதற்கு உதவியவர்கள் ஜ. ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் ஆகியோர். இந்தக் கட்டத்தில் என் கதைகளைப் பாராட்டி முதன் முதல் கடிதம் எழுதியவர் “இலக்கிய வீதி” இனியவன். இவரும், இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கவிஞர்களுமான மது.ராஜேந்திரன், எம்.வி.குமார், எஸ்.குமார், எஸ். வெங்கடேசரவி, குமார கிருஷ்ணன், தாராபாரதி, பல்லவன் ஆகியோர் இன்றும் என் எழுத்தையும், என்னையும் நேசிப்பவர்கள்.

தாமரையில்...

அடுத்த கட்டமாக, என் கதைகளுக்கு அழுத்தம் சேர்த்தவர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்; இவரை ஆசிரியராகக் கொண்ட தாமரையில், கடல்மணி என்ற பெயரில் “புறம்போக்கு மரங்கள்” என்ற சிறுகதை முதன் முதலாக பிரசுரமாயிற்று. “இந்த மரம் அபாரம். இதில் ஒரு கொப்பைக் கூட நான் ஒடிக்கவில்லை” என்று கவிஞர் எழுதியதை இப்போது இனிமையோடு நினைத்துப் பார்க்கிறேன். இவர் மூலம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நட்பும், அதன் மூலம் தொ.மு.சி., தி.க.சி. “சரஸ்வதி” ஆசிரியர் விஜயபாஸ்கரன், “சோவியத்நாடு” பத்திரிகையைச் சேர்ந்த பெரியவர்கள் ஆளவந்தார், ராதாகிருஷ்ணன், ஜனசக்தியைச் சேர்ந்த ஆர்.கே. கண்ணன், எம்.எஸ். கிருஷ்ணன், தா. பாண்டியன் ஆகிய சிந்தனையாளர்களின் தோழமை கிடைத்தது. வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் கல்யாணசுந்தரம், பா. மாணிக்கம், தியாகராஜன், ஆர். நல்லகண்ணு, கே.டி.கே. தங்கமணி, கோவில்பட்டி அழகிரிசாமி, கோபு ஆகிய தன்னல மறுப்புவாதிகளிடம் ஒரு மாணவனைப் போல் அணுகி இருக்கிறேன். இப்போது புதுடெல்லியில் கட்சி மேலிடத்தில் அங்கம் வகிக்கும் என் இனிய தோழர் து. ராஜாவும், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதை சம்பந்தமாக காரசாரமாய் வாதிட்டதும், இதனாலேயே அவரும், நானும் சொந்த சகோதரர்களாய் ஆகிவிட்டதும், என் இலக்கிய பயணத்தில், நான் களைப்படையாமல் இருப்பதற்கான, கணிதரு நிழல்கள். பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள், இலக்கியத்தை எப்படி அணுக வேண்டுமென்று எனக்குப் பாடம் புகட்டியவர். தாமரையில் வெளியான “ஐம்பெரும் விழா” என்ற குறியீட்டுக் கதையை விமர்சனம் செய்த முதல் திறனாய்வாளர். அவரது இழப்பு எனக்கும், பொன்னிலனுக்கும் பெரும் பேரிழப்பு. என்றாலும் ஆர்.என்.கே. அவர்களும், தாமரையில் இப்போதைய பொறுப்பாசிரியர் தோழர் மகேந்திரனும், என்னை மேன்படுத்தும் பல்வேறு குறிப்புகளை தாமரையில் எழுதி, என் எழுத்துக்கு ஊன்றுகோலாய் இருக்கிறார்கள், என்.சி.பி.ஹெச். நிறுவனம் என்னை தனது எல்லா விழாக்களிலும் பேசவைத்து கெளரவித்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த வழக்கறிஞரான என்.டி.வானமாமலை அவர்கள் இன்றளவும் என் கதைகளை விமர்சித்து என்னை உற்சாகப்படுத்துபவர்.

தாமரையுடன் தொடர்பு ஏற்பட்ட காலக்கட்டத்தில், என் சிந்தனையை வளப்படுத்தியவர்களில் முக்கியமானவர் கவிஞர் இளவேனில். சர்வதேச இலக்கியத்தையும், அரசியலையும், மார்க்சிய முறையில் பார்த்த இந்த தோழரும், நானும், சா. கந்தசாமி, மலர்மன்னர், ஞா. மாணிக்கவாசகன், வ.உ.சி.யின் பேரன் இளங்கோ போன்றோரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய இலக்கிய வாதம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. இளவேனிலின் மனிதநேயமிக்க நட்பு இன்னும் என்னை செழுமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

செம்மலரில்...

இதற்கு அடுத்த கட்டமாக, என் எழுத்து ஆழப்படுவதற்கும், ஒரு இயக்கமாக மாறுவதற்கும் காரணமாகத் திகழ்வது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் செம்மலர் பத்திரிகையும். மணியக்காரரின் மகனாகப் பிறந்தாலும் சொத்துக்களை உதறிவிட்டு, தூய தொண்டில் ஈடுபட்ட பெரியவர் கே.முத்தையா அவர்களை, சாஸ்திரி பவனில் இப்போதைய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராமகிருஷ்ணன், சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்கு முன்பே என் குடும்ப நண்பரும், த.மு.எ.ச.வின் இப்போதைய தலைவருமான தோழர் செந்தில்நாதனின் ‘சிகரம்’ பத்திரிகையில் “சத்திய ஆவேசம்” என்ற தொடர்கதையை எழுதிக் கொண்டிருந்ததை கே.எம். நினைப்பூட்டினார். இதற்கு மேலும் ஒரு படி சென்று எனது நான்கைந்து படைப்புகளை செம்மலரில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த இருவரது நட்பும், ஒரு நிறுவன நட்பாகி, சிறந்த இடதுசாரி சிந்தனையாளர்களான த.மு.எ.ச. செயலாளர் கதிரேசன், பொருளாளர் வரதராஜன், இந்த இயக்கத்தோடு இரண்டறக் கலந்த எஸ்.ஏ. பெருமாள், நன்மாறன், அகத்தியலிங்கம், குமரேசன், பிரளயன், சி.ஏ. முத்து, உதயகுமார், கமலாலயன், சு. வெங்கடேஷ், இரா.தெ. முத்து, புலவர் கி.த. பச்சையப்பன், மகேந்திரன் ஆகியோரது நட்பை ஈட்ட வைத்த மார்க்சிய கட்சி தலைவர்களான, பெரியவர்கள் ஏ.நல்லசிவன், சங்கரைய்யா, லட்சுமணன், வரதராசன், மீனாட்சிசுந்தரம், ஜவகர் ஆகியோரின் கண்துஞ்சா சமூக நினைப்பு என்னை இன்னும் பிரமிக்க வைக்கிறது.

இலக்கிய மகாநதி...

பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்களின் நட்பு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பேறு. அந்த இலக்கிய மகாநதி இன்னும் என் இலக்கிய பாத்திகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. இவரை தி.க.சி. யோடு சந்திக்கும்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். இப்போது கூட எனது கதையின் கருவை, பெரியவர் வல்லிக்கண்ணன், தோழர்கள் செந்தில்நாதன், எஸ்.ஏ.பி., சென்னை வானொலி நிலைய இயக்குனரும், சிறந்த இலக்கியவாதியுமான திரு. விஜய திருவேங்கடம் ஆகியவர்களில் ஒருவரிடம், விவாதித்த பிறகே பேனாவை எடுப்பேன். இதேபோல் அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றத்தைச் சேர்ந்த சகோதரிகள், மைதிலி சிவராமனும், பாப்பா உமாநாத், உ. வாசுகி, பாலபாரதி ஆகியோர் என் கதைகளில் பெண்ணியம் பெரும்பங்கு வகிக்க காரணமானவர்கள்.

மணிவாசக மெய்யப்பன்

எனக்கு அச்சுரதம் கொடுத்தவர், மணிவாசகர் நூலகத்தின் உரிமையாளர் பேராசிரியர் ச. மெய்யப்பன். கடந்த 25 ஆண்டு காலமாக என் படைப்புக்களை தொடர்ந்து பிரசுரிப்பவர். இந்த நூலகத்தின் முக்கிய பங்காற்றிய நாவலாசிரியர் திரு. நாராயணன் அவர்கள் “புரூப்பில்” என் கதைகளைப் படித்துவிட்டு அதன் நயங்களை எடுத்துரைக்கும்போது மெய் மறந்து போவேன். மேலும், மேலும் என்னை எழுதத் துண்டியவர் இவர். இவரும், என் படைப்புக்களை பல அரங்குகளில் எடுத்துரைத்த பேராசிரியர் மெய்யப்பனும், என் எழுத்துக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள். திரு. நாராயணன் இடத்தில் இப்போது அமர்ந்திருக்கும், திரு. குருமூர்த்தி அதே பாரம்பரியத்தை என்னிடம் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். (அந்தக் காலத்தில் கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உற்சாகமூட்டுவதற்காக இளையராஜாவை பத்திரிகையில் தாக்கியபோது, கவிஞரின் நெருங்கிய நண்பரான நாராயணன் அவர்கள் மூலம் அந்த தாக்குதலை நிறுத்தியவன் நான்) மணிவாசகர் நூலகத்திற்கு அடுத்தபடியாக எனக்கு ஆக்கமும், ஊக்கமும் தருகிறவர் வானதி பதிப்பக உரிமையாளர் பெரியவர் திருநாவுக்கரசு அவர்கள்.

திறனாய்வாளர்கள்...

ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லமை வாய்ந்த வலம்புரிஜான், பேராசிரியர்கள் ரபீர்சிங், இளவரசு, பொற்கோ, தி.சு. நடராசன், ராமகுருநாதன், ராமன், ராஜாராம், ராமலிங்கம், சிவசுப்பிரமணியம், சு. வெங்கடராமன், எம்.எஸ். ராமசாமி, சரஸ்வதி ராம்நாத், ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை இந்தியில் மொழிபெயர்த்த திருமதி.விஜயலட்சுமி சுந்தர்ராஜன், தொடக்க காலம் முதல் என்னை ஆக்க ரீதியாக அணுகும் டி.எஸ். ரவீந்திரதாஸ், இந்து பத்திரிகையின் சி.வி.ஜி. விமர்சகர் சுந்தரேசன் உள்ளிட்ட பல சிந்தனையாளர்கள் என்னை இன்னும் எழுதும்படி சொல்லாமல் சொல்கிறவர்கள். கோவை ஞானி அவர்களின் அண்மைக்கால நட்பும், கடிதங்களில் புலப்படுத்தும் அவரது இலக்கிய மேதமையும் என் எதிர்கால படைப்புகளை மேலும் செழுமைப்படுத்தும் என நம்புகிறேன். சக படைப்பாளிகள் என்ற முறையில் டி. செல்வராஜ், பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, செ. யோகநாதன், கு. சின்னப்ப பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், தேனி சீருடையான், தோப்பில் முகம்மது மீரான், சுப்ரபாரதி மணியன், ரோஜா குமார், வேல. ராமமூர்த்தி, பிரபஞ்சன், கமலாலயன் ஆகியோர் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ரெயில்களில், பேருந்துகளில், இதர பொது இடங்களில், என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு என் கதைகளை நினைவு படுத்தும், எண்ணற்ற சகோதர சகோதரிகள், தொழிலாள தோழர்கள் கடிதங்கள் எழுதும் வாசக பெருமக்கள் ஆகியோர் என் நெஞ்சை விட்டு நீங்காத நேயர்கள்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியர் சுப்ரமணியன், நான் இடுகுறிக் கதைகளை எழுதுவதற்கு பல்வேறு விஞ்ஞானத் தகவல்களை தந்து கொண்டிருப்பவர். எனது அரசியல் சமூக அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான ஆலடி அருணா, மாணவர் நகலக உரிமையாளர் சகோதரர் அருணாசலம், ஆகியோரிடம் தொடர்ந்து நான் மேற்கொள்ளும் எதிர்வாதம் என் கருத்துக்களை வலுப்படுத்திக் கொள்ளவும், மறுபரிசீலனை செய்யவும் உதவுகின்றன. தமிழ்ச் சான்றோரான சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், கவனகர் இரா. கனகசுப்புரத்தினம் ஆகியோர் மூலம் தமிழின் ஆழ்ந்த புலமை என்னை பிழைபட எழுதாமல் இருக்கவும், ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்கவும், துண்டுகின்றன. எழுத்தாளர் கோவி. மணிசேகரன், என்னை “எழுதாமல் இருக்காதே இருக்காதே” என்று உசுப்பி விடுகிறவர். ‘ஏவிஎம்’ குடும்பத்தைச் சேர்ந்த நவீன சிந்தனையாளரான திரு. அருண். வீரப்பன் அவர்கள் வாழ்க்கையில் புதிய அனுகுமுறையைப் போதிப்பவர். இப்படி பலப்பல மனிதநேயர்கள், என் எழுத்தின் நோக்கத்தை அர்த்தப் படுத்துகிறார்கள்.

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை -

எனது முதல் சிறுகதை தொகுப்பான “குற்றம் பார்க்கில்” 1976-ஆம் ஆண்டு வாக்கில் திரு.அன்பரசனால் வெளியிடப்பட்டது. செங்கை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித்தலைவரும், என் இனிய நண்பருமான காலம் சென்ற திவான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அகிலன் அவர்கள் இப்படிப் பேசினார்.

“மற்ற எழுத்தாளர்களை, அவரைப்போல் எழுதுகிறார். இவரைப்போல் எழுதுகிறார் என்று மேல்நாட்டு எழுத்தாளரோடு ஒப்பிடலாம். ஆனால் சு. சமுத்திரத்தை அப்படி ஒப்பிட முடியாது. காரணம் அவரது படைப்புகள் அத்தனையும் “ஒரிஜினல்.”

அகிலன் அவர்கள் சுட்டிக் காட்டியதுபோல் என் மக்களின் ஆசைகளை, நேசங்களை நிராசைகளை, ஆர்ப்பாட்டங்களை கண்டறிந்து, உள்வாங்கி அவற்றை விஞ்ஞான ரீதியாக பார்த்து மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கிறேன். இதனால்தான் மாடனிசம், போஸ்ட் மாடனிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற இலக்கிய வாதைகள் இல்லாமல் என்னால் சுய தன்மையுடன் நிற்க முடிகிறது. என் இலக்கியத்தை அகராதி வைத்து எவரும் படிக்க வேண்டியதில்லை. என் மொழி மக்கள் மொழி. என் எழுத்தில் பெருமைகள் இருந்தால் அவை மக்களுக்கும், சிறுமைகள் இருந்தால் அவை எனக்கும் சேர வேண்டியவை. என் எழுத்து ஏழ்மையின் வெற்றியாகாமல், ஏழைகளின் வெற்றியாக வேண்டுமென்பதே என் நோக்கம்.

தமிழில் முதன் முதலாக அய்.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்ற தோழர் பாலகிருஷ்ணன், தமிழக அரசின் மூத்த அதிகாரி பூர்ணலிங்கம் ஆகியோர் என்னை ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத வற்புறுத்துகிறவர்கள்.

இதேபோல் இலங்கை எழுத்தாளர் செ. யோகநாதன், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோரிடம் நான் மேற்கொள்ளும் விவாதங்கள் என் எழுத்துப் பணியை செம்மைப்படுத்தும். திறனாய்வாளர் எம்.எஸ். ராமசாமி, டாக்டர் ரபீர்சிங், டாக்டர் இராமகுருநாதன், டாக்டர் பழ. முத்துவீரப்பன், பேராசிரியர்கள் டாக்டர் நளினிதேவி, தியாகமணி போன்றோர் என் படைப்புக்களை நாடறியச் செய்தார்கள்.

பெரியவர் ஆர்.என்.கே. சொன்னதுபோல் இந்த நூல் இளம் படைப்பாளிகளுக்கு ஒரு துண்டுகோலாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். இதைப் படிக்கும் தோழர்கள் இந்த நூல்பற்றி முடியுமானால் ஒரு வரி எழுதிப் போடலாம்.

தோழமைமிக்க,
சு. சமுத்திரம்