எனது கதைகளின் கதைகள்/இஸ்லாமியத் தோழர்களுக்காக

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

21
இஸ்லாமியத் தோழர்களுக்காக


மூட்டம்

அயோத்தி சம்பவத்திற்கு பிறகு நெல்லைக்கு போய்விட்டு ரெயிலில் திரும்பி வந்தபோது பழமையான பழுத்த காங்கிரஸ்வாதியும், நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.கே.டி.ராமச்சந்திரன், தி.மு.க. பிரமுகர் திரு. ஜின்னா ஆகியோருடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது அயோத்தி சம்பவங்களுக்கு எதிரொலியாக நடைபெற்ற வகுப்பு கலவரங்களைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் நீண்ட பாரம்பரியத்தின் காரணத்தால், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவில்லை என்று பெருமிதமாகச் சொன்னேன். அப்போது திரு. ஜின்னா குறுக்கிட்டு, தமிழக முஸ்லீம்கள்தான் இப்போது அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார். வட இந்தியாவிலாவது முஸ்லிம்கள் திருப்பி தாக்கி, தங்களது ஈகோவை, திருப்தி செய்துக் கொண்டார்கள். ஆனால் தமிழகத்திலோ முஸ்லிம்கள் மனப்பிராந்தியோடு வாழ்கிறார்கள் என்றார். இதற்கு எடுத்துக்காட்டாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை இந்து வகுப்புவாதிகள் முற்றுகையிட்டு, அங்குள்ள முஸ்லிம் மக்களை மூன்று நாள் பட்டினி போட்டுச் சரணடையச் செய்ததையும், போலீஸ் துப்பாக்கி சூடு ஏற்பட்டதையும், நினைவுபடுத்தினார். இப்பொழுது தமிழக முஸ்லீம்கள்தான் மற்ற முஸ்லீம்களை விட கையறு நிலையில் தவிப்பதாகத் தழுதழுத்த குரலில் குறிப்பிட்டார்.

மறுமுறை நெல்லைக்குச் சென்றபோது மேலப்பாளையத்திற்குச் சென்றேன். திரு. ஜின்னா அவர்கள் சொன்னதுபோல அங்குள்ள முஸ்லீம் பெருமக்கள் இயலாமையில் தவிப்பதைப் புரிந்து கொண்டேன். விவரங்களைச் சேகரிக்கச் சேகரிக்க அங்குள்ள முஸ்லீம் மக்கள் அநியாயமாகப் பழிவாங்கப்பட்டது புரிந்தது. இதை ஒரு நாவல் ஆக்கவும் திட்டமிட்டேன்.

இஸ்லாமிய மக்களைப் பற்றி ஒரு (இந்து) எழுத்தாளன் எழுதும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் இவர்களை ஒரு ஆத்மார்த்தமாக நேசித்ததால் தைரியப்பட்டேன். மசூதிகளுக்குச் சென்று இவர்களின் தொழுகை முறைகளை தெரிந்து கொண்டேன். பெரியவர்களிடம் என்னுடைய நோக்கத்தை குறிப்பிட்டு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பெரியவர்களின் வரவேற்பு கிடைத்த அதே சமயம் சில முஸ்லீம் இளைஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்து, வேண்டாவெறுப்பாய் அனுமதித்தார்கள். நான் மனம் தளரவில்லை... திருக்குரானைப் படித்தேன்... பல்வேறு இஸ்லாமிய தொழுகை முறைகளை விளக்கும் நூல்களை வாசித்தேன்... என் முஸ்லீம் நண்பர்களோடு ‘ஜமாத்’ பற்றியும், அவர்களது வீட்டு கலாச்சாரம் பற்றியும் துல்லியமாகத் தெரிந்து கொண்டேன். அதோடு கல்லூரி படிப்பிற்குப் பிறகு சின்னாளப்பட்டிக்கு அருகேயுள்ள ஆத்தூரில் முஸ்லிம் தாய்மார்களுக்கான பாய்முடையும் கூட்டுறவு சங்கத்திற்கு, இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருந்தேன். அந்த தாய்மார்களின் வீட்டிற்குத் தாராளமாகச் சென்று உணவு அருந்தும் உரிமை எனக்கிருந்தது. ஆகையால் மேலப்பாளையம் சம்பவத்தை ‘மூட்டம்’ என்ற பெயரில் செம்மலரில் தொடர்கதையாக எழுதினேன். ஒரு இந்துவுக்கும், முஸ்லீமுக்கும் (இருவருமே கொழுத்த பணக்காரர்கள்) ஏற்படும் ‘தொழில் போட்டி’ அயோத்தி சம்பவத்திற்கு பிறகு எப்படி வகுப்புவாதமாக மாறுகிறது என்பதையும், அதே சமயம் இந்து, முஸ்லீம் பாட்டாளிகள் எப்படி அண்ணன் தம்பியாக வாழ்கிறார்கள் என்பதையும் விளக்கி இருந்தேன். கல்லூரி இந்து - முஸ்லீம் காதல் பகையாக மாறும் போது, பெட்டிக்கடை - வெற்றிலை பாக்கு இந்து முஸ்லிம் காதல் எப்படி உதயமாகிறது என்பதையும் எழுதியிருந்தேன். அண்மையில் நான் எழுதிய நாவல்களில் எனக்கு பிடித்த நாவல் இது....

ஒரு படைப்பு அதன் சமூக தாக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினால் அது நல்ல படைப்பு... மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினால் அது நச்சுப் படைப்பு... இப்படித்தான் விமர்சன அணுகுமுறை இருக்க வேண்டும். ஆனால் நமது விமர்சன பண்டிதர்களோ, ஒரு படைப்பின் சமூக தாக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிலுள்ள இலக்கியக் கிருமிகளைத் தான் பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த விமர்சன நீரோக்களுக்கு மூட்டம் பிடிக்காமல் போகலாம்... ஆனால் முற்போக்கு இலக்கியத்தில் இது ஒரு முத்திரை....

நன்றி தோழர்களே...
வாய்ப்புக் கிடைத்தால்...
அதாவது இந்தக் கதைகளின் கதை
கையைக் கடிக்கவில்லையானால்,
இதே பாணியில்
மீண்டும் சந்திப்போம்.