உள்ளடக்கத்துக்குச் செல்

எனது கதைகளின் கதைகள்/பேச முடியாதவைகளுக்காக

விக்கிமூலம் இலிருந்து
20
பேச முடியாதவைகளுக்காக...


முயல் போட்ட மூன்று முடிச்சு

அண்மையில் வானொலிச் செய்தியாளர் என்ற முறையில் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஒரு முயல் பண்ணைக்குச் சென்றேன். ஸ்பிக் பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து முயல் பண்ணை, மீன் பண்ணை, காளான் பண்ணை போன்றவற்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நான் மாவட்ட அதிகாரிகளுடனும் ஸ்பிக் நிறுவன ஊழியர்களுடனும் ஒரு முயல் பண்ணையைப் பார்வையிட்டேன். விதவிதமான முயல்கள்; பொன்நிறம் கொண்டவை, ஜோதி நிறமானவை பல்வேறு வகைகள். ஆனால் அத்தனைக்கும் ஒரு ஒற்றுமை. இவற்றை அறுத்தால்கூட சத்தம் போடாதாம். அந்த அளவிற்கு அப்பிராணிகள். பண்ணை இளைஞர் ஒரு முயலை காதோடு அழுந்தப் பற்றி தூக்கினார். அப்போதுகூட அதன் முகத்தில் ஒரு சின்ன முணுமுணுப்பு இல்லை. இந்த முயல்களைப் பற்றி அவர் சொன்ன இன்னொரு தகவல் என்னை வியப்புறச் செய்தது. பொதுவாக பெண் முயல்களையும், ஆண் முயல்களையும் தனித்தனிக் கூடுகளிலேயே அடைத்து வைக்க வேண்டுமாம். ஆண் முயலை, பெண் முயலின் கண்ணில்கூட காட்ட கூடாதாம். அப்படிக் காட்டிவிட்டால் போதுமாம் பெண் முயலுக்கு, தான் கர்ப்பம் தரித்து விட்டோம் என்று எண்ணம் ஏற்பட்டு ஒரு போலித்தனமாக கர்ப்பம் கூட ஏற்பட்டு விடுமாம். பிரசவம் இல்லாத சேர்க்கை கர்ப்பம். இதனால் ஆண் முயலின் சேர்க்கைக்குப் பிறகும் இந்தப் பெண் முயல்கள் கர்ப்பம் அடைய முடியாதாம். ஆகையால் பெண் முயல்களுக்கு பருவம் வரும்போது (ஆறாவது மாதம் இவைப் பூப்பெய்து விடுமாம்.) இந்த பெண் முயலை ஆண் முயலின் கூட்டில் விட வேண்டுமாம். இதன் கூட்டில் ஆண் முயலை விட்டால் பெண் முயல் அந்த ஆணைத் துரத்தி விடுமாம். ஆகையால் பெண் முயலை, ஆண் முயல் கூட்டில் விட்டு அது சூழல் புரியாமல் குழம்பும்போது, ஆண் முயலை சேர்க்கைக்கு விட்டு விட வேண்டுமாம். எல்லாம் சரி, பெண் முயலுக்கு விரகதாபம் வந்திருப்பதை எப்படி அறிந்து கொள்வது? அடித்தால்கூட அழத் தெரியாத இந்தப் பெண் முயலுக்கு பருவதாகம் வரும்போது அதன் பிட்டம் ஆடுமாம், அல்லது அதை ஆட்டிக் காட்டுமாம். பிட்டத்து முடிகள் அதிர்ந்து, அதிர்ந்து நெளியுமாம்... இந்த சமிக்ஞைதான் பெண் முயல், துணை தேடும் வேட்கையைப் புலப்படுத்துவது. இந்த விவரங்களை உள்வாங்கிக் கொண்டு சென்னைக்குத் திரும்பினேன். குமுதம் பத்திரிகை பெண்களுக்காக ஆரம்பித்திருக்கும் ‘மலர் மல்லிகைக்கு’ ஒரு கதை கேட்டார்கள். வழக்கம்போல் அடையார் பீச்சில் உட்கார்ந்து ஒரு அப்பாவி முயல் போல் விவரம் தெரியாமல் வளர்க்கப்படுகிற ஒரு பெண்ணும், தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதை மறந்துபோன பெற்றோருக்கு எப்படி புலப்படுத்துவாள்? என்று எண்ணிப் பார்த்தேன். அதுவே ஒரு யதார்த்தம் கலந்து கற்பனையாகி கதையானது. இதற்கு ‘நெளிவு’ என்று குமுதம் பால்யூ பெயரிட்டார். ‘முயல் போட்ட மூன்று முடிச்சு’ என்பது பொருத்தமாக இருக்கும் என்றும் பின்னர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை என்ன செய்யும்...?

இதேபோல் சிவகாசிப் பக்கம் டூர் போயிருந்த போது ஒரு புறாக் கூண்டைப் பார்த்தேன். பல்வேறு வகையான புறாக்கள்... இந்தப் புறாக்கள் காட்டுக்குப் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து விடுமாம். வரும்போது காட்டு ஆண் அல்லது பெண் புறாக்களை கூட்டி வந்து விடுமாம். காட்டில் சுதந்திரமாகத் திரியும் புறாக்கள் காதல் வயப்பட்டு, பூனைகளும், நாய்களும் பயமுறுத்துகிற கிராமங்களுக்கு காதல் கிழத்திகளோடு வருகின்றன என்றால் அது புனிதக் காதல் அல்லவா?... நாட்டுப்புற புறாக் காதலிகளோடு அல்லது காதலர்களோடு கூண்டில் அடைபட சம்மதிக்கின்றன என்றால் அது காதலின் சக்திதானே.... இதை வைத்து ‘சிறைச்சாலை என்ன செய்யும்,’ என்ற சிறுகதை எழுதினேன்...

ஒரு யானையின் காதல்

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் சிமோகா காட்டிற்கு டூர் போயிருந்த போது காட்டிலாகா அதிகாரிகள், ஒரு அரிய விபரத்தைச் சொன்னார்கள்... அதாவது சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண் யானையை, காட்டு ஆண் யானை விரும்புமாம். ஒரு வேளை அதன் கண்களுக்கு இந்தச் சங்கிலி யானை நகை நட்டுப் போட்ட குடும்பப் பெண்ணாகத் தெரியுமோ என்னமோ பழக்கப்பட்ட பெண் யானைக்கும் இந்த காட்டு யானைதான் பிடிக்குமாம். பக்கத்தில் உள்ள பழக்கப்பட்ட ஆண் யானை பிடிக்காதாம். ஆகையால் வன இலாகா அதிகாரிகள் பழக்கப்பட்ட இந்தப் பெண் யானைகளை காட்டுக்கு அனுப்பி விடுவார்களாம். இவைகளும் காட்டு யானைகளுடன் சல்லாபம் செய்துவிட்டு வன இலாகா அதிகாரிகளிடமே திரும்பி விடுமாம். எவ்வளவு பெரிய சத்தியக் கட்டுப்பாடு... எவ்வளவு பெரிய காதல் வேகம்... பாவம்... பழக்கப்பட்ட ஆண் யானையை.... இம்போடன்ட் பெல்லோ... எந்தப் பெண் யானையும் சீண்டாதாம்... இதை வைத்து, ‘மனிதா தெரிந்து கொள்’ என்று தேவியில் ஒரு சிறுகதை எழுதினேன்... தலைப்பு வேறு வைத்திருக்கலாம் போல் தெரிகிறது....