எனது கதைகளின் கதைகள்/வாடாமல்லி நாவலின் வரலாறு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

19
வாடாமல்லி நாவலின் வரலாறு


ல ஆண்டுகளுக்கு முன்பு கடலூருக்கு போயிருந்த போது - அப்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியான திரு.சுபாஷ் அதன் அருகாமையிலுள்ள ஒரு கடலோர கிராமத்திற்கு கூட்டிச் சென்றார். அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆயிரக்கணக்கான அலிகள் குழுமியிருந்தார்கள். அருகே இருந்த பெண்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆண்டுதோறும் இங்குள்ள கூத்தாண்டவர் கோயிலுக்கு நாடெங்கிலுமிருந்து அலிகள் வருவதுண்டு. இவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த கோவிலில் தங்களது கணவர் என்று இவர்கள் கருதும் கூத்தாண்டவருக்குச் சேவை செய்ய வருபவர்கள். முதல் நாள் கூத்தாண்டவருக்கு தங்களை அசல் திருமணப் பெண்களாக ஜோடித்துக் கொண்டு பூசாரி மூலம் தாலி கட்டி மனைவி ஆவார்கள். பிறகு நான்கு நாள் கழித்து கூத்தாண்டவரான அரவான், மகாபாரதப் போரில் பலியாக்கப்பட்டதை நினைவுப்படுத்தும் வகையில் ஒரு பொம்மையை பலியிடும் போது இவர்கள் தாலிகளை கழற்றி விட்டு, பூப்பொட்டுகளை கலைத்து விட்டு, வெள்ளைச்சேலை கட்டி ஒப்பாரி வைப்பார்கள். பின்னர் ஒரு வாரம் கழித்து தத்தம் இருப்பிடங்களுக்கு கலைத்து போவார்கள்.

இந்த அலிகளின் பேச்சு, முகபாவம், சண்டை, சச்சரவு, சந்தோஷங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவர்களிடம் பேசிப் பார்த்தேன். மனதுக்குள்ளே அழுது கொண்டிருக்கிறார்கள். மாமூல் மனிதர்கள் கிண்டல் செய்யும் போது வேதனைப்படுகிறார்கள். அதே சமயம் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்து வாழ்கிறார்கள். இவர்களின் பிரச்சினை என் மனதில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. இந்த அலிகளின் குடும்பத்தாருடன் பேசிப்பார்த்தேன். வரதட்சிணை கொடுமை வறுமை போன்றவைகளால் ஒரு குடும்பம் பாதிக்கப்படுவது போல் அலிகளை உருவாக்கும் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. முதலில் பெண்ணாக ஆசைப்பட்டு, முடிவளர்த்து புடவை கட்டும் ஆணை குடும்பத்தினர் அடித்து உதைத்து திருத்தப் பார்க்கிறார்கள். பிறகு துரத்தி விடுகிறார்கள். இடையில் நடப்பதோ சொல்லொண்னாத் துயரம்.

ஒரு கிராமத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பையன் எப்படி படிப்படியாக அலியாக மாறுகிறான். அதனால் அவன் குடும்பமும் அவனும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே கதையின் கரு.

அலிகளின் கிலிகள்

‘வாடமல்லி’யை எழுதுவதற்கு முன்பு தினமலரின் மூத்த செய்தியாளர் நூருல்லா, அலிகளைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூலை மீண்டும் படித்தேன். ‘இந்தியா டுடே’யில் வந்த ஒரு கட்டுரையையும் படித்தேன். இவை அலிகளைப் பற்றி ஒரு அறிமுகமாவும், அவர்களது கேளிக்கை பற்றிய விமர்சனமாகவும் இருந்தனவே தவிர, முழுமையாக இல்லை. கடலூருக்கு அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அலிகள் நடத்திய அரவான் விழாவை கண்ட அனுபவத்தில், சென்னையில் அலிகள் குவிந்திருக்கும் பகுதிக்குச் சென்றேன். தமிழக அரசின் தலைமையகத்திற்கு அருகே சந்தும் பொந்துமான ஒரு குடிசைப் பகுதியில் சேலை கட்டிய அலிகள் நைந்தும் பிய்ந்தும் வாழ்வது கேள்விப்பட்டு இன்னொரு நண்பரோடு அங்கே சென்றேன். எங்களது உருவ அமைப்பைப் பார்த்துவிட்டு, நாங்கள் போலீஸோ என்னமோ என்னமோ என்று பயந்து விட்டார்கள். பேச வந்த இளம் அலிகளை, முதிய அலிகள், ‘கபடி, கபடி’ என்றார்கள். அதாவது போங்கள் போலீஸ் என்றார்கள். போலீஸ் என்றால் அவர்களுக்கு அவ்வளவு பயம். எப்படியோ அந்த அலிகளின் தலைவியான, குருவக்காவிடம் போனோம். அசல் பெண் மாதிரியான தோற்றம். சிறட்டைப் பொட்டு மாதிரியான நிறம் அவளிடம் அல்லது அவனிடம் நான் அவர்களது பிரச்சனைகளை ஆத்மார்த்தமாக மனிதாபிமானத்தோடு எழுதப் போவதாகக் குறிப்பிட்டேன். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய குருவக்கா. பிறகு என்னைப் புரிந்து கொண்டாள். வீடுகளிலிருந்து துரத்தப்பட்ட பல்வேறு அலிகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்களின் கதையைக் கேட்டால் கண்ணீர் வந்துவிடும், பல வசதி படைத்த பெற்றோர்கள் கூட இப்போதும் அந்தப் பக்கமாக வந்து தூக்கி எறியப்பட்ட தத்தம் செல்வங்களின் கைகளைப் பிடித்து கண்ணீர் மல்கி கதறுவார்களாம். அந்தப் பக்கத்துச் சேரியில் வாழும் இவர்கள் அந்தப் பக்கத்துச் சேரிக்காரர்களோடு இரண்டறக் கலந்தவர்கள்.

அலித் தொழில்

இரவு நேரங்களில் மரங்களோடு மரங்களாக நின்று காரில், இரண்டு சக்கர வாகனங்களில் நிற்பவர்களை வாடிக்கையாக அழைப்பதே இவர்களது தொழில். கையும்களவுமாக இவர்கள் பிடிபடும்போது, காவல்துறையினர் நையப்புடைத்து விடுகிறார்களாம். அதோடு, கஞ்சா கடத்தியதாக வழக்குப் போடுகிறார்களாம். குருவக்கா, என்னிடம் “நாங்க விபச்சாரம் செய்யுறதா வழக்குப் போடுங்க சார் அப்பவாவது எங்களோட நிலமை ஜட்ஜுக்குத் தெரியட்டும். நாங்க இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? மார்க்கட்ல கடை போட்டா, பொட்ட பொட்ட என்கிறாங்க. வீட்டு வேலைக்கு யாரும் சேர்க்கிறது கிடையாது. கவிர்மெண்ட்லயும் வேலை இல்லை. எங்களுக்கும் வயிறு இருக்கே. இதைத் தவிர வேறு பொழைப்பு இல்லையே” என்று காவல்துறையிடம் அடிக்கடி சொல்வதாகவும் அவர்கள் இவர்களைக் கஞ்சியாகவும், கஞ்சாவாகவும் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் குறைபட்டாள். “எல்லோருக்கும் ஏதோ ஒரு சங்கம் இருக்கிறது எங்களுக்கு என்ன இருக்கிறது. நாதியில்லாதவங்க நாங்க” என்று அவள் சொன்னபோது, அத்தனை அலிகளும் கண் கலங்கினார்கள். பேசி முடித்த பிறகு, நான் ஐம்பது ரூபாய் நீட்டியபோது அதை வாங்க மறுத்தார்கள். மாறாக, எனக்கும் என் நண்பருக்கும் ‘கேம்பா கோலா’ வாங்கிக் கொடுத்தார்கள். அந்தக் குடிசைப் பகுதியை விட்டு வெளியே வருவது வரைக்கும் “சார், சார், போலீஸைப் பத்தி நாங்க சொன்னது வெளியில தெரியப்படாது சார் தெரிஞ்சா சாவடி கொடுப்பாங்க சார்” என்று அந்த அலிகள் மாறி மாறிச் சொன்னது இன்னும் என் மனதை நோக வைக்கிறது. இவர்களோடு அல்லாது, ‘சொந்தக்காரர்கள் வீட்டிலேயே இருந்து ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் அலிகளையும் சந்தித்தேன். பம்பாயிலிருந்தும், டில்லியிலிருந்தும் சென்னைக்கு அடிக்கடி வரும் குறிப்பிட்ட சில அலிகளையும் சந்தித்துப் பேசினேன். ஒவ்வொருவரிடமும் ஒரு சோகச்சுமை. கூட்டிலிருந்து சிறகு முளைக்கு முன்பே தரையில் தள்ளப்பட்ட குருவிக் குஞ்சைப் போன்ற பரிதாபம்.

இவர்களைச் சந்தித்த பிறகு, எனது உறவு டாக்டர்களான, ராஜ்குமார், கலைவாணன் ஆகியோரைச் சந்தித்து இந்த அலிகள் உடல் ரீதியில் எப்படி ஆகிறார்கள், என்று தகவல் சேகரித்தேன். சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் சுப்ரமணியத்திடமும் உடல்கூறு பற்றி விசாரித்தேன். ஆக மொத்தத்தில், அலிகள் ஆண் உடம்பில் சிறை பட்ட பெண்கள், அல்லது பெண் உடம்பில் சிறை பட்ட ஆண்கள். இவர்கள் ஆணிலிருந்து பெண்ணாகவோ, பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறுகிற வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. கருவிலேயே அலிகளாகி கருகிப் போனவர்கள். குரோமோசம்கள் பழுதடைந்ததால் பழுதுபட்டுப் பிறந்தவர்கள். இவர்களை சமூகம் இன்னும் கேலியும் கிண்டலுமாய் பார்த்து வருவது கண்டனத்திற்குரியது. ஆனாலும், வடநாட்டு அலிகள், சிறிது மதிக்கப்படுகிறார்கள். நல்லது கெட்டதுக்கு மக்கள் அவர்களுடைய உதவியை நாடுகிறார்கள். விகடனில் வெளியான ‘வாடாமல்லி’ வாசகர்க ளின் மனசாட்சியை உலுக்கியது. இதனால் என் எழுத்தின் நோக்கம் நிறைவடையவில்லை என்றாலும், அதன் எல்லையை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

குறிப்பு : அண்மையில் திருப்பூரில் முற்போக்கு படைப்பாளி சுப்பிர பாரதிமணியன் முயற்சியில் சேவை நிறுவனம், கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் வாடாமல்லி விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. இலக்கிய மோதல்களில் எனக்கு எதிர்ப்பக்கம் நின்ற கோவை ஞானி அவர்கள் இந்த நாவலைப் பாராட்டினார். எனது நாவல் வணக்கத்திற்குரியது என்றும் தெரிவித்தார். என்னோடு பத்திரிகைகளில் மோதினாலும் தனது ஆய்வு நூலில் எனக்குரிய இடத்தைத் தனது பாணியில் கொடுத்தவர். இவருடன் இடதுசாரி தோழர்களான பழனிச்சாமி, பொன்னுச்சாமி, அலோசியஸ், எஸ். ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோர் என் படைப்புகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்தார்கள்.