எனது கதைகளின் கதைகள்/காலக்கிழம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

16
காலக்கிழம்


ன் எழுத்தின் வெற்றிக்கு பெரும் காரணமான ‘செம்மலர்’ பத்திரிகை அக்டோபர் மாதத்திற்கு ஒரு கதை எழுதும்படி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. நானும் வழக்கம்போல் அடையார் கடற்கரையில் கடல் மண்ணை கைகளால் துழாவிக்கொண்டே சிந்தித்தேன். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், புதிதாக விடுதலை பெற்று பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் மக்கள் மனோபாவங்கள் எப்படியெல்லாம் மாறும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கற்பு, கண்டிப்பான கொத்தடிமை, பெண்ணடிமை போன்ற நில-பிரபுத்துவ நெறிகள் சிதறியடிக்கப்பட்டு, நீக்குப்போக்கான கற்பு, விழிப்புணர்வு போன்ற புதிய அம்சங்கள் தோன்றும் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு தொழில் ரீதியான பொருளாதார மாற்றத்தால், தனி நபர் வழிபாடு, மனோபயம், பாலுணர்வில் அதிக ஈடுபாடு இருப்பது போன்ற மனோமாயம் போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் எனது கிராமத்தின் அப்போதைய நிலையையும் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அன்று கள்ளக் காதலுக்காக இரவோடு இரவாய் “பாம்பு கடித்து செத்துப்போன” பெண்களையும் இப்போது யாரோ ஒரு இளைஞனுடன் நான்கைந்து நாட்கள் ‘டூர்’ போய்விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பி பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

அண்மையில் ஊருக்கு போயிருக்கும்போது கேள்விப்பட்ட ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. பீடி சுற்றிக்கொண்டிருந்த ஒருத்தி, ஒருவனுடன் (வெளியூர்க்காரன்) ஊரிலேயே சுற்றிவிட்டு, பிறகு அவனுடன் ஓடிப்போய்விட்டாள். ஓடிப்போன இடத்தில் அவர்களுக்குள் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, ஒரு நாள் அந்தப் பெண் தன்னந்தனியாக ஊருக்கு வந்து, வீட்டுத் திண்ணையில் கூனிக்குறுகி உட்கார்ந்து விட்டாள். மகளைப் பார்த்து விட்ட தாய்க்காரி அவளை அப்படியே கட்டிப்பிடித்து, “அய்யோ எம்மோ.... என் மகளை அந்த நொறுங்குவான் மயக்க மருந்து போட்டு கூட்டிட்டு போயிருக்கானே.. இல்லாட்டா என் ‘பத்திரமாத்துத் தங்கம்’ அப்படிப் போகுமா.... இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா” என்று ஒப்பாரி போட்டு, அந்த ஒப்பாரிக்கிடையே மகள் காதிலேயும் கிசுகிசுத்தாளாம். அந்தப் பெண்ணும் தன்னை, கைக்குட்டையில் தடவிய ஒரு மருந்தால் சம்பந்தப்பட்டவன் முகத்தை துடைத்தான் என்றும், அதற்குப்பிறகு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும், தேம்பித்தேம்பி அழுதழுது சொன்னாள். ஊரார் இதை நம்பவில்லை தான். ஆனாலும் அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அப்படி மருந்து போட்டுத்தான் அவள் மயக்கமாகி போய்விட்டாள் என்று அவள் சொன்னதை அங்கீகரிப்பதைப் போல் தலையாட்டிவிட்டு - அதேசமயம் தங்களுக்குள் கண்சிமிட்டியபடியே போய்விட்டார்கள். இப்படி ஓடிப்போன ஒருத்தியை ஊரார் ஒப்புதலோடு குடும்பம் கவுரமாக ஏற்றுக் கொண்டது. இந்த நிகழ்ச்சியையும், ஒருகாலத்தில் சைக்கிள்காரனை அவன் சைக்கிளுக்காக பார்த்த மகளை, அடித்துக் கொன்ற அப்பனையும் இணைத்து ஒரு சிறுகதை உருவாக்கினேன். எந்த மகளை அடித்துக் கொன்று அதைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறாரோ அந்தக் கிழவனின் பேத்தி, இப்படி ஓடிப்போய்விட்டு அந்தக் கிழவன் கண்முன்னாலேயே வீட்டுக்குள் ஜம்மென்று போவதாக கதையை முடித்தேன். கொலைகார கணவனுடன் பேசாமலே நாற்பது ஆண்டுகளை கடத்திவிட்ட அந்த கிழவனின் மனைவி, அந்தக் கிழவனுக்கு கண்களால் சாட்டையடி கொடுப்பதாகவும் விளக்கினேன். தலைமுறை இடைவெளியையும், மாறிவரும் நெறிகளையும், ஒருவன் மாறவில்லை என்றாலும், காலம் தன்பாட்டுக்கு மாறிக் கொண்டே இருக்கும் என்பதையும் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை எனக்கு பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று.