எனது கதைகளின் கதைகள்/தானாய்த் தோன்றிய தாழம்பூ

விக்கிமூலம் இலிருந்து

15
தானாய்த் தோன்றிய தாழம்பூ


‘தினத்தந்தி’யிலிருந்து தொடர்கதை எழுதும்படி ஒரு அழைப்பு வந்தது. நான் சிறிது தயங்கினேன். ‘தினத்தந்தி’ வாசகர்கள் அளவிற்கு கீழே இறங்கிப் போய் கதை சொல்ல முடியுமா என்று யோசித்தேன். வழக்கமான பார்முலா கதைகளை படித்துப் பழக்கப்பட்ட அடிமட்ட வாசகர்களிடம் என் எழுத்து எடுபடாது என்பது இப்போதும் என் நம்பிக்கை. ஆனால், பல நண்பர்கள் இப்படிப்பட்ட சமூகத்தின் அடிமட்ட வாசக, வாசகிகளின் மனோபாவத்தையும் ரசனையையும் மாற்றுவதற்காவது நான் எழுத வேண்டும் என்றார்கள். அதோடு ஒரு எழுத்தாளனின் எழுத்து சராசரி வாசகனுக்கு புரிந்தால்தான் அந்த எழுத்திற்கு ஒரு நோக்கம் உண்டு என்றும் வாதித்தார்கள். இறுதியில் நானும் தொடர்கதை எழுத உடன்பட்டேன்.

அடையாறில் கடற்கரையில் உட்கார்ந்து தொடர் கதையின் மையக்கருத்து பற்றி யோசித்தேன். சாதாரண மக்களிடம் நிலவும் விவகாரங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதுவே தாழம்பூ என்ற பெயரில் இப்போது தொடர்கதையாகி பின்னர் நாவலானது.

அடிபட்ட நானும் - அடித்துவிட்ட அவளும்

சென்னை திருவான்மியூரில் நான் வீடு கட்டிய காலம். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. நாங்கள் குடியிருக்கும் தெரு கிட்டத்தட்ட ஒரு காடு மாதிரி. நாலே நாலு வீடுகள் இன்னும் உள்ளன. எஞ்சிய மனைகள் நீதிமன்ற வழக்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்தப் பக்கம் திருடர்களுக்கும், திருடிகளுக்கும் கும்மாளம். ஒரு தடவை இருபது வயதுள்ள ஒரு இளம் பெண்ணும், அவளை விட ஐந்து வயது பெரிய ஒருத்தியும் ஒரு கோணி மூட்டையோடு வந்து, எதிர் வீட்டில் போட்டிருந்த இரும்பு முட்கம்பிகளைப் பிய்த்து கோணிமூட்டையில் போட்டார்கள். இதைப் பார்த்த என் மனைவி அவர்களை ‘சத்தம் போட்டார்’. ஆனால் அந்தப் பெண்களோ என் மனைவியை நெருங்கி, கிட்டத்தட்ட அடிக்கப் போயிருக்கிறார்கள். என் மனைவியும் பயந்து போய் வீட்டுக்குள் ஓடிவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம் நான் என்னமோ அந்தப் பெண்களை அப்படி இரும்புக்கம்பிகளை பிய்க்கும் படி சொன்னதுபோல, மனைவியின் கோபதாபப் பேச்சுகளுக்கு உள்ளானேன். ஆனாலும் நான் அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டேன். என்றாலும் அடுத்த மறுநாளே அந்த இரண்டு பெண்களும் அந்தப் பக்கம் வந்து அதே வீட்டில் மிச்சம் மீதி இருந்த இரும்புக் கம்பிகளைப் பிய்த்தார்கள். என் மனைவி என்னை உசுப்பினார். நானும் புறநானூற்று வீரன் போல் அவர்களை நெருங்கி அதட்டினேன். அவர்கள் எதிர்த்துப்பேசியதால், ஒருத்தி கையிலிருந்த கோணிப்பையை பிடித்து இழுத்தேன். இதற்குள், இன்னொருத்தி என்னை மல்லாக்க தள்ளி இரும்புக்கம்பியால் ஒரு அடி அடித்து விட்டு ஓடிவிட்டாள். இதற்குள் என் மனைவி போலீசுக்கு போன் செய்ய, போலீஸ்காரர்கள் ஆட்டோரிக்க்ஷாவில் ஓடி வந்தார்கள். மாயமாய் மறைந்த அந்தப் பெண்களை கண்டுபிடிக்க அவர்களோடு நானும் போனேன். இறுதியில் ஒரு இரும்புக் கடைக்குள் அந்தப் பெண்கள் உள்ளே போவதைக் கண்டதாக ஒருவர் சொன்னார். போலீஸ்காரர்கள் அந்தக் கடைக்குள் போகவில்லை. அது மாமூல் கடை. மாறாக என்னைப்பார்த்து “ஒரு பொம்மனாட்டியை மடக்க முடியாமே ஏன் சார் விட்டே?.... வெளியில் சொல்லாதே சார் வெட்கம்” என்று சொல்லிவிட்டு, போய் விட்டார்கள். நான் இதைக் கெட்டகனவாக நினைத்து மறந்திருப்பேன். ஆனால் வீட்டில் ஒரு சின்ன தகராறு வரும் போதெல்லாம் என் மனைவியும், என் மகளும் “ஒங்கப் புத்திக்குத் தான்... குப்பத்துக்காரிகிட்டே அடிபட்டிங்க... அவளை உங்களால் ஒன்னுமே பண்ண முடியலே.... அவளை ஏதாவது பண்ணிட்டு அப்புறமா எங்களை திட்டுங்க” என்றார்கள். அடிபட்டதை என்னால் மாற்ற முடியாது. ஆனால் மேற்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டில் சுய மரியாதையை புதுப்பித்துக் கொள்ள முடியாது என்ற இக்கட்டான நிலைமை. நானே தன்னந்தனியாய் அவளைக் கண்டுபிடித்து போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னுள் மறைந்திருந்த கிராமத்து மண் தூள்பரப்பியது. ஆனாலும் நகரத்தில் பழக்கப்பட்ட நான் ஒரு கையாளையும் கூட்டிக் கொண்டு அந்தப் பெண்கள் நடமாடும் பகுதிக்குப் போனேன். அவள் தனது வயதான உடம்பெல்லாம் ஆடிய தந்தைக்கு உணவூட்டுவதைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது. ஆனாலும் அதைக் கல்லாக்கிக் கொண்டு, அந்தப் பெண்ணை நானும் எனது கையாளும் சேர்ந்து பக்கத்திலிருந்த ஒரு போலீஸ்காரரிடம் ஒப்படைத்து, அவருடன் சென்று காவல் நிலையத்தில் அவளைப் பூட்டிவிட்டோம். எனது ஓரளவு பிரபலமான பேரையும், நான் இருக்கும் பதவியையும் கருத்தில் கொண்டோ என்னவோ, காவல் துறையினர் அவளிடம் கடுமையாக நடக்கத் தொடங்கினார்கள். அவளோ என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அடிக்க ஓங்கிய அவள் கைகள், அனாதரவாக அல்லாடின. எனக்கு சொல்ல முடியாத துயரம். அவள் கண்களில் பொங்கிய கண்ணீரும், கூப்பிய கைகளும் என்னை நானே ஒரு அரக்கனாகப் பாவித்து குற்ற உணர்வில் துடிக்க வைத்தன. ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்னிடத்தில் வந்தார். அந்தப் பெண் சின்னச்சின்ன திருட்டுக்களை மட்டுமே செய்யக்கூடியவள் என்றும், ஒரு தள்ளாத தந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவள் என்றும், அவ்வப்போது கள்ளச்சாராயம் விற்பவள் என்றும் சொல்லி விட்டு, என் முகத்தைப் பார்த்தார். பிறகு அவளை என்ன செய்யலாம் என்பதுபோல் யோசனை கேட்டார். காவல் துறையினர் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களையெல்லாம் அவள் மேல் சுமத்தி, அவளை வேலூருக்கு 6 வருடத்திற்கு அனுப்பி வைத்து விடும் நிலைமையையும் சுட்டிக்காட்டினார். அந்தப் பெண்ணை விடுவிக்கும்படி, நான் ஆலோசனை சொன்னேன். என்னுடைய புகாரையும் திரும்பப் பெற்றுக் கொண்டேன். இதனைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் லாக்கப்பில் உள்ள அவளை என்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்காக கூட்டிவரப் போவதாகச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். காரணம், அந்தப் பெண்ணை சிறுமையான ஒரு நிலையில் சந்திக்க நான் விரும்பவில்லை. இப்படியாக தாழம்பூ தொடர்கதைக்கு மையக்கருத்து கிடைத்தது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, அந்தப்பெண் கள்ளச்சாராயக்காரியாக ஆவதற்குரிய அடிப்படை காரணங்களையும் ஆங்காங்கே இணைத்து எழுதினேன்.

நான் எழுதிய ‘தாழம்பூ’ என்ற தொடர்கதையை 20 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். நானும் அதற்கு முன்னதாகவே முடித்து விடுவதாக வாக்களித்திருந்தேன். பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கு எப்படி கணையாழிக்காரர்கள் இலக்கியவாதிகளோ, அப்படி எழுதப்படிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்கு, நான் ஒரு “இலக்கியவாதிதான்” என்று நினைத்ததால் எழுதுவதற்கே சங்கடப்பட்டேன். பெரும்பாலான இத்தகைய வாசகர்கள் எனது சிறுகதைகள் புரியவில்லை என்று சொல்லும்போது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. (அப்போ நானும் இலக்கியவாதிதானே!)

இந்தத் தொடர்கதையை மிகவும் எளிமைப்படுத்தி நான் எழுதிக் கொண்டிருந்தாலும் அதில் வரும் நிகழ்ச்சிகள் அன்னக்காவடி மக்களின் அன்றாட வாழ்வில் நடைபெறுபவை. ஆகையால் என் இலக்கிய “தரத்தையும்” மீறி அந்தக் கதை தினத்தந்தி வாசகர்களால் ஆர்வமாகப் படிக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் நான் தப்பித் தவறிக் கூட, “இலக்கியவாதியாக” இருக்கக்கூடாது என்று சபதம் மேற்கொண்டிருக்கிறேன். இது செக்ஸ்சோ அல்லது புனித காதலோ இல்லாமல், போலீஸ் கெடுபிடிகள், கள்ளச்சாராய காய்ச்சல்கள், பேட்டை ரவுடிகள், அலுவலக சித்திர குப்தர்கள் ஆகியவர்களைச் சித்தரிக்கும் இந்த நாவலை இருபது அத்தியாத்திற்குள் முடிக்க முடியாமல் முப்பதுக்கும் மேலே நகர்த்னேன். தினத்தந்தி வாசகர்களுக்கு புதியதான இந்த கதை பெரிதும் வரவேற்கப்பட்டதால் நான் எத்தனை அத்தியாயங்கள் வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனாலும், நான் பழம் இனிக்கிறது என்பதற்காக கொட்டையோடு சேர்த்து சாப்பிட விரும்பவில்லை.

கள்ளச்சாராயக் கலை

தாழம்பூவில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் ஒரு பிரதான அம்சம். எப்படி காய்ச்சுகிறார்கள் என்பதையும் அதன் பின்னணியையும் தெரிந்து கொள்ளக் காய்ச்சல் லோகத்திற்கு போவதாகத் திட்டமிட்டேன். ஒரு சாராயக்காரர் என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக ஒப்புக்கொண்டார். எதற்கும் இரண்டு நாள் கழித்து பதிலளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட அந்த நாளில் என்னைக் கூட்டிக் கொண்டு போக ஒரு நிபந்தனை போட்டிருந்தார். நானும் அவரோடு சேர்ந்து குடிக்க வேண்டுமாம். அப்போது தான் காய்ச்சலாளிகளுக்கு சந்தேகம் வராதாம். என் நோக்கம் தெரிந்தால் அங்கேயே என்னை வெட்டிப் போட்டுவிடுவார்களாம். நான் யோசித்தேன். ஒரு ‘முடக்கு’ குடிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவே ஒரு விஷ சாராயமாக இருந்து கண்போய்விட்டால், ஒருவேளை அன்றைக்குப் பார்த்து போலீஸ் ரெய்டு நடந்து, அவர்கள் வலையில் பெரிய மீனான நான் அகப்பட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி போய் சாகித்திய அகாடமி எழுத்தாளர் குடிபோதையில் கைது என்று செய்திகளுக்கு செய்தியாகிவிடக்கூடாதே... எப்படியோ இறுதியில் கள்ளச்சாராயத்தில் கரை கண்ட ஒரு நண்பரை வைத்து, அந்தத் தொழிலின் ஊறல், காய்ச்சல், விநியோம் ஆகிய முப்பெரும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். சில குடிசைப் பகுதிகளுக்கும் சென்று இந்தத் தொழிலை இலை மறைவு காய் மறைவாகத் தெரிந்து கொண்டேன்.

இந்த அனுபவத்துடன், இன்னொரு அனுபவம் சேர்ந்தது. செங்கை மாவட்டத்தில் தமிழகமெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 500 போலீஸ்காரர்கள் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் நூற்றுக்கணக்கான லிட்டர் ஊறல், பேரல்கள், முதுமக்கள் தாழி மாதிரியான கெட்டியான பானைகள் கைப்பற்றப்பட்டன. கள்ளச்சாராயம் கடத்திய இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு காரின் டிக்கி சாராய தொட்டி மாதிரியான அமைப்பாக மாற்றப்பட்டிருந்தது. காய்ச்சும் பானை மூன்று வகை. கீழே ஒன்று, மத்தியில் ஒன்று. அந்த மத்திக்கும் மத்தியில் ஒரு ஈயப் பாத்திரம்; அதற்கு மேலே குளிா்ந்த நீரைக் கொண்ட ஒரு பானை, கீழே ஊறல். நெருப்பினால் அது ஆவியாகி குளிர்ந்த பானையில் பட்டு சாராயமாக மாறி அலுமினியத் தட்டில் உள்ள டியூப் மூலம் வெளியே கேனில் வந்து விழும். இந்தத் தொழிலில் இப்போது விஞ்ஞான நுட்பம் புகுந்திருப்பதாகவும் கேள்வி. குளிர்ந்த பானையில் தண்ணீரை அது சூடானதும் அடிக்கடி மாற்ற வேண்டும். அது சிரமம் என்று, இப்போது பம்ப்செட் தண்ணீரையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை வழியாக விடுகிறார்களாம். ஊறல் கிக்காக 15 நாள் ஆகும். ஆனால் ஒரே நாளில் காரியத்தை முடிப்பதற்காக சில விஷங்களின் ஒரு சில சொட்டுக்களை விட்டு ஒரே நாளில் தேற்றி விடுகிறார்களாம். இந்த விஷச் சொட்டுக்கள் அதிகமானால் தான் அது விஷ சாராயமாக மாறுகிறதாம். ஸ்பெஷல் சாராயத்திற்கு ஊமத்தை விதைகளை ஒரு துணியில் போட்டு சாராயத்தின் மேல் ஒத்தடம் கொடுப்பார்களாம். ஒரு கிராமத்தில் ஒரு கிணற்றில் முக்காலடி உயரத்திற்கு சாராயத்தையே ஊற்றி வைத்திருந்தார்களாம்.

இத்தகைய அனுபவங்களை தாழம்பூவை நாவலாக்கும்போது விரிவுபடுத்தி எழுதினேன். அதே சமயம் எப்படி காய்ச்சலாம் என்ற ஒரு எண்ணத்தை கைத்தொழிலாக கற்றுக் கொடுக்காமல் சமூக பிரக்ஞையோடு இவற்றை எழுத வேண்டும். இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுத்தாலன்றி கள்ளச்சாராய காய்ச்சலை நிறுத்த முடியாது என்று காவல் துறையினரே கூறுகின்றனர். இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போலீஸ் நண்பன்

செங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கள்ளச்சாராய வேட்டையின் இறுதி நாளில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பார்வையிடுவதற்காக வானொலி செய்தி ஆசிரியரான எனக்கும் இந்தத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. அலெக்சாண்டரிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. 500க்கும் அதிகமான காவலர்கள் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்குப் பின்னால் கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராய உபகரணங்கள். என்னை அறிமுகப்படுத்திப் பேசிய, திரு. அலெக்சாண்டர் என்னை போலீஸ் நண்பன் என்று வர்ணித்தார். உடனே கைதட்டல். நான் திடுக்கிட்டேன். பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் எனக்கு வேண்டிய நண்பர்கள் என்றாலும், நான் அவர்களையும், இந்தக் காவல்துறையினரையும், சாடாமல் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், போலீஸ்காரர்கள் ஏழை பாளைகளை லாக்கப்பில் என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை தமிழ் இலக்கியத்தில் என்னைவிட இன்னும் யாரும் நுணுக்கமாகவும், அழுத்தமாகவும், சித்தரிக்கவில்லை. இந்தத் தாழம்பூவிலும், காவல்துறையினர் பெரும்பாலோர் கள்ளச்சாராய ஏஜெண்டுகளாக எப்படி செயல்படுகிறார்கள் என்பதை சித்தரித்து வருகிறேன். இந்தப் பின்னணியில் என்னை போலீஸ் நண்பனாக அறிமுகப்படுத்தியதும், ஒருவேளை நானும் காவல்துறையினரை அவர்களது சூழல் புரியாமல் வரம்புமீறி சாடுகிறேனோ என்று என்னுள் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்த்தபோது போலீஸ் பற்றி எனது அணுகுமுறை மேலும் வன்மையானதே தவிர மென்மையாகவில்லை.

என் வீட்டில் திருட்டு

எனது வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு திருடு நடந்தது. ஒரு டு-யின்-ஒன், இரண்டு கைக்கடிகாரங்கள், பல்வேறு அரசாங்கம் பாஸ்களை கொண்ட லெதர் பேக், 500 ரூபாய் இரவோடு இரவாகப் போய்விட்டன. பத்திரிகைகளிலும் ‘ரேடியோ அதிகாரி வீட்டில் திருடு’ என்று பெரிய செய்தியாக வந்தது. எனக்கு பொருட்கள் திருடு போனதைவிட, நான் விமான நிலையத்திற்குள் எந்த இடத்திற்கும் செல்லக்கூடிய ஏர்போட் பாஸ், பல கேந்திரமான நிலையங்களுக்குள் நுழையக்கூடிய செய்தியாளர் பாஸ், பறிபோனதில் அதிர்ச்சியுற்றேன். யாராவது விமான நிலைய ‘பாஸை’ வைத்துக் கொண்டு அங்கே ஏதாவது கோளாறு செய்யலாம். இதனால் பேரிழப்புகூட ஏற்படலாம். ஆகையால் நான் பதறியடித்து இரண்டு ஐ.ஜிக்களுக்கு டெலிபோன் செய்தேன். அவர்களின் அறிவுரையின்படி அருகே உள்ள காவல்நிலையத்திற்கும் நேரே சென்று எழுத்து மூலமும் புகார் செய்யச் சென்றேன். நான் இன்னார் என்று டெலிபோனில் சொல்லிக் கொண்டும் திருட்டின் விபரீதத்தைச் சுட்டிக்காட்டியும் சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரை ஒரு 10 நிமிடம் காத்திருக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டு புறப்பட்டேன். ஆனால் நான் போனபோதோ, அவர் எங்கேயோ போய்விட்டார் என்ற அலட்சியமான பதில், நான் அங்கே இருந்தவர்களைச் சாடினேன். கோபமாகக் கத்தினேன். புகார் வாங்க மறுத்த ஒரு ஏட்டையாவை வாங்கித்தான் ஆக வேண்டுமென்று வற்புறுத்தினேன். வீட்டுக்கு வந்து சம்பந்தப்பட்ட டெபுடி கமிஷனருக்கு புகார் செய்தேன். ஒரு மணி நேரத்தில் போலீஸ் நாய் வந்தது, போலீஸ் படையும் வந்தது. கைரேகை அது இது என்று என்னவெல்லாமோ எடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. டெலிபோன் செய்தாலோ முறையான பதில் கிடையாது. மேல் அதிகாரிகளுக்கு நான் புகார் செய்தேன் என்பதாலும் காவல்நிலையத்தில் கத்தினேன் என்பதற்காகவும் விபரீதத்திற்கு வித்தாகக் கூடிய ஒரு குற்றத்தைப்பற்றி காவல்துறையினர் அலட்டிக்கவில்லை. எனக்கே இப்படி என்றால் ஏழை பாளைகள் என்ன ஆவார்கள்? இதை எனது பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னபோது, அவரும் ஒரு விவாகரத்தை சொன்னார். யாரோ நான்கைந்து பேர் இரவோடு இரவாக பித்தளைப் பொருட்கள், மோட்டார் பைக் உதிரி பொருட்கள், பம்ப் செட் பாகங்கள் ஆகியவற்றை அருகே உள்ள புதரில் போட்டுவிட்டு சாவகாசமாக எடுப்பதற்காக திரும்பிப் போய்விட்டார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனது நண்பர், தன்னால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும் என்று சொன்னபோது கூட அவரைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து விட்டு “எங்களுக்குத் தெரியும்” என்ற கண்டிப்புப் பதிலோடு போய்விட்டார்களாம். இதேபோல் முதலமைச்சர் போகும்போது காவல்துறையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகளால் ஏழை பாளைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கொத்தவால் சாவடியில் காலையிலே காய்கறிகளை வாங்கிக் கொண்டு அவை வாடும் முன்னே மத்தியானத்துக்குள் விற்று வயிற்றை நிரப்ப வேண்டிய ஏழைமக்கள் போக்குவரத்து போலீஸ் கெடுபிடியால் படாதபாடு படுகிறார்கள். அவ்வளவு ஏன்? - சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் டில்லியிலிருந்து வந்திறங்க வேண்டும். விமானம் வருவதற்கு முன்பு, அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையின் விமான சாலைப் பகுதியை காவல்துறையினர் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் அன்றிரவு விமானம் ஒரு மணி நேரம் லேட். அப்போது கூட போக்குவரத்தை மாமூலாக்கிவிட்டு மீண்டும் முடக்கிக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் நினைக்கவில்லை. முதலமைச்சர் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் போவது வரைக்கும் யாரையும் விடப்போவதில்லை என்று ‘ஒருவழி’ செய்து விட்டார்கள். இவற்றையெல்லாம் தாழம்பூவில் கொண்டு வந்திருக்கிறேன்.

அலுவலக கேசுவல்கள்

இந்தத் தொடர்கதையில் ஒரு அம்சம் அலுவலக கெடுபிடிகள். மக்களுக்கு அரசு அலுவலகத்தின் கெடுபிடிகள்தான் தெரியும். ஆனால் அந்த அலுவலகங்களுக்குள்ளேயே நடக்கும் அத்துமீறல்கள் அதிகமாகத் தெரியாது. உதாரணமாக நிரந்தரமான ஆட்கள் விடுமுறையிலிருந்தால், அந்த இடத்தில் ‘கேஷ்வல்கள்’ என்ற பெயரில் வெளியாட்களை நியமிப்பார்கள். மாதம் ஆறு நாளைக்கு அன்றாட சம்பளத்தில் வைத்துக் கொள்ளலாம். எனது செக்ஷனிலே 7, 8 பட்டதாரிகளும் நான்கைந்து பியூன் வேலைக்காரர்களும், 10, 15 டைப்பிஸ்டுகளும் பணியாற்றுகிறார்கள். இந்த கேஷவல்கள் என்றாலே நிரந்தரமானவர்களுக்கு இளக்காரம். ஒரு தடவை ஒரு டைப்பிஸ்டு பெண் ஒரு பியூனைப் பார்த்து ஒரு டீ வாங்கிக் கொண்டு வரச்சொன்னபோது, “உனக்கா, கேஷ்வலுக்கா, வேற ஆளைப் பாரு” என்று பதில் வந்ததாம். எனது டெலிபோன் எஸ்.டி.டி. வசதி கொண்டது. நான் இல்லாத சமயத்தில் பலர் கேஷவல் பையனை மிரட்டி திருட்டுத்தனமாய் பல நகரங்களுக்கு டெலிபோன் செய்வதாகக் கேள்விபட்டேன். அந்தப் பையனைக் கூப்பிட்டு இத்தகைய பேர்வழிகளின் பட்டியலைக் கேட்டேன். அவன் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும், சொல்ல மறுத்து விட்டான். அப்படி அவன் சொல்லியிருந்தால் அவனை பாஸ் இல்லையென்று சொல்லி கேட்டில் நிறுத்தலாம். அவனுக்கு ‘பில்’ போடாமல் போகலாம். ஏதோ ஒரு திருட்டை அவன் மீது போடலாம். அவன் சொல்ல மறுத்ததால் நான் வேறுவழியின்றி அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டேன். ஆனால் அவனோ ஒருவார காலம் என் பிரிவையே சுற்றிச் சுற்றி வந்தான். உள்வாங்கிய கண்களோடு, ஒட்டிப்போன வயிற்றோடு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. என் அறைக்குள் அவனைக் கூப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை சொன்னால்தான் வேலையில் சேர்ப்பேன் என்றேன். அவனும் “டெலிபோன் சாவியை நான் கொடுக்காட்டி ஒங்க அப்பன் வீட்டு சொத்தாடா... கேஷுவல் பையா” திட்டுவாங்குவதாக அழுதான். ஆனால் நிசமான டெலிபோன் திருடர்களின் பெயரைக் கொடுக்காமல் “வாய் செத்த” அப்பாவிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன்னை அப்படி மிரட்டுவதாகச் சொன்னான். எனக்கு அது பொய் என்று தெரியும். அதேசமயம் அவனுடைய நிலைமையும் புரிந்தது. அவன் ஏதோ உண்மையைச் சொல்வது போலவும், அதை நான் நம்புவது போலவும் ஒர பாவலா செய்து அவனை வேலையில் சேர்த்துக் கொண்டேன். கேஷுவல்கள் இந்தக் காலத்து தீண்டத்தகாதவர்களாய் எல்லா அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையையும் தாழம்பூ எடுத்துச் சொல்கிறது.

பேட்டை ரெளடிகள்

எங்கள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள குப்பங்களில் பேட்டை ரவுடிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆறுகொலை செய்துவிட்டு, அண்மையில் சிறைச் சாலையிலிருந்து திரும்பிய ஒருவரின் அண்ணனுக்கு சிலை வைக்க முயற்சி நடைபெறுகிறது. இதற்கு ஒரு அமைச்சரே பொறுப்பேற்று இருப்பதாகக் கேள்வி. பொதுவாக அமைதியும் அப்பாவித்தனமும் கொண்ட குடிசை மக்களிடையே இத்தகைய கொடுங்கோல், அரசியல் பின்னணியுடன் ஆதிக்கம் செலுத்துவதை கண்கூடாகப் பார்க்கிறேன். ஆகையால் தாழம்பூவில் ஒரு ‘அண்ணாத்தே’ வருகிறார். அவர் பேட்டை ரவுடிகளின் ஒட்டு மொத்தமான உருவம்.

தாழம்பூ பொதுவாக அதிகமாய் மணக்காது. ஆனால் எனது தாழம்பூவை மீண்டும் விரிவாகவும் திருத்தியும் மேலே சொன்ன விவரங்களை உள்ளடக்கியும் நாவலாகக் கொண்டு வந்தேன். இது காகிதப்பூவாக இருந்தாலும் நிச்சயம் மணக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நாவல் பாலக்காடு பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர் ராஜாராம் தெரிவித்தார்.