எனது கதைகளின் கதைகள்/சாமியாடிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2
சாமியாடிகள்


ங்கள் ஊரில் (திப்பணம்பட்டி) கல்லெல்லாம் சாமி சிலைகள். கட்டிடங்கள் எல்லாம் கோவில்கள். உதிரமாடன் கோவில், சுடலைமாடன் கோயில், கோட்டை மாடன் கோவில், மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், ஐவராஜா கோவில், திரெளபதியம்மன் கோவில் என்று சுமார் முப்பது கோவில்கள். உதிரமாடன் கோவிலில், அவரே கதாநாயகன். மாடத்தி, சுடலைமாடன், வீரபுத்திரன், மயானபுத்திரன் ஆகியோர் “எக்ஸ்டிரா” தேவதைகள். இதேபோல், கோட்டை மாடன் கோயிலில், அவர் கதாநாயகன்; உதிரமாடன், சுடலைமாடன் எக்ஸ்டிராக்கள், இப்படி எக்ஸ்டிராக்கள்; கதாநாயகர்களாகவும், கதாநாயகர்கள், நாயகிகள் எக்ஸ்டிராக்களாகவும் உள்ள கோவில்களில் சாமியாட்டம் என்பது இந்தக் காலத்து சினிமா மாதிரி. சாமியாடும் ஒருவரின் பின்னங்கைகளில் கயிறு கட்டப்பட்டிருக்கும். அதே சமயம், அந்தக் கைகளை முன்னால் கொண்டுவரும் அளவிற்கு அந்தக் கயிறு நீக்குப்போக்காக இருக்கும். அவர் முன்னால் ஒரு பனை ஓலையில், முழுக்கோழியை அடித்து வைத்திருப்பார்கள். அவர் சாப்பிடுவதற்காக தலை குனியும்போது, கயிறு மூலம் பின்னால் இழுக்கப்படுவார். ஆனாலும், சாமியாடி அந்தக் கோழியைத் தின்றாக வேண்டும். இல்லையேல், அவர் சாமியே இல்லையென்று அனுமானிக்கப்படுவார். இதேபோல், காளியாத்தா சாமியாடி, வெட்டப்பட்ட ஆட்டின் இரத்தத்தை பச்சையாகக் குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஊர்க்காரர்கள் அந்தச் சாமியாடியை “பச்சை”யாகத் திட்டுவார்கள். எங்கள் ஊரில் பிள்ளைமார்கள், முருகனையும், பிள்ளையாரையும், எலுமிச்சை பழத்தோடு வழிபட்டபோது, எங்கள் ஆட்களும், ஆதிதிராவிட மக்களும், பன்றி, ஆடுகளை கோயில்களில் கொன்று குவித்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். இருக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், ஒரு கோவிலில் ஒரு நிகழ்ச்சி - நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிகழ்ச்சி. ஏதோ நிகழ்ச்சி. ஏதோ ஒரு ஆடி மாதம். ஊருக்கு ஒரு புறத்தில் உள்ள ஒரு மாடன் கோவிலில் விசேஷம், கணியான் பாடுகிறார். மேளம் ஒலிக்கிறது. இரயில்வே இலாகாவில் பணிபுரியும் ஒருவர், சாமியாடத் தயார் ஆகிவிட்டார். வழக்கமாக ஆடுபவர். பொதுவாக கதாநாயக சாமி, இதர சாமிகள் ஆடி அடங்கும் போதுதான் ஆடத் துவங்கும். நான் சொல்கிறவர், அழகாக இருப்பவர். ஒல்லியான - உறுதியான உடம்பு. அவர் தலையை ஆட்டத் துவங்கியதும், அவரது சட்டையைக் கழற்றிவிட்டு, வேட்டியைத் தார்பாய்த்துவிட்டு, சந்தனத்தை அப்பினார்கள். கரத்தில், கற்பூரத் தட்டைக் கொடுத்தார்கள். கெட்டிமேளம் முழங்கியது. அவ்வளவுதான். ஆசாமி பம்பரம் போல் சுழன்றார்.

பத்து நிமிடத்திற்குள், இன்னொரு குரல் கேட்டது சற்று கட்டையான மனிதர். குஸ்தி பயில்வான் போன்ற தோற்றம். அவர் ஒரு தீப்பந்தத்தை கையில் வைத்துக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டே வந்தார். “நான்தான்டா கோட்டை மாடன். நீ எப்படிடா ஆடலாம்” என்று கத்தியபடியே வழக்கமாய் சாமியாடுபவரைத் தடுத்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். ஒருவரையொருவர், அடித்துக் கொண்டார்கள். எப்படியோ பிரித்து விடப்பட்டு இருவரும் ஆடிக் கொண்டிருந்தபோது, முதல் சாமியாடியின் சொந்தக்காரர்கள், ஏற்கெனவே ஆடுபவர்தான் ஆடவேண்டுமென்று வாதித்தார்கள். புதுச் சாமியாடியின் சொந்தக்காரர்கள், அவர்தான் ஆடவேண்டுமென்றார்கள். அடிதடி , சண்டை; எந்தச் சாமியாடி உண்மையான சாமியாடி என்று சோதித்துப் பார்க்க மனமில்லாமல், சொந்தங்களை வைத்து நிசமான சாமியை தீர்மானிக்கப் போனார்கள். புதுச்சாமி ஆள்பலம் இல்லாதவர். இறுதியில் அடித்து விரட்டப்பட்டார். நிசமான சுடலைமாடனே அங்கே வந்து “இந்த சாமியாடியிடம்தான் நான் ஆடுகிறேன்” என்று சொல்லி இருந்தாலும், மாற்றுச் சாமியாடியின் ஆட்கள், ஒரிஜினல் மாடனைக் கூட விரட்டி அடித்திருப்பார்கள். இதை வைத்து விகடனில் “சாமியாடிகள்” என்ற தலைப்பில் கதை எழுதினேன். ஏற்கனவே ஆடும் சாமியாடியை, “ஆடும் சாமியாடி” என்றும், விரட்டப்பட்ட சாமியாடியை, “ஸ்தாபன சுடலைமாடன்” என்றும் அந்தக் காலத்து அரசியல் பின்னணியில் பெயர் வைத்தேன்.

அய்யாசாமியும் - பட்டிகளும்

இந்தச் சிறுகதைகளில் அய்யாசாமி என்ற ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தினேன். இந்தக் கதைகள் நிகழும் இடத்தை, குட்டாம்பட்டி என்று அழைத்தேன். அய்யாசாமி ஆள்பலம் இல்லாத மிதவாதி. அதாவது இப்படி நடக்க வேண்டுமென்று நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் இருக்கும் நம்மைப் போன்றவர். இவர் பேச்சில் நியாயம் இருந்தாலும், கேட்பார் கிடையாது. இந்தப் பாத்திரத்தை, எனது பெரும்பாலான சிறுகதைகளிலும், நாவல்களிலும் கொண்டு வந்திருக்கிறேன். இதேபோல், குட்டாம்பட்டியை, மையமாக்கி பல கதைகள் எழுதுகிறேன். பழமையில் ஊறியிருப்பவர்களைச் சித்தரிப்பதற்கு குட்டாம்பட்டி என்ற ஊரை எழுதினேன். “ஒரு கோட்டுக்கு வெளியே” நாவலில் குட்டாம்பட்டி வந்தது. வெறுமனே பேசிக்கொண்டு கிராமத்துப் பாணியில் சொல்லப் போனால், ‘கீராமுட்டித்தனமாக’ அல்லது ஏட்டுச் சுரைக்காயாக இருப்பவர்களை சுட்டிக்காட்ட “சட்டாம்பட்டி” என்ற பெயரைக் கொண்டு வந்தேன். ஒருவரிடம் மணி கேட்கும்போது, அவர் அதைத் தாமதமாகச் சொன்னால், அதற்காகவே, அவரைக் கொலை செய்யும் அளவிற்குச் செல்லும் மனிதர்களின் நடமாட்டத்தைக் காட்ட “வெட்டாம்பட்டி” என்ற ஊரைப் பெயராகச் சூட்டினேன். அதே சமயம் காலப்போக்கில் இந்த மூன்று பட்டிகளும் மாறுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்ட நான் தவறவில்லை. இந்த மூன்று வித அளவுகோல்களை அதாவது பழமைவாதிகள், புதுமை என்று பெயரில் உள்ள பொய்யர்கள், புரட்சிக்கு தயாராகக் கூடிய முரடர்கள் ஆகியோரைச் சுற்றியே என் படைப்புக்கள், இதுவரை வருகின்றன.

எனது கதைகள் முற்போக்கு நிறைவுடன் அல்லது தார்மீகக் கோபத்தை எழுப்பும் அம்சத்துடன் முடியும். பெரும்பாலான கதைகள் நிஜக்கதைகள். இதனால் “சாமியாடிகள்” சிறுகதையும், “ஒரு கோட்டுக்கு வெளியே” நாவலும் என்னைச் சிக்கல்களில் சிக்க வைத்தன.

‘சாமி ஆடிகள்’ - வெளியான பிறகு

ஆனந்த விகடனில் “சாமி ஆடிகள்” சிறுகதை வெளியான ஒரு மாதத்திற்குள் கித்தாப்புடன் ஊருக்குப் போனேன். என் உறவினர்களும், ஊரார்களும் என்னை பிரமிப்பாக பார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணம்; ஆனால் ஊருக்குப் போனவுடனேயே என்னை வாயார வாழ்த்தி வரவேற்பவர்கள் கூட, ஏற இறங்கப் பார்த்தார்கள். ஊர்க்காரர்களைக் கதாநாயகர்களாக்கிய பெருமையில் போன என்னை, அசல் “வில்ல”னைப் போலப்பார்த்த பெரும்பாலோர் என்னிடம் பேசவில்லை. நானே வலிய பேசினாலும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். வீட்டுக்குப் போன பிறகு, என் குடும்பத்தினர் விவரம் சொன்னார்கள். நான் எங்கள் ஊரைப் பத்திரிகையில கேவலப்படுத்தி விட்டதாக ஊரில் ஒரு பேச்சு அடிபடுவதாகக் கூறப்பட்டது. ஊரிலிருந்து நகரங்களில் வேலை பார்க்கும் படித்த பையன்கள் ஊரிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்களே தவிர, இப்படி சமுத்திரத்தைப் போல் கேவலப்படுத்தியது இல்லை என்றும் பேசிக் கொண்டார்களாம். இதில் ஒரு வேடிக்கை. நான் ஆடும் சுடலைமாடனாக காட்டிய பாத்திரத்திற்கு “முத்துப் புதியவன்” என்று பெயர் வைத்திருந்தேன். இது தற்செயலாக வைத்த பெயர். சாமி ஆடியவர் வெளியே வேலை பார்த்ததால் எனக்குப் பரிச்சயம் இல்லாதவர். சாமி ஆடும்போது மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறேன். அதுவும் “சல்லடையும், குல்லாயுமாக” அவர் பெயரும் முத்துப்புதியவன் என்பது ஊருக்குப் போன பிறகுதான் தெரிந்தது. ஆகையால் அவரது குடும்பத்தினர் நான் வேண்டுமென்றே இழிவு படுத்துவதற்காக எழுதியதாக நினைத்துக் கொண்டார்கள். நல்ல வேளை, அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பதால், அடிதடி வராமல் போய்விட்டது. ஆனாலும், அந்தக் குடும்பத்தினர் இப்போதுகூட என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. என்றாலும், என்னையும், என் குடும்பத்தையும் தாக்கி நான் பல கதைகள் எழுதியிருப்பதை அறிந்து அவர்களின் துவேசம் ஆவேசமாக மாறி இப்பொழுது அதுவும் குறைந்து விட்டது.

குறிப்பு: இப்போது, கிராமத்துக் கோயில்களில் பன்றிகளைப் பலியிடுவது நின்றுவிட்டது. வில்லுப்பாட்டும், கணியன் கூத்தும் போய் வீடியோ புகுந்துவிட்டது. சாமியாடிகள் இடைவேளையில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப் படுகிறார்கள்.