உள்ளடக்கத்துக்குச் செல்

எனது கதைகளின் கதைகள்/‘ஒரு கோட்டுக்கு வெளியே’

விக்கிமூலம் இலிருந்து

3
‘ஒரு கோட்டுக்கு வெளியே’
- பிறந்த கதை


துவரை நான் எழுதிய எட்டு நாவல்களில், “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற எனது படைப்பு பிரபல திறனாய்வாளர்களான வல்லிக்கண்ணன், “செம்மலர்” ஆசிரியர் திரு.கே.எம். முத்தையா, பேராசிரியர் பாக்கியமுத்து, பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து, சிட்டி - சிவபாத சுந்தரம், செந்தில்நாதன், எஸ்.ஏ. பெருமாள், கதிரேசன் ஆகியோராலும், பல்வேறு வாசகர்களாலும் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இதனால் ஒரு வேளை இந்த படைப்பிலிருந்து நான் முன்னேற முடியவில்லையோ என்று எனக்குள்ளே ஒரு சந்தேகம் எழுவதுண்டு. என்றாலும், இந்த நாவல்தான் எனக்கும் பிடித்த நாவல். “சோற்றுப்பட்டாளம்” முதலில் அச்சில் வெளிவந்தாலும், என் எழுத்தில் முதலாவது வந்த நாவல் இதுதான். அனுபவப்பட்ட எழுத்தாளன் ஆனபிறகு, உருவாகிய படைப்புகளை விட, இந்த நாவல் எப்படி மக்களைக் கவர்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கே காரணங்கள் புரியவில்லை. ஒருவேளை, உத்தி, உள்ளடக்கம், உருவம், உதாரணங்கள் போன்ற இலக்கியத் தொல்லைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்குத் தோன்றியதை உள்ளது உள்ளபடியே எழுதியதே இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே இந்த நாவலை இந்தக் கட்டுரைக்காக மீண்டும் படித்தபோது என்னை நானே ஒரளவு பூட்டி வைத்திருக்கும் இலக்கியச் சிறையிலிருந்து மீள வேண்டும் என்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. இந்த நாவல் பிறந்த கதையைப் பார்ப்போம்.

அப்போது தமிழகத்தின் வடபகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நேரம். நான் மத்திய அரசில் செய்தி விளம்பர அதிகாரி என்ற முறையில் செங்கை மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் திரைப்பட பிரிவுடன் முகாமிட்டிருந்தேன். பயணிகள் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது பலத்த மழை. அங்குள்ள ஏரி உடைந்து விடுதிக்கு வரக்கூடிய அபாயம். வெளியுலகத்திற்கும் எனக்கும் தொடர்பு அற்றுப் போய்விட்டது. எப்படியோ ஒரு நண்பர் கஷ்டப்பட்டு ஒருவேளை சாப்பாடு கொடுத்தார் என்பதைத் தவிர, மற்றப்படி எந்த ஆள் அரவமும் இல்லாத சூழல். அப்போது எனது கடந்தகால வாழ்க்கையை நினைத்து பார்க்கத் துவங்கினேன். அப்படித் துவங்கியபோது-

உள்மன ஓட்டங்கள் வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து, எனது பெரியமனிதர் கரையை உடைத்து நினைவு வெள்ளமாக ஓடத் துவங்கியது. இளமையில் கணவனை இழந்து கைம்பெண்ணான என் அன்னையை சொந்த ஜாதியினர் நடத்திய விதமும், என் அம்மா எனக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டதும், நினைவுக்கு வந்தன. இதேபோல் எனது சாதியினரான நாடார்களே அந்தச் சாதியில் உள்ள பதநீர் இறக்கும் பாட்டாளிகளை “பனையேறிப் பயலே” என்று திட்டுவது திடீர் நினைவாகியது. எனக்கு பத்து வயது இருக்கும்போது பக்கத்தூரில் நடந்த ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. வயதுக்கு வந்த ஒரு ஏழைப் பெண்ணை கிட்டத்தட்ட அதே வயதுள்ள ஒரு பண்ணையார் - வாலிபன், சாட்டைக்கம்பால் அடித்துக் கொண்டிருந்தான். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவன் செய்வது அடாவடித்தனம் என்பதை அறிந்தவர்கள் போல் முணுமுணுத்தார்கள். ஆனால் எவரும் எதிர்ப்பைக் காட்டவில்லை. இந்த “செல்லாக் கோப”ப் பொறுமை சாலிகளின் இயலாமையால் நான் கொதித்துப் போனேன். அதே சமயம் என்னாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால், அந்தப் பெண் அவன் கொடுத்த அடிகளையெல்லாம், கம்பீரம் கலையாமல் வாங்கிக் கொண்டே, அவனும், அவன் குடும்பத்தாரும் செய்த அயோக்கியத்தனத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். தன்னந்தனியாக ஒரு முரடனை சகல பலவீனங்களுடனும் பலமாகச் சாடிக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சியை நான் ஊருக்குத் திரும்பிய பிறகும் பல இரவுகளில் திடுக்கிடும் கனவாகக் கண்டதுண்டு.

சேரிப் பால்

நான் பிறந்தபோது என் அன்னை எனக்குப் பால் கொடுக்க முடியாத நிலை. மார்பில் கட்டியோ புண்ணோ இருந்ததாகக் கேள்வி. அப்போது தாய்ப் பால் இல்லையென்றால் குழந்தை தேறாது என்ற அதாவது புட்டிப்பால் யுகம் தோன்றாத காலம் - என்னை எப்படியும் காப்பாற்றி என் அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த அரிசன மக்கள் (என் அம்மா வயதுடைய தாய்மார்கள்) எனக்கு மாறி மாறி பால் கொடுத்தார்கள். எனக்கு இன்னும் கூட அப்படி ஒரு தாயிடம் பால் குடித்தது நினைவில் இருக்கிறது. அதோடு என்னை இடுப்பில் எடுத்துக் கொண்டு வயல் வரப்பிற்கு செல்லும் என் அன்னை சேரித் தாய்மார்களுடன் தான் படும் துயரங்களைத் தெரிவித்ததும், அந்த தாய்மார்கள் என் தாய்க்கு அவ்வப்போது ஆறுதல் சொன்னதும் எனக்கு இன்னும் மனதில் பசுமையாக உள்ளன. ஊரில் வழக்குப் பேசும் பெரிய மனிதர்கள் எப்படி ஆளுக்குத் தக்கபடி நீதி வழங்கினார்கள் என்பதையும் காதாரக் கேட்டு, கண்ணாரக் கண்டேன்.

ஊராட்சி ஒன்றியங்கள் துவக்கப்பட்ட நேரம். பெருந்தலைவர் காமராஜரின் அரும்பெரும் பணியால் பல்வேறு கல்விக்கூடங்கள் திறக்கப்பட அரிசன இளைஞர்கள் தத்தம் உரிமைகளை சேரி மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனது சொந்தக் கிராமமான திப்பணம்பட்டிக்கு அருகே பாவூர் சத்திரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கந்தசாமி என்ற அரிசனப் பையன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். மத்தியானம் நாங்கள் ஒன்றாகச் சாப்பிடுவது உண்டு. ஒருநாள் எனது உணவு டப்பா அவனிடமும், அவனுக்குரியது என்னிடமும் எப்படியோ மாறிவிட்டது. நான் அவனது உணவு டப்பாவைப் பிரித்து எடுத்து உண்டுவிட்டேன். பிறகுதான் இது “அரிசனனுக்குரியது” என்பதை உணர்ந்து முகம் சுளித்தேன். உடனே அந்த கந்தசாமி விஷயத்தைப் புரிந்து கொண்டு, இன்னும் திறக்காத என் உணவு டப்பாவை என்னிடம் நீட்டிவிட்டு, நான் எச்சில் படுத்திய தனது டப்பாவை வாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காதது போல் சாப்பிடத் துவங்கினான். நான் வெட்கித் தலை குனிந்தேன். அன்று முதல் நாங்கள், தோழர்களாக இருந்தோம். இளமையிலேயே தாய் தந்தையை இழந்த எனக்கு பல்வேறு வித இன்னல்கள். அப்போது ஆறுதல் சொன்னவர்கள், ஆற்றுப்படுத்தியவர்கள் பெரும்பாலும் சேரித் தோழர்களே.

சித்தியின் போராட்டம்

இப்படி பல்வேறு நினைவுகள் ஏரிக்கரை மேல் உள்ள பயணிகள் விடுதியில் தங்கியிருந்த எனக்கு நினைவுக்கு வந்தன. அந்தச் சமயத்தில் என் சித்தி திருமதி. ராசம்மா சொந்தக் கிராமத்தில் நடத்திவந்த போராட்டம் நினைவுக்கு வந்தது. இவர் எனது அம்மாவின் தங்கை. எனது தந்தையின் தம்பியான திரு. பாண்டி நாடாருக்கு என் நலன் கருதி திருமணம் செய்து வைக்கப்பட்டார். சித்தப்பா வட சென்னையில் கோணி வியாபாரம் செய்தார். நான் இவர்களுடன் தங்கி எனது கல்லூரிப் படிப்பை முடித்தேன். இவர்கள் தான் எனக்கு அம்மா அப்பா. நான் வேலையில் சேர்ந்தபோது, சித்தப்பா புற்றுநோயால் மரணம் அடைந்தார். சித்தி கிராமத்திற்கு குழந்தை குட்டிகளோடு சென்று கொஞ்ச நஞ்சமிருந்த நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்கோ, அவர்களுக்கு ஓரளவுதான் பொருளாதார ரீதியாக உதவக்கூடிய நிலை. இந்தச் சமயத்தில் ஊரில் இருந்த பங்காளிகள் என் சித்தி குடும்பத்தினரை படாதபாடு படுத்தினார்கள். நான் நினைத்திருந்தால், எனக்குச் சென்னையில் காவல் துறையிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை உள்ளே தள்ளி அடக்குவதற்கு அதிக நேரம் ஆகியிருக்காது.

அதே சமயம், ஒரு ஏழை குடும்பத்தில் படித்து சப்-இன்ஸ்பெக்டராக உயர்ந்த ஒரு வாலிபன் எப்படி தனது சொந்தக்காரர்களையே சிறையில் போடுகிறான் என்று நான் “எந்நன்றி கொன்றார்க்கும்” என்று ஆனந்த விகடனில் எழுதிய சிறுகதை நினைவுக்கு வந்தது. ஆகையால், என் உறவினர்களுக்கு எதிராக என்னால் செயல்பட மனம் வரவில்லை. அதேசமயம் என் பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் அவர்களை அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டிருந்தேன். காட்டாற்று வெள்ளம் பாய்ந்த அந்த வேளையில், என் சித்தி அவர்களை எதிர்த்து தீரமாகப் போராடியதும், சொத்தில் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருந்ததும், நெஞ்சில் நினைவுகளாக நங்கூரம் பாய்ச்சின.

உடனடி விருப்பம்

இப்படி அந்த ஏரிக்கரை விடுதியில் நினைத்து பார்த்த சம்பவங்களை எழுதியாக வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது. உடனடியாக எழுதத் துவங்கினேன். அப்போது லியோ டால்ஸ்டாயை நான் படித்ததில்லை. ஆனாலும், அவர் சொன்னது போல் பத்துப் பக்கங்களுக்குப் பிறகு, அந்தப் பாத்திரங்களே “என்னை இப்படி எழுது அப்படி எழுது” என்று உத்திரவிட்டன. முக்கால்வாசிப் பகுதியை நான்கு நாட்களில் உத்திரமேரூரில் முடித்துவிட்டு எஞ்சிய பகுதியை வீட்டில் வந்து எழுதினேன். உலகம்மை பட்ட இன்னல்களை விவரிக்கும்போதெல்லாம் என்னை அறியாமலேயே அழுகை வந்தது. கிட்டத்தட்ட ஒரு குழந்தை போலவே அழுதேன் என்று சொல்லலாம். இதே அநுபவம் டால்ஸ்டாய்க்கு பல தடவை ஏற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

நாவலின் நோக்கம்

இந்த நாவலை நான் மீண்டும் திருத்தி எழுதவில்லை. இலக்கணப் பிழைகளை வேண்டுமானால் ஆங்காங்கே திருத்தி இருப்பேன். இந்த நாவலின் நோக்கம் ஒரு சாதிக்குள்ளும் எப்படி இரு வர்க்கங்கள் செயல்படுகின்றன என்பதைக் காட்டுவதாக அமைந்தது. இது நாடார் சாதியை மட்டும் குறை கூறுவது போல் இருக்கக்கூடாது என்பதற்காக பேராசிரியர் பாக்கியமுத்து அவர்களை படித்துக் கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டேன். அதோடு பல்வேறு நாவல்களை கரைத்துக் குடித்த அவரது கருத்தை அறிந்து கொள்ளவும் விரும்பினேன். இந்த நாவல் பூம்புகார் நிலையத்தினர் மூலம் வெளியாவதாக இருந்தது. அப்போது, கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த பேராசிரியர் பாக்கியமுத்து இந்த நாவலை சி.எல்.எஸ். தான் வெளியிடும் என்று சொன்னார். பல்வேறு நாவல்களை அவற்றின் ஒரு சில பலவீனங்களுக்காக பிரசுரிக்காமல் இருக்கும் பேராசிரியர், இப்படிச் சொன்னது என்னை நெகிழச் செய்தது. நானும் உடன்பட்டேன். பின்னர், பேராசிரியர் பாக்கியமுத்து மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டு, உலகம்மை சேரிக்கு புறப்படுவதோடு நாவலை நிறுத்திவிடலாம் என்றும், அதற்குப் பிறகு அவள் சேரியில் சந்திக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய இரண்டு அத்தியாயங்கள் தேவை இல்லை என்றும் கூறினார். அதேசமயம் முடிவைப் பெருந்தன்மையாக என்னிடமே விட்டுவிட்டார். நானும் இணங்கினேன்.

அரங்கேற்றமும், அடிதடி நிலைமையும்

இந்த நாவலை அரங்கேற்றிய பெருமையும் பேராசிரியர் பாக்கியமுத்துக்கே உரியது. சி.எல்.எஸ். நிறுவனத்தில் இதில் 300 பிரதிநிதிகளே விற்பனையாயின. இது நூலகங்களிலும் வைக்கப்படவில்லை. அப்படியிருந்தும், ‘சு. சமுத்திரம் என்றால் ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற பெயர் ஏற்பட்டது. பேராசிரியர் பாக்கியமுத்து கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தில் ஆண்டுதோறும் நடத்திவந்த நண்பர் வட்டம், இலக்கிய ஆய்வு ஒன்றில் இந்த நாவலை பிரகடனப்படுத்தியதும், ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கச் செய்ததும் இதன் வெற்றிக்கு ஒரு - ஒரே காரணம் என்று நினைக்கிறேன். இந்தச் சமயத்தில், குமுதத்தில் சுஜாதா எழுதிய ஒரு தொடர்கதை சாதிப் பிரச்சினையை கிளப்பிவிட்டது. ‘கள்ளச் சாணாள் ஒத்திப்போ’ என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் வெளியாகின. குமுதம் அலுவலகத்திற்கு அருகே ஒரு கல்யாண வீட்டில், இந்தத் தொடர்கதை, நாடார் குலத்தைக் கேவலப்படுத்துவதாகக் கூறப்பட்டு, அங்கிருந்த நாடார்கள் அனைவரும் குமுதம் அலுவலகம் சென்று வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்; குமுதம், நிர்வாகத்தினரை கோபத்தில் ஏதேதோ திட்டியிருக்கிறார்கள். உடனே ஒருவர்: ‘நமது குலத்திலேயே ஒரு கருங்காலி - சமுத்திரம் என்பவன் நாடார் சாதியை கேவலமாக எழுதியிருக்கிறான்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட, அங்கிருந்தவர்கள் என் வீட்டை நோக்கிப் படையெடுக்கத் தீர்மானித்தார்களாம். என் வீடு அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், மேலும், அந்தக் கூட்டத்தில் இருந்த என் நண்பர்கள் தாக்குதலுக்குப் புறப்பட்டவர்களைத் தடுத்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன். இதற்குக் கூட, நான் அதிகமாக வருத்தப்படவில்லை. ‘ஓங்கிய பனைமரங்களிலே வீரமாக ஏறிய பாட்டாளி பரம்பரை நாங்கள்’ என்று பெருமிதப்பட வேண்டிய என் சாதியினர், ‘நாங்கள் ஆண்ட பரம்பரையாக்கும்’ என்று பல இடங்களில் ஊர்வலமாகப் போனதுதான் எனக்கு வேதனையாக இருந்தது.

இந்தப் பின்னணியில் எழுத்தாளர் சுஜாதாவை ஒரு தடவை சென்னை வானொலி நிலையத்தில் சந்தித்தேன். அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நண்பர், “நானும் கிராமியத்தை” எழுதுகிறேன் என்று சொன்னபோது, ‘ஆனாலும் சமுத்திரம் மாதிரி எழுதமுடியாது’ என்று பதிலளித்தார். அந்த உரிமையில் வானொலி நிலையத்தில் அவரைப் பார்த்தபோது இப்படிச் சொன்னேன்: “சுஜாதா சார்! நீங்கள் போட்ட ஒரு சில வார்த்தைகளில் தவறில்லை. ஆனால் ஒரு பனை ஏறி, மனைவியின் மார்புத்துணியை வெள்ளைக்காரன் வாளால் விலக்குவது போலவும், அதை அந்தப் பனை ஏறி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் எழுதுனிங்க-பனை ஏறி போன்ற பாட்டாளிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு சொத்து தன்மானம் தான். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஆயுதம் பாளை அறுவாள். அந்தத் தொடர்கதையில் நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை உங்களை அறியாமலேயே கொச்சைப்படுத்தியதாக நினைக்கிறேன்.”

ஆனாலும், சுஜாதாவிற்கு நான் பேசியது பிடிக்கவில்லை என்பதை அவரது முகம் சொன்னது. “மாடசாமி, பின்னால் கதாநாயகனாகப் போகிறான் என்பதற்குப் பிண்ணணியாக இதை எழுதினேன். இது கிளை மாக்ஸிற்கு உதவும்” என்றார். அவர் நாடார் சாதியை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தத் தொடர்கதையை எழுதவில்லை. எப்படியோ அவருக்கு எதிராக நாடார் சாதியினரைத் தூண்டிவிட்ட நாடார் எழுத்தாளர்களில், நானும் ஒருவன் என்பதுபோல் பத்திரிகை உலகில் அப்போது பேச்சு அடிபட்டது. பல்வேறு நாடார் அமைப்புகளில் என்னை பலர் தாக்கிப் பேசியதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு சில நாடார் அமைப்புகள் என்னை பேச வரும்படியும் அழைத்தன. ஒரு எழுத்தாளன், சாதிகளுக்கு அப்பால்பட்டவன். எந்த சாதிக் கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்துள்ளவன் நான். ஒரு சமயம் திரு நா.பார்த்தசாரதி தினமணிக் கதிரில், சாதி மலர்களை போட்ட போது - நாடார் மலர் வந்த போது என்னிடம் புகைப்படம் கேட்டார். நான் என்னை எந்த சாதிக்குள்ளும் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றேன். அப்படியும், அவர் என் புகைப்படத்தை வெளியிட்டார்.

குறிப்பு

1. ஒரு கோட்டுக்கு வெளியே நாவல் அகில இந்திய வானொலியில் 14 மொழிகளில் ஒலிப்பரப்பாயிற்று. நேஷனல் புக் டிரஸ்ட் இதை 14 மொழிகளில் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, சென்னை வானொலி நிலைய வர்த்தக ஒலிபரப்பு இயக்குநர் திருமதி விஜயலட்சுமி சுந்தரராஜன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு, இந்தியில் வெளியாகி உள்ளது. சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. எழுத்தாளர் ஜானகிராமன் அவர்களை நான் டெல்லியில் சந்தித்தபோது இதன் நாடக வடிவத்தை மனமாறப் பாராட்டினார்.