எனது கதைகளின் கதைகள்/006-022
சேரி வாசனை
மண்வாசனையை வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நான் இப்போது சென்னை நகருக்கு உங்களை இழுத்துக் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன். நான் வேண்டும் என்றுதான், அழைத்துக் கொண்டு என்று சொல்லாமல், இழுத்துக்கொண்டு என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறேன். காரணம், சேரியின் பின்னணியோ சின்னான், மங்கம்மா போன்ற பெயர்களோ, வருகின்ற கதைகளை மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நாம் விரும்பிப் படிப்பதில்லை. என்னுடைய துரதிருஷ்டம் நான் யாருக்காக கதை எழுதுகிறேனோ அவர்கள், என் கதைகளைப் படிக்கும் நிலையில் இல்லை. ஆனாலும், வாசக நண்பர்கள், நண்பர் வட்டத்தில் நான் மூச்சுவிட்ட மண்வாசனையை தாங்களும் பகிர்ந்து கொண்டதுபோல் தோன்றுவதால், இப்போது சேரிவாசனைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.
நல்லா கேட்டே ஒரு கேள்வி
1960களின் முதல் பகுதியில் சென்னையில் கல்லூரியில் படித்து வந்தேன். நான் இருந்த வீடு சேரிப்பகுதி. இருபது வீடுகளைக் கொண்ட காம்பவுண்ட் வீடு. ஒவ்வொரு அறையும், சின்ன சின்ன நரக அறைகள். உள்ளே படுத்தால், புழுக்கம்; மூட்டைப் பூச்சி; வெளியே படுத்தாலோ, கொசுக்கடி. நான் தங்கியிருந்த படித்த எனது சித்தப்பா வீடும், நாலடி குச்சு மாதிரி. ஓலைக்குப் பதிலாக ஓடு போட்டிருந்தது. அவ்வளவுதான். கிராமத்தில் கம்மாக்கரையில் சுற்றி, வயல்பரப்புகளில் நடந்து, வாலிபால் விளையாடி, விசாலமாகத் திரிந்த என்னை ஜெயிலில் போட்டதுபோல் இருந்தது. எப்படியும், பட்டப் படிப்பை முடித்து விட வேண்டும் என்ற ஒரே வைராக்கியத்தில் பத்துப்பேர் கொண்ட அந்தச் சின்ன வீட்டிற்குள் நானும் நடமாடினேன். அதே சமயம் அங்கேயிருந்த சுமார் ஐம்பது பேரைக்கொண்ட மனித சமூகம், என்னைப் பெரிதும் வசீகரித்தது. ரிக்க்ஷா ஓட்டுபவர்கள், துறைமுகத்தில் கூலி வேலை பார்ப்பவர்கள், அப்பளம் சுடும் பெண்கள், வடை சுடும் ஆயா-இவர்களின் மாசுமருவற்ற அன்பு, எனது மனக் கஷ்டத்தை மறக்கச் செய்தது. இந்த ஐம்பது பேருக்கு இருந்தது, ஒரே ஒரு டாய்லட், அதுவும் கதவு இல்லாதது. “யாரு உள்ளே” என்று கேட்டுக் கொண்டே ஒருவர் போக வேண்டும். குளிப்பதோ, குழாயடிப்பக்கம். நான் குழாயில் இறங்கி தவலையில் தண்ணீர் பிடித்து டிரம்மை நிரப்பி, குளிக்க வேண்டும். ஜட்டியோடோ, துண்டோடோ, அத்தனை பேருக்கும் முன்னிலையில் ஐந்தரை அடி உடம்பை முக்கால் நிர்வாணத்துடன் காட்டிக்கொண்டிருக்க கஷ்டமாக இருந்தது. பெண்களுடன் போட்டியிட்டு, குழாயடியில் தண்ணீர் பிடிப்பது என்னவோபோல இருந்தது. இந்தப் பின்னணியில், அந்த அசுத்தக் காற்றிலும் ஒரு தென்றல் வாடை கிடைத்தது. என் வீட்டிற்குப் பக்கத்து வீடு ஒரு பூக்காரக் குடும்பம் வாழ்ந்த வீடு. அங்கே வயதுக்கு வந்த ஒரு பூக்காரப் பெண். அம்மாவும், அண்ணனும், வாங்கி வரும் உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுக்க வேண்டியது அவளது பணி. ஆள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லை என்றாலும் அழகாக இருப்பாள். கலகலவென்று சிரிப்பாள். எதற்கெடுத்தாலும் ‘நல்லா கேட்டே ஒரு கேள்வி!’ என்பாள். அவளுக்கு என் மீது ஏனோ ஒரு அனுதாபம். நான் குழாயடியில் படும்பாட்டையும், கல்லூரித் தோழர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை உட்கார வைக்க இடம் கிடைக்காமல் திண்டாடுவதையும் கண்டவள். ஒரு நாள் குழாயடியில் தவலையுடன் இறங்கப்போன என்னை கீழே நின்ற அவள் கையாட்டித் தடுத்தாள். முகத்தை வெட்கமாக்கிக் கொண்டு, என் தவலையை வாங்கி, தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள். எவரும் கண்ணில் தென்படாதபோது, நான் குளிக்கப்போவதும், அவள் தண்ணீர் பிடித்துக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. கல்லூரிக்குப் போகும் போது வாசலில் நின்று வழியனுப்பி வைப்பாள். கல்லூரியில் பேச்சுப் போட்டிகளில் நான் வாங்கும் கோப்பைகளை இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக அவளிடம் கொடுப்பேன். அவள், அவற்றை வாங்கி கண்ணில் ஒற்றி என்னிடம் திருப்பிக் கொடுப்பாள். இவ்வளவுக்கும் தொட்டதில்லை, கெட்டதில்லை. நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டோமே தவிர, பேசிக் கொண்டதில்லை’
இப்படியாக இருந்த அவள், ஒருநாள் என்னைக் கண்டபடி திட்டினாள். நான் அவளைப் பார்க்க முற்படும்போதெல்லாம், முகத்தைத் திருப்பிக்கொண்டால் கூட பரவாயில்லை. “சோம்பேறிங்க, பொறுக்கிங்க” என்று பொறுக்கி எடுத்த வார்த்தைகளால் சூடு போட்டாள். எனக்கு எதையோ இழந்ததுபோல் தோன்றியது. நான் அவளைப் பார்க்கப் பார்க்க, அவளின் திட்டுதல், வலுத்ததே தவிர குறையவில்லை. இதற்குள் கலியாணம் வேண்டாம் என்றிருந்த அவள், அப்போது வந்த ஒரு வரனுக்குச் சம்மதித்து வீட்டை விட்டுப் போய் விட்டாள். காலப்போக்கில், நானும் இதை மறந்துவிட்டேன். அல்லது அடிமனத்திற்குள் அவள் எண்ணத்தைப் போட்டுவிட்டேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பஸ் நிலையத்தில் ஒரு பூக்காாியைப் பார்த்தேன். அவள் மாதிரியான சாயல், வற்றிப்போன உடல், பட்டுப்போன முகம். அசல் கிழவியானது மாதிரி தோற்றம். அவள் முன்னால் போய் நின்றேன். அவள் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. பிறகு நானே ‘நீ அவள்தானே?’ என்று கேட்டபோது, அவள் கண்ணீர் சிந்தாத குறையாகத் தலையாட்டினாள். பிறகு ‘நீ பட்டபாட்டுக்கு இப்போது இவ்வளவு நல்லா இருக்கிற; பார்க்கிறதுக்கு படா சந்தோஷமா இருக்கப்பா’ என்றாள். நன்றாக இல்லாமல் போன அந்த ஏழைப்பெண்ணுடன் சிறிது நேரம் வீட்டில் உள்ளவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டேன். பிறகு அவளிடம் “உன் மேல் உயிரையே வச்சிருந்தேன். ஆரம்பத்தில் ஆசைகாட்டி விட்டு, அப்புறமாய் ஏன் திட்டினாய்?” என்று அவளிடம் உருக்கமாக கேட்டேன். அவள் விளக்கினாள். அவளும் என்மேல் உயிரை வைத்திருந்தாளாம். ஒருநாள் பாழாய்ப்போகிற ஒரு கல்லூரித் தோழனைக் கூட்டி வந்தேனாம். அவனிடம் இவளைக் காட்டி ஏதோ சொன்னேனாம். உடனே அவன் அவள் அங்கங்களை பச்சையாக வர்ணித்தானாம். நான் தட்டிக் கேட்கவில்லையாம். “இவனோட என்ன பேச்சு?” என்ற முடிவுக்கு வந்து விட்டாளாம். எனக்கே ஞாபகமில்லை, அப்படி அவன் பேசியபோது, ஒருவேளை நான் அவள் மயக்கத்தில் இருந்திருப்பேன். அவளிடம் ரகசியம் பேசுவதுபோல் கேட்டேன். “இப்பவாவது, சொல். அப்போ நீ என்னை காதலிச்சாயா?” என்றேன். உடனே அவள், லேசாகச் சிரித்தபடியே, “நல்லாக் கேட்டே ஒரு கேள்வி” என்று இருபதாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சொன்ன வார்த்தைகளை அப்போதும் சொன்னாள். அவள் அழகிழந்து, வயதிழந்து, வாலிபமிழந்து, இருந்த அந்த நிலையிலும், என்னைப் பார்த்து, சிரித்தது, என்னைப் புல்லரிக்க வைத்தது. ஏதோ ஒரு பெரிய சாதனை நடந்து விட்டது போல, நடத்திவிட்டது போல, நான் நினைத்தேன். இதற்குப்பிறகு அவளை நான் பார்க்கவேயில்லை. இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்த அவளை அந்த அழகுக்கோலத்தில் மிதந்த அவளை இப்போதைய அலங்கோலத்தில் பார்க்க ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்தச் சமயத்தில் ஒரு வாரத்திற்குள் அவளைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றுகிறது. இந்தப் பின்னணியில் “நல்லாக் கேட்டே ஒரு கேள்வி” என்று ஒரு சிறுகதை எழுதினேன். ஆரம்பக் காலத்தில் என் மனதில் ராணியாக இருந்த அவளை, ராணி பத்திரிகை வெளிப்படுத்தியது.
அண்ணன் வரட்டுண்டா... கரிமூஞ்சி
கல்லூரிக் காலத்தில், எல்லா இளைஞர்களுக்கும் வரும் “கெட்ட புத்தி” எனக்கும் வந்தது.
அப்போது ஞாயிற்றுக்கிழமைதோறும் குமுதம் வரும். அதை அன்றே படித்து முடித்து விடுவேன். அதனால் திங்கட்கிழமை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். அந்தக் குறுகுறுப்பில், மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தது. நான்காவது ஆண்டு சாப்பாட்டுக்கு வழியில்லை என்றாலும். குமுதம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. பல்வேறு சூழல்களால், சப்பாட்டிற்கே அல்லாடிய நான், என் ஒன்று விட்ட தங்கை வீட்டில் அவ்வப்போது சாப்பிட்டு வந்தேன். அவளும் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் எனக்கு உணவளித்தாள். அந்த வீடும், நான் சொன்ன வீடு மாதிரி ஒரு காம்பவுண்ட் வீடு. பதினைந்து குடும்பங்கள் வாடகைக்கு வாழ்ந்த வீடு; அந்த வீட்டுக்காரம்மாவின் மகளுக்கு என்னைப் பார்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் இருந்ததாகத் தெரியவில்லை. கையில் அண்ணன் குழந்தையை வைத்துக் கொண்டு, “எப்போடா வேலைக்குப் போறே?” என்பாள் “கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணக் கூடாதாடா” என்று சீண்டுவாள். “உனக்கு நல்ல வேலை கிடைச்சாதான் எனக்கு நிம்மதிடா” என்பாள். நான் நிஜமாகவே அப்போது கிறுக்கன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் டயலாக் சினிமாக்கள், குமுதம், ஆகியவற்றின் உந்துதலில் அப்படி ஒரு காதல் கடிதத்தை அவளுக்கு கிறுக்கி இருக்க மாட்டேன். அவசரம் அவசரமாக ஒரு காகிதத்தில் என்னமோ எழுதி, அவள் அண்ணன் மகனிடம் கொடுத்துவிட்டு ஓடி விட்டேன். மத்தியானம் மகிழ்ச்சியோடு எனது தங்கை வீட்டுக்குப்போனேன்; பாவி கெடுத்தாள். அண்ணன் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டே, இப்போதும் நின்றாள்; ஆனால் டயலாக்தான் வேறு. “ஏண்டா கரிமூஞ்சி. உன் மனசிலே என்னடா நினைச்சுக்கிட்டே... பெரிய மன்மதன்னு நினைப்பா? என் அண்ணன் வரட்டும். ராத்திரி வரட்டும் அப்ப இருக்கு வேடிக்க” என்று கூசாமல் சொன்னாள். நான் வெலவெலத்துப்போனேன். அவள் அண்ணன் வஸ்தாது; நல்ல மனிதர் என்றாலும், தனது குடும்பத்துப் பெண்ணைத் தவறாக அணுகுபவர்களை உண்டு, இல்லை என்று பார்க்கக்கூடியவர். ஒரு தடவை ஒரு ரவுடியை அவர் அடியடி என்று அடித்ததை என் கண்ணாலேயே பார்த்தேன். பயந்துபோன நான் ஓடினேன், ஓடினேன் எனது சித்தப்பா வீட்டு ஓரத்திற்கே ஓடினேன். அங்கே சித்தப்பாவும் இல்லை; சித்தியும் இல்லை; சோறும் இல்லை, கஞ்சியும் இல்லை. இரண்டு நாட்கள் ரொட்டி, பிஸ்கட்களைத் தின்றுகொண்டு வயிற்றைக் காத்தேன். மூன்றாவது நாள் என் தங்கை வந்தாள். நான் கிடந்த கோலத்தைப் பார்த்துவிட்டு, என்னை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்தாள். எனக்குப் பசி ஒரு பக்கம்; பயம் ஒருபக்கம். அவளை அனுப்பிவிட்டு, ராத்திரி பத்து மணிக்கு, தலையில் முக்காடு போடாத குறையாக தங்கை வீட்டிற்குப் போனேன். “அவள்” பார்க்கமாட்டாள் என்ற நம்பிக்கையில், சாப்பிடப்போனேன், அவ்வளவுதான். சண்டாளி வந்துவிட்டாள். தூங்கி வழிந்த அண்ணன் மகனை தோளில் போட்டுக் கொண்டு “ஏண்டா பயந்திட்டியா? உன்னெ எப்படிடா காட்டிக்கொடுப்பேன்... சோமாறி” என்று செல்லமாகத் திட்டினாள். எனக்குப் போன உயிர் வந்தது. ஆனாலும் அவளைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சொன்னதே சொன்னாள். “கறுப்பா” என்று சொல்லியிருக்கலாம். கரிமூஞ்சி என்றல்லவா சொன்னாள்... அவளுக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டேன். அதிலிருந்து அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அந்த ஆதங்கத்தில், அவள் எப்போதாவது “அண்ணனிடம் சொல்லட்டுமா” என்று மருமகக் குழந்தையிடம் பேசும்போது, நான் செயற்கைத்தனமாகச் சிரிப்பேன். இவளையும், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையில் சந்தித்தேன். ஆனால் பூக்காரப் பெண்ணிடம் கேட்டது மாதிரி இவளிடம் கேட்கவில்லை. அவளும் எதுவும் நடக்காதது போல் ஒதுங்கிக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை, மையமாக்கி குமுதத்தில் “அண்ணன் வரட்டும் சொல்லுகிறேன்” என்று ஒரு சிறுகதை எழுதினேன்.
வளர்ப்பு மகள்
வடசென்னையில் பல்வேறு குடித்தனங்களைக் கொண்ட ஒரு வீட்டில் வாழ்வது என்பது, நரக வேதனை. அதிலும் வீட்டுக்காரியின் அடாவடித்தனம் சிலசமயம் அசிங்கமாகவே இருக்கும். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மின்சார வெளிச்சத்தை அணைப்பாள். உழைக்கும் மக்கள் அந்த இரவில் ஏதாவது உல்லாசமாகப் பேசிவிட்டால் போதும். “என்ன பேச்சு? தூக்கத்தைக் கெடுக்கிற பேச்சு” என்பாள். காலையில் குழாயடியில் ஏழைப் பெண்கள், தண்ணீர் பிடித்துவிட்டு, வெளியே வேலைக்குப் போவதற்காகத் துடிப்பார்கள். ஒவ்வொருத்தியும் குடங்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படியாக நிற்பாள், குடத்தை குழாய்க்குக் கீழேயும் வைத்துவிடுவாள். அப்போது வருவாள் வீட்டுக்காரம்மா. எல்லா குடங்களையும் வேலைக்காரியை வைத்து, வெளியே அனுப்புவாள். அரைமணி நேரம், இவள், குடம் குடமாகப் பிடிப்பாள். இவள் போய் விட்டு, ஏழைப்பெண்ணின் குடம் வரும்போது, குழாய் பெருமூச்சுவிடும். சில வீடுகளில் வீட்டுக்காரிகள், வாடகைப் பெண்களை மாவு ஆட்டச்சொல்வதும் உண்டு. வீட்டுக்காரிகள் ரேடியோ போட்டால், அது இசை. வாடகைக்காரிகள் ரேடியோ போட்டால், அது கூச்சல், இப்படி எல்லா வீடுகளிலும் பெரும்பாலாக வீட்டுக்காரி அம்மாள்கள், முதலாளித்துவ தாண்டவ மாடுவதுண்டு. இவர்களையும் ஆங்காங்கே அடக்குகின்ற வாடகை வீட்டுக்காரிகளும் உண்டு. இந்தப் பின்னணியில் ஒரு வீட்டுக்காரியின் அட்டுழியத்தைப் பற்றி தாமரையில் குடித்தனம் என்று ஒரு சிறுகதை எழுதினேன். ‘வளர்ப்பு மகள்’ என்ற நாவலில் நான் வசித்த வீட்டில், இட்லி சுட்டு விற்கும் ஆயா என்னை சொந்த தம்பிபோல அனுமானித்த ஏழைப்பெண்கள், என்படிப்பை பெரிய படிப்பாக நினைத்து பிரமித்துப் பார்த்த ரிக்க்ஷாக்காரர்கள், ஆகியோரை அந்த நாவலில் பாத்திரங்களாக்கினேன்.
யோகி ரங்கசாமி செட்டியார்
இந்த ரிக்க்ஷாக்காரர்கள், இட்லி விற்கும் ஆயாக்கள், மூட்டைச் சுமப்பவர்கள், பூக்காரர்கள் இவர்கள் தான் நான் இருந்த இடத்தில் குடித்தனக்காரர்கள். இங்கே இருந்து லாரி டிரைவர்களும், காய்கறி புரோக்கர்களும், இந்த மக்களுக்கு “விஐபி” க்கள். வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் பேட்டை ரவுடிகள் கத்தியோடு உட்கார்ந்து கொண்டு, உரையாடுவதும், அதேசமயம் தாங்கள் இருக்கும் பகுதியில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற கொள்கையை, பொதுவாக அவர்கள் கடைபிடித்ததும் நான் கண்கூடாகப் பார்த்தது. இந்தச் சூழலில் பட்டப்படிப்பைப் படித்து வந்த எனக்கு, கிட்டத்தட்ட டாக்டரேட்டிற்குரிய ஒரு கல்வியும் கிடைத்தது. கோணி வியாபாரியான எனது சித்தப்பா வீடு இரண்டு அறைகளைக் கொண்டது. ஒன்றில் சுமார் ஆயிரம் கோணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றை ரெங்கசாமி செட்டியார் என்ற ஒருவர் தைத்துக் கொடுப்பார். காலையில் ஏழு மணிக்கு வந்தால் இரவில் ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்குப் போவார். இவர், பர்மாவிலிருந்து இரண்டாவது உலகப்போரில், தமிழகத்திற்கு அகதியாக வந்த தெலுங்குச் செட்டியார். இவருடைய தந்தை பர்மாவில் பிரபலமாக விளங்கியவராம். பர்மாவிலிருந்து காடு வழியாகத் தப்பி வரும் போது எத்தனையோ உயிர்கள் குண்டுகளுக்குப் பலியாவதையும், வயதானவர்களையும் நோயாளிகளையும், சொந்தக்காரர்கள் காடுகளிலேயே விட்டு விட்டு வந்ததையும் இவர் சொல்லும் போது, கண்களில் கண்ணீர் உருக்கும். இவர் புத்தபிட்சுக்களிடமும், சில சந்நியாசிகளிடமும் பழக்கப்பட்டவர். சித்த வைத்தியத்தில் நிபுணர். ஒரு தடவை குத்துக்கல்லாக இருந்த என் சித்தியின் நாடியைப் பார்த்துவிட்டு, “மரணநாடி பேசுகிறது. உன் சித்தி மூன்று மாதங்களில் இறந்து விடுவார்” என்று எனக்கு மட்டுமே ரகசியமாச் சொன்னவர். ஜோதிடத்தில் நிபுணர், சாமுத்திரிகா லட்சணத்தை நன்கு தெரிந்தவர். ஒரு ஆளைப் பார்த்தே, அவரது சிரிப்பு, உட்காரும் விதம் ஆகியவற்றை வைத்து கணித்துவிடுவார். அதோடு, பிரணாயத்தின் மூலம் “வாசி” என்ற கலையைக் கற்று, எதிர்காலத்தைக் கணிப்பவர். நான் கல்லூரியை விட்டு வந்ததும், தூசியும், துரும்பும் நிறைந்த அந்த அறைக்குள் இவரோடு பேசிக் கொண்டே இருப்பேன். எனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும், நான் எழுத்தாளனாக மாறுவேன் என்றும் குறிப்பிட்டார். பல்வேறு காரணங்களால் படிப்பை இடையில் நிறுத்தப்போகும் போது, இவர்தான் அவ்வப்போது ஆறுதல் கொடுத்தார். ஆகையால் எனது கதாபாத்திரங்கள் தரையில் பெருவிரலால் கோலம் போடுவதும், கனைத்துக்கொண்டே சிரிப்பதுமாக எழுதுவதும், மூக்கு சப்பையாக இருப்பதாக குறிப்பிடுவதும், நெற்றி விசாலமாக இருப்பதாக எழுதுவும், அல்லது கரங்கள் குவியும் போது விரல்கள் அதிகமாக ஒட்டிக் கொள்வதாய் வருணிப்பதும், ஒருவித சாமுத்திரிகா லட்சண அடிப்படையில் அந்தப்பாத்திரங்களின் தன்மைக்கேற்ப எழுதப்பட்டவை. ஏனோதானோ வர்ணனைகள் அல்ல. இவரது பாதிப்பில் பல கதைகள் எழுதியிருக்கிறேன்.
ஒரு துரோகியின் விசுவாசம்...
இவரிடம் பலர் வருவார்கள். வியாபாரிகள், காதலில் தோல்வியுற்றவர், நோயாளிகள், நோய் இருப்பதாக நினைக்கிறவர்கள். இப்படி எத்தனையோ பேர் வருவார்கள். இவர்களில் ஒரு பெண் சலவைத் தொழிலாளி. அப்போது அவருக்கு 50 வயதிருக்கும். ‘சின்ன வீடு’ செட்டப் செய்த தனது கணவர், மீண்டும் தன்னிடம் வருவாரா என்று இந்தப் பெண், அடிக்கடி அவரிடம் கேட்பாள். அதோடு, எனது துணிமணிகளை இந்தப் பெண்தான் சலவை செய்து கொடுப்பாள். இரண்டு மூன்று உருப்படிகள் மட்டும் வைத்திருந்த எனக்கு, தேவைப்படும் போதெல்லாம், ஸ்பெஷல் சலவை செய்து ‘உருப்படியாக’ கொடுத்த பெண்மணி இவள்; கிட்டத்தட்ட இவளின் வீட்டில், நான் ஒரு உறுப்பினனாகவே மாறிவிட்டேன். இவளுக்கு ஒரு இளம் மருமகள்; கறுப்பாக இருந்தாலும், கற்சிலை போன்ற தோற்றம். எனக்கு சகோதரிக்குச் சமமானவள். பல தடவை இவளும், ஒரு வயதான மூதாட்டியும், அக்கம்பக்கம் பார்த்தபடி காரசாரமாகப் பேசிக் கொள்வதையும், கடைசியில் அந்த மூதாட்டி கண்ணீர் விட்டுக் கொண்டே போவதையும் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு தடவை அந்த மூதாட்டி போனதும், அந்தப் பெண்ணிடம் நான் விவகாரத்தைக் கேட்டேன். முதலில் தயங்கிய அவள், பிறகு ஒப்பித்தாள். அந்தக் கிழவி இவள் தாயாம். இந்தப் பெண்ணுக்கு பத்து வயது வந்த போது, யாரோ ஒரு ‘கஸ்மாலத்தை’ இஸ்துகிட்டுப் போயிட்டாளாம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒராண்டுகாலமாக மகளைப் பார்க்கிறாளாம். இப்போது இயலாமையாகி விட்டதால், மகள் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறாளாம். இந்தப் பெண்ணும் அதற்கு சம்மதித்துவிட்டாளாம். ஆனால் அந்தக் கிழவியோ தன்னை ‘இஸ்துகின்னு’ போன அந்தக் காலத்து வாலிபனும், இந்தக் காலத்துக் கிழவனுமான இரண்டாவது கணவனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றாளாம். இதற்கு மகள்காரி மறுத்துவிட்டாள். ஆனால் அந்த மூதாட்டியோ, “ஒரு காலத்தில் என்னைக் கூட்டிக் கிட்டு போய் வாழ வைத்தவன் வகைதொகை இல்லாமல் கிடக்கும் போது நான் மட்டும் வர்றது இன்னா நியாயம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாளாம். எனக்கு கண்கள் கலங்கின. பெற்ற மகளையும், கைபிடித்த கணவனையும் விட்டுவிட்டுப் போன அந்தப் பெண், தன்னை இஸ்துகின்னு போன ஒருவனை கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதில், காட்டிய அக்கறை அவளை கண்ணகிக்குச் சமமாக எண்ண வைத்தது. இதை வைத்து, குங்குமத்தில் ஒரு சிறுகதை எழுதினேன்.
இடம் தேடி....
நான் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளில் எனக்குப் பிடித்த பத்துக் கதைகளைச் சொல்லச் சொன்னால், அதில் “இடம் தேடி” என்ற சிறுகதை முன்னணியில் நிற்கும். இது குமுதத்தில் எழுதப்பட்ட கதை, சென்னைத் தொலைக்காட்சியில் பிரபல மக்கள் இயக்குனர் அருண்மொழியால் இயக்கப்பட்டு நல்ல பேர் வாங்கிய நாடகம். இதுவும், எனது அனுபவ அடிப்படையில் எழுந்தது. எனது பெரியப்பா ஒருவர் எங்கள் ஊரில், தலைவர் போல வாழ்ந்தவர். ஏதாவது ஒரு வீட்டில் ஒருவர் மரணமடைந்து விட்டால், அங்கு இவர் போகும் போது எல்லோரும் இவரிடமே ஆறுதல் கேட்பார்கள். திருமணம் என்று வந்துவிட்டால், மாப்பிள்ளைக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் இவர் தான். தலையிலே குடுமியோடு, செக்கச்சிவந்த நிறத்தோடு பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். ஊரில் பெரிய வழக்காளி; அப்படிப்பட்ட பெரியப்பா, பஞ்சம் பிழைப்பதற்காக, எல்லோரையும் போல சென்னைக்கு வந்தார். எட்டுப் பிள்ளைகள். அத்தனை பேரும் ஆண்கள்; ஆனாலும் பெரிதாக யாரும் முன்னேற முடியாத சூழல். எப்படியோ நான்கைந்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இறுதிக் காலத்தில் நோய்ப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஓரளவு குணமாகி, மகன்கள் வீட்டிற்குத் திரும்பி வந்தார். மருமகள்கள் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இறுதியில் உறவினர் வீட்டில் அவர் அடைக்கலம் தேட வேண்டியதாக இருந்தது. இந்தப் பெரியப்பாவை, ஒரு பெண்ணாக மாற்றி, சிறுகதை எழுதினேன். அப்போது ஓரளவு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த கதை. இலக்கியப் பண்டிதர்கள் தவிர, மற்றவர்கள் இதைப் படித்து விட்டு, அழாமல் இருக்க முடியாது. இன்னும் பெரியப்பாவின் உருவமும், இறுதிக்காலத்தில் அவர் பட்டபாடும், என் நெஞ்சிலேயே இருக்கிறது.
ஒரு நோயின் அறிகுறி
மீண்டும் எனது குரு ரெங்கசாமி செட்டியார் விவகாரத்திற்கே வருவோம். அவருக்கு ஒரு மகன். அசல் ரவுடி; ஆனால் கேடியல்ல. இவருக்கு வடசென்னையில் அப்போது கொடி கட்டிப் பறந்த ஒரு அரசியல் பிரமுகர் தூரத்து உறவினர். செட்டியாரிடம் வரும் ஒருவர் அம்பத்தூரில் சைக்கிள் பாக்டரியில் வேலை பார்த்தவர். அந்தப் பையனுக்கு அதே பாக்டரியில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். நிர்வாகமும் இணங்கியது; ஆனால் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தான் கான்டக்ட் சர்டிபிகேட் வாங்கி வரவேண்டும் என்று வற்புறத்தியது. ரெங்கசாமி செட்டியாரும் தனது தூரத்து உறவினரான அதே பகுதியில் குடியிருக்கும் அந்த அரசியல் பிரமுகரிடம் விவகாரத்தைச் சொன்னார். அவர், எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு, ‘நாளை வா’ என்றார். ‘நாளை’ வரவேயில்லை. இவர் விசாரித்துப் பார்த்தபின், அந்தப் பிரமுகர் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போன் செய்து, இந்தப் பையனுக்குப் பதிலாக தனக்குத் தெரிந்த ஒருவனை வேலையில் நியமிக்கும்படி கேட்க, நிர்வாகமும் அரசியல் செல்வாக்குப் பெற்ற அவரது ஆளுக்கு வேலையைக் கொடுத்து விட்டது. கொதித்துப்போன நமது செட்டியார், அந்த பிரமுகரின் வீட்டிற்கு முன்னால் போய் நின்று கையில் மண்ணை வைத்துக் கொண்டு மூன்று தடவை ஊதினார். அதன் விளைவு ஆறுமாத காலத்திற்குள், அந்தப் பிரமுகர் கடுமையான சிக்கலில் சிக்கி அதன் பாதிப்பு வாழ்க்கை முழுவதும் இருக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. அதற்குப் பிறகு, அவர் அரசியலிலும் எடுபடவில்லை. இந்தச் செட்டியார் பின்னால் வருத்தப்பட்டாலும், முன்னால் நடந்ததை மாற்ற முடியவில்லை. இதை வைத்தும் ஒரு சிறுகதை எழுதினேன். ஆனால் ஜாக்கிரதையாக சாப மிட்டதையோ, அதன் விளைவையோ குறிப்பிடவில்லை. கதையின் நோக்கம் வல்லமை வாய்ந்த ஒருவன் எளியவனுக்கு கிடைக்கும் வேலையையும் எப்படித் தட்டிப்பறிக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே. மூட நம்பிக்கை மாதிரி தோன்றக் கூடியதை நான் குறிப்பிட விரும்பவில்லை.
இந்தப் பையன், ஒரு முழுக் குடிகாரனாக வாழ்க்கையை, தொலைத்துவிட்டான். ‘குடி’ ஒரு நோயின் அறிகுறியே தவிர, நோயல்ல’ என்பதைச் சொல்வதற்காக அந்தக் கதைக்கு ‘ஒரு நோயின் அறிகுறி’ என்று வைத்தேன்.
ஒரு நாள் போதுமா?
கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அங்குமிங்குமாகச் சுற்றிவிட்டு, நான் மத்திய அரசின் திட்டம் என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலைபார்த்தேன். அப்போது.... கீதா என்ற தொழிற்சங்க தோழியரின் பரிச்சயம் கிடைத்தது. இந்தக் கீதா, மதுரையில் வசித்த பிரபல மார்க்சீய தத்துவவாதியும், கம்பராமாயண இலக்கயவாதியுமான அறிஞர் ராமகிருஷ்ணனனின் மகள், பாட்டாளி மக்களுக்காக, கல்லூரியில் ஆசிரியை வேலையையும் ராஜினாமா செய்து விட்டு, காதலித்து கைபிடித்த கணவனுடன் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைத் துவக்கினார். கீதா, நான் இந்தத் தொழிலாளர்கள் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று கேட்டார். அவருடன் பல்வேறு சேரிப்பகுதிகளுக்குச் சென்றேன். தேனாம்பேட்டை, சூளை, ஆகிய விடங்களில் உடலுழைப்பை விற்பதற்காக மண்வெட்டி கூடைகளோடு, நிற்கும் ஆண்களையும், பெண்களையும், அவர்களது அவல நிலையையும் பார்த்தேன். சேரிப் பகுதிகளில் தக்க கழிப்பிடம் இல்லாததால், பெண்கள், எல்லாவற்றையும் அடக்கி அடக்கியே சிறுநீரகக் கோளாறுக்கு உட்பட்ட பல சம்பவங்கள் தெரிந்தன. காண்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், இவர்களைச் சுரண்டும் விதங்களும், விவரங்களும் கிடைத்தன. மேலே இருந்து கீழே விழுந்தால் இவர்களுக்கு நஷ்ட ஈடு கிடையாது. நிரந்தரத் தொழிலாளர்களைப்போல் இவர்களுக்கு எந்தவித வசதியும் இல்லை. மழை வந்துவிட்டால், இவர்கள் பிழைப்பிலே மண். ஒரு தாய், இருந்த உணவில் முக்கால் வாசியை தான் உண்டுவிட்டு, கால் வாசியை மட்டுமே குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தையோ பசி பொறுக்க முடியாமல் கத்துகிறது. அந்த தாயிடம் நான் கேட்டேன். அவள் சொன்னாள் இப்படி-
“என் வவுறு கொஞ்சம நிறைஞ்சாத்தானே சாமி, வேலை பாக்கலாம், இல்லாட்டி, மயங்கி விழுந்திட்டா இந்தக் குளந்தய யார் கவனிக்கிறது? பொறுத்துக் கோடா ராசா... சாங்காலமா கூலி வாங்கினு வந்து அம்மா ஒனிக்கி நல்ல சோறு போடுறேன்... மசால் தோச வாங்கித்தர்றேன்!”
இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப்பெண் எதுவுமே நடக்காதது போல் போய்க் கொண்டிருந்தாலும், அவள் அழுதுகொண்டிருந்த தன் ஆறு வயது மகனைக் கண் கலங்கத் திரும்பித் திரும்பிப் பார்த்ததையும் நான் பார்த்தேன். எவ்வளவு பெரிய யதார்த்த உண்மை இது! எல்லா உணவையும் பிள்ளைக்குக் கொடுத்து விட்டு, வயறு காய்ந்து, மாடியிலிருந்து மயங்கி விழுந்து தன்னோடு குழந்தையையும் சாகடிக்கும் ஒரு தாயை விட, இந்த யதார்த்தமான தாய் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டாள். இப்படி எத்தனையோ நெஞ்சை உருக்கும் சம்பவங்கள். இவற்றை வைத்து “ஒரு நாள் போதுமோ” என்று ஒரு குறு நாவல் எழுதினேன். நயனதாரா என்ற பத்திரிக்கையில் மாத நாவலாக இது வெளி வந்தது. தாமரையில் நான் சொன்ன இந்தத் தாயை மட்டும் மையமாக வைத்து ‘மண்சுமை’ என்ற சிறுகதையும் எழுதினேன்.
பொதுவுடமை தத்துவம் தந்தவர்
யோகி ரெங்கசாமி செட்டியாரைப் பற்றியும் அவர் என் எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் விவரித்திருந்தேன். ஆனால் அவர் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதே காலக் கட்டத்தில் இன்னொரு நட்பு கிடைத்தது. நான் வசித்த குடித்தன வளாகத்தில், ஒரு தையல் தொழிலாளி இருந்தார். என்னைவிட பத்து வயது அதிகமாக இருக்கலாம். அந்த வளாகத்திற்குள் வீட்டுக்காரி அடாவடியாகப் பேசும்போது, எல்லோரும் குமுறுவார்கள், ஆனால் அவரோ லேசாகச் சிரிப்பார். இது மாதிரி பேச்சுக்களும் ஏச்சுக்களும், எதிர்பார்க்க கூடியதுதான் என்பதுபோல, புன்முறுவல் செய்வார். இதை நெடுநாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்த நான், ஒரு தடவை அவரை அணுகினேன். அவர் மூலம் ஒரு மாபெரும் தத்துவத்தையே அணுகினேன் என்று சொல்லலாம். நான் அவரது சிரிப்பைப் பற்றி கேட்டதற்கு “அந்த அம்மாவிற்கு முதலாளித்துவ குணம். அந்தக் குணம் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்பார். தெருத் திண்ணைகளில் ரவுடிகள் கத்தி கம்புகளோடு, அட்டுழியமாக அரட்டை அடிப்பதைப் பார்த்துவிட்டு, இவர்கள் லும்பன்கள்; இப்படித்தான் இருப்பார்கள் என்பார். இப்படி அவரிடம் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் தத்துவார்த்த ரீதியான நட்பானது. கல்லூரியின் பொருளாதார பாடத்தில் “கார்ல் மார்க்ஸ் சொல்வது தவறு. இருபது ரூபாய் புத்தகமும், இருபது ரூபாய் செருப்பும் சமமாகுமா” என்று ஒரு உருப்படாத கிரிட்டிலிஸம் வரும். இன்னும் அப்படித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இத்தகைய பொருளாதார மாணவனான எனக்கு, அந்தத் தையல் தொழிலாளி பாட்டாளி வர்க்கத்தைப் பற்றியும், முதலாளித்துவ வர்க்கத்தில் உள்ள போலித்தனமாக மரபுகள் பற்றியும், விவரமாக எடுத்துரைத்தார். இது எனக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. பி.யு.சி. படிக்கும்போது, என்னைச் சென்னை நகர மாணவர்கள் “அண்ணாச்சி” என்று கிண்டல் செய்வார்கள். என்னுடைய நிறமும், போக்கும், ஆடையும் அவர்களுக்கு நேரப்போக்காக இருந்ததை அறிந்தேன். இதனால் கூனிக்குறுகிப் போனேன். கல்லூரியில் குளிரில் கூட உடம்பு வேர்த்தது. ஆனால் இந்தத் தையல் தொழிலாளரின் பரிச்சயம் ஏற்பட்ட பிறகு, பாட்டாளி மக்களின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும், எப்படி முதலாளித்துவ வர்க்கத்தாலும் பூர்ஷ்வாக்களாலும் ஏளனத்துக்குரியதாகவும், அடக்கி வைக்கப்படுவதற்குரியதாகவும் ஆகிறது என்பதை அறிந்து தெளிந்தேன். இதனால் என்னைக் கிண்டல் செய்த மாணவர்களை துச்சமாக மதிக்கக் கற்றுக் கொண்டேன். அவர்களிடத்தில் அவர்களின் நலிவுற்ற கலாசாரத்தையும், சொல்லத் துவங்கினேன். இதன் விளைவு, நான் தலைவனாகி விட்டேன். கல்லூரியில் வேலைநிறுத்தத்திற்குத் தவிர்க்க முடியாத மாணவர் தலைவர்களில் நானும் ஒருவன். அதுமட்டுமல்ல. திராவிட முன்னேற்றக் கழக மாணவர்கள் 99 சதவிகிதம் இருந்த சர் தியாகராயா கல்லூரியில் நான் தமிழ் மாணவர் மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போதைய தலைவர்களான திரு என்.வி.என்.சோமு, திரு கே.ஏ.கிருஷ்ணசாமி திரு பெ.சீனிவாசன், விசுவநாதன் முதலியவர்கள் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் என்னோடு கலந்து கொண்டவர்கள். இப்படி நான் வெற்றிகளைக் குவிப்பதற்கு ரங்கசாமி செட்டியார் ஒரு காரணம் என்றால், இந்த தையல் தொழிலாளியும் இன்னொரு இணையான காரணமாகும். நான் எழுதிய ‘சத்திய ஆவேசம்’ என்ற நாவலில், இந்த தையல் தொழிலாளியை ஒரு ப்ரூப் ரீடராகச் சித்தரித்து, அவர் எப்படி மார்க்சீய தத்துவத்தை மனம் குமுறிப்போகும் கதாநாயகனுக்கு உணர்த்தி, தெளிய வைக்கிறார் என்று எழுதியிருந்தேன். துரதிருஷ்டவசமாக இந்தத் தொழிலாளித் தோழர் ஒரு குடும்பச் சிக்கலில் மாட்டி, நான் அவருடன் பரிச்சியப்பட்ட மூன்று மாத காலத்திற்குள்ளே எங்கேயோ போய்விட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ. பார்க்க ஆவலாக இருக்கிறது. இவருடைய தாக்கத்தால் தான் தாமரை, செங்கோல், (அப்போது செம்மலர் இல்லை) ஜனசக்தி ஆகிய வித்தியாசமான பத்திரிகைகளைப் படித்து, சிந்தனை நோக்கைத் தீட்டிக் கொண்டேன்.
சுகமாகிப் போன வெயில்
இந்தச் சந்தர்ப்பத்தில், பக்கத்து வீட்டில் முப்பது வயது பெண் ஒருத்தி இருந்தாள். கணவன்காரன் அவளைத் தள்ளி வைத்துவிட்டான். இவள், கூலி வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிப்பாள். ஐந்தாறுமாதம் கழித்து நாடு திரும்பிய காட்டு விக்கிரமாதித்தன் போல் அவள் கணவன் காட்டான் வருவான். பேண்ட் சட்டையோடு கிருதா மீசையோடும் இருக்கும் கணவனைப், பார்த்து. இந்த அப்பாவிப் பெண் மயங்கிவிடுவாள். அவனும் அவள் பணத்திலேயே ஒருவாரகாலம் அவளிடம் உல்லாசமாக இருந்துவிட்டு, முடிந்தால் அவளுடைய நகை நட்டுகளையும் எடுத்துக்கொண்டு போய்விடுவான். இவள் குமுறிக்குமுறி அழுவாள். அவனைக் கண்டபடி திட்டுவாள். இனிமேல் அவனைச் சேர்க்க மாட்டேன் என்று சபதமிடுவாள். பிரசவ கால சபதம்தான். என்னால் தாள முடியவில்லை. இப்படி அவன் அவளை ஏமாற்றிய பிறகு, அந்த அக்காளிடம் போய் “இப்படி ஏமாறலாமா?” என்று கேட்டால் அதற்கு அவள் அளித்த பதில் எனக்கு வியப்பைக் கொடுத்தது.
“நீ சொல்றது நியாயம்தான் நயினா... ஆனா காட்டி ஒண்னு சொல்றேன் கேளு சினிமா பாக்கோம். அதிலே வரது வெறும் கததான்னு தெரியும். ஆனாலும், அந்தச் சமயத்தில அத நெசமா நம்பி அயுவுறோம், சிரிக்கிறோம். இதுபோல அந்தக் கசமாலம் காசுக்காவ என்னெ ஏமாத்தறான்னு எனக்கே தெரியும். ஆனாலும், அவன் பேசற அந்தச் சமயத்தில் சினிமாவுல நம்ம மறக்கிறதுமாதிரி மறந்துடறேன். இன்னொன்று இந்தத் தடவையாவது அந்தக் கம்மனாட்டி நெசமாவே இருப்பான்னு அக்காவுக்கு ஒரு ஆசெ.”
இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பெண், ஏங்கி ஏங்கி அழுதாள். எல்லா சேமிப்புப்பணமும் தீர்ந்து போய், பழையபடியும் வாழ்க்கையைத் துவக்கி, காசு சேர்ப்பாள். இப்படிச் சேர்ப்பதும், அதுக்காகவே அவன் அவளோடு சேருவதும் வாடிக்கையாக இருந்தது. பின்னாளில் ஒரு பத்திரிக்கை கதை கேட்டபோது, இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. இதையே கதையாக எழுதினேன். குங்குமத்தில் பிரசுரமானதாக ஞாபகம்.
பூவம்மாவின் குழந்தை
இன்னொரு சமாசாரமும் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தது. நான் இருந்த வீட்டு வளாகத்திற்கு பக்கத்து வளாகத்தில் ஒருத்தன். அவன் பெண்டாட்டி ஒரு லாரி டிரைவரோடு ஓடி விட்டாள். கைக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அந்த டிரைவருக்கும், இவன் பெண்டாட்டிக்கும், இஸ்குதோஸ்கு இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த அப்பாவிக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவராலோ அந்த ஐந்து அல்லது ஆறு மாதக் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மகாபலிபுரத்திற்கருகே உள்ள ஒரு கிராமத்தில், அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் போயிருக்கிறான். குழுந்தையைக் கொடு என்று கேட்டிருக்கிறான். அவளோ, அந்த குழந்தை ‘உனக்குப் பிறக்கவில்லை. இவருக்குத்தான் பிறந்தது’ என்று சொல்லியிருக்கிறாள். இவன் குழந்தையை விட்டு விட்டு, புறப்படத் தயாராக இருந்திருக்கிறான். ஆனால், அந்தக் குழந்தையோ, இவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி இருக்கிறது. இவன் நெகிழ்ந்து போனான். அந்தக் குழந்தை தனக்கு ஒருவேளை பிறந்திருக்காது என்பது தெரிந்தாலும், அவனுக்கு அந்தக் குழந்தையைவிட மனமில்லை. கூட்டிக் கொண்டு வந்து விட்டான். இப்படிப்பட்ட ஒரு தந்தை, தந்தையின் தந்தையான கடவுளுக்கு சமம் போல் தோன்றியது. ஒரு அப்பாவி மனிதன் - ஆனாலும் தனக்குப் பிறக்காத அந்தக் குழந்தை மீது அப்படி அன்பைப் பொழிந்தான். இத்தகைய நிகழ்ச்சிகளை இப்போது நினைக்கும் போதெல்லாம் இவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது. இதை வைத்து குமுதத்தில் ‘பூவம்மாவின் குழந்தை’ என்ற ஒன்று பிறந்தது.
குறிப்பு:
1. சாமுத்திரிகா லட்சணத்தில் இப்போது எனக்கு நம்பிக்கை கிடையாது. சப்பை முக்குக்காரர்கள் திறமையற்றவர்கள் என்றால் ஜப்பான்காரன் நம்மைப் பார்த்துச் சிரிப்பான்.
2. வளர்ப்பு மகள் நாவல் பல்வேறு பதிப்புகளைக் கண்டது. பல பல்கலைக்கழகங்களிலும், மத்திய மேல்நிலைப் பள்ளிகளிலும், பாடநூலாகப் பயன்பட்டது. டாக்டர் சாலை இளந்திரயன் அவர்கள்தான் முதன் முதலில் மேல்நிலைப் பள்ளியில் இதைப் பாடநூலாகக் காரணமானவர்.