எனது கதைகளின் கதைகள்/007-022

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7
கன்னட வாசனை


சென்னை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து, பதவி உயர்வு பெற்று கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறைக்கு, மாநில அதிகாரியாக பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்ற மறுநாள், ஒரு கன்னடப் பத்திரிக்கையில் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு என்னுடைய நியமனத்தை மேலும் ஒரு அத்தாட்சி என்று வர்ணித்திருந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில், எனது அலுவலகத்திலேயே ஒரு சில கன்னட வெறியர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. (இவர்கள் இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே கடும் கோபம் கொள்வதற்கு, நம்மவர்களும் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்.) சரி... சொல்ல வந்ததற்கு வருகிறேன்.

எனது அலுவலகத்தில், நான் வித்தியாசமான தமிழன் என்பதையும், என்னிடம் பாகுபாடு கிடையாது என்பதையும் அலுவலக ஊழியர்கள் புரிந்து கொள்ளத் துவங்கினார்கள். பிரபல கவிஞர் சித்தலிங்கைய்யா என்னைப் பற்றி கேள்விப்பட்டு அடிக்கடி என்னைப் பார்ப்பதற்காகவே, அலுவலகம் வந்தது, கன்னட ஊழியர்களிடையே என் மீது அன்பை ஏற்படுத்தியது. ஆனாலும், ஒரு ஆசாமி, அவர் டெப்த்திரி - அதாவது பியூனிற்கும், கிளார்க்கிற்கும் இடையிலான அபாயப் பதவி. இந்த ஆசாமி நன்கு விவரம் தெரிந்தவர். எல்லா அலுவலகர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு தலைமை அதிகாரிகளை ஆட்டிப் படைத்தவர். அவர்களை தப்புகள் செய்யத் துாண்டிவிட்டு, அந்த தப்புகளாலேயே அவர்களை அடிப்பவர். இவரது வேலை பைல்களை எடுத்து வைப்பது. ஆனாலும் சட்டையில் ஒரு தூசு படாமல் இருப்பவர். ஒரு தடவை, எங்கள் அலுவலகக் கட்டிடத்தை மாற்றும்போது வேலை செய்ய வேண்டியது இருக்கும் என்பதற்காக விடுப்பெழுதிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். இது வேண்டும் என்றே செய்ததென்பதால், நான் மெடிக்கல் சர்ட்டிபிகேட் கேட்டேன். அவர் திரும்பி வந்த பிறகு. அந்த சர்டிபிகேட்டை கொடுக்காதது மட்டுமல்ல, ஏன் கொடுக்க இயலவில்லை என்று கூடச் சொல்லவில்லை. ஆகையால், நான் அவரது விடுப்புக்கால சம்பளத்தைப் பிடித்தேன். உடனே அவர் டில்லியில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு தந்தி அடித்தார். பொதுவாக, மேல் அதிகாரிகள் ஒரு பிரச்சினையின் நியாய அநியாயத்தைப் பார்க்காமல், பிரச்சினையே இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். கொலை செய்தால் கூட அவர்கள் சம்மதிப்பார்கள். ஆனால் அது பிரச்சனையாகக் கூடாது. இந்த மனோபாவம் உள்ள டில்லி மேலதிகாரிகள் அவரது சம்பளத்தை நான் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள். எனக்கோ இது அதிகப்படியாகத் தெரிந்தது. அந்த ஆசாமிக்கு சம்பளத்தை நான் கொடுத்து விட்டேன் என்றால், பிறகு கர்நாடக மாநிலம் முழுதிலும் உள்ள, எங்கள் துறையின் ஊழியர்கள் என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து தந்திகள் அடிக்கலாம். ஆகையால், நான் துணிந்து தந்தி அடித்தவரை சஸ்பென்ட் செய்தேன். மேல் அதிகாரிகளிடம், என் அனுமதியின்றி தந்தி, அடித்ததை அதற்குக் காரணமாகக் காட்டினேன். தில்லி அதிகாரிகளுக்கு என்மீது கோபம் என்றாலும் - எனது சஸ்பென்ஷன் உத்திரவை அவர்கள் ரத்துச்செய்யலாம் என்றாலும், அவர்களுக்கு எதையும் எழுத்தில் கொடுக்க பயம்; பேசாமல் இருந்துவிட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் ஒரு பயங்கரமான உண்மை எனக்குப் புரிந்தது. அதாவது இந்த அரசாங்கத்தில் ஒரு கழுதையைக் கூட வேலையில் சேர்த்துவிட முடியும். ஆனால் அந்தக்கழுதையை நீக்குவது என்பது முடியாத காரியம். இந்த ஆசாமியை சஸ்பெண்டு செய்து விட்டு நான் ஏதோ சஸ்பெண்டு ஆனதைப் போல அலைந்தேன். அரசாங்க உத்தரவுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய என்னுடைய நிர்வாக அதிகாரியோ, நான் சொல்வதற்கெல்லாம் “எஸ் ஸார்” போடமாட்டார். ஏனென்றால், எடுத்த எடுப்பிலேயே “எஸ்” என்கிற வார்த்தை மரியாதைக்குறைவானது என்பது அவருடைய கருத்து. ஆகையால் “ஸார் எஸ்” என்றுதான் சொல்வார். நீட்டின இடத்தில் கையெழுத்தைப் போடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மனிதர். சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசாமிக்கோ அரசின் விதிமுறைகள் தெரிந்த ஓய்வு பெற்ற ஒரு அண்டர் செக்கரட்டரி துணை. அவரிடமிருந்து ஒரு நாளைக்கு ஒரு கடிதம் வீதம் வரும். அத்தனையும் சட்டதிட்டங்களைக் கொண்டதாக இருக்கம். நான் அந்த ஆசாமியை டாக்டரிடம் போகச் சொன்னதே தவறு என்று ஒரு செக்ஷனைச் சுட்டிக்காட்டி ஒரு கடிதம் வந்தது. அந்த குறிப்பிட்ட செக்ஷனைப் படித்தால், நான்காவது பிரிவு அலுவலரை மருத்துவ சான்றிதழிக்காக டாக்டரிடம் அனுப்பக் கூடாது என்றும் ஒரு விதி இருக்கிறது. இது எனக்குத் தெரியாதது நியாயமே. ஏனென்றால் நான் அடிப்படையில் ஒரு பப்ளிசிட்டி ஆபிசர். ஆனால் என் நிர்வாக அதிகாரிக்கும் தெரியாமல் போனதுதான் அநியாயம்.

நிர்வாக அதிகாரியையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக சட்டவிதிகளைத் தெரிந்து கொள்ள லோ... லோ... என்று அலைந்தேன். ஒருவரை சஸ்பெண்டு செய்து விட்டால், அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுக்க வேண்டும். இதற்கு அவர்கள் பதில் அளித்ததும், அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் விசாரணை நடத்தலாம். விசாரணை அதிகாரியை நியமித்த பிறகு, அந்த ‘விசா’ அதிகாரியே எகிறுவார். அவரை நீக்க அதிகாரம் கிடையாது. ஆனால், அந்த விசாரணை அதிகாரி வேண்டாம் என்று சஸ்பென்டு செய்தவர் சொல்லலாம். அவர் சார்பில் டிபென்ஸ் அஸிஸ்டென்ட் என்று ஒருவரை வைத்துக் கொள்ளலாம். அவர் அலுவலகப் பழைய குப்பைகளை கிளறலாம். மேல் அதிகாரி மீது என்னென்ன பழிகளையெல்லாம் போட முடியுமோ, அவற்றையெல்லாம் போடலாம். என் பக்கமோ விவரமே தெரியாத நிர்வாக அதிகாரி. சஸ்பென்டு ஆனவர் பக்கமோ சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்த அண்டர் செக்கரட்டரி; நான் அறிவுரை கேட்கப்போன அலுவலகங்களில் எல்லாம் “உங்களுக்கு எதுக்கு சார் வம்பு... பேசாமல் அந்த ஆசாமிகிட்ட மன்னிப்புக் கேட்டு அவரை வேலையில் சேர்த்து விடுங்க.” என்று உபதேசங்கள். நானும், சஸ்பென்டு ஆனவரை ஒருநாள் கூப்பிட்டு “நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தால் உன்னை வேலையில் சேர்க்கிறேன்” என்று சொன்னேன். அந்த ஆசாமியோ, “பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு நிற்காமல் போயவிட்டார். ஒருவேளை அவர் நின்றிருந்தால் “இரண்டு பேருமே வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம்பா” என்று சொன்னாலும் சொல்லி இருப்பேன்.

நாயர் பிடித்த புலிவால்

இந்தச் சமயத்தில், ஒரு அறிவுரையாளர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். இப்படித்தான் ஒரு பியூனை அவர் சஸ்பென்டு செய்தாராம். இந்த சம்பந்தப்பட்ட பியூன், இரவில் குடித்து விட்டு, அலுவலகம் வந்து, வாட்ச்மேனை அடித்து, பல்லை உடைத்து விட்டாராம். ஆனால் விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டதாம். காரணம் பல்லுடைபட்ட ஆசாமி, இன்னொரு பல்லும் உடையக்கூடாது என்பதற்காக தன்னை அந்தப் பியூன் தாக்கவில்லை என்றும் சத்தியம் செய்து விட்டாராம். இதனால் சஸ்பென்டு ஆன பியூன் சகல மரியாதைகளுடன் வேலையில் சேர்க்கப்பட்டாராம். இப்போது எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் பல்லை உடைக்கப் போவதாக பகிரங்கமாக சவால் விடுகிறாராம். இதை, பயந்தபடியே என்னிடம் தெரிவித்த அந்த அதிகாரி, “எது செய்தாலும் சஸ்பென்டு மட்டும் செய்யக்கூடாது சார்”. என்றார். அந்த சமயத்தில் என்னுள் அதிகாரி என்பவர் இறங்கி, எழுத்தாளன் என்பவன் மேலோங்கினான்.

இந்தப்பல்லுடைப்பு சமாச்சாரங்களை வைத்து ஒரு கதை எழுதலாமே என்று தோன்றியது. உடனே பண்டாரத்தின் ஞாபகம் வந்தது. அவனை சஸ்பென்டு ஆன பல்லுடைத்த பியூனிற்கு டிபென்ஸ் அஸிஸ்டன்டாகப் போட்டேன். பண்டாரம், பல்லுடைபட்ட வாட்ச்மேனைப் பார்த்து “ஒரு பியூன் அடித்த அடியிலேயே உனக்குப் பல் உடைகிறது என்றால், பழைய ராணுவ வீரனான நீ எப்படிய்யா. ஆபீச காவல் காப்ப? இதுக்காகவே உன்னை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று ஒரு போடு போட்டவுடனேயே, பல்லுடைபட்டவன் பயந்து விடுகிறான். பிறகு பண்டாரம் சம்பந்தப்பட்ட அந்தப் பியூன் குடித்துவிட்டு வந்தான் என்ற குற்றச்சாட்டையும் பொய்யாக்குகிறான். அவன் குடித்துவிட்டு வந்தான் என்பதற்கு ஆதாரம், அந்த பியூன் “ஆடுவோமே... கள்ளு பாடுவோமே...” என்று அலுவலகம் வந்து தள்ளாடிய படியே பாடியதுதான். பண்டாரம் சம்பவம் நடந்த நாள் சுதந்திர தினம் என்பதை அறிந்து, பல்லுடைத்த பியூன் செக்கிழுத்த சிதம்பரனாரையும், இதர தியாகிகளையும் நினைத்து எல்லாவற்றிற்கும் மேலாக பராதியின் நினைவு பொங்கி ‘பள்ளு பாடுவோமே’.. என்றுதான் பாடினான் என்கிறான். பாடியது பள்ளா, கள்ளா என்பது விவாதம். பண்டாரம் இன்னொன்றையும் கண்டு கொள்கிறான். சுந்திர தினத்தன்று எல்லா அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். ஆனால் அந்த அலுவலகத்திலோ அது ஏற்றப்படவில்லை. பண்டாரத்திற்குக் கொண்டாட்டம், தேசியக் கொடி ஏற்றப்டாத வெங்கொடுமையை நினைத்து பல்லுடைத்த பியூன், பாரதியார் பாட்டைப் பாடி தனது தேசபக்தியை நிலைநாட்டினான் என்றும். இதைப் பொறுக்காத அதிகாரிகள், அவனைப் பழிவாங்குகிறார்கள் என்றும் எதிர்க்குற்றம் சாட்டினான். இந்த நாட்டிலே தேசபக்திப் பாடலை அபிநயத்துடன் ஒரு தேசபக்தன் பாடினால், அது குடிகாரத்தனமா? என்று திருப்பிக் கேட்டான். பல் உடைத்தவன் மன்னிப்புக் கேட்கிறான். பல் உடைந்தவனோ கொக்கறிக்கிறான். இப்படி ஒரு கதையை எழுதி கல்கிக்கு அனுப்பினேன். பிரசுரித்தார்கள்.

பார்லிமென்டில் ஒரு கேள்வியும் - பண்டாரமும்

சென்னைத் தொலைக்காட்சியில் உதவி செய்தியாசிரியராகப் பணியாற்றிய எனக்கு நியாயமாக அங்கேயே பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். அப்போது சக அதிகாரி ஒருவரின் சூழ்ச்சியால் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டேன். இந்த அதிகாரி நான் தொலைக்காட்சிக்குப் போவதற்கு முன்பு வியாபாரச் செய்திகளை திணித்தார். பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் செய்தி ஆசிரியரையும் கைக்குள் போட்டுக் கொண்டார். நான் அங்கே போன பிறகு இத்தகைய வியாபாரச் செய்கைகளை நிறுத்தினேன். நிறுத்த முடியாத சமயங்களில் மேலதிகாரிகளுக்கு தெரியப் படுத்தினேன். இதனால் வெகுண்டெழுந்த இவரும், செய்தி ஆசிரியரும், அப்போதைய நிலைய இயக்குநரும் தீரமான அம்பேத்கார் வாதியுமான திரு செளடேகர் மீதும் என் மீதும் பல அவதூறுச் செய்திகளை தொலைக்காட்சியில் நான் சேர்ந்ததால் பிழைப்பற்றுப் போன நிருபர்களின் மூலம் பத்திரிகைகளில் இடம்பெறச் செய்தார்கள். மேலிடம் விசாரணை நடத்தி, நானும், செளடேகரும் குற்றமற்றவர் என்பதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி தொலைக்காட்சி நிலையத்தை வியாபாரத் தலமாக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரை டெல்லிக்கு மாற்றியது. லஞ்ச லாவண்யத்தை தடுத்த என்னையும் பெங்களுருக்கு மாற்றியது. அப்போது சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இரண்டு செய்தியாசிரியர் பதவிகள் இருந்தன. சமமான இந்த இரு பதவிகளில் ஒன்றை செய்தியாசிரியர் என்றும் மற்றொன்றை கூடுதல் செய்தியாசிரியர் என்றும் அழைப்பதுண்டு. டெல்லிக்கு தண்டனை மாற்றமாகச் சென்ற அந்த அதிகாரி - எந்த தொலைக்காட்சி நிலையத்தை வியாபாரத் தலமாக்கினாரோ அங்கேயே செய்தியாசிரியராக வந்தார். ஏற்கனவே அங்கு ஒரு செய்தியாசிரியர் அங்கு இருந்ததால் இவர் கூடுதல் செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பார் என்று “மக்கள்” அனுமானித்தார்கள். இதே “மக்கள்”, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அணுகி, இந்த அடாவடி நியமனத்தை ஒரு கேள்வி கேட்கச் செய்தார்கள். இன்னாரை கூடுதல் செய்தி ஆசிரியராக நியமிக்கலாமா என்பது கேள்வி. இல்லை என்பது பதில்... எப்படி என்கிறீர்களா... அவர் செய்தி ஆசிரியராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார்... கூடுதல் என்ற வார்த்தை எடுக்கப்பட்டுவிட்டது. இந்த வார்த்தைக்குள் அதிகாரிகள் விளையாடி விட்டார்கள்... இது தாயில் பிரசுரமாயிற்று.

அதாவது ஊழல் அதிகாரியை கூடுதல் ஆசிரியராக நியமிக்கலாமா என்ற கேள்விக்கு நியமிக்கவில்லை என்ற பதில்; செய்தி ஆசிரியராகத்தான் நியமித்தோம். கூடுதல் ஆசிரியராக நியமிக்கவில்லை, என்று நியாயமாகச் சொல்ல வேண்டிய பதிலை, “இல்லை” என்று சாமர்த்தியமாக முடித்து விட்டார்கள். ஒரு வேளை அந்த உறுப்பினர் திருப்பிக்கேட்டால் நீங்கள் கேட்டது கூடுதல் செய்தியாசிரியர் நியமனம் பற்றி; செய்தி ஆசிரியர் நியமனம் பற்றி அல்ல என்று சொல்லிவிடலாம். இப்படி வார்த்தைகளுக்குள்ளேயே விளையாடி, பார்லிமென்ட் உறுப்பினரின் கேள்வி அடிபட்டுப் போனது. யாரோ சொல்லிக் கேட்ட அந்த உறுப்பினரும், மீண்டும் அந்தக் கேள்வியை வற்புறுத்த மாட்டார் என்பது அந்த அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தச் சம்பவத்தைப் பின்னணியாக வைத்து பண்டாரத்தைக் கொண்டு வந்தேன். கூடுதல் ஆசிரியராக நியமிக்கவில்லை என்றாலும், ஆசிரியராக நியமித்திருக்கும் போது இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று மேல் அதிகாரியான டைரக்டர், கேட்கும் போது பண்டாரமோ “மாண்புமிகு” உறுப்பினர்கள் மிகப் பெரிய மனிதர்கள். நாம் அவர்களுக்கு வேலைக்காரர்கள் மாதிரி; ஆகையால் பெரியவர்கள் கேள்விக்கு உண்டு அல்லது இல்லை என்று ஒரே வார்த்தையில்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக்கூடாது, என்று பவ்வியமாச் சொல்லிவிட்டு பண்டாரம் கிண்டலாகச் சிரிப்பான். திகைத்துப்போன டைரக்டரிடம் “கவலைப்படாதீங்க சார்... நிர்வாகக் காரணங்கள், பொதுமக்கள் நலன், ஆகிய இரண்டு வார்த்தைகள் இருக்கும் வரை “மாண்புமிகு” உறுப்பினர்களோ, மேதகு பார்லிமென்டோ நம்மை எதுவும் செய்ய முடியாது” என்று குறுஞ்சிரிப்பாய் சிரித்துச் சொல்வான். இது கல்கியில் பிரசுரமாயிற்று.

இந்தப் பண்டாரத்தோடு பண்டாரமாக, இன்னும் சில கதைகளை எழுதி, பண்டாரம் படுத்தும் பாடு என்று, ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி வி.கே.என். என்ற மலையாள ஆசிரியர், பையன் என்ற ஒரு பாத்திரத்தை பல சிறுகதைகளிலும், நாவல்களிலும், உலவ விட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வி.கே. என். சிறிது காலம் புதுதில்லி வானொலி நிலையத்தில் மலையாள செய்திப்பிரிவில் பணியாற்றியவர். அப்போது தமிழ் செய்திப் பிரிவில் அவருடன் ஒரே அறையில் பணியாற்றிவன் நான். மலையாளிகள் ஒற்றுமையாகவும், தமிழர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் எங்கேயும் நடப்பது போல அங்கேயும் நடந்தது. இதை வைத்து அவர் “அசுரவாணி” என்ற ஒரு நாவலை எழுதியதாகக் கேள்விப்பட்டேன்.

அலிய சந்தானம்

கர்நாடக மாநிலத்தில் இன்னொரு கொடுமை நிலவுகிறது. இதற்கு அலிய சந்தானம் என்று பெயர். நான், தொழில் நிமித்தம் எனது மங்களுர் பப்ளிசிட்டி ஆபீசருடன் குந்தபுரா என்ற பகுதிக்குப் போனேன். பின்னர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்விட்டு, அதற்கு அருகே ஒரு மலைப் பகுதியில் திரைப்படம் காட்டப் போனோம். அங்கே ஒரு இளம் பெண்ணிடம் “உன் புருஷன் எங்கே இருக்கிறார்” என்று அரைகுறை கன்னடத்தில் கேட்டேன். அவள் உடனே “அவர், அவர் வீட்டில் இருக்கிறார். நான் என் வீட்டில் இருக்கிறேன். உனக்கு என்ன வந்தது” என்றாள். ஒரு வேளை, இது விவாகரத்து கேஸாக இருக்கலாம் என்று நினைத்து, இன்னோரு பெண்ணைக் கேட்டேன். அவளும் இதே பதிலைத்தான் சொன்னாள். பிறகு, எனது பப்ளிசிட்டி ஆபீசர் விளக்கினார். அந்தப் பகுதியில் கேரளத்தில் நிலவிய மறு மக்கள் மானியம் சகல பலவீனங்களோடும் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இதன்படி ஒருவன், ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு தன் வீட்டுக்குப் போய், சகோதர சகோதரிகளோடு வாழ்வான். எப்போதாவது மனைவியின் வீட்டுக்குப் போய், அவளுக்கு ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு வந்துவிடுவான். இந்தக் குழந்தைகளுக்கு அப்பா பரிச்சயம், அமாவாசை - ஆடி மாதிரி. தாய் மாமாக்கள், அத்தைகள் இல்லாமல் வாழும் அவஸ்தையைப் பார்த்தவர்கள். இந்தப் பெண்களின் முகங்களில் ஒரு வெறுமை இருப்பதை கண்டேன். கேரளத்திலாவது கணவன், மனைவி வீட்டில் வாழ்ந்தான். ஆனால் இங்கேயோ கணவனும், மனைவியும் வருடத்தில் நான்கைந்து முறை மட்டுமே சந்திப்பார்கள். இந்தப் பெண்களிடம் பேசிப்பார்த்ததில், கள் இந்த முறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதும் இதனை வெறுப்பதும் புரிகிறது.

இந்த அவல நிலையை, பெங்களூர் டி.வி. நிலைய இயக்குநர், வானொலி நிலைய இயக்குநர், பிரச்சாரத் துறை உட்பட பல உயர் அதிகாரிகளைக் கொண்ட பப்ளிசிட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் தெரிவித்து, இதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். யாரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அப்படி ஒரு முறை இல்லை என்று அடிக்காத குறையாகத் தெரிவித்தார்கள். இந்தப் பெண்களின் நிலைமைப் பற்றி நான் தாமரையில் விரிவாக ஒரு சிறுகதை எழுதியதைத்தவிர வேறு எனக்கு எதுவும் செய்யத் தெரியவில்லை.

மலைக்கதை

மூகாம்பிகை கோவில், பயங்கரமான மலைப்பகுதிக்குள் இருக்கிறது. இதற்கு அருகே உள்ள ஒரு மலைக் கிராமத்திற்குப் போனேன். காதுகளிலும், கைகளிலும் பெரிய பெரிய ஈய நகைகளைப் போட்ட பெண்களும், கிழிந்த வேட்டி கட்டிய ஆண்களுமாக இருந்த கிராமம். இங்கே புதிய தலைமுறைப் பெண்கள் பாவாடை தாவணியை கஷ்டப்பட்டு அணிந்து வர முயற்சி செய்கிறார்கள். இந்தக் கிராமத்தில் ஒரு இளம்பெண் கைக்குழந்தையோடு கண்ணீரும், கம்பலையுமாக இருந்தாள். அவள் கணவன் குடித்து, குடித்தே, இறுதியில் தன் உயிரை தானே குடித்து விட்டான். கூட்டுக் குடும்பத்தில் வாழும் இந்தப் பெண், சந்தோஷமாக இருப்பதாக மற்றவர்கள் சொன்னபோது இவளும் தலையாட்டினாள். ஆனால் தனிமையில் இவளைச் சந்தித்துக் கேட்டபோது, இவள் மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், ஆனால் மலை ஜாதி தலைமை அதற்கு மறுப்பதாகவும் பன்னிப்பன்னிச் சொன்னாள். மெஜாரிட்டியின் சர்வாதிகாரம் எப்படிப் போகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவளையும் பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதினேன். அது குமுதத்தில் பிரசுரமானது.

தாய்மைக்கு வறட்சியில்லை

வட கர்நாடகத்தில், நான் ஊழியர்களோடு சுற்றுப் பயணம் செய்யும் போது வறட்சி மிகுந்த குல்பர்க்கா என்ற இடத்திற்குப் போனேன். அங்கே பண்ணை நிலம் காய்ந்து கிடந்தது. நாங்கள் அங்கே போய் கையோடு கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்துச் சாப்பிட்டபோது, ஒரு ஆணும், பெண்ணும் அடியற்ற மரம் போல் சாய்ந்து கிடப்பதைக் கண்டேன். அவர்களை எழுப்பி விசாரித்ததில், அந்த நிலத்துச் சொந்தக்காரர், ‘பயிர் செய்து கட்டுபடியாகாது. நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்’ என்று சொல்லிவிட்டு, பெங்களூருக்குப் போய்விட்டாராம் காரில். இந்தத் தம்பதி, குழந்தை குட்டிகளோடு குடிக்கக் கூழ் கூட இன்றி அல்லாடினார்கள். அந்த நிலப்பிரபு அப்படி நடந்து கொண்டது சரிதான் என்பது மாதிரியான மனோ நிலையில் இருந்தார்கள். இவர்களிடம் போய் “உங்களால் இந்த நிலம் விளைந்த போது உங்களுக்கு கூலியைத் தவிர பிரமாதமாக எதையும் கொடுக்காத இந்தப் பண்ணை யார், வறட்சி வந்த போது உங்களைக் கைவிடுவது நியாயமா?” என்று கேட்டேன். அப்போது தான் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வோமே ‘கான்ஷியஸ்னஸ்’ என்று அந்த உணர்வு ஏற்பட்டது. பண்ணையார் இருக்கும் பெங்களூர் திக்கை அவர்கள் கோபமாக முறைத்துப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. இப்படித்தான் இன்று நாட்டில் பெரும்பாலான ஏழைகள், தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே இருக்கிறார்கள். இவர்களுக்குப்போய்ச் சேருகின்ற, நடிகை நளினி குழந்தை பெற்ற வரலாறு, ஸ்ரீபிரியாவின் காதல் தோல்வி, ஆகிய சமாச்சாரங்களை மீறி நடப்பு நிலையை எடுத்துரைப்பது இவர்களுக்கு இப்போதைய படைப்பாளிகளுக்கு தலையாய கடமையாகிறது. இந்தக் கடமையின் ஒரு பகுதியாக, ஒரு கதை எழுதிக் குங்குமத்தில் இடம்பெற வைத்தேன்.

தஞ்சைக் காவேரியாகாத தலைக்காவேரி

மைசூருக்கும், மங்களூருக்கும் இடையே மலை சூழ்ந்த பகுதி மெர்க்காரா; இதை தமிழில் குடகு என்று சொல்கிறோம். இங்கே ஒவ்வொரு குடும்பத்தினரும் நமது பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்கள். தன்மானப் பிரியர்கள். இங்குள்ள பெண்கள் பேரழகிகள். எழில் சிந்தும் இயற்கை. இந்தப் பகுதிக்குச் சென்ற நான் அப்பாவித்தனமாக ஒரு விடுதியில் ஆறிப்போன அதோடு அரைகுரையாய் வெந்த மீன் வறுவலைத் தந்ததற்காக ஹோட்டல்காரரிடம் சென்று சண்டை போட்டேன். வாய்ச் சண்டை தான். உடனே நான்கைந்து, கூர்க் இளைஞர்கள் என்னைச் சுற்றி வளைத்தார்கள். ஒருவன் அடிப்பதற்கு கையை ஓங்கிவிட்டான்.

நான் வெலவெலத்துப் போனேன். என்னுடைய பப்ளிசிட்டி ஆபீசர், உதவியாளர், ஆகியோர் முன்னிலையில் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக வருந்தினேன். எனது கன்னட உதவியாளர்களும், பேசமுடியாமல் நின்றார்களே தவிர, எனக்கு ஆதரவாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. ஒரு வேளை விவகாரம் விபரீதமாக வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். என்னை அவசர அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப் போனார்கள். ஆனால், நானோ எதிர்ப்புக் குரல் காட்டி நின்றேன். உடனே ஒரு ஆசாமி கொஞ்சு தமிழில் “நாங்களும் அப்போது பார்த்தே உன்னைக் கவனிக்கிறோம். நீ என்னடான்னா கூர்க்கு பெண்கள் ரொம்ப அழகா இருக்காங்கன்னு சொல்றே. அவங்கள உத்து உத்து பாக்கறே. ஜாக்கிரத! அவளுங்க ஒவ்வொருத்தி கிட்டயும் துப்பாக்கி இருக்கு. ஒரு புல்லட்டுல்ல நீ போயிடுவே” - இந்த “தண்ணி” ஆசாமியைத் தொடர்ந்து, பலரும் என்னை மொய்த்துக் கொண்டார்கள். நல்லவேளையாக, அந்தப் பக்கமாக வந்த ஒரு கூர்க்கு ஆசாமி, ஏதோ கூர்க்கு மொழியில் சொன்னார். உடனே என்னைத் திட்டியவர்கள் பெட்டிப்பாம்பாகி, மன்னிப்புக் கேட்டார்கள். வந்தவர், நான் கர்நாடக மாநில விளம்பர அதிகாரி என்றும் கூர்க்கு பகுதிகளில் திரைப்படங்களைக் காட்டுவதற்காக வந்திருக்கிறேன் என்றும், சொல்லியிருக்கிறார். உடனே என்னை எந்த வேகத்தில் திட்டினார்களோ, அந்த வேகத்தில் நண்பர்களாக ஆனார்கள். எல்லாம் முடிந்ததும், நான் என்னை ஏன் அப்படித் திட்டினிர்கள் என்று கேட்டேன். உடனே ஒருவர் “நான் கோயம்புத்துாரில் இருக்கும்போது உங்க ஆட்கள் என்னைத் திட்டினாங்கோ - இது பதிலுக்குப் பதில்” என்றார்.

ஒரு கூர்க்கு திருமணத்தையும், மெர்க்காரா மலை நகரத்தில் நான் பார்த்தேன். பெண்கள் அழகோவியங்கள். அவர்கள் நம் பெண்களை மாதிரி முந்தானையை முன்னால் போடாமல், தோளில் இருந்து கீழே அங்கிமாதிரி போட்டிருந்தார்கள். இந்தக் கோலத்தில் அவர்கள் நிச்சயமாக மயில் மாதிரியே தோன்றினார்கள். இந்தக் கல்யாணத்தில், கையில் வாளோடும், பல்வேறு விதமான மெடல்களோடும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள், குரு பரம்பரையாம். சின்னப் பையனிடம்கூட, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னதான் என்னைத் திட்டியவர்கள் நண்பர்களாகி விட்டாலும், எனக்கு மனம் கேட்கவில்லை. நான்குபேர் முன்பு அவமானப்பட்டது போன்ற எண்ணம். இந்த எண்ணச் சுமையோடு மறுநாள் ஒரு மலைக் கிராமத்திற்கு ஜீப்பில் திரைப்படப் பிரிவுடன் சென்றேன். மெர்க்காரா நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பஸ் போக்குவரத்து இல்லாத தொலைந்து போன கிராமம். வழியெல்லாம் மலைக்குகைகள், அந்தக் கிராமத்திலோ நாலு பக்கமும் மலை. அதன் மேலுள்ள ஆகாயத்தில் கூட மலைகள் ஆக்கிரமித்திருந்தன. இந்தக் கிராம மக்கள் சூரியோதயத்தை பார்க்க முடியுமா என்பதே சந்தேகம். ஆனாலும், இங்கே வாலிபால் கோர்ட் இருந்தது. பங்களாக்கள் இருந்தன. எங்களைப் பார்த்ததும், அந்த ஊர் மக்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் பலர் இருந்ததால், நான் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்களுடன் உரையாடினேன். இந்த மாதிரி அடிக்கடி நான் வந்து சினிமா போட்டுக் காட்ட வேண்டும் என்று அந்த ஊர்ப்பிரமுகர்கள் கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் ஒரு இளம்பெண் என்னை தயக்கமாகப் பார்த்தாள். அவளுக்கு முப்பது வயது இருக்கும். முழு ஆப்பிள் நிறம். சிறிது நேரம் கழித்து ‘நீங்கள் மெட்ராசா’ என்று தமிழில் கேட்டாள். எனக்கு ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. என் உதவியாளர்களிடமே தமிழில் உரையாட முடியாத எனக்கு அந்தக் காட்டு சூழலில் ஒரு பெண் தமிழில் பேசுவதில் ஆனந்தம் அடைந்தேன். பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில், அவள் தனது தங்கை வீட்டிற்கு (சென்னை) அடிக்கடி வருவாள் என்றும், அங்கே தமிழ் கற்றுக் கொண்டதாகவும் சொன்னாள். அவள் குடும்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டதும் யாருக்கும் தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். பின்னர் சிறிது தூரம் என்னை பின்னால் நடக்கச் சொன்னாள். எனக்கு ஒரே பயம். கூர்க்கு நண்பர்கள் சொன்ன துப்பாக்கிச் சூடு, வாயைக் கட்டிப் போட்டது. ஆனால் அவளோ நெடுநாளைய தோழனைப் பார்த்ததுபோல் ‘திக்கு தமிழில்’ தனது குடும்ப சோகத்தைச் சொன்னாள். அவள் டென்னிஸ் விளையாட்டுக் காரியாம். ஒருவரைக் காதலித்து கை பிடித்திருக்கிறாள். ஒரே ஜாதி என்பதால் பிரச்னை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டாள். ஒரு நாள் ஏதோ நிலத்தகராறில், அவள் கணவனை, கணவனின் தம்பி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டானாம். ஊர்காரர்களோ பாராமுகமாக இருந்ததுடன், கொலைகாரன் தப்பிக்கும் வகையில் விவகாரத்தை பூசிமெழுகி விட்டார்களாம். இதுவும் போதாது என்று ஊர்க்காரர்களோ அவளை உதாசீனம் செய்துவிட்டு, கொலைகாரனையே, கொலையுண்டவனின் ஈமச்சடங்கை நிறைவேற்றச் சொன்னார்களாம். அவள் சொல்லிச் சொல்லி அழுதாள். கணவனைக் கொன்றவனை ஒரே வீட்டில் தினமும் பார்க்கும் அவல நிலையை நினைத்து தினமும் அழுவதாகக் கூறினாள். நான் அவளுக்கு ஆறுதல் சொன்னேன். ஆண்டவன் பொறுப்பில், தன்னை ஒப்படைத்து விடும்படி தேற்றினேன். குழந்தைகளை வளர்ப்பதில் தீவிரமாக இருக்கும்படி எடுத்துச் சொன்னேன். எவருமே இந்த உலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பதை நினைத்து, இருக்கிற காலத்தை பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நல்லவிதமாய் கழிக்கும்படி சொன்னேன். உடனே அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவள் முகத்தில் லேசான தெளிவு தெரிந்தது. ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். பிரியும் வேளை வந்தது. இனிமேல் நாங்கள் மீண்டும் சந்திக்கப் போவதில்லை என்பது அவளுக்கும் புரிந்தது. ஏனென்றால் நான் சென்னைக்கு மாற்றலாகிப் போகிறேன் என்பதை அவளிடம் சொன்னேன். அவள் திடிரென்று தனது விரலில் இருந்த ஒரு ஐம்பொன் மோதிரத்தை எடுத்து என்னிடம் தந்தாள். இந்த மோதிரம், கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற தர்மஸ்தலா ஆலயத்தின், லிங்கத் தோற்றத்தை கொண்ட மோதிரம், “இதை கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து ஒரு வருடமாக போட்டுக்கிட்டேன். என் ஞாபகமாக நீங்க போட்டுகோணும்” என்றாள். நான் அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு கையில் போட்டுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி நடந்து பலப்பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு வாழ்க்கையில் சலிப்பு தோன்றும் நேரத்தில் எல்லாம் இந்த மோதிரத்தையும், அந்தப் பெண்ணையும் நினைத்துக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில், “தஞ்சைக் காவேரி ஆகாத தலைக் காவேரி” என்ற சிறுகதை ஒன்றை எழுதினேன். “குங்குமம்” அதைப் பிரசுரித்தது.

கள்ளி நியாயம்

பிருந்தாவனுக்கு அருகே ஒரு கிராமம். நானும், என் உதவி அதிகாரியும் ஒரு தேநீர்க் கடைக்குப் போனோம். அங்கே நான் தமிழ்நாட்டிலிருந்து வந்த பெரிய அதிகாரி என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். உடனே, அங்கிருந்த கன்னடக்காரர்கள் “இங்கே தமிழன் ஆதிக்கம்தான்”, கன்னடத்தை சேர்ந்த ஒருவரைப் போட்டால் என்ன என்கிற பாணியில் முணுமுணுத்தார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. அரைகுறைத் தமிழில் உரையாடிய அவர்களை வேதனையோடு பார்த்தபோது கீழே ஒருவர் தரையில் உட்கார்ந்து தனிக் கிளாசில் டீ குடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் யார் என்றேன். ஆதிதிராவிடர் என்று பதில் வந்தது. உடனே நான், ‘தமிழனும், கன்னடனும் ஒரே ஜாதிப்பா... ஏன்னா நாம ரெண்டு பேருமே ஆதி திராவிடர்களை இப்படித்தான் அமுக்கி வைக்கிறோம்’ என்று கிண்டலடித்தேன்... ‘உன் ஆளை கீழே வைத்துக் கொண்டு, என் ஆளைச் சாடுவதற்கு உனக்கு என்ன யோக்யதை இருக்கிறது’ என்று கோபமாக கேட்டுவிட்டு, அவர்கள் ஏச்சுக்கு பயந்து வெளியேறினேன். அப்போது அவர்கள், ‘பன்னி, பன்னி...’ என்றார்கள். நானும் அவர்களை ஒரு காட்டுப்பன்றி முறைப்பது போல் முறைத்தேன்... கடைசியில் விசாரித்தால், பன்னி என்ற கன்னட வார்த்தைக்கு ‘வாங்கோ... வாங்கோ...’ என்ற மரியாதையான அர்த்தமாம். அதாவது என்னை நடத்திய குற்ற உணர்வில் அவர்கள், கொடுத்த மரியாதையான வரவேற்பு. கல்கியில் இது ‘கள்ளிநியாயம்’ என்ற பெயரில் கதையானது... கன்னடத்தில் ‘ஹள்ளி’ என்றால் கிராமம்... நான் இரு பொருளில் இந்த தலைப்பை வைத்தேன்.

எக்குடி தோற்பினும்

எனது ஹாசன் பப்ளிசிட்டி ஆபீசருடன் குதிரை மூக்கு என்ற இடத்திற்குச் சென்றேன். இந்தப் பகுதியில் இரும்புத் தாது எடுக்கப்பட்டு, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள மலைக் குதிரைமூக்கு மாதிரி இருக்கிறது என்பதால், இதற்கு குதிரை மூக்கு என்று பெயர் வைத்தார்களாம். இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினேன். இந்தத் தொழில் திட்ட பொதுமக்கள் தொடர்பு அதிகாரி, எனக்கு மேல் அதிகாரியாக இருந்தவரின் மகன். என்னை நன்றாகவே கவனித்தார். இங்குள்ள தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லா வசதிகளும் செம்மையாக உள்ளன. பெருக்குகிறவர்களுக்குக் கூட இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பளம். ஆனாலும், இந்த டவுன்ஷிப் தெருக்களைச் சுத்தப்படுத்துவது, பூங்காக்களைப் பராமரிப்பது, விருந்தினர் விடுதியை சுத்தப்படுத்துவது போன்ற களப்பணிகளை கான்ட்ராக்டர்களே ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து அவர்களுக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து சுத்தம் என்ற பெயரிலே சுரண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அமைப்பு ரீதியில் இல்லாத இந்த அப்பாவி தொழிலாளர்கள், இந்த திட்டப் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால், ஒரு பொந்துப் பகுதியில் கோலோச்சுவதாகக் கேள்விப்பட்டேன். பி.ஆர்.ஒ., இந்த இடம் கள்ளச்சாராயத்திற்கு பேர் போனது என்றும், நான் போவது நல்லதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரை ஒதுக்கிவிட்டு, எனது திரைப்படப் பிரிவுடன் அந்தப் பகுதிக்குப் போனேன். அங்கிருந்த மக்கள் கிட்டத்தட்ட மலைப் பொந்துகளிலேயே இருந்தார்கள். நான்கு குச்சிகளை நிறுத்தி அவற்றை கோணிகளால் மூடி, வீடு கட்டியிருந்தார்கள். கொசுக்கள் குருவிகள் போல் வட்டமடித்தன. சதசத என்ற தரைப்பகுதி. சுமார் ஐநூறு தொழிலாளர்கள் இருப்பார்கள். தமிழ்க்காரி, இந்திக்காரரை கல்யாணம் செய்திருந்தாள். மலையாளத்தாளுக்கு கூர்க்கா கணவன். தெலுங்குப் பெண்ணுக்குப் புருஷன் தமிழன். இப்படி ஜாதி தொழில் பேதமின்றி தாம்பத்தியம் வைத்திருந்த அந்தத் தொழிலாளர்கள் ஒரு சின்ன இந்தியா போல் காட்சியளித்தார்கள். இவர்கள் என்னைப் பார்த்ததும் மெய்சிலிர்த்துப் போனார்கள். இப்படி ஒருவர் தங்களைத் தேடி வந்ததில்லை என்பதே அதற்குக் காரணம். குதிரை மூக்கு திட்டப் பகுதியில் நிரந்தர தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, நிர்வாகம், இவர்களை, அந்த இடங்களில் அமர்த்துவதற்கு முன் வந்தார்களாம். இவர்களோ மறுத்துவிட்டார்களாம். இத்தகைய, இவர்களின் வர்க்க உணர்வு, என்னை புல்லரிக்க வைத்தது. திரைப்படத்திற்குப் பிறகு, இவர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றேன். இவர்கள் காட்டிய அன்பும், ஆரவாரமும் நான் கண்ட இனிமையான சுகங்களில் ஒன்று. இவர்களைப் பின்னணியாக வைத்து - இவர்கள் தங்களுக்கு வலிய வந்த நல்ல வேலையை தொழிலாளர் வர்க்கத்திற்காக, அதுவும் பாராமுகமாக இருந்த தொழிலாளர்களுக்காக விட்டுகொடுத்ததை மகோன்னதமான தியாகம் என்றே நினைக்கிறேன். இதை வைத்து “எக்குடி தோற்பினும்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். கதை செம்மலரில் பிரசுரமாயிற்று. பின்னர் இதே கதை தமிழகத்தின் சிறந்த சிறுகதைகள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றது. தாய் இதழில் ‘சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மீண்டும் பிரசுரமாயிற்று. இது எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான திரு எஸ்.ஏ. பெருமாள் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சங்கத்தின் திருச்சி மாநில மாநாட்டில் சந்தித்தபோது இந்தக் கதை பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை மிகச் சிறந்த நேயத்தோடு குறிப்பிடுகிற கதை என்று என்னிடம் தெரிவித்தார். இப்போதும் நான் அதை நினைத்துக் கொள்வேன்.

காக்கைச் சிறகினிலே...

பெங்களூரில் காலையில் உலவச் செல்வதே ஒரு அலாதி இன்பம், அழகான கட்டிடங்கள், தூய்மையான தெருக்கள். சிநேக பாவமுள்ள மக்கள். பொதுவாக ஒரு பெண் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தனித்துச் செல்லமுடியும். பெண் தனியாகப் போகிறாள் என்பதற்காக சென்னை நகரத்தைப் போல் அங்கே யாரும் தொடர்வதில்லை. சிவாஜி நகரில் இருந்த நான், எம்.ஜி.ரோட்டிற்கு (எம்.ஜி. ரோடு என்பது நமது சென்னை நகர அண்ணாசாலை மாதிரி அதாவது மகாத்மா காந்தி ரோடு. பலருக்கு மகாத்மாவின் நினைவிலான சாலை என்பது தெரியாது. வெறுமனே எம்.ஜி. ரோடு தான்.) இந்தப் பகுதியில் நான் ‘காலை வாக்கிங்’ போனபோது, ஒரு பெரிய மைதானத்தில் அடர்ந்த மரங்களுக்கு இடையே காகங்கள் கூச்சலிட்டன. கிட்டே போய் பார்த்தேன்; ஒரு காகக்குஞ்சு, கீழே விழுந்துக் கிடந்தது. அது தத்தி தத்தி துள்ளியதும், பறக்க முடியாமல் அவதிப்பட்டதும், பெரிய காகங்களைப் பரிதாபமாக பார்த்ததும், என் நெஞ்சைப் பிழிந்தது. அந்தக் குஞ்சை எடுத்து, மரத்தில் வைக்கலாம் என்று போனேன். ஆனால், கத்திக் கொண்டிருந்த காகங்கள் என்னைத் தாக்கத் தொடங்கின. இதற்கு இடையே, இரண்டு மூன்று நாய்கள் அந்தப் பக்கமாக வந்தன. நான் அவற்றிடமிருந்து அந்தக் குஞ்சை காப்பதற்காக இரண்டு கல்களை கைகளில் வைத்துக் கொண்டு நின்றேன். எம்.ஜி. ரோடு வழியாக போய்க் கொண்டிருந்த ஆட்டோக்களும், சைக்கிள்களும் உடனே நின்றன. என்னையும், என் கையில் இருந்த கற்களையும் மாறி மாறிப் பார்த்தனர். பைத்தியும் பிடித்த நான் கல் எறிவேன் என்று பயந்ததுபோல் சிலர் ஒதுங்கி நின்றபடியே என்னை வேடிக்கை பார்த்தார்கள். தற்செயலாக அந்தப்பக்கம் பார்த்த நான் நிலமையைப் புரிந்து கொண்டேன். கற்களைப் போட்டுவிட்டு, அசல் பைத்தியம் போலவே ஓடினேன். நல்லவேளை பைத்தியம் என்று என்னை யாரும் விரட்டிப் பிடிக்கவில்லை. இதேபோல், சென்னையில் பெசன்ட் நகரில் ஒரு காகக்குஞ்சிற்கு இத்தகைய நிலமை ஏற்பட்டது. இங்கேயும் அதைக் காப்பாற்றப் போன என்னை காகங்கள் தாக்கின. ஆனாலும், நான் இரவு பத்து மணி வரை, கையில் கல் ஆயுதங்களுடன் அந்தக் குஞ்சை, பூனையோ, நாயோ நெருங்க விடாமல் காவல் காத்தேன். மறுநாள் காலையில் அலுவலகம் போகும்போது, வழியில் அந்தக் குஞ்சை காணவில்லை. சற்றுத் தொலைவில் அதன் இறக்கைகளும், நகப் பகுதிகளும் கிடந்தன. புரிந்து கொண்டேன். நெஞ்சு கனத்தது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பின்னணியில் “காக்கை சிறகினிலே” என்ற சிறுகதையை எழுதினேன். கலைமகள் பொங்கல் மலருக்காக எழுதப்பட்ட கதை. இது பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுகதை தொகுப்பில் ஒரு கதையாக இடம் பெற்றது.

தாயாகி... மகளாகி - குப்பைத் தொட்டி

வட கர்நாடகத்தில், அத்தனி என்ற இடம்; இது பம்பாய் கலாச்சாரத்தை உள்ளடக்கிய பகுதி - இங்கே தேவதாசி திட்டத்திற்கு எதிராக போர் தொடுத்தோம். கர்நாடக அமைச்சர் திரு சிந்தியாவின் தலைமையில், தேவதாஸி முறைமைக்கு எதிராக கல்லூரி மாணவ மாணவியரை வைத்து ஊர்வலம் நடத்தினோம். பிறகு ஒரு தேவதாஸிக்கும் ஒரு சமூகத் தொண்டருக்கும் திருமணம் செய்து வைத்தோம்.

இந்த தேவதாஸிப் பெண்ணும், இந்த “சமூகத் தொண்டரும்” இப்படி பல இடங்களில் பல விழாக்களில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. சொன்னாலும் வெட்கமடா - சொல்லாவிட்டால் துக்கமடா என்ற கதை தான். இந்த விழாவில் ஆடியன்ஸ் பஞ்சத்தைப் போக்குவதற்காக, மகளிர் காப்பகத்திலிருந்து சுமார் நூறு பெண்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பெண்கள், விடுதிக்குப் போன பிறகு ஒரே அழுகை மயமாய் இருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. உடனே, அதை விசாரிப்பதற்காக அந்த விடுதிக்கும் போனேன். இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டவர்கள், அல்லது காதலர்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களைத் தேவதாஸிகளாக கூட்டத்தில் நிறுத்தியது அவர்களுக்கு கேவலம் ஆகிவிட்டதாம். எல்லாப் பெண்களும் அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்தார்கள். இவர்களே இளக்காரமாக நினைக்கும் அளவிற்கு இருந்தால், தேவதாஸிகளின் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம். இந்தப் பெண்களைச் சமாதானப்படுத்தி விட்டு, அவர்களில் பல பெண்களின் வாழ்க்கையைக் கேட்டேன். கேட்க கேட்க மனம் கொதித்தது. ஒரு பெண்-தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவள். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தக் குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்த ஒரு இளைஞனை காதலித்து திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தியிருக்கிறாள். இதைப் பொறுக்காத அவள் தந்தையும், அண்ணனும் இவள் கணவனைக் கொலை செய்து விட்டார்கள். கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்த பெண் சுமார், 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விடுதிக்கு அனுப்பப்பட்டாள். இவளை, இவள் அம்மாவும், இவளது அண்ணன் மனைவியும் அடிக்கடி வந்து பார்த்தார்களாம். அம்மாக்காரி. தன் கணவனுக்கு மடிப்பிச்சைக் கேட்கிறாள். மகனின் உயிரைப் பறித்து விட வேண்டாம் என்று மகளிடம் மன்றாடுகிறாள். அண்ணிக்காரியும் மடிப்பிச்சைக் கேட்கிறாள். இந்தப் பாவி பெண்ணுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதோ எனக்கு தோன்றியதைச் சொன்னேன். இப்போது என்ன ஆச்சுதோ தெரியவில்லை.

இதேபோல் இன்னொரு இளம்பெண். கைவிடப்பட்ட பெண்களின் நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்குவதற்காக ஒரு பெங்களூர் பயல் இந்த விடுதிக்கு வந்திருக்கிறான். இந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறான். அனாதை விடுதியிலேயே பிறந்து வளர்ந்த அந்த அப்பாவிப் பெண், வாழ்க்கையின் சுகந்தத்தை சுவாசிக்கலாம் என்று மனம் மகிழ்ந்தாள். இந்த விடுதியின் தலைவியும், அந்த வாலிபனை வெகுவாகப் பாராட்டியிருக்கிறாள். ஆனால், அந்தப் பயலோ ஆய்வு முடிந்ததும் திரும்பிப்பாராமல் போய்விட்டான். இந்தப் பாழும் பெண்ணோ மீண்டும் அனாதை ஆனது போல் துடித்ததை நானே நேரில் பார்த்தேன். இந்த இரண்டு சம்பவங்களையும் இரண்டு சிறுகதைகளாக்கி அனுப்பினேன். பத்திரிகைகளில் பிரசுரமாயின, ஒன்று “சிறுகதை இதழில்” இன்னொன்று ‘குங்குமத்தில்’

பெங்களுர் தெரேஸா

எனது அலுவலகக் காரில் எம்.ஜி. ரோடில் போய் கொண்டிருந்தேன். எனது டிரைவர், ஒரு வயதான அம்மாவை நேராகக் குறிவைத்தது போல் மோதிவிட்டார். நேரடியான ஹிட். அந்த அம்மா சுருண்டு விழுந்தார். நானும் டிரைவரும், பதறிப்போய் அவரைத் தூக்கினோம். அருகே இருந்த போக்குவரத்து கான்ஸ்டேபிள் வழக்குப்பதிவு செய்யப் போனார். வழக்குப் பதிவானால் நான் டிரைவரை சஸ்பென்ட் செய்தாக வேண்டும். ஏற்கனவே அவர் இன்னொரு விபத்தில் ஒருவரைக் கொன்றவர். இந்தப் பின்னணியில், என்ன செய்வதென்று தெரியாமல், அந்தக் கான்ஸ்டேபிளைப் பார்த்து “ஒரு ஏழையை இன்னொரு ஏழைதான் காப்பாற்ற வேண்டும்” என்று மன்றாடினேன். அவரும் பெரிய மனது வைத்து, அந்த அம்மாளுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டு, தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அவரது பெருந்தன்மையைப் பாராட்டி, அந்த அம்மாவை காரில் தூக்கிப் போட்டோம். அவருக்கு கால் முறிந்திருந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தார். ஆனால் இந்த மாதிரி சமயங்களில் விபத்துக்குள்ளானவர் திட்டுவாரே, அப்படித் திட்டவில்லை. நாங்கள் பதறிப்போய், துடித்ததைப் பார்த்து, மெல்ல புன்முறுவல் செய்தார். “ஏசுவே ஏசுவே” என்பதைத் தவிர எந்த வார்த்தையும், அவரிடமிருந்து வரவில்லை. அரசாங்க மருத்துவமனையில் சேர்த்தால் வம்பு என்று அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் போனோம். அங்கே இருந்த டாக்டர்கள் பயந்துவிட்டார்கள். ஆனாலும் அங்கிருந்த வார்டு பாய்க்கு கையில் பத்து ரூபாயை “காப்புக்கட்டி” அந்த அம்மாவை, எப்படியோ சேர்த்து விட்டோம். கால் முறிவுக் கட்டுப்போடப்பட்டது. இதற்குள் அந்த அம்மாவின் பையன்களும், பெண்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு, வந்தார்கள். குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டார்கள். அவர்களில் ஒருவர் கூட எங்களைத் திட்டவில்லை. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நன்றாக அடி கிடைப்பதும் உண்டு. ஆனால் இந்த அம்மாவின் பிள்ளைகளோ எங்களை அதிர்ந்து கூட ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த அம்மாள், பிள்ளைகளுக்கு ஆறுதல் கொடுத்தபடியே எங்களை ஆசீர்வாதம் செய்வது போல் பார்த்தார். நான் நெக்குருகிப் போனேன். இந்த மாதிரி அற்புதத் தாயைப் பார்த்ததில்லை. அவருக்கு எங்களால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்து, விவகாரத்தை முடித்து விட்டோம். இப்படி அநியாயமாக அடிபட்ட போதிலும், ஒரு வார்த்தை கூட திட்டாத அந்த அம்மாவை வைத்து ‘பெங்களூர் தெரேஸா’ என்ற சிறுகதையை எழுதினேன். குமுதத்தில் பிரசுரமாயிற்று. என்றாலும் அந்தக் கதையில் டிரைவர் முக்கியத்துவம் பெற்று, அந்த அம்மாள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்பது ஒரு விமர்சனம். குமுதம் இந்தக் கதையை ஒருவேளை சுருக்கிப்போட்டதால் இருக்கலாம்.

சாக்கம்மா

கர்நாடக மாநிலத்தில் இன்னும் மறைமுகமாக தேவதாசி முறை இருந்து வருகிறது. அரசு இதை சட்ட விரோதம் என்று அறிவித்துவிட்ட போதிலும் இந்தக் கொடூரம் இன்னும் நிலவத்தான் செய்கிறது... ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு அழகான இளம் பெண் இருந்துவிட்டால் போதும். ஜாதி இந்துக்களுக்குப் பொறுக்காது. உடனே அவளை தேவதாசியாக்க வேண்டுமென்று அவளைப் பெற்ற சாமானியனிடம் சொல்லி விடுவார்கள்... சொன்னால் சொன்னதுதான்... இல்லையானால் அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படும். வேறு வழியில்லாமல் அவள் தேவதாசியாக்கப்படுவாள்... இந்தச் சடங்கும், அதன் சம்பிரதாயமும் அறுவறுக்கத்தக்கது. அந்தப் பாவிப் பெண்ணுக்கு சிவமாகவும், சக்தி சொரூபியாகவும் உள்ள எல்லம்மா சார்பில் பூசாரி அவளுக்குத் தாலி கட்டுவான்... இவளின் முதலிரவு அந்த பூசாரிக்கு... மறுநாள் இரவு இந்த சடங்குச் செலவை ஏற்றுக்கொண்ட மேட்டுக்குடிகாரனுக்கு அப்புறம் அடுத்தடுத்து அந்தஸ்து வரிசையில் உள்ள மேல் ஜாதிக்காரர்களுக்கு... பூவும், காம்புமாய் கசக்கப்படும் இந்தப் பாழும் பெண் நான்கைந்து தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுத்து, ரோகியாகி வீதியிலே வீசப்படுவாள்.

இந்தச் சடங்கு பெரும்பாலும் வட கர்நாடகத்திலுள்ள எல்லம்மா கோவிலில் நடைபெறும். புராணத்தில் வரும் ஜமாதக்னி முனிவரின் மனைவி, ஒரு கந்தர்வனை அதிசயமாகப் பார்த்து கற்பு கெட்டுப் போனதாகக் கருதப்பட்டுத் தந்தையின் ஆணைப்படி மகன் பரசுராமனால் கொலை செய்யப்பட்டவள்... ஆனாலும் புத்துயிர் பெற்று பெல்காமிற்கும், தார்வார் நகரங்களுக்கிடையே சுடுகாட்டுப் பகுதி போன்ற இடத்தில் எல்லம்மாவாக விளங்குகிறவள். இந்தக் கோவிலில் இன்றும் இளம் பெண்கள் பலவந்தமாக கொண்டு வரப்பட்டு தேவதாசிகளாக ஆக்கப்படுகிறார்கள். இது சட்டவிரோதம் என்றாலும் அதிகாரிகள் மாமூலாக நடந்து கொள்வார்கள். நான் பெல்காமிற்குப் போகும் வழியில் இந்த கோவிலுக்குப் போனேன். அங்கே முடியெல்லாம் சடையாக, உடம்பெல்லாம் வியாதியாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்த வயதான தேவதாசிகளையும், பலியாடாக நிறுத்தப்பட்டிருந்த அப்பாவி பெண்களையும் கண்டு, இப்போதுகூட மனதிற்குள் அடிக்கடி அழுகிறேன். என் துறையின் சார்பில் இவர்களுக்காக நான் ஒரு இயக்கமே நடத்தினாலும் அது பலித்ததா என்பது சந்தேகமே. இங்குள்ள பூசாரிகள் அசல் ரெளடிகள்... எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தீர்த்துக்கட்டவும் துணிந்தவர்கள்... இவர்களுக்கு அங்கிருந்து பெங்களூர் வரை ஒவ்வொரு கிலோ மீட்டர் வரைக்கும் அடியாட்கள் பட்டாளம் உண்டு. நாவலாக எழுத வேண்டிய இந்தக் கொடுமையை மேலே குறிப்பிட்ட பெயரில் சிறுகதையாக்கினேன்... மணியன் அவர்கள் புதிதாகத் துவங்கிய சிறுகதை இதழில் முதலாவது இதழிலேயே இது பிரசுரமாயிற்று...

கர்நாடக மாநில மக்களைப் பற்றி மிக அதிகமாக சிறுகதைகள் எழுதிய தமிழ் எழுத்தாளன் நான் தான் என்று நினைக்கிறேன். இதற்காக, கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அண்மையில் வெளியான ஒரு புத்தகத் தொகுப்பு என் மனதை வெகுவாகப் புண்படுத்திவிட்டது. கர்நாடக அரசு, தென்மாநில மொழிகளில் வெளியான இருபது சிறுகதைகளைத் தொகுத்து கன்னடத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வகையில், தமிழிலிருந்து 20 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக அரசு சார்பில் கன்னடத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் என் கதை இடம் பெறவில்லை. சொந்த மொழிக்கதைகளைத் தொகுப்பவர்களுக்கு கர்நாடக மாநில மக்களைப் பற்றி தமிழில் வெளியான கதைகள் தெரிந்திருக்க வேண்டும். தெரியாதது, அந்தத் தொகுப்புக்கு நஷ்டமே தவிர, எனக்கல்ல. தமிழ் திறனாய்வும், பிறமொழி பெயர்ப்பும், முதுகு சொரிபவர்களுக்கே முக்கியத்துவம் ஆகிவிட்டது என்ற எனது கணிப்பை இந்தத் தொகுப்பு, மீண்டும் நிசப்படுத்தியிருக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ஒரு கட்டுரை தினமணியில் வெளியானது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் நண்பர் கார்லோஸ் (தமிழவன்) இனிமையானவர். பெங்களுரில் நான் பணியாற்றிய போது, நானும், அவரும் சந்தித்து, விரிவாகப் பேசியிருக்கிறோம். அவர் பொறுப்பேற்ற ‘இன்று’ என்ற பத்திரிகையிலும், நான் தொடர் கட்டுரை எழுதியிருக்கிறேன். இந்த நண்பர், ‘சிறுகதை’ இதழில் நான் எழுதிய ‘தேவதாசி’ பற்றிய கதையை வெகுவாகப் பாராட்டினார். அந்த நடை தனக்கு மிகவும் பிடித்தது என்றார். அந்த கதையில், எனக்குப் பிடிக்காமல் போனது இந்த நடைதான். அத்தகைய நடையை நான் இப்போது விட்டுவிட்டேன். ஆனால் நண்பர் தமிழவன், இந்த நடை தம்மை மிகவும் கவர்ந்ததாகவும் கதையும் சிறப்பாக இருந்ததாகவும், என்னிடம் குறிப்பிட்டார். ஆனால் கட்டுரை என்று வந்த போது தமிழ் சிறுகதைகளைக் கொண்ட கன்னடத் தொகுப்பில், நகுலனின் கதை விட்டுப் போனதைப் பற்றி குறைப்பட்டுக் கொண்டார். ஆனால் என் கதை விடுபட்டது, அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. குறைந்தபட்சம் நான் கன்னட மக்களைப் பற்றி கதை எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவை தொகுப்பில் இடம்பெறும் அளவுக்கு முழுமையாக இல்லை என்றாவது, அவர் சொல்லியிருக்கலாம். அந்த மக்களைப் பற்றி முழுமையாக எழுதியவனைப் பற்றி ஒருவரி கூட அவர், எழுதாதது எனக்கு வேதனையை அளித்தது. நண்பர்கள் என்றாலும், நேரிடையாக பாராட்டினாலும், கட்டுரை என்று வரும் போது, தங்களுக்கென்று இருக்கக்கூடிய முகமூடிகளை போட்டுக் கொள்வது, இயல்பாகிவிட்டது என்பதற்கு, அவரது விமர்சனக் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. இதனாலேயே பெங்களுரில் உள்ள எனது நண்பர்கள் சிலர் எனது கதைகளை - அதாவது கன்னட மக்களைப் பற்றி எழுதிய கதைகளை, கன்னட மொழியில் கொண்டு வர வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்குத்தான் நேரம் இல்லை. அதோடு கன்னடத்தில் எனது கதைகள் வெளிவராததால் கன்னட மக்களின் குடியோ அல்லது எனது குடியோ கெட்டுப் போகப்போவதில்லை என்ற ஒரு எண்ணமும் காரணம். என்றாலும் திறனாய்வு என்ற பெயரில், முதுகுசொரியும் படலம் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தை சனியன் மாதிரி பிடித்திருக்கிறது. இதையும் மீறித்தான் ஒரு ஆத்மார்த்த எழுத்தாளன் மேலே எழும்ப வேண்டியிருக்கிறது.