உள்ளடக்கத்துக்குச் செல்

எனது திருமணப் பரிசு/இங்கும்—அங்கும்

விக்கிமூலம் இலிருந்து

இங்கும் — அங்கும்

"சின்னபொண்ணு! எங்கே உன் அப்பன்?"
"அப்பாவை போலீசு கூட்டிகிட்டுப் போச்சு..."
"போலீசா1 ஏம்புள்ளே! எதுக்காவ..."
"போறாதவேளை பெரியப்பா! வேறே என்ன.... பண்ணையாருக்கு என்னமோ கோவம், அப்பன் தேங்காயைப் பறிச்சு வித்துப் போட்டாருன்னு போலீசுக்குச் சொல்லிப்புட்டாரு......"

"அன்யாயமாயிருக்கே, புள்ளே! முனியன் அப்படிப் பட்டவனில்லை என்கிறது போலீசுக்கே தெரியுமே"

"தெரிஞ்சி-பண்ணையார் சொல்றப்போ என்ன செய்வாங்க"

“உங்க அண்ணன் எங்கே போயிட்டான்?"

"அதுதான் வக்கில் ஐயரு வூட்டுக்கு ஓடி இருக்கு, போலீசிலே இருந்து அப்பனைக் கொண்டார."
"உங்க அம்மா....?"
"பொன்னியம்மர் கோவுலுக்குப் போயிருக்கு..."
"வேண்டிக்கவா"
"ஆமாம். உக்காரு பெரியப்பா."
"நிக்கவே நேரமில்லே, உக்கார முடியுமாம்மா நம்மாலே. நம்ம வினை அப்படி இருக்குது. போலீசிலே இருந்து உங்க அப்பன் வந்ததும் சொல்லி அனுப்பு, அதுக்குள்ளே நான் தோப்புபக்கம் போயிட்டுவாரேன்." "தோப்பு பக்கமா என்ன வேலை பெரியப்பா"

"பலாப்பழம் வேணும்னு குருக்கள் ஐயரு ஒத்தைக் காலாலே நிக்கறாரு புள்ளே! போயி பறிச்சிகிட்டுவாரேன்”

"பெரியப்பா! நீராகாரம் கொடுக்கட்டுமா?"

"யாருக்கு—எனக்கா? பைத்யக்காரப்புள்ளெ! எனக்குத்தான் மூணுநாளாக் காச்சலாச்சே..."

"மருந்து..."

"சாவுதான்! வேறே என்ன மருந்து இருக்கு நமக்கு, போ புள்ளே! உள்ளே போ!"

அவ எங்கடி, அம்சா?

அம்சாவா! சமூக சேவையிலன்னா இருக்கா, மகாபலிபுரம் போயிருக்கா.

உங்க அண்ணன் எங்கே தொலைஞ்சான்?

அவனா, கம்யூனிஸ்டு மகாநாடு திண்டுக்கல்லில்; போய் மூணுநாளாறது......

நீ மட்டும்தான் கல்லுப்பிள்ளையாராக இருக்கேன்னு சொல்லு...

இல்லை மாமா! நான், காலம்பறத்தான் காட்பாடியிலேயிருந்து வந்தேன்.

அங்கே, என்ன வேலை?

தெரியாதா நோக்கு. நான் 'சிரமதான்' இயக்கத்திலேன்னா இருக்கேன்—அந்த வேலையாப் போயிருந்தேன்.

அப்பா?

அவர் மூணுமாசமா, போடியலன்னா இருக்கார்—— அடுத்த வெள்ளிக்குத்தான் பட்டாபிஷேகம், பிறகுதான் வருவார்—

பட்டாபிஷேகமா...? ஆமாம், ராமாயண காலட்சேபம் நடக்கிறதேன்னோ?

சுப்புப்பாட்டி எங்கே, வளவளன்னு பேசிண்டிருக்குமே...?

சுப்புப் பாட்டிக்கு இப்ப ஏகப்பட்ட கிராக்கின்னா வந்திருக்கு, அமெரிக்கமாதர் சங்கத்திலே இருந்து வந்திருக்காளே, அவாளுக்கு, அப்பளம் போடறது எப்படின்னு பாடம் சொல்லித்தருகிறா பாட்டி.

பலே பலே! நான் வந்தவேளை அப்படி. நேக்கு அவசரமான வேலை...வரட்டுமா...

காப்பி சாப்பிடுங்கோ, மாமா!

போடி போ! எல்லோரும் டீ சாப்பிடுங்கோன்னு பிரசாரம் செய்யற இலாகாவுக்கு நான் ஜெனரல் மானேஜராக நியமிக்கப்பட்டிருக்கேன் தெரியுமோ.

நல்ல சான்சுதான்! அது இருக்கு, அதுக்கும் நீர் காப்பி சாப்பிடறதுக்கும் என்ன சம்பந்தம்.

சரி! உன் கைப்பட்டாலே காபி, தேவாம்ருமாயிடுமேன்னோ, கொடு....

தந்துப்பித்துன்னு உளறாதீர் மாமா....... உட்காரும். இதோ ஐஞ்சு நிமிஷத்திலே காப்பி.... போது போகணும்னா அதோ ரேடியோவைத் திருப்பிண்டு இரும், இதோ வந்துட்டேன்.