எனது நண்பர்கள்/கோவைப் பெருமகன் சி. கே. எஸ்

விக்கிமூலம் இலிருந்து

கோவைப் பெருமகன் சி. கே. எஸ்.

யர்திருவாளர் கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தமிழகத்துப் பேரறிஞர்களில் ஒருவர். சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் கொண்ட நல்லறிஞர். எழுத்தாலும் பேச்சாலும் இலக்கியப் பணி புரிந்த புலவர் பெருமகன். பி.ஏ. பட்டப் படிப்புக்குப் பாடநூலாகச் சேக்கிழார் என்னும் நூலை எழுதி உதவியவர். பெரியபுராணம் என்னும் நூலுக்கு உரை எழுதிச் சைவப் பெருமக்களுக்கு வழங்கிப் பெருமை பெற்றவர்.

எனது நண்பர்களாகிய கோவை ஜி. டி. நாயுடு, சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பழையகோட்டைப் பட்டக்காரர் ஆகியவர்களின் உற்ற நண்பர்; கோவை நகராட்சி மன்றத்தில் பல தடவை உறுப்பினராக இருந்தும், ஒருமுறை துணைத் தலைவராக இருந்தும் பணி புரிந்தவர்.

சிறந்த வழக்கறிஞராக விளங்கி, கோவையில் பெரும் புகழ் பெற்றவர். இல்லறத்தை நல்லறமாக நடத்தி ‘சிவக்கவிமணி', ‘சைவப்பிதா’ என்ற பட்டங்களைப் பெற்றவர். தான் நல்ல வழியில் தேடிய செல்வங்களை எல்லாம் பல அறச் செயல்களுக்கு வழங்கித் துறவறத்தில் ஈடுபட்டு “சம்பந்த சரணாலயத் தம்பிரான் சுவாமிகள்”: என்ற பெயரையும் பெற்றுச் சிறந்து விளங்கி, சைவத் தமிழ் வாழ்வு வாழ்ந்து, தமது 83வது வயதில், இறைவனது திருவடியை அடைந்தவர்.

சுமார் 50 ஆண்டுகட்கு முன்பு நான் செயலாளனாக இருந்து நடத்திய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து அடிக்கடி சொற்பொழிவு நிகழ்த்தி மகிழ்வித்த பேரறிஞர். என்னிடம் நீங்காத அன்பு கொண்டவர்.

இவரது சிவந்த மேனியும், மெலிந்த உடலும், எளிமையான உடையும், அமைதியான தோற்றமும், கூர்மையான பார்வையும், இனிமையான சொல்லும் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றன.

இவரது அருஞ்செயல்களையும், பெருந்தொண்டுகளையும் பாராட்டி மகிழ, திரு எஸ். கந்தசாமி அவர்கள் தலைமையில் கோவைப் பெருமக்கள் ஒரு நினைவுக் குழு அமைத்து, மலர் ஒன்றையும் வெளியிட்டு விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்னும் நாம் என்னதான் செய்தாலும் திரு. முதலியார் அவர்கள் செய்த தொண்டுக்கு எதுவும் ஈடாகாது. அவருக்கு நன்றியும் வணக்கமும் செலுத்துவது ஒன்றே நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்கும்.

அவர் உயிரோடு வாழ்ந்த காலத்தில், தமிழகம் முழுவதுமுள்ள புலவர் பெருமக்கள் அனைவரும் அவரை ஒரு பெரும் புலவராக மதித்து வணங்கி மகிழ்ந்த காட்சி, ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

அவரது இழப்பு தமிழுக்கும் சைவத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். தமிழும், தமிழரும், தமிழகமும் உள்ள வரை அவரது புகழ் நீங்காது நிலைத்து நிற்கும்.

வாழட்டும் அவரது புகழ்!

வளரட்டும் அவரது தொண்டு!