எனது நண்பர்கள்/த. வே. உமாமகேசுரம் பிள்ளை
த. வே. உமாமகேசுவரம் பிள்ளை
தமிழவேள் என்று அன்போடு அழைக்கப்படுபவர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள். தாசில்தார் வேம்பப் பிள்ளையின் தலைமகன்; கரந்தை தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த ராதாகிருஷ்ணப் பிள்ளையின் தமையன். பெற்றோர் இருவரையும் மிக இளமையிலேயே இழந்ததால் அவருடைய சிறிய தந்தையாராலும், சிறிய தாயாராலும் வளர்க்கப் பெற்றவர்கள். தஞ்சைக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, பின் சட்டக் கல்லூரிக்குச் சென்று பி.எல். பட்டம் பெற்றுத் தஞ்சையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து, நேர்மையாகத் தொழில் செய்து நற்பெயர் பெற்றவர் தமிழவேள். பொய்வழக்குகளை எடுத்து வாதாடுவதில்லை என்ற ஒரு கொள்கையுடையவர். ஆதலால் பல கட்சிக்காரர்கள் அவரிடம் நெருங்க அஞ்சி ஓடிவிடுவதைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.
அக்காலத்திய தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு என்ற வட்டக் கழக, மாவட்டக் கழக உறுப்பினராக இருந்தும் தஞ்சை மாவட்ட நீதிக் கட்சித் தலைவராக இருந்தும், அவர் புரிந்த பொதுப் பணிகள் மிகப்பல.
அவர் எல்லோரிடத்தும் அன்புள்ளங் கொண்டு மிக அடக்கமாக இனியமொழி புகன்று நட்புப் பாராட்டுவதில் தலைசிறந்தவர். எனினும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் திரு.ஐ. குமாரசாமிப்பிள்ளை ஆகியவரிடத்தும், என்னிடத்தும் அவர் கொண்ட நட்பு தனித்தன்மை வாய்ந்தது. அவர் தம்பி தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை மிகப்பெரிய அளவில் வளர்த்தும், சங்கத்தில் தமிழ்க் கல்லூரியை நிறுவியும், ஆண்டுதோறும் தமிழ்ப் பேரறிஞர்களை வரவழைத்து ஆண்டு விழா நடத்தியும் அவர் செய்த அருமையான தமித் தொண்டுகளே, என்னை அவர்பால் அன்பு கொள்ளச் செய்தன.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பு தமிழ் இன்றுள்ள நிலையில் இல்லை. மேடையிலும், வீதியிலும், வீட்டிலுங்கூட ஆங்கிலமே பேசுகின்ற காலம். சுருக்கமாகச் சொன்னால் தமிழில் பேச வெட்கப்படுகின்ற காலமெனக் கூறி விடலாம். அக்காலத்தில் தமிழ்த்தொண்டு செய்வது கடினமான ஒன்று. அதிலும் ஆங்கிலத்தில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்ற அவர் செய்த தமிழ்ப்பணி என்னையே வியப்படையச் செய்தது.
அக்காலத்தில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க்கரையேறிய பெரியார்கள் மூவரில் இவர் ஒருவர். மற்ற இருவர், பசுமலை நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்களும் நெல்லை கா. சுப்ரமணியப்பிள்ளை எம்.ஏ., எம்.எல். அவர்களும் ஆவர்.
தமிழ்த்தொண்டு செய்வது எப்படி. என்பதையும், தமிழ்ப்பண்பாடு என்றால் என்ன என்பதையும், நாடு, மக்கள், மொழி, அரசு ஆகியவற்றிற்கு வழிகாட்டக் கூடியவர்கள் தமிழ்ப்புலவர் பெருமக்களே என்ற முடிவான கருத்தையும் நான் அவர்களிடந்தான் கற்றேன். அதுமட்டுமல்ல. விருந்தினர்களை உபசரிக்கும் முறையை நான் என் மனைவியாரிடம் புகுத்தியது தமிழவேள் அவர்களுடைய மனைவியாரிடம் நான் கற்ற பாடமே. இம்முறையில் அவரும் அவருடைய மனைவியாரும் என் ஆசிரியர்கள்.
சங்க உறுப்பினர்கள் யாராயிருந்தாலும், அவர்களது இல்லத்தில் இறந்தது சிறு குழந்தையாக இருந்தாலும், பல மைல்களுக்கப்பால் இருந்தாலும், தவறாமல் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறும் பண்பு அவரிடம் குடி கொண்டிருந்தது. தமிழுக்குத் தொண்டு செய்வதைவிட, சங்கத்தை வளர்ப்பதைவிட, வழக்கறிஞர் தொழிலைக் காப்பாற்றுவதைவிட, உண்மையையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் காப்பாற்றுவதில் தலைசிறந்து விளங்கினார்.
கொடை
பிறருக்குத் தெரியாமல் கொடை வழங்கும் கொடையாளி அவர். அதிலும் பள்ளியில் பயிலும் பல குழந்தைகளுக்குச் சம்பளம், புத்தகம். உடை முதலியவைகளுக்கு வழங்கிவந்தது பாராட்டுதற்குரியது.
பயிற்று மொழி
தமிழகத்தில் ஆங்கில மொழி பயிற்று மொழியாக இருப்பதற்கு வருந்தித் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்த பேரறிஞர் அவர்.
இறுதியாக அவரது உடல் இத்தமிழ் மண்ணில் கூடப் புதைக்கப்பட முடியாமல் வடநாட்டு மண்ணில் புதைக்கப்பட்டுப் போயிற்று. இதை எண்ணி ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டேன். வேறு என்ன செய்ய இயலும்?
தஞ்சை உள்ளவரை, கரந்தை உள்ளவரை, தமிழ்ச் சங்கம் உள்ளவரை, தமிழ்க் கல்லூரி உள்ளவரை, மட்டுமல்ல, தமிழர் உள்ளவரை, தமிழ் உள்ள வரை, தமிழகம் உள்ளவரை அவரது புகழும் மறையா.
1938-ல் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் பெரும் போரை நடத்த எனக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி புரிந்த தமிழவேள் அவர்களின் துணிவு என்னால் என்றும் மறக்கமுடியாதது. ‘காதல் என்றால் என்ன?’ என்பதை நான் புரிந்துகொண்ட அக்காலத்திலேயே தமிழ்க்காதல் என்று ஒன்று உண்டு; அது தலை சிறந்தது என்பதைப் புரிந்து கொண்டதும் அவரிடத்தில் தான்.
பெருமை என்பது பெருந்தன்மையே எனவும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனவும் கூறிய வள்ளுவர் வாக்கிற்கிணங்க நடந்து காட்டி மறைந்த பேரறிஞர் தமிழவேள் உமாமகேசுவரர். அப்பெரியாரைப் பாராட்டி, தஞ்சை மக்கள் தமிழ்ச் சங்கத்தின் முன் சிலை எழுப்பி வைத்து வணங்கி நன்றி செலுத்தி வருகின்றனர்.