எனது நண்பர்கள்/திரு. ஓ. பி. இராமசாமி செட்டியார்
ஓமாந்தூர் திரு ஒ. பி. இராமசாமி ரெட்டியார் அவர்களைத் தமிழகம் நன்கறியும். ஓமாந்துரிலுள்ள ஒரு பெருங் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குத் தம்பிகள் இருவர் உண்டு. இவருக்குக் குழந்தைகள் இல்லை. இளமைப் பருவத்திலேயே மனைவியை இழந்திருந்தும் மறுமணம் செய்து கொள்ளவும் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இல்லறத்தில் வாழ்ந்த ஒரு துறவி என்றே சொல்லலாம்.
தமிழகத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவர், காந்தியடிகளிடத்தும் அவரது கொள்கைகளிடத்தும் நீங்காத பற்றுடையவர். காந்தியடிகளின் வழியில் தவறாது நடந்து, அவரது நிழல்போலக் காட்சியளித்தவர் திரு ரெட்டியார் அவர்கள்.
அவர் வாழ்நாளில் பொய்யே பேசியதில்லை. உண்மை பேசுகிறவன் அரசியல் வாதியாகவும் ஆகலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர். தவறு செய்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவரைக் கண்ணெதிரிலேயே கண்டித்துத் திருத்தும் பழக்கம் அவருக்குண்டு. பொய்யர்களை அடியோடு வெறுத்துவிடுவார். அநீதியை எதிர்க்காதவன் ஆண்மகன் அல்ல’ என்பது அவரது வாக்கு. பொறுமையும் சகிப்புத் தன்மையும் கொண்டிருக்கும் அவரால், பிறர் செய்கின்ற தவறைச் சகிக்க முடிவ முடிவதில்லை. இதனால் அவரைச் சிலர் ‘முன்கோபி’ எனக் கூறுவதுண்டு.
உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, நாணயம் ஆகியவைகளோடு எளிய வாழ்க்கை வாழ்ந்த பெருஞ்செல்வர் அவர். இதனால் இவருக்குக் காங்கிரஸ் கட்சியில் ஒரு தனிச் செல்வாக்கு ஏற்பட்டு, அனைவரும் அன்பும் மரியாதையும் காட்டி வந்தனர்.
1947இல் நமது மாநிலத்தின் முதலமைச்சர் பதவியைத் திரு. ரெட்டியார் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பதவியை ஏற்கு முன்னே, ரெட்டியார் அவர்கள் பதவி ஏற்க மாட்டார் என்ற வதந்தியை உண்டு பண்ணி விட்டார்கள். பதவியை ஏற்ற பிறகு “ஆங்கிலம் தெரியாதே! என்ன செய்வார்?” என்ற கேள்வியைக் கிளப்பி விட்டார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் போராட்டத்தின் விளைவினால் முதலமைச்சர் பதவி தமிழ் நாட்டுக்கு அதிலும் ரெட்டியாருக்குக் கிடைத்தது. இதில் திரு. காமராஜர் அவர்களின் முயற்சி பெரிதும் போற்றற்குரியது.
ஆங்கிலம் அறியாதவர்களால் ஆட்சி நடத்த முடியாது என்று கூறுபவர்கள் வெட்கப்படும்படி ஆட்சி நடத்தினார்கள். இது, அவர்கள் நேர்மை என்ற ஒரே ஆயுதத்தைக் கையாண்டு வந்ததின் விளைவு. நேர்மை என்ற ஒன்று மட்டும் கலங்கா மனத்துடன் விடாப்பிடியாகக் கையாளப் படுமானால், மற்றெல்லாத் தகுதிகளும், திறமைகளும் அதன் முன் மங்கிப் போய் விடும். கட்சிப் பற்றாளர்களின் வம்புக்கும், இழுப்புக்குங்கூட இசைந்து கொடுக்கும் தன்மை நேர்மைக்கு வராது. இந்த ஆற்றல் அவர்களுக்கிருந்தது.
இப்படிப்பட்ட முதலமைச்சர் திரு. ரெட்டியார் அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் காங்கிரஸ் கட்சியினரே கொண்டு வந்தனர். அதைக் கொண்டு வந்தவர்களில் தங்களுக்குக் “காண்ட்ராக்ட்” கிடைக்கவில்லை என்பவரும், தங்கள் உறவினருக்கு “டிபுடி சூப்பிரண்ட்” பதவி கிடைக்கவில்லை என்பவரும் இருந்தனர். இதைக் கண்டதும் திரு ரெட்டியார் அவர்கள் பதவியை உதறி எறிந்து வெளியேறினர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் அரசியலில் இடமிராது என்பதை, திரு. ஒ. பி. ஆர். அவர்களின் வரலாறும் மெய்ப்பித்துக் காட்டியது.
திரு ரெட்டியாரவர்களைப் பற்றி நான் எவ்வளவு கேள்விப்பட்டிருந்தேனோ அந்த அளவிற்குத்தான் என்னைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார். எனினும் நாங்களிருவரும் நேரில் சந்தித்ததோ பேசியதோ இல்லை. காரணம்; நாங்களிருவரும் நேர்மாறான அரசியல் கட்சிகளில் பணி புரிந்து கொண்டிருந்ததுதான்.
செங்கற்பட்டு இரயில் நிலையத்தில் ஒரு நாள் காலை திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் விரைவு வண்டி நின்று கொண்டிருந்தது. காலை உணவுக்காக நான் வண்டியை விட்டிறங்கிச் சிற்றுண்டி நிலையத்தை, நோக்கி நடந்துகொண்டிருந்தேன், அப்பொழுது திரு. ரெட்டியார் வண்டியை விட்டிறங்கி உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தும், விரைவாக நடந்து ஒதுங்கிச் சென்றேன். நான் அவருக்கு முன்னே விரைவாக நடந்து செல்வதைக் கண்டதும் கைதட்டிக் கூப்பிட்டு, “என்ன ஐயா! பார்த்தும் பாராமற் போவதும் ஒரு பண்பாடா?” எனக் கேட்டார். ஆம். பார்த்தேன். இதிற் பண்பாடு ஒன்றும் இல்லை; அச்சம்தான் காரணம்’ என்றேன். “என்ன அச்சம்” என்றார். “நீங்கள்,மாறுபட்ட கட்சியினர். அதிலும் முதலமைச்சர். நெருங்குவதற்கு ஒரு அச்சம். காலை உணவு கிடைக்குமோ? வண்டி புறப்பட்டு விடுமோ என்பது மற்றொரு அச்சம்” என்றேன். அவர் கலகலவெனச் சிரித்து “இரண்டச்சமும் வேண்டியதில்லை. நில்லுங்கள்” என்றார். அவருக்கு வந்த சிற்றுண்டியை நானிருக்கும் வண்டியில் வைக்கச் சொல்லிவிட்டுத் தனக்கு மற்றொரு சிற்றுண்டி கொண்டு வரச் சொன்னார். இரயில் நிலைய அதிகாரிகள் அருகில் இருந்ததால், வண்டி புறப்பட்டு விடாது என்ற தைரியத்தினால், அவர் அருகிலேயே நின்றேன். “நீங்கள் போய்ச் சிற்றுண்டி அருந்துங்கள். சென்னைக்கு வரும் போதெல்லாம் ஓய்வு நேரங்களில் என்னை வந்து சந்திக்கலாம்” என்று சொல்லியனுப்பிவிட்டு, வண்டியில் ஏறிக்கொண்டார். இந்த முதற் சந்திப்பு என்னை வியப்படையச் செய்தது.
அவர் முதல் மைச்சராக இருக்கும் பொழுது நான் இருமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.ஒரு முறை சந்தித்த பொழுது, ‘உங்களைப் போன்று நல்லவர்கள் உங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்பார். “என்னை நல்ல்வன் என்று நீங்கள் அறிந்து கொண்டது எப்படி?” என்று கேட்டேன். உங்கள் தமிழர் நாடு, பத்திரிக்கையில் நான் முதலமைச்சரானது பற்றி நீங்கள் எழுதிய தலையங்கத்தைப் பல நண்பர்கள் என்னிடம் கொண்டு வந்து காட்டினார்கள். அதில் நீங்கள் என்னைப் பற்றி எழுதியிருந்ததைவிட உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பளித்தெழுதியிருந்த தங்கள் குணமே போற்றற்குரியதாயிருந்தது. தங்கள் மேடைப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நான் கவனித்து வருகிறேன்” என்று கூறினார். அப்படி மதிப்பளிக்கிறவர்கள் என்னிலும் பலர் நீதிக்கட்சியிலிருக்கிறார்களென்று ஒரு பட்டியலையே போட்டுக் கொடுத்தேன். அதைக் கண்டு “அப்படியானால் அவர்களிலும் சிலரைக் கண்டு நான் பேசவேண்டு”மென்று தெரிவித்துவிட்டு, “வந்த வேலை என்ன?” என்று கேட்டார். “உங்களுக்கு வணக்கம் கூற வந்த வேலையைத் தவிர வேறு வேலையில்லை” என்று கூறி வெளியேறினேன்.
காங்கிரஸ் கட்சியில் சட்டசபை உறுப்பினராக இருந்த என்பழைய நண்பரொருவரை நான் சந்திக்க நேர்ந்தபோது, அவர் முதலமைச்சர் தம்மிடம் “விகவநாதம் ஒரு வேடிக்கையான மனிதர். அவர் என்னிடம் மூன்று முறை வந்ததும் எதுவுமே கேளாமற் போயிருக்கிறார்” என்று கூறியதாகச் சொன்னார். இச்செய்தி என் உள்ளத்தில் அவர்மீது அதிகப் பற்றுக் கொள்ளும் படி செய்துவிட்டது.
முதலமைச்சராய் இருந்தும், அவர் திருச்சிராப்பள்ளியைக் கடந்து செல்லுகின்ற ஒரு நாளில் என் இல்லத்திற்கு வந்துபோனது, எதற்குமஞ்சாத அவரது துணிச்சலையே காட்டிற்று; வியப்படைந்தேன்.
நாங்களிருவரும் அரசியலைவிட்டு, வெளியேறுங்காலம் வந்துவிட்டது. அதனால் மாறுபட்ட கட்சியினராகிய நாங்களிருவரும் மிக நெருக்கமாக ஒன்றுபட நேர்ந்து விட்டது. அடிக்கடி சந்திப்போம். அப்பொழுதெல்லாம் நாங்கள் அரசியலில் பட்ட துன்பங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்வோம்.
எனது அறுபதாம் ஆண்டு விழாவில் அவரே புரோகிதராக இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்த காட்சி எங்களால் மறக்க முடியாதது.
இறுதியாக அவரது சன்மார்க்கப் பணிகளுக்கு நான் உற்ற துணைவனானேன். சுத்த சன்மார்க்க நிலையத்திற்குச் செயலாளருமானேன். பொதுப் பணிக்குக் கணக்கெழுதும் வேலை, அவர் சொந்தச் சொத்திற்கு ‘உயில்’ எழுதும் வேலை மட்டுமல்ல, அவர் சொந்தத்திற்குக் கடிதம் எழுதும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற ஒரு பணியாளனாகவே மாறிவிட்டேன்.
கடைசிக் காலத்தில் அவருக்குச் சொந்தமான பத்தரை லட்ச ரூபாய்ச் சொத்துக்களைச் சுத்த சன்மார்க்க நிலையத்திற்கும், வள்ளலார் உயர்நிலைப்பள்ளிக்கும், அனாதை மாணவரில்லத்திற்கும், சான்றோரில்லத்திற்கும் உயில் எழுதச் செய்து, பொள்ளாச்சி உயர்திரு நா. மகாலிங்கம் அவர்கள் தலைவராக உள்ள ஒரு குழுவையும் ஏற்படுத்தி, அக்குழுவினிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக உயிர் நீத்தார்கள்.
அவரது திருவுடலை வடலூரிலேயே வள்ளலார் உயர் நிலைப்பள்ளிக்கு முன்பு அடக்கஞ் செய்தோம். அவரை அடக்கம் செய்துள்ள இடம் ஒரு திருக்கோயிலாக விளங்கி வருகிறது. அவரை இழந்த இடத்தை நிரப்பத் தமிழகத்திற் சிலராவது தோன்றியாக வேண்டும்.