எனது நாடக வாழ்க்கை/இமயத்தில் நாம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இமயத்தில் நாம்

வீரமும் காதலும் விரவிக் கிடக்கும் தமிழர்களின் வரலாற்று நாடகங்களை மேடைக்குக் கொண்டுவர வேண்டு மென்பது எங்கள் நீண்ட நாள் ஆசை. அதிலும் சிறப்பாக வட ஆரியர் முடித்தலை மேல் இமயக்கல் கொணர்ந்து பத்தினி கண்ணகிக்குப் படிவம் சமைத்த சேராமாவீரன் செங்குட்டுவனின் செயற்கரும் செயலை நாடகமாக்கி நடிக்க வேண்டுமென்பதில் எங்களுக்கிருந்த ஆர்வம் சொல்வி முடியாது.

ரா. வேங்கடாசலம் அறிமுகம்

செங்குட்டுவனை நாடகமாக எழுதுங்கள் என்று எங்களோடு தொடர்பு கொண்ட எழுத்தாளர்கள் பலரிடமும் கூறினேன். இரண்டொருவர் எழுதுவதாகக் கூறினார்கள். சிலர் காட்சிக் குறிப்புக்கள் வரைவதோடு நிறுத்திக் கொண்டார்கள். திரு ரா. வேங்கடாசலம் அவர்களே திருச்சி வானெலி நிலைய எழுத்தாள நண்பர்கள் கே. பி. கணபதி, ரா. ஆறுமுகம் இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பத்திரிகைகளில் வெளிவந்தசிறு கதைகளின் வாயிலாக ரா. வே. அவர்களின் கதை புனேயும் ஆற்றலே நான் அறிந்திருந்தேன். அவரை நேரில் சந்தித்துச் சிறிது நேரம் பழகியதும் செங்குட்டுவனே எழுதுவதற்கு அவர் மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது எனக்குப் புலப்பட்டது, அவரே ஒரு செங்குட்டுவனாகத் தோன்றினார்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ்இனம், தமிழ் எழுத்தாளர் என்றால் அதற்கிணை உலகில் எங்குமில்லையென்ற உணர்ச்சிராவே இதயத்தோடு ஒட்டிக் கிடந்தது. தன்னைப் பற்றி, தன் எழுத்துக்களைப் பற்றி சிறிதும் குறைத்து எண்ணும் மனோபாவம் அவரிடமில்லை. தன்னைத் தாழ்வாக எண்ணியெண்ணியே தமிழன் தன்னிகலயழித் தான் என்பது என் உறுதியான கருத்து. தாழ்வு மனப்பான்மை நம்மைவிட்டு ஒழிந்தால்தான் நாம் உலகின்முன் எல்லாத் துறை. களிலும் தலை நிமிர்ந்து நிற்க முடியுமென்ற உறுதி எனக்குண்டு.

பெயரே பெருமையைப் பேசியது

நண்பர் ரா. வே. ‘தமிழன் பெருமை’ என்ற ஒருநாடகத்தை. தன்னுடன் கொண்டு வந்திருந்தார். ‘இதை நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். நாடகப் பரிசு வைத்து அப்போதுதான் சில நாடகங்களை வாங்கி வைத்திருந்தோம். “இதை நடிப்பதற்கு இயலாது; சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை நாடக உருவில் எழுதுங்கள். நன்றாயிருந்தால் நடிக்கிறோம்” என்று கூறினேன். ஆவலோடு ஒப்புக்கொண்டார். முதல்முறை கோவையில் காட்சிக் குறிப்புக்கள் காண்பித்தார். திண்டுக்கல் முகாமில் நாடகம் கொடுத்தார். இமயத்தில் நாம் என்ற நாடகத்தின் பெயரைப் படித்தேன். என் தோள்கள் விம்மின. ரா. வே. அவர்களின் பெருமித உணர்ச்சி அந்தப் பெயரிலேயே பேசியது.

கோவையில் நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்: கவி. ஆறுமுகனார் அவர்கள் பாடல்களை எழுதினார், பாடல்களுக்கு. பண் அமைக்கும் பொறுப்பினை எம். கே. ஆத்மநாதன் ஏற்றுத் தமது பொறுப்பினைச் செம்மையாகச் செய்தார். தம்பி பகவதி செங்குட்டுவளுகவும், நான் இளங்கோவாகவும் பாத்திரங்களே ஏற்றோம். நிமித்திகன் பாத்திரம் குண்டு கருப்பையாவுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவனின் துணைவி வேண்மாளாக எம். கருப்பையா நடித்தார். பொற்றொடி என்று புதிய கற்பனைப் பாத்திரமொன்றைப் படைத்திருந்தார் ரா. வே. அந்தப் பாத்தி ரத்தை எம். எஸ். திரெளபதி ஏற்றார். பி. எஸ் வேங்கடாசலம் சீத்தலைச் சாத்தனராகவும், கே. கோவிந்தசாமி கல் சுமக்கும். கனகவிஜயனாகவும் பாத்திரமேற்று நாடகத்திற்குப் பெருமை சேர்த்தார்கள். ஒத்திகை பார்த்தபோதே நாடகம் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றியது.

வில்-புலி-கயல் சின்னம்

திரு. விஸ்வேஸ்வரன் என்ற மின்சார நிபுணர் ஒருவர் எங்களுக்குக் கிடைத்தார். அவருடைய யோசனைப்படி பிரமாண்ட் மான ஒரு பெட்டி செய்யப்பட்டது, தமிழ்நாட்டிலிருந்து வட நாடு சென்று இமயத்தின் உச்சியில் வில், புலி, கயல் சின்னங்கள் பொறிக்கும் காட்சியை அந்தப் பெட்டியிலேயே மின்சாரத்தின் துணையோடு அவர் செய்து காண்பித்தார். நாடக ஆரம்பத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். விளக்குகள் அணைக்கப் பட்டதும் அரங்கில் தமிழ் நாடு ஒளிக்கோடுகளாகக் காட்சி யளிக்கும். இமயத்தில் நாம் என்ற பாடல் தொடங்கியதும் படிப்படியாக அந்த ஒளிக்கோடுகள் விரிந்து பரந்து இமயம்வரை செல்லும். பாட்டு முடியும்போது இமயத்தின் உச்சியிலே மூவேந்தர்களின் வில்-புலி-கயல் சின்னங்களோடு தமிழ்க் கொடி ஒளிவடிவில் பறக்கும். இதனை மிக அற்புதமாகத் தயாரித்திருந்தார் விஸ்வேஸ்வரன்.

21-6. 48இல் இமயத்தில் நாம் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவகாதம் அவர்கள் தலைமையில் அரங்கேறியது.

கி. அ. பெ அவர்களின் பேச்சு நாடகத்திற்குத் தெம்பூட்டுவதாக இருந்தது. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நாடகத்தை மக்கள் மகிழ்வுடன் வரவேற்றார்கள். முதல் நாடக வசூல் ரூ. 1222-00 ஆசிரியர் ரா. வே. அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. இமயத்தில் நாம் 87நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

தமிழறினார்கள் தலைமை

தமிழறினார் பெருமக்கள் இவ்வரலாற்று நாடகத்தைக்கான வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்து குழுமினார்கள். 1-7-48இல் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களும், 11-7-48இல் திரு நாரண - துரைக்கண்ணன் அவர்களும், 24-7-48 இல் சென்னைப் பல்கலை கழக தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவர், ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், 25-7-48 இல் தேசபக்தர் சி.பி. சுப்பையா அவர்களும், 1-8-48இல் விருதுநகர் வி.வி. இராமசாமி அவர்களும், 2-8-48இல் கோவைக் கிழார் சி. எம். இராம சந்திரன் செட்டியார் அவர்களும் தலைமை தாங்கி, இது போன்ற வரலாற்று நாடகங்களுக்கு அரசினார் மானிய உதவி வழங்கி ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.