உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/காதல் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து
காதல் திருமணம்

என் முதல் மனைவி மீனாட்சி ஈரோட்டில் காசநோயால் காலமானாள்; அவள் என்னை விட்டுப் பிரிந்தபின் நாடகத் தயாரிப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியதால் திருமணத்தைப் பற்றி நான் சிந்திக்கவேயில்லை. அக்கா, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார். திருச்சியிலிருந்து பெரியண்ணா அவர்கள் நாகர்கோவில் சென்று ஒய்வெடுத்துக் கொண்டசமயம், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், என்னுடைய ஒப்புதலைத் தெரிவித்தால் உடனே பெண் பார்த்துத் தாம் ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்குநான் பதிலெழுதியிருந்தேன். திருமணத்திற்கு இப்போது அவசரமில்லையென்றும் நானே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துச் சொல்வதாகவும், அப்போது திருமணம் முடித்துக் கொள்ளலாமென்றும் அதில் தெரிவித்திருந்தேன்; உண்மையில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளும் எண்ணம் அப்போது எனக்கில்லை.

திருமணம் சுவர்க்கத்தில் உறுதி செய்யப்படுகிறது

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால், எனது இரண்டாவது திருமணம் நடைபெற்றதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். அப்படித்தான் இருக்குமோவென்ற சிறு நம்பிக்கை இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் உதயமாகிறது. 1947இல் கம்பெனி திண்டுக்கல்லில் இருந்த போது ஒருநாள் பில்ஹணன் காதல் காவியத்தை நடித்து விட்டு இல்லத்திற்குத் திரும்பினேன், அன்றுதான் மீண்டும் திருமணம்

செய்து கொள்ளும் எண்ணம் என் உள்ளத்தில் அரும்பியது. எத்தனை எத்தனையோ காதல் கதைகளை நான் படித்திருக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் இப்படியொரு காதல் கதை உருவாகுமென்று நான் எண்ணவேயில்லை.

இதயத்தில் இடம் பெற்றாள்

எங்கள் நாடகக் குழுவின் நடிகை செல்வி. சீதாலட்சுமி என் இதயத்தில் இடம் பெற்றாள். நான் அவளைக் காதலித்தேன், அவளும் என்னை நேசித்தாள். அவளேயே திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினேன். காதலிப்பதை வேறாகவும் கல்யாணம் செய்து கொள்வதை வேறாகவும் நான் கருதவில்லை. என் எண்ணத்தை நேராக நின்று பெரியண்ணாவிடம் சொல்ல என்னல் முடியவில்லை. அதற்கான துணிவு எனக்கு ஏற்படவில்லை.

“சீதாலட்சுமியை நான் திருமணம் செய்து கொள்வதாக முடிவுசெய்திருக்கிறேன். அன்புகூர்ந்து ஆசீர்வதிக்கவேண்டும். அனுமதிக்க வேண்டும்.”

என்று கடிதம் எழுதினேன். பெரியண்ணாவின் கையில் கொடுத்தேன். மறுநாள் பதில் கிடைத்தது.

“உன்முடிவை நான் தடுக்கப் போவதில்லை. உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.”

என்று பெரியண்ணா எழுதியிருந்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன். சீதாலட்சுமியின் பெற்றேரின் அனுமதியைப் பெற அவர் கள் இருக்குமிடம் சென்றேன். அவளுடைய தந்தையாரைக் கண்டேன். அனுமதி வேண்டினேன். அவர் எளிதில் இசைவளிக்க வில்லை. வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்.

பாசங்களுக்கிடையே மோதல்

கோவைக்குத் திரும்பியதும் பேரதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது. பெரியண்ணா நாகர்கோவில் செல்ல முடிவு செய்து விட்டதாகவும், என் திருமணத்திற்கு அவர் கோவையில் இருக்க மாட்டாரென்றும் தெரிந்தது. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் நிலைமையை விளக்கி உருக்கமாக மீண்டும் பெரியண்ணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அக்கடிதத்தை அவர் பார்க்க விரும்பவில்லை. சகோதர பாசத்திற்கும் காதல் பாசத்திற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அன்றிரவு முழுதும் நானும் சீதாவும் சிந்தனை செய்தோம். காதல் கதைகளில் வருவது போல எத்தனையோ முடிவுகள் எனக்குத் தோன்றின. சீதா உறுதியாகக் கூறிவிட்டாள். “நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அந்த முடிவை நானும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்” என்று.

வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே? பெரியண்ணா மீது எனக்குக் கோபம் உண்டாகவில்லை; வருத்தமும் ஏற்படவில்லை. அவர் முடிவு செய்தது சரியென்றே என் மனத்திலும் பட்டது. விளைவுகளை ஏற்பது தான் ஆண்மை என்ற முடிவுக்கு நானும் வந்தேன்; நான் இந்த முடிவுக்கு வர, காலை ஐந்துமணி ஆயிற்று. அதற்குமேல் சிந்தனை எதுவுமில்லை. அமைதியாக உறங்கினேன்.

காலை 8 மணிக்கு எழுந்தேன். மீண்டும் சிந்தனை “சாவு ஒன்று தான் எங்களைப் பிரிக்க முடியும்” என்று ஒரு சமயம் நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். இப்போது உயிருடன் இருக்கும் போதே பிரிகிறோமே என்று எண்ணினேன்.

காதலயைக் கைப்பிடித்தேன்

1948 மார்ச்சு 31 ஆம் நாள், நான் மறக்க முடியாத நாள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உயிராகப்போற்றும் எங்கள் பெரியண்ணா கம்பெனியை நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் நடத்தும்படி யோசனை கூறிவிட்டு நிரந்தரமாக ஊருக்குப் புறப் பட்டு விட்டார்..........

..................................................................................

நான் என் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டேன். ஜூன் மாதம் முதல் தேதி சின்னண்ணா என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது. சென்றேன். நானும் சின்னண்ணாவும் தம்பி பகவதியும் கலந்து யோசித்தோம் கம்பெனியைத் தொழிலாளர் கூட்டுறவில் விடுவதென்றும், கம்பெனி கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜுவையும் நீண்ட காலமாக வெளி நிர்வாகத்தில் எல்லாக் காரியங்களையும் கவனித்து வரும் பழம் பெரும் நடிகர் கொல்லம் பாலகிருஷ்ண னையும் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லலாமென்று ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. அவ்விருவரையும் அழைத்துக் கேட்டோம். நிர்வாக சிரமங்களை அறிந்தவர்களாதலால் பொறுப்பேற்றுக் கொள்ள அவர்கள் மறுத்தார்கள் ........ சின்னண்ணாவே எல்லாப் பொறுப்புக்களையும் துணிவோடு ஏற்றார்.

1948 ஜூன் 4 ஆம் நாள் சீதாவைத் திருமணம் செய்து கொள்ள பதிவாளர் முன்னிலையில் மனுக்கொடுத்து ரசீது பெற்றேன். அன்றிரவு எங்கள் இல்லத்தில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மணமக்களாகப் புத்தாடையுடுத்தி நாங்களிருவரும் விளக்கின் முன் அமர்ந்தோம். இறைவனை வணங்கினோம். சின்னண்ணா; மீனாட்சி அக்காள், சீதாலட்சுமியின் தாய், தந்தை, என் அன்புக்குரிய, என்னை உயிராகக் கருதும் நடிகர். தம்பி எம். கருப்பையா ஆகியோர் முன்னிலையில் என் காதலி சீதாலட்சுமிக்கு நான் மங்கலகாண் பூட்டினேன். திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மெய்தானோ?......