எனது நாடக வாழ்க்கை/நாஞ்சில் நாட்டில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
நாஞ்சில் நாட்டில்

நாகர்கோவிலில் எங்களுக்கு உறவினார்கள் பலர் இருந்தார்கள். நான், எனக்கு அறிவு தெரிந்த பருவம் முதல் மதுரையில் இருந்து வந்ததால் உறவினார்கள் எவரையுமே சந்தித்ததில்லை. நாகர்கோவிலில்தான் முதன்முதலாக அந்த வாய்ப்பு ஏற்பட்டது. தந்தை வழியில் சொந்தக்காரர்களான பலரை அம்மா எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அம்மாவின் உடன் பிறந்த தங்கை, அம்முக்குட்டியம்மாள் நாகர்கோவிலுக்குப் பத்து மைல் தொலைவிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார். சின்னஞ்சிறு வயதில், சில காலம் நானும் அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்திருக்கிறேன். சித்தியைப் பார்த்ததும் சின்னஞ்சிறு பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வந்தன.

சின்னஞ்சிறு வயதில்

அப்போது எனக்கு நான்கு வயது இருக்கும். அழகிய பாண்டியபுரத்தில் சித்தி வீட்டில் இருந்தேன். நான் எப்போது போனாலும் சித்தி எனக்கு அவல் விரவிக்கொடுப்பார்கள். நாஞ்சில் நாட்டுச் சம்பா அவல் மிகுந்த சுவையாக இருக்கும். அவலை உரலில் போட்டு இடித்து, வெல்லச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலம், சுக்கு இவை எல்லாம் போட்டு விரவித் தருவார்கள். ஒரு நாள் யாரோ நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சித்தி இரும்பால் செய்யப்பட்ட அரைப்படி நாழியை எடுத்துக் கொண்டு, வீட்டின் எதிரேயுள்ள கடையில் அவல் வாங்கப் புறப்பட்டார்கள். உடனே நான் நாழியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவல் வாங்கக் கடைக்கு ஓடினேன். அவலை வாங்கிக் கொண்டு மீண்டும் வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். ஏதோ கல் தடுக்கியது; கால் இடறி நாழியோடு கீழே குப்புற விழுந்தேன். விழுந்த வேகத்தில் நாழியின் கூரான விளிம்பு, என் நாடியின் வலப்புறத்தில் தாக்கியது. ஆழமான காயம், ரத்தம் கொட்டியது. சித்தி ஓடி வந்து, என்னை மார்போடு அணைத்துக் கொண்டார்கள். உடனடி சிகிச்சை செய்யப் பெற்றது. காகிதங் கள் சிலவற்றைக் கொளுத்தி, அந்தக்கரியைத் தேங்காயெண்ணெ யில் குழப்பிக் காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். ரத்தம் வருவது நின்றது. இரண்டொரு நாட்களில் காயமும் ஆறிவிட்டது. வேறு எந்த மருந்தும் போட்டதாக எனக்கு நினைவில்லை. 56 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அந்தக் காயத்தின் வடுமட்டும் சித்தி வீட்டின் நினைவாக இன்னும் மாறாமல் இருக்கிறது. சித்தியிடத்தில் அம்மா அதிகமான அன்பு வைத்திருந்தார். வறுமையாயிருந்த நிலையில்கூடச் சித்திக்குப் பல வகைகளில் உதவிபுரிந்து வந்தார்.

பகவதி பிறந்த ஊர்

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் மூன்றாவது மைலில், ஆசிராமம் என்ற ஒரு சிற்றுார். அந்த ஊரில் தந்தையார் குடும்பத்தோடு சில காலம் வசித்து வந்தார். ஆசிராமத்தில் தம்பி பகவதி பிறந்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஏடு படித்துக் கொண்டிருந்தேன். எங்களைத் தனியே விட்டு அப்பா அடிக்கடி நாடகத்திற்காக வெளியூர்களுக்குப் போவார். ஒருமுறை தாமரைக்குளம் என்னும் அருகேயுள்ள சிற்றுாரில் அப்பா நல்லதங்காள் வேடம் பூண்டு நடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நான் ஏழாவது பிள்ளையாக நடித்ததை முன்பே கூறியிருக்கிறேன். ஏதோ கனவுபோல் இருக்கிறது. அப்பா ஆறு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுவிட்டு என்னைத் தூக்க வந்தார். நான் அழத் தொடங்கிவிட்டேன். அவர் பிடிக்கு அகப்படாமல் உள்ளே ஒடினேன். அப்பா என்னைத் துரத்திப் பிடித்துக் கிணற்றில் போட்டதாக நினைவு.

சுட்டித்தனம்

ஒருநாள் வீட்டின் வெளியே நடுத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரிக்குப் போகும் முக்கியமான சாலை அது. அந்தக் காலத்தில் போக்கு வரத்து அதிகம் இல்லை. என்றாலும், மணிக்கொரு வண்டியாவது போய்க்கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரைத் தடுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. சைக்கிளை வழிமறித்து நின்றேன். அவர் மற்றொரு புறமாக விலகிச் சென்றார். நானும் விடவில்லை. அந்தப் பக்கமும் ஒடி வழிமறித்தேன். என்னைத் தாண்டிச் செல்ல அவர் சைக்கிளை இருபுறமும் திருப்பி ஒட்டினார். அதுவும் பலிக்கவில்லை. நான் வீரனல்லவா? விடுவேனா? குறுக்கே விழுந்து தடுத்தேன். அவர் வேகமாகப் போக முயன்றதால் சைக்கிள் என்மீது பலமாக மோதியது. நானும் அவரும் கீழே விழுந்ததோடு, சைக்கிளும் விழுந்தது. வீதியில் ஒரே குழப்பம். அப்பா ஓடி வந்து, என்னையெடுத்து அணைத்துக் கொண்டார். சைக்கிள்காரருக்கு நல்ல பூசையும் விழுந்தது. அவரைப் பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. பாவம், அவர் என்னசெய்வார்? நானல்லவா குற்றவாளி! நாகர் கோவிலில், இந்தப்பழைய நினைவுகளெல்லாம் எனக்கு இன்பமாக இருந்தன.

பகவதி பால பார்ட்டு

நாடகங்கள் ஒழுகினசேரி சரஸ்வதி தியேட்டரில் நடை பெற்றன. நல்ல வசூலும் ஆயிற்று. அந்த நாளில் ‘பாலபார்ட்டு’ என்று ஒரு வேடம் உண்டு. மூன்று அல்லது ஐந்து பேர், திரை தூக்கியவுடன் மேடைமீது நின்று தோத்திரப் பாடல்களைப்பாடுவார்கள். அவர்கள் சில பாடல்களைப் பாடிவிட்டு, உள்ளே வந்ததும் ‘பபூன்’ போவார். அவரும் சில பாடல்களைப் பாடுவார். அதன் பிறகுதான் நாடகக் காட்சி தொடங்கும். இந்தப் பால பார்ட்டுகளில் ஒருவகைத் தம்பி பகவதியும் நாகர்கோவிலில் அரங்கேறினன். நடிகர்கள் கூட்டமாகப்பாடப் பயிற்சி பெறுவதற்கு இந்த பால பார்ட்டு மிகவும் உபயோகப்பட்டது. தாளம் சரியாக வராதவர்களையெல்லாம் பால பார்ட்டில் ஒரு மாத காலம் போட்டு வைத்தால், கூட்டத்தோடு பாடி அவர்களுக்குத் தாளம் வந்துவிடும். பகவதியும் இவ்வாறு பயிற்சி பெறத் தொடங்கினன். நாகர்கோவில் நாடகம் முடிந்து, திருவனந்தபுரம் போகலாமென்று சிற்றப்பா, மாமா ஆகியோர் கருத்துத் தெரிவித்தார்கள். திருவனந்தபுரம் எங்களுடைய சொந்த ஊரானதால் நாங்கள் அங்கேயே கம்பெனியைக் கலைத்துவிடக் கூடுமெனச் சின்னையாபிள்ளை பயந்தார். எனவே, கொல்லம் கொட்டகையைப் பேசி வந்தார். நாகர்கோவில் நாடகம் முடிந்து கொல்லத்திற்குச் சென்றோம்.

மகரக்கட்டு

கொல்லம், காயிக்கரை முதலாளி சாய்புவின் கொட்டகையில் நாடகங்கள் நடைபெற்றன. கொல்லத்தில் சின்னண்ணாவுக்கு, “மகரக் கட்டு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தோன்றின. பெண்கள் மங்கைப் பருவம் அடையும்போது உடலிலே மாறுதல் ஏற்படுவதுபோல் ஆண்களின் பருவ வளர்ச்சியைக் காட்டுவதற்குரிய அறிகுறிதான் ‘மகரக்கட்டு’ என்பது. பதினைந்து அல்லது பதினாறாவது வயதில் இந்த மகரக்கட்டு தோன்றும். இனிமையான குரல் மாறி கனமான குரல் ஏற்படும். இந்த இடைக்காலம் அந்த நாளில் நடிகர்களுக்கு மிகவும் பயங்கரமான காலமென்று சொல்லலாம். குரல் நாம் நினைக்கிறபடி கட்டுப்படாமல் அதன் போக்கில் நம்மை இழுத்துப் போகும். பிசிர் அடிக்கும் பருவம் என்று நாங்கள் இதைக் குறிப்பிடுவோம். பாட்டுக்கு முதன்மை யிருந்த காலமாதலால் பெரும்பாலான நடிகர்கள் இந்தக்கட்டத்தைத் தாண்டுவது கஷ்டம். இந்த மகரக்கட்டு வரும் சமயத்தில் பெரும்பாலும் நடிகர்கள் மதிப்பிழந்து விடுவார்கள். குரலிலே கோளாறு ஏற்படுகிறது என்று தெரிந்ததும் அவருடைய வேடங்களெல்லாம் உடனடியாக மாற்றப்படும். அதிலும் பெண்வேடம் புனையும் இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் சொல்ல முடியாத மனோவேதனை.

சின்னண்ணாவுக்கு மகரக்கட்டு ஏற்படுவதைக் கண்ட சின்னையாபிள்ளை ஏதேதோ சொன்னதாக அறிந்தோம். “இனி மேல் முத்துசாமி, வேடத்திற்குப் பயன்பட மாட்டான். ஷண்முகத்திற்கு மட்டும் ஐநூறு ரூபாய் சம்பளம் தர இயலாது” என்று சின்னையாப் பிள்ளை சொன்னதாகப் பெரியண்ணா வந்து கூறினார். குறைந்த சம்பளம் போட்டுப் புதிதாக ஒப்பந்தம் எழுத வேண்டுமென்றும் பேசிக் கொண்டதாக அறிந்தோம். பெரியண்ணாவுக்கும் சின்னையாப் பிள்ளைக்கும் பேச்சு வார்த்தை தடித்தது. அம்மாவுக்கு இந்தச் செய்தி எட்டியதும், எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்பெனியிலிருந்து விலகக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருந்த அவர்கள், உடனேயே கம்பெனியிலிருந்து விலகிவிட வேண்டுமென அறிவித்தார்கள். இரண்டு நாட்களில் கம்பெனியை விட்டுப் பிரிந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.