எனது நாடக வாழ்க்கை/மலையாள நாட்டில்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மலையாள நாட்டில்

திருவனந்தபுரத்திலிருந்து கம்பெனி கொல்லம் வந்து சேர்ந்தது. கொல்லத்தில் வசூல் மிகவும் மோசமாக இருந்தது. நாடகங்களை விரைவில் முடித்துக் கொண்டு ஆலப்புழைக்குச் சென்றோம். ஆலப்புழையில் நாவல் நாடகங்களுக்கு மட்டும் சுமாராக வசூல் ஆயிற்று. அந்த நாளில் மலையாளத்தின் அந்தப் பகுதியில் பஸ் போக்குவரத்துகள் அதிகமாக இல்லை. எங்கு பார்த்தாலும் நீண்ட நீர்க் பரப்பு; ‘காயல்’ என்று அதைக் குறிப்பிடுவார்கள். வேம்ப நாட்டுக் காயல், காயங்குளம் காயல் போன்ற பல காயல்கள் ஒன்று சேர்ந்து சமுத்திரம்போல் கிடக்கும். சாமான்களையெல்லாம் பெரிய வள்ளங்களில் ஏற்றி அனுப்பிவிட்டு நாங்கள் எல்லோரும் சிறு கப்பல்களைப் போலிருக்கும் போட்டுகளில்தான் பிரயாணம் செய்தோம். கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் வரை இதே நிலைதான். ஆலப்புழை, கொச்சி முதலிய ஊர்களில் நாடகம் நடத்திவிட்டுத் திருச்சூர் வந்து சேர்ந்தோம். திருச்சூரிலும் வசூலாகவில்லை. தொடர்ந்து வசூல் இல்லாத அன்றைய நிலை எனக்கு மிகவும் கவலையை அளித்தது. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. நல்ல திறமையுள்ள நடிகர்கள் கம்பெனியில் இருந்தார்கள். வசூல் மட்டும் ஆகவில்லை. இராஜாம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா முதலிய எல்லா நாடகங்களும் தோல்வி யடைந்தன. கே.பி. காமாட்சி, எம். கே. ராதா, கே. கே. பெருமாள், என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சாமிநாதன், நன்றாகப் பாடக்கூடிய பல இளம் நடிகர்கள் எல்லோருமிருந்தும் பயனில்லை. மிகவும் சிரமப்பட்டோம்.

மகத்தான துரோகம்

கம்பெனி திருச்சூரிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்தால் போதும் போலிருந்தது. பொள்ளாச்சியில் கொட்டகையை பேசிவந்தார் பெரியண்ணா. எல்லோரும் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டோம். வாத்தியார் கந்தசாமி முதலியார் தனி வீட்டில் இருந்தார். அவரும், மற்றும் சில முக்கியமான நடிகர்களும் இரண்டு நாட்களுக்குப்பின் வருவதாகச் சொன்னார்கள். ஒரு சிலர் சொந்த ஊருக்குப் போய் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்கள். நாங்கள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம். முதல் நாடகத்திற்குச் சுவரொட்டிகள் அடிக்கப் பெற்றன. விளம்பர அறிவிப்புகளும் தயாராயின. திருச்சூரில் தங்கியவர்கள் வருகைக்காகக் காத்திருந்தோம். குறித்தபடி இரண்டு நாட்களாயின. யாரும் வரவில்லை. ஊருக்குப் போனவர்களிடமிருந்தும் எவ்விதத் தகவலும் இல்லை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நிலையில் திருச்சூரில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம், இடி போன்ற ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தாங்கி வந்தது. திருச்சூரில் தங்கியவர்களும், ஊருக்குப் போவதாகப்புறப்பட்டவர்களும் ஆக எல்லோருமாகப் பதினாலு பேர்கள்-வேறு ஒரு கம்பெனியில் முன்பணம் வாங்கிக் கொண்டு மங்களுருக்குப் போய்விட்டார்கள் என்று அக்கடிதத்திலிருந்து தெரிய வந்தது. நாங்கள் சிறிதும் எதிர்பாராத இந்தச் செய்தி எங்களைத் திடுக்கிடச் செய்தது. வாத்தியார் கந்தசாமி முதலியார், அவரது புதல்வர் எம். கே. ராதா, கே.பி. காமாட்சி, கே.கே. பெருமாள், எம். ஆர். சாமிநாதன், நன்னிலம் நடராசன் உள்ளிட்ட பதினாலு பேர்களைத் திடீரென்று இழந்த நிலையில் எப்படி நாடகங்களை நடத்த முடியும்?

துரோகத்தில் சிக்காத தூயவர்

ஊருக்குப்போன சில நடிகர்களின் பெட்டிகளைத் திறந்து பார்த்தோம். சில பெட்டிகளில் ஒன்றுமே இல்லை. இரண்டொரு பெட்டிகளில் வெறும் காகிதக் குப்பைகள் கிடந்தன. ஒருவர் மிகவும் புத்திசாலி. பெட்டி கனமாக இருப்பதற்காக அவர் இரண்டு, கனத்தபெருங்கற்களை உள்ளேவைத்திருந்தார். இவ்வளவு பெரிய துரோகத்தை எங்களில் யாரும் கனவுகூடக் காணவில்லை.

ஆனால் ஒருவருக்கு மட்டும் இப்படி நடக்குமென்று முன்னாடியே தெரிந்திருந்தது. அவரையும் ஓடிப் போனவர்கள், தம்மோடு வர அழைத்திருந்தார்கள்.ஆனால் அவருக்குக் கம்பெனியின் மீது இருந்த பற்றுதல், நன்றியுணர்ச்சி, அவர்களோடு போகவிடாது தடுத்து விட்டன. அவர் என்னிடம் இந்த உண்மையைக் கூறியபோது, நான் அவரை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டேன். அவர்தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்.

முக்கிய நடிகர்கள் பலர் போய்விட்டதால் பொள்ளாச்சியில் நாடகங்களைத் துவக்க இயலாமல் சிரமப்பட்டோம். பதினைந்து நாட்கள் நாடகம் நடைபெறவில்லை. சில்லரை வேடங்களைப் புனைந்து வந்த பல நடிகர்களுக்கு நல்ல வேடங்களைத் தாங்கச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புதிதாகச் சில நடிகர்கள் சேர்க்கப் பட்டனார். எப்படியோ ஒருவாறாக நாடகம் மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் வசூலை எதிர்ப்பார்க்க முடியுமா? மிகவும் கஷ்டப் பட்டோம்.

காலவ ரிஷி

பொள்ளாச்சியில் இந்தக் கஷ்டத்திலும் புதிய நாடகமாக, பம்மல் சம்பந்தனரின் காலவரிஷி தயாராயிற்று. அந்நாடக அரங்கேற்றத்தன்று வேடிக்கையான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

காலவரிஷி நாடகம் தொடங்கி நடந்துகொண்டிருந்தது. காலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடியவண்ணம் வீற்றிருக்கிறார்கள்.

திரை உருண்டு உயர்ந்ததும், சித்திரசேனன் என்னும் கந்தர்வன் ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது தன்வாயிலிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலதுகரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்துநிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புறமும் பார்க்கிறார். சினத்துடன் சிஷ்யர்களை அழைக்கிறார். பிறகு ஞான திருஷ்டியால், உண்மையறிந்து, ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக, கிருஷ்ணுர்ஜுன யுத்தம் நடக்கிறது. இதுதான் நாடகக் கதை.

காலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்திருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பைத் தருவனவாக இருக்கும். காலவரின் சிஷ்யர்களான மண்டு, கமண்டு வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், சுந்தரமையர் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்திரசேனனுக நான் நடித்தேன்.

நாடகம் அன்றுதான் முதன் முறையாக நடிக்கப் பெற்றதால் நடிகர்கள் அனைவரும் உணர்ச்சியோடு நடித்தார்கள்.

மேடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கம்பியில் இணைக்கப் பட்டிருந்த ஒர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன்.

கொண்டை பறிபோனது

சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெருஞ் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன்.

“அடே மண்டு, கமண்டு” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு, “என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்?” என அலறினார் காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும் ஸ்வாமி என்று ஒடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.

திரை மறைவில், மேலே விமானத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களான என். எஸ். கிருஷ்ணனும், சுந்தரமையரும் மாதவராவைப் பார்த்து, வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சிஷ்யர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர், மேலும் கை தட்டிச் சிரித்தார்கள். மாதவராவ் இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின. என்.எஸ்.கே. பேசவேண்டும், அவரோ பேச முடியாமல் “ஸ்வாமி, தங்கள் தங்கள்..."என்று தவித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் “திரை விடுங்கள், திரை விடுங்கள்” என்ற பல குரல்கள்! திரைவிடப் பட்டது. விமானம் கீழே இறக்கப் பட்ட பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.

விமானம் காலவரைக் கடந்து செல்லும் போது அந்த அட்டை விமானத்தில் நீண்டு கொண்டிருந்த ஒரு ஆணி,நிஷ்டை யிலிருந்த முனிவரின் நீளக் கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பாவையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய் விட்டது. விமானம் மறைந்ததும், நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்குக் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த சிஷ்யர்களால் எப்படி வாய் திறந்து பேச முடியும்?... ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

நாடகங்களுக்கு வருவாய் குறைவாக இருந்தாலும், இவ்வாறு மேடையில் நிகழும் சுவையான நிகழ்ச்சிகள் எங்கள் கவலைக்கு மருந்தாக அமைந்தன. பொள்ளாச்சி முடிந்து ஈரோடு வந்தோம்.