உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நாடக வாழ்க்கை/முதல் நாடகக்கலை மாநாடு

விக்கிமூலம் இலிருந்து
முதல் நாடகக் கலை மாநாடு

“எல்லோரும் மாநாடுகள் கூட்டுகிறார்களே; நாடகக்கலை வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஒரு தனி மாநாடு கூட்டக்கூடாது?” என்றார் எங்கள் அருமை நண்பர் மதுரை கருப்பையா. எங்களுக்கும் இந்த எண்ணமுண்டு. என்றாலும் நாள்தோறும் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருமாநாட்டின் பொறுப்பினை ஏற்று நடத்துவது மிகவும் சிரமமானது என்று கருதினுேம். மதுரை கருப்பையா பிடிவாதக்காரர். தேசீய மாநாடுகள் சிலவற்றை நடத்திப்பழக்கப் பட்டவர். 1941இல் மதுரையில் நாங்கள் இருந்த போது எங்கள் அரங்கிலேயே ஒரு மாநாட்டைக் கூட்டி அதில் என்னையும் பங்குபெறச் செய்தவர். நகைச்சுவை நடிகர் டி. என் சிவதாணு, நண்பர் கருப்பையாவின் கருத்தினை ஆதரித்தார். கருப்பையாவுடன் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொன்னார். சிவதாணுவும் கருப்பையாவும் செயலாளர்களாக இருந்து பணிபுரிய ஆர்வத்தோடு முன் வந்தார்கள். செயலாற்றுவதற்கு இருவர் சித்தமாக இருந்ததால் நானும் உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்தேன். பெரியண்ணாவிடமும் அனுமதி பெற்றேன். ஈரோடு நகரப் பிரமுகர்களும், நகரசபையாரும் ஏனைய அதிகாரிகளும் எங்களோடு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்கள். மாநாட்டுக்குரிய வேலைகளைத் தொடங்க சிவதாணு, கருப்பையா இருவருக்கும் அனுமதி அளிக்கப் பட்டது.

வரவேற்புக் குழுவினர்

மாநாட்டுச் செயலாளர்கள் இருவரும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தார்கள். ஒருவாரக் காலத்திற்குள் வரவேற்புக் குழு அமைத்தார்கள். குழுவினார் நகரின் முக்கிய பிரமுகர்களாகவும், நாடகக் கலை வளர்ச்சியில் ஆர்வமுடையவர்களாகவும், எல்லோருடைய நம்பிக்கைக்குப் பாத்திர முடையவர்களாகவும் இருந்தார்கள்.

வரவேற்புக் குழுவினார்

தலைவர்: பொருளாளர்;

திரு. ஆர். கே. வெங்கடசாமி நாயக்கர் திரு எஸ். மீனாட்சிசுந்தர (நகரசபைத் தலைவர், ஈரோடு) முதலியார் பி. ஏ. எல். டி.

செயலாளர்கள்

திரு டி. என், சிவதானு (நகைச்சுவை நடிகர் ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா

திரு எம். கருப்பையா (தேசபக்தர்)

நிருவாக உறுப்பினார்கள்

திரு கான்சாகிப் ஷேக் தாவுதுசாய்பு, ஈரோடு

“ நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார், பழையக் கோட்டை

“ எம். சிக்கைய நாயக்கர், ஈரோடு

“ ஈ. எம். அண்ணாமலைப்பிள்ளை பி. ஏ. பி. எல். ஈரோடு

“ வி. வி. சி. ஆர். முருகேச முதலியார், ஈரோடு

“ கே. என். பழனிச்சாமிக் கவுண்டர், நகரசபைத் தலைவர் திருப்பூர்

“ ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர், ஈரோடு

“ எஸ். கிருஷ்ணசாமி முதலியார், ஈரோடு

“ எம். எஸ். முத்துக் கருப்பஞ் செட்டியார், ஈரோடு

“ என். சி. இராஜகோபால், ஆடிட்டர், ஈரோடு

“ டி.கே.சண்முகம் ஸ்ரீ பால ஷண்முகா னந்தசபா

குழுவினரின் ஏற்பாடுகள்

வரவேற்புக் குழுவினர் கூடி நன்கு விவாதித்து இரண்டு வார காலத்திற்குள் மாநாட்டுத் தலைவரையும் பேச்சாளர்களையும் முடிவு செய்தனார். காலை மாலை இரு வேளைகளிலும் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதென்றும் மாநாட்டன்று இரவு, ஒளவையார் நாடகத்தை நடத்திக் கொடுக்கும்படி டி. கே. எஸ். சகோதரர்களைக் கேட்டுக் கொள்வதென்றும் ராவ்பகதூர் சம்பந்த, முதலியார், எம். என். எம். பாவலர், எம். கே. தியாகராஜ பாகவதர், டி. கே. ஷண்முகம் ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிப் பாராட்டுவதென்றும், மாநாட்டுக்குக் கட்டணம் வைத்து நடத்தவேண்டுமென்றும் ஒருமனதாக முடிவெடுத்தனார்.

குழுவினரின் முடிவுப்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும் ஒப்புதல்கள் பெறப் பட்டன. 1944 பிப்ரவரி 11ஆம் தேதி ஈரோடு சென்ரல் தியேட்டரில் மாநாடு சிறப்பாக நடைபெறுமென விளம்பரம் செய்யப்பெற்றது.

நிகழ்ச்சிகளின் பட்டியல்

தொழில்முறை சபைகள், பயில்முறை சபைகள் என்ற வேறு பாடின்றி எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது தமிழ்நாட்டிலிருந்த பெரும்பாலான நாடக சபைகளின் பிரதிநிதிகள் மாநாட்டின் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழரின் பிரதிநிதியாக ஏ. கே. இராமலிங்கம் என்பவர் மாநாட்டில் பங்குகொண்டார். முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட சீர்திருத்தவாதிகளும் தம் கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லி மாநாட்டைச் சிறப்பித்தனார். காலை-மாலை நிகழச்சிகள் பின் வருமாறு ஒழுங்கு செய்யப் பெற்றன.

காலை நிகழ்ச்சிகள்
கொடியேற்று விழா ... ராவ்பகதூர் சம்பந்த முதலியார்
திறப்பு விழா ... எம். கே. தியாகராஜ பாகவதர்
வரவேற்புரை ... ஆர். கே. வேங்கடசாமி
தலைமைப் பேருரை ... சர் ஆர். கே. சண்முகம் கே. சி. ஐ. ஈ.
சங்கரதாசர் படத்திறப்பு ... எம். என். எம். பாவலர்
கந்தசாமி முதலியார் படத்திறப்பு ... டி. கே. ஷண்முகம்
மாலை நிகழ்ச்சிகள்
நாடகமும் அதன் பயனும் நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம்
(ஸ்ரீ தேவி பால வினேத சங்கீத சபா )
இலக்கியமும் சம்பிரதாயமும் சி. ஆர். மயிலேறு எம். ஏ.
(பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
நாடகத்தில் பெண்கள் பி.எஸ். சிவபாக்கியம்
(ஸ்பெஷல் நாடக நடிகை, மதுரை)
நாடகமும் சினிமாவும் நகைச்சுவையரசு
என். எஸ். கிருஷ்ணன்
இன்றைய நாடகம் ஏ. ஆர். அருணாசலம்
(ஸ்ரீராம பாலகான வினேத சபா)
கலையின் நிலைமை சி. என். அண்ணாதுரை எம். ஏ.
(திராவிட நடிகர் கழகம்-காஞ்சீபுரம்)
நடிகர் வாழ்க்கை கே. டி. சுந்தானம்
(ஸ்ரீ மங்கள பால கான சபா)
நாடகக் கலை கி. ஆ. பெ. விசுவநாதம்
(திருச்சி நகர அமைச்சூர் சபை)
நடிகர்களின் கடமை எம். எம். சிதம்பரநாதன்
(ஸ்பெஷல் நாடக நடிகர்-மதுரை)
நாடகக்கலை வளர்ச்சி பூவாளுர் அ. பொன்னம்பலனார்
(சீர்திருத்தக் கழகம்-பூவாளுர்)
நடிப்புக் கலையால் இன்பம் ஏ. கே. இராமலிங்கம்
(இலங்கை நாடகசபைகளின் பிரதிநிதி)
சீர்திருத்த நாடகங்கள் எஸ். ஆர். சுப்பரமணியம்
(நாடக ரசிகர்-திருப்பூர்)
ஒழுக்கம் வேண்டும் என். தண்டபாணிப்பிள்ளை
(நாடக ரசிகர்-சிதம்பரம்)
நல்ல நாடகங்கள் எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் பி. ஏ., எல். டி
(நாடக ரசிகர். ஈரோடு)
நாடும் நாடகமும் எம். வி. மணி (நடிகர், சென்னை)
நன்றியுரை டி. என். சிவதானு

28ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பல்வேறு கொள்கை யாளர்களை ஒருங்கு சேர்த்து, கட்டணமும் வைத்து ஒரு நாடக மாநாட்டினை நடத்த முன் வந்தது வியப்புக்குரிய செய்தி யல்லவா? அதுவும் ஒரு நாடக சபையின் பின்னணியிலேயே இதனை நடத்துவதென்பது தனிச் சிறப்பு வாய்ந்ததல்லவா?

முத்தமிழ் நுகர்வோர் சங்கம்

மாநாட்டின் தேதியும் நிகழ்ச்சிகளின் பட்டியலும் விளம்பரப் படுத்தப்பட்ட உடனேயே ஈரோட்டில் புதிதாக ஒரு சங்கம் தோன்றியது இதன் பெயர் முத்தமிழ் நுகர்வோர் சங்கம். இச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விடுதலை, குடியரசு இதழ்களில் வெளிவந்தன. நாடகக்கலை மாநாட்டினைப்பற்றி வாரந்தோறும் பெரியாரின் குடியரசு வார இதழில் 1, 2, 3, என்று எண்கள் போட்டுத் தலையங்கம் எழுதப் பட்டது. நாடககலை மாநாட்டை நாங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு நடத்துவதாகப் பெரியாரிடம் யாரோ சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால் அவர் மாநாட்டை அழுத்தமாகக் கண்டித்து எழுதினார். மாநாடுக்குக் தலைமை தாங்க வரும் ஆர். கே. சண்முகம் செட்டியாருக்குக் கறுப்புக் கொடி பிடிக்கவேண்டுமென்று முத்தமிழ் நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்களில் சிலர் பேசிக் கொணடார்கள். இந்தச் செய்தி எனக்குக் கவலையைத் தந்தது; நான் பெரியார் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் ஊரில் இல்லையென்றும் சேலத்தில் இருக்கிறாரென்றும் தகவல் கிடைத்தது. கடிதம் எழுதினேன்.

மாநாட்டுத் தேதி நெருங்க நெருங்க எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. மாநாட்டுத் தலைவரை ரயில் நிலையத்தில் வரவேற்கும்போது கறுப்புக்கொடி காட்டச் சிலர் முயல்வதின் காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மாநாட்டுக்கு ஒருவாரத்திற்கு முன்பே பெரியார் சேலம் போய்விட்டதால் அவரைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு கிட்டவில்லை. மாநாட்டுக்கு முதல் நாள் காலை அறிஞர் அண்ணா காஞ்சியிலிருந்து வந்தார். அவரைச் சந்தித்துப் பேசினேன். பெரியார் கோபத்தைப் பற்றியும், முத்தமிழ் நுகர்வோர் சங்கம் கறுப்புக்கொடி பிடிக்க இருப்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அண்ணா “ஒரு குழப்பமும் நேராது; மாநாடு ஒழுங்காக நடைபெறும்” என்று உறுதி கூறினார்.

நிருவாகக் குழுக் கூட்டம்

மாநாடு நடைபெறுவதற்கு முந்திய நாள் மாலை நிருவாக குழுக் கூட்டம் சென்ட்ரல் தியேட்டரில் நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருந்தன. அவற்றில் முத் தமிழ் நுகர்வோர் சங்கத்தார் புராண-இதிகாச நாடகங்களைக் கண்டித்துச் சில தீர்மானங்களை அனுப்பியிருந்தனர். டி. கே. எஸ். சகோதரர்கள் சார்பில் நாங்களும் சில தீர்மானங்களை இம் மாநாடு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி அச்சிட்டு அனுப்பி யிருந்தோம். நீண்டநேரம் விவாதித்த பின் குழப்பம் நேருவதைத் தவிர்ப்பதர்காக, எந்தத் தீர்மானமும் மாநாட்டில் நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும் நூற்றுக்கு மேற்பட்ட தீர்மானங்கள் வந்திருப்பதால் அவற்றையெல்லாம் நன்கு பரிசீலனை செய்து அடுத்த மாநாட்டில் வைக்க வேண்டுமென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பி யுள்ள தீர்மானங்களை நிறைவேற்றினல் ஆக்க பூர்வமாகச் செயலாற்ற நல்ல வாய்ப்பு கிட்டுமென்று நான் எவ்வளவோ வற்புறுத்தினேன். ஏற்கனவே குழப்பம், கறுப்புக்கொடி, கலகம் இவற்றைப்பற்றிப் பரவலாக நகர் முழுவதும் பேச்சு பரவி யிருந்ததால் நிருவாகக் குழுவினார் எந்தத் தீர்மானமும் நிறை வேற்ற இயலாதென உறுதியாக மறுத்து விட்டனார்.

மாநாட்டைச் சிறப்புற நடத்துவதில் எங்களுக்குத் தவறான உள்நோக்கம் எதுவும் இல்லையென்பதையும் நாடகக் கலை வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற முனைந்தோம் என்பதனையும் பின்னே வரும்.எங்கள் தீர்மானங்கள் எடுத்துக் காட்டும்.

தமிழ்நாடு நாடகக் கலை அபிவிருத்தி மாகாட்டிற்கு டி. கே. எஸ். சகோதரர்கள் அனுப்பியுள்ள தீர்மானங்கள்

1. நாடகக் கலை வளர்ச்சிக்கு உருப்படியான தொண்டாற்றத் “தமிழ்நாடு நாடகக்கலை வளர்ச்சிக் கழகம்” என்ற பெய ரால் கழகம் ஒன்று நிறுவ வேண்டுமென்றும், கழகத்தின் நேக்கங்களும் நிபந்தனைகளும் கிழ்க்கண்டவாறு இருக்கவேண்டு மென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

நோக்கங்கள்

(அ) தமிழர்களின் முன்னேற்றத்தையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு சிறந்த நாடகங்களை இயற்ற எழுத்தாளர்களைத் துண்டுவதும், அவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களுக்குப் பரிசுகள் வழங்குவதும், அந்நாடகங்களைக் கழகத்தின் சார்பிலேயே புத்தகமாக வெளியிடுவதும்.

(ஆ) கழகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட நாடகங்களை நடிக்கும் சபையாருக்கும் சிறந்த நடிகருக்கும் பரிசுகள் வழங்குவது.

(இ) தற்போது தமிழகத்தில் நிரந்தரமாகத் தொழில் நடத்தும் நாடக சபைகளைக் கொண்டு மேற்படி நாடகங்களை நடிக்கத் துரண்டுவது.

(ஈ) ஒவ்வொரு ஊரிலும் நாடகக் கழகங்கள் அமைத்து, நாடக வருவாயை எதிர்பாராத அறிஞர்களை அங்கத் தினார்களாக்கி, மேற்குறித்த நாடகங்களை நடிக்கச் செய்வது.

(உ) கழகத்தின் சார்பில் மாநாடுகள் நாடெங்கும் கூட்டி நாடகக் கலையின் மேன்மை பற்றிப் பிரசாரம் செய்வது.

(ஊ) நாடகக் கலை வளர்ச்சிக்கென்று பத்திரிக்கைகள் தோற்றுவிப்பது.

(எ) நகரசபைகளின் நிர்வாகத்திலுள்ள ஒவ்வொரு நகரங் களிலும் கலை வளர்ச்சிக்காகவும், பொது உபயோகத் திற்காகவும் ஒவ்வொரு தியேட்டர் (திருச்சி நகரசபை ஹாலைப் போல) அமைக்கும்படி நகரசபைகளைத் தூண்டுவது.

(ஏ) கழகத்தின் சார்பில் நிதி திரட்டி, தமிழ்நாட்டின் முக்கிய

நகரங்களில் நாடகசாலைகள் நிறுவுவது.

நிபந்தனைகள்

(க) மேற்கண்ட நோக்கங்களை ஒப்புக்கொண்ட எவரும் இக் கழகத்தில் அங்கத்தினராக இருக்க உரிமையுடை யவராவர்.

(ங) அங்கத்தினார்கள் வருடச் சந்தா ரூ. 6 - செலுத்த வேண்டும்.

(ச) நிருவாகிகள் அங்கத்தினார்களின் பெயரால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

2. அடுத்த மாநாடு கழகத்தின் பேரால் கூட்டப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை கீழ்க்கண்டவர்களை இக்கழகத்தின் நிருவாகிகளாக இருந்து செயலாற்ற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தலைவர்; சர் பி. டி. இராஜன் அவர்கள்

உபதலைவர்; ராவ் பகதூர் பி. சம்பந்த முதலியார் அவர்கள்

நிர்வாக அங்கத்தினார்கள்; நாடக கேசரி நவாப் டி. எஸ். இராஜமாணிக்கம் பிள்ளை

நாடக ஆசிரியர் திரு. டி. பி. பொன்னுசாமிப்பிள்ளை

(ஸ்ரீ மங்கள பாலகான சபா)

திரு வயிரம் அரு. அருளுச்சலம் செட்டியார்

(ஸ்ரீ ராமபாலகான சபா)

திருமதி கே. பி. சுந்தராம்பாள்

இசை நாடக ஒளி எம். கே. தியாகராஜ பாகவதர்

நகைச்சுவையரசு என். எஸ் கிருஷ்ணன்

திரு பி. எஸ். வேலுநாயர்

ராவ்சாகிப் வி. ஐ. குமராசாமிப்பிள்ளை (கரந்தைத் தமிழ்ச் சங்கம்)

திரு ஏ. கார்மேகக் கோன் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)

“ சி. ஆர். மயிலேறு எம். ஏ. (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)

“ சி. என். அண்ணாதுரை எம். ஏ.

“ கி. ஆ. பெ. விசுவநாதம்

பேராசிரியர் வ. ரா. (சென்னை)

கான்சாகிப் ஜனப் கே. ஏ. ஷேக்தாவுத் சாகிப்

காரியதரிசி: டி. கே. ஷண்முகம்

பொக்கிஷதார்: டி. கே. பகவதி

3. இக்கழகத்தின் போஷகர்களாகக் கீழ்க்கண்ட பெரியார்களை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது.

4. 1. ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்

2. சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் “
3. இராமநாதபுரம் சேதுபதி மன்னார் “
4. வள்ளல் அழகப்பச் செட்டியார் “

ஈரோடு

11 – 2– 44

இத் தீர்மானம் மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேறி யிருக்குமானல் அதன்படி செயலாற்ற என்னைப் பொறுத்த வரையில் சித்தமாக இருந்தேன். இதற்குப் பெரியண்ணாவின் அனுமதியையும் பெற்றிருந்தேன். ஆனால் அன்று எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த பெரியவர்கள், எங்களைப் புரிந்து கொள்ளாமல் செயலாற்றியதால் அந்த அருமையான வாய்ப்பினைத் தமிழகம் இழந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவதாக மகாநாட்டுத் தலைவரை மறுநாள் காலை ரயில் நிலையத்திலிருந்து அவர் தங்குமிடமாகிய கான்சாகிப் இல்லம் வரை மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்துவர ஏற். பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி ஆர். கே. சண்முகம் அவர்களே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கிணங்க ஊர்வலம் எதுவும் தேவையில்லையென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் கறுப்புக் கொடி பிடிக்கத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் அண்ணா அவர்களின் அறிவுரைக்கிணங்க அந்த எண்ணத்தைக் கைவிட்டனார் என்பதைப் பின்னல் அறிந்தோம்.

மாநாடு தொடங்கியது

மறுநாள் 11, 2- 44 காலை 9- 30- மணிக்கு தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோடு சென்ட்ரல் நாடக அரங்கில் துவங்கியது. அதிகாலை ஈரோடு வந்து சேர்ந்த மாநாட்டுத் தலைவர் ஆர். கே. சண்முகம் செட்டியார் கான்சாகிப் ஷேக்தாவுத் சாகிப் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை அரங்கிற்கு அழைத்து வந்தார்கள். தலைவரைப் பிரேரேபிக்கும் போது அதை எதிர்த்துக் குழப்பம் செய்யத் திட்டமிட்டுச் சிலர் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனை யறிந்த ஆர். கே. சண்முகம், “தலைவர் பெயரைத்தான் விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே, பின் ஏன் பிரேரணை, ஆமோதிப்பு, எல்லாம் வேண்டும்? அது ஒன்றும் தேவையில்லை. தலைவர் பிரேரணை இல்லாமலையே மாநாட்டைத் தொடங்கி விடலாம்” என்றார். நிர்வாகிகளுக்கும் அதுவே சரியெனப் பட்டது.

மேடையில் முன்திரை விடப்பட்டிருந்தது. அது துாக்கப் பட்டதும் மேலேயிருந்து வரிசையாகப் பூச்சரங்களைத் தொங்க விட்டு மேடை முழுதும் மறைத்திருந்தோம். கொடியேற்று விழாச் சொற்பொழிவினைப் பூச்சரங்களுக்கு முன்புறமே நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். திறப்புரையின்போது ஒருகயிற்றைப் பிடித்துத் திறப்பாளர் இழுத்ததும் மேடையை மறைத்துத் தொங்கவிடப் பெற்றுள்ள பூச்சரங்கள் அப்படியே மேலுயர்ந்து விலகி மேடையை மறைக்காமல் இருபுறமும் அழகாகத் தொங்கி கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் எங்கள் காட்சி அமைப்பாளர்கள்.

முதலில்; ‘நாட்டினுக் கணிகலம் நாடகக் கலேயே’ என்னும் கவி ஆறுமுகனார் பாடலே அப்போது எங்கள் கம்பெனி முக்கிய நடிகரும் சிறந்த பாடகருமான எஸ். சி. கிருஷ்ணன் இனிமையாகப் பாடினார். ராவ்பகதுரர் சம்பந்தமுதலியார் அவர்கள் நாடக அரங்கின் சின்னம் வரையப் பெற்ற மஞ்சள் வண்ண நாடகக் கலைக் கொடியினை அரங்கிற்கு வெளியே உயர்த்தி வைத்துவிட்டு மேடையில் வந்து சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவின் சுருக்கம் இது:

‘தமிழ் நாடகாபிமானிகளே, தமிழ் அன்பர்களே, உங்கள் அனுமதியின்மீது நான் இப்போது வெளியில் ஏற்றி வைத்த தமிழ் நாடகக் கலைக் கொடியானது என்றும் அழியாப் புகழுடன் தமிழ் நாடகத்தின் பெருமையைத் தமிழ் பேசப்படும் நாடுகளிலெல்லாம் பிரகாசிக்குமாறு செய்ய எல்லாம் வல்ல இறைவன் இணையடியினைப் போற்றுகிறேன்.

இந்திய நாட்டில் எங்கும் இதுவரை நாடகத்திற்குத் தனியாக மகாநாடு நடைபெற்றதில்லை. அந்தப் பெருமை தமிழ் மக்களாகிய நமக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்தப் பாக்கியத் தையும் பெருமையையும் எனக்குக் கொடுத்த இந்நாடக மகா நாட்டைக் கூட்டிய சங்கத்தார்க்கு என் மனமாாந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

53 வருடங்களுக்கு முன் நான் தமிழ் நாடகங்களில் ஆட ஆரம்பித்தபோது தமிழ் நாடகம் இருந்த நிலைமையையும், அது தற்காலம் இருக்கும் நிலையையும் கருதுமிடத்து நான் மிகவும் சந்தோஷப்பட வேண்டியவகை இருக்கிறேன். நாடகமாடுவதென்றால் மிகவும் இழிவான ஒரு தொழிலாக எல்லோராலும் கருதப் பட்டு வந்தது. என்னப் பற்றிய ஒரு உதாரணத்தைக் கூறினாலே போதும். நான் நாடகமாடுவதைக் கேள்விப்பட்ட என் நெருங்கிய பந்து ஒருவர், ‘என்ன சம்பந்தம் கூத்தாடியாகப் போய்விட்டானாமே’ என்று கூறினராம். அக்காலத்தில் கூத்தாடி என்பது ஒரு வசை மொழியாகக் கருதப்பட்டது. அக்காலமெல்லாம் போய், பிறகு நாடகம் ஆடுவதில் இழிவில்லை; கற்றவர்களும் அப்படிச் செய்ய லாம், எல்லா வர்ணத்தாரும் செய்யலாம்; குலஸ்திரீகளும் அதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டதற்காகத் தமிழ் நாடக அபிமானிகள் யாவரும் சந்தோஷப்பட வேண்டும்.

நான் இந்த நாடக மகாநாட்டிற்குப் புறப்பட்டபோது சென்னையிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் “தமிழ் நாடகம் தான் சினிமா வந்தபிறகு செத்துப் போய்விட்டதே. இதற்காக நீங்கள் ஈரோட்டுகுப் போவானேன்?’ என்று கேட்டார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமையாகும். தமிழ் நாடகக் கலையானது அழிந்து போகும் என்று ஒரு நாடகாபிமானியும் பயப்பட வேண்டியதில்லை. கிராமபோன் ரிக்கார்டுகள் வந்த பிறகும் அவற்றைப் பாடிய சங்கீத வித்துவான்களை நேரில் கேட்க நாம் அதிகமாக விரும்புவதில்லையா? பேசும் படத்தில் நடித்த நடிகர்களை நாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதில்லையா? இந்த உணர்வு இருக்கும் வரை நாடகம் ஒரு நாளும் அழியாது என்று நான் உறுதியாக கூறுவேன்.”

பம்மல் முதலியார் அவர்கள் இவ்வாறு பேசி முடித்ததும் எம். கே. தியாகராஜ பாகவதர் மாநாட்டைத் திறந்து வைத்தார். அவர் சூத்திரக் கயிற்றை இழுத்ததும் மகேந்திர ஜாலம்போல் மேடையை மறைத்துக் கொண்டிருந்த பூச்சரங்கள் அப்படியே இருபுறமும் உயர்ந்து விலகி மேடையை அலங்கரித்துக் கொண்டு நின்றது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த ரசிகப் பெருமக்கள் பெருத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். மேடையின் நடுவே அமர்ந்திருந்த தலைவர் ஆர்.கே. சண்முகம் “இதுவும் ஒரு நாடகம்போலிருக்கிறதே!” என்றார். திறப்புரை நிகழ்த்திய திரு. தியாகராஜ பாகவதர் தமது பேச்சில் முக்கியமாகக் குறிப்பிட்ட கருத்து இது.

“பெரியோர்களே, தாய்மார்களே!”

நம் தமிழ் நாடகத்தில் எடுத்ததற்கெல்லாம் பாட்டாகவே பாடி விடுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒரளவு குறைய வேண்டியதுதான். என்றாலும், ஒரேயடியாய்ப் பாட்டுக்களைக் குறைத்து விட்டால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. ஏனென்றால் நாடக மேடை யில் பாட்டு அதிகமாக ஏற்பட்டது இன்று நேற்றல்ல. முற் காலத்தில் நம் நாடகம் முழுவதுமே பாட்டாகதான் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வரவர அது குறைந்து தான் வந்து கொண்டிருக்கிறது. ஒரேயடியாகப் பாட்டைத் தள்ளிவிடக் கூடாது. இயலையும், இசையையும் தன்னுள் கொண்டதாகவே இருக்க வேண்டும் நாடகம். கதைக்குத் தகுந்த முறையில் பாடல்கள் அமைக்க வேண்டும் “.

பாகவதர் பேச்சுக்குப் பின் ஈரோடு நகரசபைத் தலைவர் திரு. ஆர். கே. வேங்கடசாமி எல்லோரையும் வரவேற்றார் . அவரது வரவேற்புரையில் ஒரு பகுதி,

“அன்பர்களே, இவ்வளவு காலமும் இல்லாமல் இப்பொழுது ஈரோட்டிலுள்ள சில பெரிய மனிதர்களுக்கு நாடகக் கலை அபிவிருத்தியைப் பற்றி என்ன அக்கரை வந்தது? இதில் உள்ளூர ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோவெனச் சிலர் நினைக்கக் கூடும். எவ்விதச் சூழ்ச்சியுமில்லை, தந்திரமும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுவேன். சென்ற ஏழெட்டு மாத காலமாக டி. கே. எஸ், சகோதரர்களின் நாடகங்களை இந்நகரில் பார்த்தபின் நாடகக் கலையின் மேன்மையும் அது மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கையும் அதனால் ஏற்படும் பயனையும் ஒருவாறு நன்குணர்ந்தோம். அதன் காரணமாக இக் கலையை நல்ல முறையில் போற்றி வளர்ப்பதற்குத் தமிழ் நாட்டிலுள்ள அறிஞர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி யோசிக்கவும், இயலுமானால் உருப்படியான திட்டங்கள் வகுக்கவும் முடிவு செய்தோம். அதற்கிணங்க, கலை வளர்ச்சி எல்லோருக்கும் பொதுவென்ற முறையில் பல்வேறு கொள்கையுடையவர்களும் ஒன்று சேர்ந்து, தொழில் நடத்தும் கம்பெனியாரின் பூரண ஒத்துழைப்பையும் பெற்றதால் இன்று மகாநாடு நடைபெறுகிறதேயன்றி, தனிப் பட்ட சிலருடைய பெருமைக்கோ, புகழுக்கோ அல்லவென்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாடகக் கலை அபிவிருத்தி மகாநாடு முதல் முதலாக இந்நகரில் கூட்டப்பட்டது இந்நகருக்கும் நகரமக்களுடைய கலையுணர்ச்சிக்கும் பெருமை யளிப்பதாக நான் கருதுகிறேன்.”

வரவேற்புரை முடிந்த பிறகு தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கும் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும் ஈரோடு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுக்கப்பட்டது. நாடகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரு மகனார் ஒருவருக்கு நகர சபையின் சார்பில் வரவேற்புப் பத்திரம் அளித்தது இதுவே முதல் தடவையென்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். இந்த வகையில் ஈரோடு நகரசபை மற்ற நகர சபைகளுக்கு வழிகாட்டியாக நின்றதுபோற்றுதற்குரிய ஒன்றாகும். நாடகப் பேராசிரியருக்கு நகர சபை வரவேற்பளிக்க வேண்டு மென்ற எண்ணத்தை உருவாக்க, நாங்கள் அந்த நாளில் பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை அடக்கத் தோடு சொல்லிக் கொள்கிறேன்.

தலைவர் பிரேரணையின் போது தகராறு

நகரசபைத்தலைவர் வரவேற்புப் பத்திரங்களே வாசித்தளித்த பின் மாநாட்டுத்தலைவர் ஆர். கே. சண்முகம் தலைமையுரை நிகழ்த்த ஒளி பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அப்போது பெஞ்சிலிருந்தும் தரையிலிருந்தும் சிலர் எழுந்து நின்று “தலைவரைப் பிரேரேபிக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டார்கள். “தலைவர் பிரேரணை இல்லாமல் ஆர். கே. சண்முகம் பேசக் கூடாது” என்றார்கள். முத்தமிழ் நுகர்வோர் சங்கத்தாரால் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கட் வாங்கிக் குழப்பம் செய்ய வந்த கூட்டம் இது. தலைவரைப் பிரேரேபித்ததும் எழுந்து நின்று கூச்ச லிட்டார்கள். உடனே மேடைமீது நின்ற சின்னண்ணா டி. கே. முத்துசாமி ஒலிபெருக்கி முன்னல் வந்து எழுந்து நின்றவர்களை உட்காரும்படி கையமர்த்தியப்படி,

‘அன்பர்களே, மகாநாட்டின் தலைவர் சர். ஆர். கே.சண்முகம் செட்டியார் என்பதை அழைப்பிதழில் தெளிவாகப் போட்டிருக்கிறோம். விளம்பரச் சுவரொட்டிகளிலும் தலைவர் பெயர் இருக்கிறது. அதன் பிறகு, இங்கே தலைவரை ஒருவர் பிரேரேபிக்கவும், மற்றொருவர் ஆமோதிக்கவும் வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெறும் சடங்குதான். முற்போக்காளர்கள் அதிகமாகப் பங்கு பெறும் இந்த மகாநாட்டில் பழைய மூட நம்பிக்கைச் சடங்கெல்லாம் தேவையில்லையென்று தான் தலைவர் பிரேரேணையை நிறுத்தி விட்டோம். அமைதியாக உட்காரும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர் அவர்கள் பேசுவார்” என்று கூறினார்.

பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் “உட்கார், உட்கார்” என்று, எழுந்து நின்ற கூட்டத்தை உட்காரச் செய்தார்கள். சுமார் பத்துப்பேர் மட்டும் முணுமுணுத்துக் கொண்டு வெளியே சென்றார்கள். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. தலைவர் சொற்பொழிவாற்றினார். அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு தருகிறேன்.

“நண்பர்களே, நகரசபைத் தலைவர் அவர்களே, அங்கத்தினர்களே, நமது நாட்டிலே நாடகக்காரர்களைக் கூத்தாடிகள் என்று கேலியாகப் பேசுகிறார்கள். மேனாடுகளிலே அவர்களைப் பாராட்டுகிறார்கள். நகரசபைகள் நாடகக் கலைக்காக உதவி செய்கின்றன. மேடுைகளில் காணப்படும் பெரிய தியேட்டர்கள் நகர சபைகளுக்குச் சொந்தமானவைகளே. பாரீஸ் பட்டணத்திலுள்ள பெரிய அருமையான நாடகக் கொட்டகை அந்த ஊர் நகர சபையின் சொந்தக் கட்டிடம். அதுபோலவே மேனாடுகளிலே மற்ற இடங்களிலும் நாடகக் கொட்டகைகள், நாட்டிய சாலைகள் எல்லாம் நகரசபைகளுக்குச் சொந்தம். இனி இங்கும் நகரசபைகள் நாடகக் கலைக்கு ஆதரவு தருமென்று நம்புகிறேன்.

நாடகக் கலையென்பது நமது தமிழ்நாட்டிலே பழமையானது. 2000 ஆண்டுகட்கு முன்பும் இருந்தது. ஆனால் இன்று சிலர் நாடகம் என்ற சொல் கூடத் தமிழல்ல, சமகிருதம் என்று கருதுகிறார்கள். நாடகம் என்ற சொல் நடை என்ற தமிழ்ச் சொல்லின் கருத்தைக் கொண்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலே நாடகக்கலை இருக்கிறது.

பழங்காலத்திலே நாடகங்களை மூன்று வகையாகப் பிரித்திருந்தார்கள். ஒன்று பக்தி ரசமான புராணக் கதைகள். இவைகளைக் கோவில்களிலே நடத்திவந்தார்கள். மற்றொன்று வீரர் கதைகள். இவை அரசர்கள் முன்னிலையிலே மாளிகைகளிலே நடிக்கப் பட்டன. மூன்றாவது அறிவு வளர்ச்சிக் கதைகள். இவைகளே மக்கள் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். இப்பொதோ நாடகங்கள் யாவும் புராணக் கதைகளாக உள்ளன.அவைகளைப்பார்க்கும். போது கஷ்டமாகத்தானே இருக்கிறது. புதிய கருத்துள்ள சீர் திருத்த நாடகங்கள் நடத்த வேண்டும்.

“பழங் காலத்திலிருந்து வளர்ந்து வரும் இந் நாடகக் கலையை அபிவிருத்தி அடையச் செய்யவே இன்று இந்த மகாநாடு நடைபெறுகிறது.”[1]

தலைமைப் பேருரை முடிந்ததும் எம். என். எம். பாவலர் அவர்கள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு தூ.தா சக்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் சுவாமிகளுக்கிருந்த முதன்மையை விரிவாக விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனையடுத்துச் சமுதாயச் சீர்திருத்த நாவல் நாடகாசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை அடியேன் திறந்து வைத்து, அந்த மறுமலர்ச்சி நாடகப் பெருந்தகையின் தனிச் சிறப்புக்களையும் நடிப்பினைப் பயிற்றுவிப்பதில் அவருக்கிருந்த ஆற்றலையும் எடுத்து விளக்கினேன்.

இத்துடன் காலை நிகழ்ச்சிகள் பகல் 1 மணிக்கு முடிந்தன. பகல் உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. நாடகக் கலையரசு நவாப் டி. எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, நாடகமும் அதன் பயனும் என்னும் தலைப்பில் பேசினார். அவரது நீண்ட சொற்யொழிவின் சுருக்கம் வருமாறு:

“அறிவிற் சிறந்த தலைவர் அவர்களே, அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

அரிய பெரிய நூல்களைப் படிப்பதற்கு அவகாசம் இல்லாதவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டவே நாடகம் ஏற்பட்டது. இயல்-இசை-நாடகம் என்னும் முத்தமிழுள் இயலும் இசையும் படித்தாலும் கேட்டாலும் மாத்திரமே இன்பம் தரும். நாடகமோ, அந்த இரண்டு இன்பங்களோடு காண்பதற்கும் இன்பம் தரும்.

உயர்ந்த வேடங்கனைத் தரித்து மெய் மறந்து நடிக்கின்றவர்களுடைய உள்ளங்களில், மேற்படி பாத்திரங்களின் உயர்ந்த நற்குணங்கள் படிவது இயற்கை, இந்தக் குணங்கள் நாளடைவில் மிகுவதால் அந்த நடிகர்கள் தெய்வீகத் தன்மையை அடைகின்றனார்.

நம்நாட்டில் நல்வழி புகட்டும் நூல்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவை 1, வேதங்கள் 2, புராணங்கள் 3, நாடகம் முதலிய காவியங்கள்.

இவைகளில் முதலாவதான. வேதம் அரசனைப்போல் கட்டளையிட்டு, நல்ல காரியங்களைச் செய்ய ஏவுகிறது. இரண்டாவதான புராணங்கள், ஆருயிர் நண்பனைப்போல நயமொழிகளால் கதைகளின் மூலம் நல்ல செயல்களைக் செய்யத் தூண்டுகின்றன. நாடகங்களோவெனில் அழகும் கற்பும் அமுதமொழியும் அமைந்த மனேவி, கணவனைத் திருத்துவதுபோல் கெட்ட ஒழுக்கம் உள்ளவரையும் நல்லொழுக்க முள்ளவராக்குகின்றன.

இத்தகைய தெய்வக் கலையை, மாசற்ற கலையை, உலகம் போற்றும் உத்தமர் மகாத்மாவுக்குச் சத்திய வழி காட்டிய கலையை, கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வி புகட்டும் கலையை, தானும் பயனுற்றுப் பிறருக்கும் பயனைக் கொடுக்கும் பண்புள்ள கலையை, தீண்டாமையை ஒழிக்கும் கலையை, ஜாதி பேதம் போக்கும் கலையை, தாய்நாட்டின் பெருமையை உயர்த் தும் தவக்கலையை நன்கு உலகுக்குப் பயன்படுத்த வேண்டுமானல் அரசாங்கத்தாரும் பொதுமக்களும் நடிகர்களும் ஒத்துழைத்து, இவ்வரும் பெரும் நாடகக் கலை தன் பழம்பெரும் சிறப்புகளி லிருந்து என்றும் குன்றாது வளர்ந்தோங்கி வர, எல்லாம் வல்ல அன்னை ஆதிசக்தி அருள்புரிவாளாக!”

நவாப் அவர்கள் பேசியதும் இலக்கியமும் சம்பிரதாயமும் என்னும் தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஆர் மயிலேறு எம். ஏ. அவர்களும், நாடகத்தில் பெண்கள் என்னும் தலைப்பில் பிரபல நடிகை திருமதி பி. எஸ். சிவபாக்கியம் அவர்களும் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து நகைசுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நாடகமும் சினிமாவும் என்ற பொருளை நகைச்சுவை ததும்பப் பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு.

“தலைவர் அவர்களே, பெரியோர்களே, அன்பர்களே எல்லோரும் சொல்கிறர்கள் நாடகக் கலை எங்கேயோ மறைந்து போய் விட்டதென்று. அது இருந்த இடத்தையே கானோம்; முன்பு உச்சாணிக் கொப்பில் இருந்தது. இப்பொழுது பாதாளத்தில் விழுந்து விட்டது என்று இந்தப் பேச்சுக்களெல்லாம் வெறும் பொய். உண்மை கலவாத பொய். நாடகக்கலை எங்கும் போய்விட வில்லை. அது முழுக்க முழுக்க நோய் நொடி ஒன்றுமில்லாமல் உயிரோடு இருக்கிறது. வளர்ந்து கொண்டும் வருகிறது.

“ஆஹா! அந்தக் காலத்தைப்போல் வருமா? முந்தி அப்படி யெல்லாமிருந்தது; இப்படியெல்லாமிருந்தது என்ற வீண் புகழ்ச்சி உளுத்துப்போன பழைய போக்கு. நான் சொல்லுகிறேன்; பண்டைக் காலத்தில் நாடகக்கலை மாட்டு வண்டி வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அது விமான வேகத்தில் இருந்து வருகிறது. மாட்டு வண்டி வேகத்திலிருந்து திடிரென்று விமான வேகம் வந்துவிடவில்லை. படிப்படியாகதான் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

“காளை மாடு பூட்டிய கட்டை வண்டி வேகத்தில் ‘தெருக் கூத்து'களும், சைக்கிள் முதலியவற்றின் வேகத்தில், ஸ்பெஷல் நாடகங்களும் மேட்டார் வேகத்தில் முறைப்படி தொழில் நடத்தும் கம்பெனியாரின் நாடகங்களும் முன்னேறித்தான் வந்திருக்கின்றன. அதிலும் நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் டி.கே.எஸ். சகோதரர்களும் நான் முன் குறித்த விமான வேகத்திற்கே வந்து விட்டார்கள் என்று கூறலாம்.

“நிலைமை இப்படியிருக்கும்போது, கொஞ்சம்கூட அஞ்சாமல் சினிமா வந்து நாடகத்தைக் கொன்றுவிட்டதென்று பழி போடுவது ஞாயமா? நீங்களே சொல்லுங்கள்! இது மிகவும் அபாண்டமான பொய்ப் பழி.

“நாடகமும் சினிமாவும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் தான். இரண்டு பேருக்கும் நல்ல வலுவிருக்கிறது. ஒருவரை யொருவர் கொல்ல முடியாது. நடிப்பு இருவருக்கும் பொதுச் சொத்து. இதை இருவரில் யார்வேண்டுமானலும் வாரியெடுத்துக் கொள்ளலாம். அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம். இது. எடுக்க எடுக்கக் குறையாத சொத்து. இதில் சண்டையென்ன, சச்சரவென்ன?”

“நாடகக் கலை அபிவிருத்தி அடைந்துவிட்டது என்பது உண்மையானால் இந்த மாநாடு எதற்கு? என்று கேள்வி உண்டாகிறதல்லவா? இதெல்லாம் ஒரு விளம்பரந்தானே! என்னென் னவோ மகாநாடுகள் நடக்கின்றன. ஏன் நாங்கள் மட்டும் ஒரு மகாநாடு நடத்தக் கூடாது?”

“நாடகமும் சினிமாவும் ஒன்றுதான். ஒன்று உண்மை யுருவம், மற்றொன்று நிழல். இதில் எதுவும் சாகவில்லை. சாகப் போவதும் இல்லை. இன்றிருக்கும் நிலையிலிருந்து நாடகக் கலை வளர வேண்டுமானால் நடிகர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வாழ்க்கை வசதி வேண்டும், தன் வாழ்க்கை முழுதும் நாடகத் தொழிலில் உழைத்துவிட்டு, கடைசியில் வயிற்றுச் சோற்றுக்கு வாடும்படியான நிலையில் நடிகர்கள் இருப்பார்களானல் நாடகக் கலை அபிவிருத்தி அடைய முடியாது.”

கலைவாணர் இவ்வாறு சிரிக்கச் சிரிக்கப் பேசினார். ஆனால் சிந்தனைக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தப் பேச்சு அமைந்தது. அடுத்து இன்றைய நாடகம் என்னும் தலைப்பில் ஸ்ரீ ராம பால கான சபா வைரம் அருணாசலம் செட்டியார் அவர்கள் சார்பில் திரு ஏ. ஆர். அருணாச்சலம் பேசினார். அவரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் ஒலிப்பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அவருக்குக் கொடுத்திருந்த தலைப்பு கலையின் நிலைமை என்பது. அவையில் முழு அமைதி நிலவியது. அண்ணா பேசத் தொடங்கினார்.

“நாடக அபிமானிகளும், நாடகக் கலையிலே ஈடுபட்டுள்ள தோழர்களும் இசைவாணர்களும் கலாரசிகர்களும் நிரம்பியுள்ள இந்த மகாநாட்டிலே எனக்கும் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நாடகக் கலையின் முன்னேற் றத்திற்காக இந்த மகாநாடு நடைபெறுகிறது. காலையிலே தலைவர் சர் சண்முகம் அவர்கள் சொற்பெருக்காற்றினார். வேறு பல அன்பர்களும் பேசினார். இயலே வளர்க்கவும் இசையை வளர்க்கவும் அமைப்புகள் இருக்கின்றன. நாடகக் கலை வளர்ச் சிக்கான அமைப்பும் முயர்ச்சியும் இல்லை. எனவே எனது தோழர் சிவதானு இதற்கான ஒரு தனி மாநாட்டை முதன்முறையாகக் கூட்டியதுபற்றி நான் அவரைப் பாராட்டுகிறேன்.”

“நாடகக் கலை முன்னேற்றத்திற்குப் பல காரியங்கள் நடை பெற வேண்டியிருக்கின்றன. முதலிலே ஊருக்குத் தியேட்டர் வசதி வேண்டும். இப்போது எல்லாம் சினிமாக் கொட்டகைகள் ஆகிவிட்டன. நாடகத்திற்கெனத் தனித் தியேட்டர்கள் இல்லை. திருச்சி நகரசபைஒன்றில் மட்டும் தனித் தியேட்டர் அமைக்கப் பட்டிருக்கிறது. அதுபோல ஒவ்வொரு நகரசபையும் செய்ய முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும், சர்க்காரும் செல்வவான்களும் நாடகக்கலை அபிவிருத்திக்கு உதவியளிக்க வேண்டும். இவைகளுக் கெல்லாம் பொதுமக்கள் முயலவேண்டும்.

“பொதுவாக நாடகக்காரர் என்றால் முன்பெல்லாம் மதிப்பு கிடையாது. நையாண்டி செய்வார்கள், பொது மக்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. இப்போது நடிகர்களிடம் நன்மதிப்பும் நல்ல தொடர்பும் ஏற்பட்டிருக்கிறது. இத் தொடர்பு நீடிக்கவேண்டும். இதனால் தக்க பயனும் ஏற்பட வேண்டும். என் நண்பர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் அழகுறக் கூறினார். நாடகக்கலை அபிவிருத்தியடைய வேண்டு மென்றால் நாடகக் கலையின் முக்கிய அம்சமாக விளங்கும் நடிகனுக்கு நல்ல சம்பளம் வாழ்க்கை வசதி முதலியன கிடைக்க வேண்டும். இலாபப் பங்கீடும் தரப்படவேண்டும். பங்குதாரர்கள் கொண்ட ஒரு லிமிடெட் கம்பெனி அமைக்கப்படவேண்டும். அதிலே சீர்திருத்த நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் வருவாயை நாடகத் தொழிலாளருக்கு இலாபப் பங்கீடாகத் (Bonus) தரப்படவேண்டும். அப்போதுதான் திருப்தியான மனமுடைய நடிகர்கள் இருப்பார்கள். நடிப்பு நேர்த்தியாக இருக்கும். நாடகக் கலையும் வளரும். வேதனை நிரம்பிய வாழ்க்கையிலேயுள்ள வித்துவான் பாடுகிற காம்போதி கூட முகாரியாகத் தானே இருக்கும்! பத்து வருடங்களுக்கு முன் பிரபல நடிகர்களாக இருந்துவிட்டு இன்று பிழைக்கும் வழியற்றுள்ள மாஜி நடிகர்களைப் பார்க்கிறேன். மீசையைத் தடவியபடி நானுந்தான் ராஜபார்ட்டாக இருந்தேன் என்று கூறிக்கொள்வதைவிட அவர்களுக்கு வேறோர் சுவை இல்லை. இப்படி நடிகர்களின் வாழ்வு நொடித்துப் போகிறதென்றால் எப்படிப் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் நாடகத் தொழிலிலே ஈடுபட முடியும்? ஆகவே நாடகக் கலை அபிவிருத்தியிலே அக்கரை கொண்டவர்கள் முதலிலே முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நடிகர்களின் - நாடகத் தொழிலாளர்களின் நலத்தைத்தான் - அது நடைபெற்றால்தான் நாடகக்கலை முன்னேறும்.

“இன்று நடத்தப்படும் நாடகங்கள் பெரிதும் புராணங்கள். இவைகளைக் காண்பதால் மக்களுக்கு என்ன பயன் உண்டு? மூடப் பழக்க வழக்கங்கள் வளரத்தானே இந்த நாடகங்கள் பயன்படுகின்றன. சமூக சீர்திருத்த நாடகங்களையே நாடகக்காரர்கள் பெரிதும் நடத்த வேண்டும். அதுதான் கலை அபிவிருத்தி. இந்த உணர்ச்சி இன்று எங்கும் பரவியிருக்கிறது. பொதுமக்களும் இனி நாடு சீர்திருத்த நாடகங்களையே காண விரும்புகிறது என்பதை நாடகக்காரர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

அண்ணா மேலும் தொடர்ந்து பேசுகையில், காலையில் தலைவர் கூறிய சில கருத்துகளுக்கு விடையளித்தார். தலைவர் ,ேப ச் சிலே அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லையாதலால் அவற்றுக்களித்த பதில்களையும் குறிப்பிடாமல் விட்டேன். முன் கூறியபடி ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் நூலில் இவ் விரிவுரைகளைக் காணலாம்.

இதன் பிறகு ஸ்ரீ மங்கல பாலகான சபையின் சார்பில் கே. டி. சந்தானம் அவர்கள் நடிகர் வாழ்க்கை என்னும் தலைப்பில் மிக அருமையாகப் பேசினார். நாடகக் கலை பற்றி முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களும், நடிகர்களின் கடமை என்னும் தலைப்பில் கலைஞர் எம். எம். சிதம்பரநாதன் அவர்களும், நாடகக்கலை வளர்ச்சி பற்றி பூவாளுர் அ. பொன்னம்பலனார் அவர்களும், நடிப்புக் கலையில் இன்பம் என்பது பற்றி இலங்கை ஏ. கே. இராமலிங்கம் அவர்களும் சீர்திருத்த நாடகங்கள் என்னும் தலைப் பில் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்களும், ஒழுக்கம் வேண்டும் என்பது பற்றிச் சிதம்பரம் என். தண்டபாணி பிள்ளை அவர்களும் பேசினார்கள்.

கடைசியாகத் தலைவர் தமது முடிவுரையில் கீழ் வருமாறு குறிப்பிட்டார்.

“நான் இந்த மகாநாட்டுக்குக் காலையிலே வந்ததும் சில பேர் என்னிடம் வந்து, இந்த மகாநாட்டிலே ஏதோ கலகம் விளையப் போவதாகவும் மகாநாடு கலைக்கப் பட்டுவிடப் போவ தாகவும் சொன்னார்கள். “யார் இவ்விதம் செய்யப் போகிறார்கள்?” என்று கேட்டேன். அவர்கள் சிலருடைய பெயரைக் குறிப்பிட்டார்கள். உடனே நான், அப்படியெல்லாம் அவர்கள்

நடக்க மாட்டார்கள் என்று கூறினேன். மகாநாடு அமைதியாக நடைபெற்றது. பல அரிய சொற்பொழிவுகள் நடைபெற்றன. இப்போது ராவ் பகதூர் சம்பந்த முதலியார், எம். கே. டி. பாகவதர், எம். என். எம். பாவலர் இவர்கட்கு முறையே நாடகப் பேராசிரியர், இசை நாடக ஒளி, நாடக மணி என்று பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தைச் சர்க்கார் எனக்கு அளித்தால் நான் சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களே நமது நடிகர்களுக்கு அளிப்பேன். மேடுைகளிலே சிறந்த நடிகர்களின் சேவை பாராட்டப் பட்டு அவர்களுக்கு டாக்டர், நைட் போன்ற பட்டங்கள் அளிக்கப் படுகின்றன.

“மாநாட்டில் பேசிய பலரும் கூறியதைப்போல் சீர்திருத்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும். நண்பர் அண்ணாதுரை சக்திரோதயம் என்ற நாடகம் எழுதி நடித்துக் கொண்டுவருகிறார். அதைப்போல ஒன்று போதுமா? நூற்றுக்கணக்காக எழுதி நடிக்க வேண்டும். யாரும் நடிக்க முன் வராவிட்டால் நண்பர் அண்ணா துரை எழுதும் நாடகத்தில் நான் நடிக்கிறேன்.

இனி இம் மகாநாட்டை இவ்வளவு நன்முக நடத்திய நண்பர்களுக்கு என் நன்றியறிதலைக் கூறிக்கொண்டு என் முடிவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.”

தலைவர் முடிவுரைக்குப்பின் மாநாட்டுச் செயலாளர் டி. என். சிவதானு அவர்கள் நன்றி கூற மாநாடு முடிவுபெற்றது. மாநாடு முடிந்த சில நிமிடங்களில் ஒளவையார் நாடகம் தொடங்கிச் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பெருமக்கள் அனைவரும் நாடகத்தை இறுதி வரையில் இருந்து ரசித்தார்கள். நாடகம் முடிந்ததும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் எனக்கு ‘ஒளவை’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குரிய வெள்ளிப் பேழையினை சர். ஆர். கே. சண்முகம் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அப்போது,

“நான் என்வாழ்க்கையில் கண்ட நாடகங்கள் யாவற்றிலும் ஒளவை'தலைச்சிறந்த நாடகம். இந்த நாடகத்தை நான் காணத் தவறியிருந்தால் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் . டி. கே. எஸ். சகோதரர்கள் ஒளவை நாடகத்தின் மூலம் தமிழ் நாடக உலகில் முதலிடம் பெற்று விட்டார்கள் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.

கலைவாணர் என். ஏஸ். கிருஷ்ணன் எதிரே அமர்ந்திருந்தார். அவர்மிகுந்த உணர்ச்சியோடு தாமே மேடைக்கு வந்து,

“இரண்டொரு வார்த்தைகளாவது இதைப் பற்றிப் பேசாமலிருக்க என்னல் முடியவில்லை. சர்.சண்முகம், டி.கே. ஷண்முகத் திற்கு ஒளவை’ என்றபட்டம் அளித்தது முற்றிலும் பொருந்தும். நான் சமீபத்தில் ஒரு மலையாள நாடகத்திற்குத் தலைமை வகித்த போது, மலையாள நடிகர்களைப்போல் தமிழ் நடிகருலகில் எவரும் இல்லையென்று கூறினேன்.அதை இன்று ‘வாபஸ்’ பெற்றுக்கொள்கிறேன். எனது சகோதரன் ஒளவை சண்முகம் ஒருவராலேயே தமிழ் நாடகக்கலை வளர்ந்தோங்குமென்று உறுதியாய்க் கூறுகிறேன்.

என்று உணர்ச்சி பொங்கக் கூறி என்னைத் தழுவிக் கொண் டார். நான் எல்லோருக்கும் நன்றி கூறும்போது, குழப்பம் கலகம் எதுவுமில்லாமல் மாநாடு அமைதியாக நடந்தது குறித்து இறைவனுக்கு நன்றி கூறினேன்.

முதல் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்தியமைக்காகச் செயலாளர்கள் இருவரையும் எல்லோரும் பாராட்டினார்கள். மாநாடு முடிந்தபின் அடுத்தவாரம் வெளி வந்த குடியரசு இதழில் நாடகக் கலை மாநாடு பெருந்தோல்வி அடைந்ததாகச் செய்தி வெளிவந்தது. அதே வாரத்தில் காஞ்சி புரத்திலிருந்து வெளிவந்த அறிஞர் அண்ணா அவர்களின் திராவிட நாடு இதழில் நாடகக் கலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகச் செய்தி வந்திருந்தது. இரு பத்திரிக்கைகளையும் படித்து நாங்கள் சிரித்தோம்.

  1. தலைவர் சண்முகம் அவர்களி தலைமைப் பேருரை முழுவதும் ‘சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம்’ வெளியிட்டுள்ள ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் தனி நூலில் உள்ளது.