எனது நாடக வாழ்க்கை/மூன்று இலக்கிய நாடகங்கள்

விக்கிமூலம் இலிருந்து
மூன்று இலக்கிய நாடகங்கள்

ஈரோடு ரசிகப்பெருமக்கள் அளித்தபேராதரவுஎங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அந்த உற்சாகத்தில் மூன்று இலக்கிய நாடகங்கள் தயாராயின.மூன்றையும் வரலாற்று நாடகங்களாகவே குறிப்பிடலாம். ஒன்று மராத்தி நாடகத்தின் தழுவல், மற்றொன்று தமிழ்க்கவியரசரின் வாழ்க்கைச்சித்திரம். மூன்றாவது வட மொழிக் கவிஞரின் வரலாறு. இம் மூன்று நாடகங்களில் இருநாடகங்கள் நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னும், ஒரு நாடகம் மாநாட்டுக்கு முன்னும் நடைபெற்றன. மூன்று நாடகங்களும் நாடகக் குழுவின் தரத்தினை உயர்த்தியவென்றே சொல்ல வேண்டும்.

வீர சிவாஜி

வீர சிவாஜி நாடகம் 1944 ஜனவரி 1 ஆம் தேதி அரங்கேறியது. இந்நாடகம் பாலக்காட்டில் இருந்தபோதே எங்களுக்குக் கிடைத் தது. தஞ்சை டி. வி. இரத்தினசாமி அவர்களால் எழுதப் பெற்ற நாடகம். நாடக அமைப்பு மிக நன்றாயிருந்தது. உரையாடல்கள் நல்ல தமிழில் இலக்கிய நயத்துடன் எழுதப் பெற்றிருந்தன. நாடகத்தின் இடையே வரும் காதல் காட்சிகளைத் திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள சில குறள்பாக்களே அடிப்படையாக வைத்துச் சிறப்பாக எழுதியிருந்தார் ஆசிரியர். சிவாஜியின் நேர் மையையும் நெஞ்சுறுதியையும் விளக்கிக் காட்டும் நாடகம் இது. இந்நாடக ஆசிரியர் இதனை மராத்தி நாடகத்தின தழுவல் என்று முன்பே கூறியிருக்கலாம். அதனால் அவருடைய திறமை உறுதியாக மேலும் உயர்ந்திருக்கும். அதற்கு மாறாக, ஆசிரியர் ரத்தின சாமி இந்நாடகம் என் சொந்தக் கற்பனையென்று தேவையற்ற ஒரு பொய்யைச் சொல்லி விட்டார். கெட்டிக்காரன் புளுகுக்கும் எட்டு நாட்கள்தானே கணக்கு வைத்திருக்கிறார்கள்!

தஞ்சையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சிவாஜி நாடகம் மராத்தியில் வெளிவந்த சந்திர கிரகணம் என்ற நாடகத்தின் தழுவல் என்றும், டி. வி. இரத்தினசாமி அதைத் தன்னுடைய நாடகம் என்று சொல்லியிருப்பதாகவும் நண்பர் ஒருவர் எழுதி யிருந்தார், அத்தோடு மராத்தி மொழியிலுள்ள, சந்திர கிரகண்” நாடக அச்சுப் பிரதியையும் அனுப்பியிருந்தார். ஆனால் இந்தக் கடிதம் வந்தபோது ரத்தினசாமி தஞ்சையில் இருந்தார். பாலக்காட்டிலேயே மேற்படி நாடக உரிமையை எங்களுக்குக்கொடுத்து விட்டார். நாடகம் தயாரிக்கும் போது வருவதாகச் சொல்லிப் போனார். உண்மை தெரிந்தபின் நாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினோம். அதற்குப் பதிலே இல்லை. அதற்குள் சென்னை பிரபல கண் டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது, அதில் வீர சிவாஜி நாடகம் தனக்குச் சொந்தமானதென்றும் அதனுடைய முழு உரிமையையும் பல ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி நாடக ஆசிரியரிடமிருந்து தான் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, நாடகக் கதை மராத்தி ஆசிரியருடையது. அதைத் தமிழில் எழுதியவர் தஞ்சை டி. வி. இரத்தினசாமி, தமிழ் நாடகத்தின் உரிமை யாளர் டாக்டர் டி. எஸ். துரைசாமி, வேடிக்கையாக இருக் கிறதல்லவா? கடைசியாக நாங்கள் டாக்டர். துரைசாமி அவர்களிடம் அனுமதி பெற்று அவருக்கு ‘ராயல்டி’ கொடுத்துதான் நாடகத்தை நடித்தோம். “டாக்டர் துரைசாமி உரிமைபெற்றது என்று கூடப் போடவில்லை. “நாடக ஆசிரியர் - டி. எஸ். துரைசாமி” என்றே விளம்பரத்தில் போட்டோம். இத்தனை குழப்பங் களுக்கிடையே புதிய நாடகம் அரங்கேறியது.

கதாநாயகனக இராஜேந்திரன்

நாடகத்தின் பெயர் வீர சிவாஜி என்றிருந்தாலும் உண்மை யில் நாடக நாயகன் ஜெயவந்த் என்னும் தளபதி தான். இந்தப்பாத்திரம் இராஜேந்திரனுக்குக் கொடுக்கப் பட்டது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம் வீர சிவாஜி. ஜெயவந்த் பாத்திரத்தை அருமையாக நடித்தார். தம்பி பகவதி சிவாஜியாக நடித்தார். அவரது கம்பீரமான தோற்றம் சிவாஜிக்குப் பொருத்தமாக இருந்தது. குரல், நடை, உடையாவும் பகவதியை சிவாஜி யாகவே காட்டின. சிவாஜியை எதிர்க்கும் வீரன் ஜெகதேவாக நான் நடித்தேன். நாடகம் நல்ல வசூலுடன் சிறப்பாக நடை பெற்றது. பிரண்டு ராமசாமியும் டி. என். சிவதாணுவும் ஹிக்குமத் துக்குமத் என்னும் இரு வீரர்கள் நடித்தனார். இவ் விருவருடைய நகைசுவைக் காட்சிகள் மேலும் மெருகூட்டி நாடக வெற்றிக்குத் துணைபுரிந்தன.

காளமேகம்

கவியரசு காளமேகத்தின் பாடல்களைப் படித்த நாளிலிருந்து அப்புலவர் பெருமானுடைய வாழ்க்கையை நாடகமாக நடத்த ஆவல் கொண்டிருந்தோம். சின்னண்ணா ஏற்கனவே குமாஸ்தாவின் பெண், ராஜாபர்த்ருஹரி, வித்யாசாகரர் ஆகிய மூன்று நாடகங்களை எழுதிஅவை வெற்றியோடு நடந்து விட்டதல்லவா? அந்த உற்சாகத்தில் இப்போது காளமேகத்தையும் அவரே எழு தினார். அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தார். தனிபாடல் திரட்டிலுள்ள கவி காளமேகத்தின் நகைசுவை மிகுந்த பாடல்களுக்குச் சிறப்பிடம் கொடுத்து நாடகத்தை உருவாக்கினார். நாடகக்கதை பெரும்பாலும் விநோத ரச மஞ்சரி யிலுள்ள காளமேகப் புலவரின் கதையைத் தழுவியே அமைக்கப் பெற்றது.

ஆயர் குலப் பெண்ணாெருத்தி காளமேகம் களைத்து வரும் போது குடிப்பதற்கு மோர் கொடுக்கிறாள். தண்ணிர் மிகுதியாகக் கலந்த மோர். மேரைக் குடித்துவிட்டுப் புலவர் பாடுகிறார். வானத்திலிருக்கும்போது இந்த மோருக்குக் ‘கார்’ என்று பெயர். மழையாகத் தரையில் விழுந்த பின் இதற்கு ‘நீர்’ என்று பெயர். இவரைப்போன்ற ஆய்ச்சியர் கையில் வந்தபிறகு ‘மோர்’ என்று பெயர் பெற்று விடுகிறது. மோர் தண்ணிராக உள்ளது என்பதைக் கவினார்,

காரென்று போர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய்நெடுந்தரையில் வந்ததன்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததன்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!"

என்று நகைக்சுவையாகப்பாடி வியப்படைவதுபோல் முடிக்கிறார். இச்சுவை நிறைந்த கவிக்காக ஒரு காட்சியை உருவாக்கி னோம். கவியாக மட்டும் இதனைப் படிக்கும் போது ஏற்படாத ஒரு நிறையுணர்வு காட்சி வடிவாகப் பார்க்கும்போது ஏற்படுகின்றதல்லவா? இப்படியே காளமேகப் புலவரின் நகைச்சுவை பாடல்கள் பலவற்றைக் காட்சிப் படுத்தியிருந்தார் சின்னண்ணா. நாடகத்தில் திருவரங்கம் கோயில், மடப்பள்ளி, திருவானைக்கா ஆலயம், முதலிய காட்சிகள் வருகின்றன. இவற்றையெல்லாம் தயாரித்திருந்தோம்.

எமகண்டம்!

இறுதியில் காளமேகம் எமகண்டம் பாடும் காட்சியினைப் பிரமாதமாக அமைத்திருந்தோம். கவி காளமேகம் எமகண்டம் பாடுவதற்குச் சிரமப்பட்டாரோ என்னமோ, எனக்குத் தெரியாது. காளமேகமாக நடித்த நான் எமகண்டம் பாடுவதற்கு உண்மையாகவே சிரமப்பட்டேன். மேலே நான்கு சங்கிலிகளில் கட்டப் பெற்ற பலகையின் மீதிருந்து பாடவேண்டும்.நான் உட்கார்ந்திருக்கும் பீடமோ சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழே பெரிய அக்னிக் குண்டம். அதில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதுபோலத் தந்திரக் காட்சி அமைக்கப் பெற்றிருந்தது. இடையிடையே சாம்பிராணி புகை போட்டு மேலேயிருக்கும் என்னத் திணற அடித்துவிட்டார்கள் காட்சியமைப்பாளர்கள். சுற்றிலும் திருமலைராய மன்னனின் சமஸ்தானப் புலவர்கள் உட்கார்ந்தபடியே பல கேள்விகளைக் கேட்கின்றனார். அவர்கள் கேள்விகனாக் கெல்லாம் உடனுக்குடன் காளமேகம் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே பாடவேண்டும் நான் சிரிக்கத்தான் முயன்றேன். ஆனால் வியர்த்து விறுவிறுத்துப்போன அந்நிலையில் சிரிப்புக்களை முகத்தில் தோன்றியதா? இல்லையா? என்று அன்று நாடகம் பார்த்த ரசிகர்கள் தாம் சொல்லவேண்டும்! ஆம் உண்மை! தாய் மொழியாகிய தமிழின் மீது நான் கொண்டிருந்த எல்லையற்ற பற்றின் காரணமாகத்தான் இந்த எமகண்டத்தைத் தாங்கிக் கொண்டேன். பாடிய பாடல்களின் பொருளிலே உள்ளம் திளைத்திருந்ததால்தான் அந்தச் சிரமம் எனக்குத் தெரியவில்லை. காளமேகம் நாடகம் 17-2-1944 இல் தொடங்கி 13 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகத்தை ஈரோடு நகரமக்கள் பிர மாதமாக ரசித்தார்கள்.

மண்மாரிப் பொழிந்தது

நாடகத்தின் இறுதிக் காட்சியில் கவி காளமேகம் மனம் நொந்து அறம் பாடுகிறார். மண்மாரி பொழிகிறது. அத்தோடு நாடகம் முடிகிறது. இக்காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என் பதற்காக ஏதேதோ செய்து பார்த்தோம். வழக்கம்போல மின்னல் இடி, மழை, அதற்கேற்ற ஒசை இவற்றையெல்லாம் காண்பித் தோம்; ஆனால் எங்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. பத்து நாட்கள் நாடகங்கள் நடந்தபின் ஒரு புதிய யோசனை தோன்றி யது. மேலே பரண்மீது பல இடங்களில் இருந்து மரத்துரள்களை அப்படியே தூவிக் கொண்டிருந்தால் மண்மாரிப் பெய்வது போல் இருக்குமெனத் தோன்றியது. அப்படியே காலையில் ஒத்திகை பார்த்தோம். பிரமாதமாக இருந்தது. இரவு நாடகத்திலும் அப்படியே செய்யத் திட்டமிட்டோம். பெரியண்ணாவுக்கு எங்கள் திட்டம் தெரியாது.

இரவு நாடகத்தில் எமகண்டம் பாடிவிட்டுக் கீழிறங்கினேன். கோபத்தோடு அறம் பாடினேன்.

கோளர் இருக்கும் ஊர்: கோள்கரவு கற்ற ஊர்:
காளைகளாய் நின்று கதறும் ஊர் காளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கருத்து
மண்மாரிப் பெய்கஇந்த வான்

கேதார கௌளை ராகத்தின் நான் வெண்பாவை ஆவேசத்தோடு பாடி முடித்ததும் திட்டப்படி ‘சோ’ என்று மழை ஒசையும் மின்னல் மின்னி இடியும் முழங்கின. மேலிருந்து மரத்துாள் மண் மாரியாகப் பொழிந்தது. சபையோரெல்லாம் ஆரவாரத்தோடு பிரமாதமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாடகம் முடிந்ததும் மேலிருந்து முன்மாரியாகப் பெய்த மரத்துாள் மாரியைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதுதான் பெரும்பாடாக இருத்தது.

“நேற்று மண்மாரி பொழியும் காட்சி ரொம்பப் பிரமாதம்!” என்று யாரோ பெரியண்ணாவிடம் சொன்னார்கள் போலிருக்கிறது. அந்தக் காட்சியைப் பார்க்க அவரும் ஆர்வத்தோடு வந்திருந்தார். காட்சி நடைபெற்றது. எங்கள் துரதிர்ஷ்டம் அன்று, காற்று கொஞ்சம் அதிகமாய் இருந்தது. மேலிருந்து மரத் துரள்களைத் தூவிய போது அது மேடையிலிருந்து சபைக்குப் பறந்து சென்றது. முன்னலிருந்த பக்க மேளக்காரர்கள் திண்டாடினார்கள். ஆர்மோனியம், மிருதங்கம், கிளாரிநெட், பிடில் ஆகிய இசைக் கருவிகளெல்லாம் மரத்துாள் புகுந்துகொண்டு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. நாடகம் முடிந்து சபையோர் வெளியே போகும்போது “மேடையில் பெய்ய வேண்டிய மண் மாரி நம்மீது பெய்து விட்டதே” என்று சபித்துக் கொண்டே சென்றார்கள். மண்மாரி மீது பெரியண்ணாவுக்கு ஒரே கோபம். “என்னடா இது மண்மாரி மீது நாடகம்? மேடை சபை எல்லாம் அலங்கோலப்படுத்தி விட்டீர்களே! இந்த நாடகம் இனி நமக்குத் தேவையில்லை. நீ எமகண்டம் பாடுவதைப் பார்க்கும் போது எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேண்டாம். இந்த அறம் பாடும் நாடகமே நமக்கு வேண்டாம். நாளையோடு நிறுத்தி விடுங்கள். இந்த மரத்துாள் மாரியும் நாளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இதற்கு மேல் அப்பீல் ஏது?

இதற்கேற்றாற்போல் காளமேகம் கடைசி நாளன்று 29.2.1944 ஆம் தேதி இரவு 10 மணிக்கு எங்கள் சிற்றப்பா திரு. டி. எஸ். செல்லம்பிள்ளை அவர்கள் காலமானதாகத் தந்தி வந்தது. எல்லாம் சேர்ந்து நன்றாக உருவாகியிருந்த காளமேளம் நாடகத்தைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பின்றி நிறுத்தும் படியாக நேர்ந்தது.

பில்ஹனன்

திருச்சி வானெலி நிலையம் 29.8-1943ல் பில்ஹணன் நாடகத்தை ஒலிபரப்பியது. நாடகத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பங்கு கொண்டார். எனவே அதனை ஆர்வத்தோடு கேட்டோம். நாடக உரையாடல்கள் நன்றாக இருந்தன. அதன் ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி என்பதை அறிந்தோம். அவரோடு தொடர்பு கொண்டோம், வானெலி நாடகத்தை மேடை நாடகமாக்கித் தருமாறு கேட்டோம். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்தார். நாடகத்தைப் படித்தோம். எங்களுக்கு நிரம்பவும் பிடித்தது. நகைச்சுவைக் காட்சிகள் சிலவற்றை எழுதிச் சேர்த்தார் சின்னண்ணா. மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களை எழுதினார். ஏற்கனவே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பில்ஹணியத்தைப் படித்து அதன் சுவையை அனுபவித்தவன் நான். நாடகத்தின் பிற்பகுதி அதனைத் தழுவியிருக்க வேண்டுமெனக் கூறினேன். ஏ. எஸ். ஏ. சாமி ஏற்றுக்கொண்டார். அதன்படியே எழுதித் தந்தார். அவருடைய உரையாடல்கள் சின்னஞ்சிறு வாக்கியங்களாக புதிய நடையில் அமைந்திருந்தன. ஏ. எஸ். ஏ. சாமி திரைப்படத் துறையில் சிறந்த வசனகர்த்தாவாகப் புகழ் பெறுவார் என்று அப்போதே கூறினேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பில்ஹணன் நடைபெறவிருப்பது பற்றி எழுதினேன். “தங்கள் பில்ஹணியத்திலுள்ள புரட்சிக்கவியின் அடிப் படையில்தான் நாடகத்தின் பிற்பகுதி அமைந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தேன், அதற்கு பாவேந்தரிடமிருந்து பதிலில்லே. ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மூன்றாவது முறையாக ஒரு கடிதம் எழுதினேன்.

“தங்கள் புரட்சிக் கவியிலுள்ள சில கருத்துக்களை ‘பில்ஹணன்’ நாடகத்தில் கையாளப்போகிறோம். அதற்குத் தங்களின் அன்பான அனுமதி தேவை. இந்த மூன்றாவது கடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதில் கிடைக்காவிட்டால் தாங்கள் அனுமதி யளித்ததாகவே கருதப்படும் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. சரி இனி நேரில் கண்டு சொல்லிக்கொள்ளலாம் என்ற துணிவோடு நாடகத்தை நடத்தினோம். 1944 மார்ச்சு 13ஆம் தேதி பில்ஹனன் அரங்கேறியது.

நிலவுக் காட்சி

பில்ஹணனுக்கென்று சில காட்சிகளைத் தயாரித்தோம். பில்ஹணனின் ஆசிரமம், யாமினியின் பூஜை அறை, சூரிய பகவானின் சிலை, கலைபயில் மண்டபம், நிலவுக்காட்சி, சிறைச் சாலை. நாடகத்திற்குப் புதிய ஆடையணிகளும் தயாராயின, ஒரு சிறந்த இலக்கிய நாடகத்தை எந்தெந்த வகையில் அழகு படுத்த முடியுமோ அந்த வகையிலெல்லாம் பில்ஹணனை அழகு செய்தோம். இந்நாடகத்தில் பில்ஹணனாக நான் நடித்தேன். கதாநாயகி யாமினியாக திரெளபதி நடித்தாள். பில்ஹனனில் அவளுடைய அருமையான நடிப்பினை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன்; மறக்க முடியவில்லை! இன்னொருவர் அப்படி நடிக்க முடியுமா என்றே எண்ணத் தோன்றுகிறது. திரெளபதியின் இசைத் திறனும் அபாரமான நடிப்பாற்றலும் பில்ஹணன் நாடகத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தின என்பதில் ஐயமில்லே.

பில்ஹணனைப் பிறவிக் குருடனாக எண்ணியிருக்கிறாள் யாமினி. பாடம் நடந்து கொண்டிருக்கிறது. நேரம் போனதே இருவருக்கும் தெரியவில்லை. அன்று பெளர்ணமி; முழு நிலவு தோன்றுகிறது. கவிஞனின் உள்ளம் துள்ளுகிறது. கவிதை ஊற் றெடுக்கப் பாடுகிறான் பில்ஹணன். இந்தக் கட்டத்தில் புரட்சிக் கவிஞரின் பாடலை அப்படியே சேர்த்துக் கொண்டேன்.

தேன் சொட்டும் கவிதை

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ?
காலைவந்த செம்பளிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

பாவேந்தரின் தேன் சொட்டும் உவமை நயம் செறிந்த இந்தக் கவிதையினை பியாகு ராகத்தில் பாடிவிட்டு, மதுரகவி பாஸ்கர தாசரின் “அமுத பூரணக் கலையின் மதி” என்னும் பாடலை அத்தோடு இணைத்துப் பாடி உச்சஸ் தாயையில் நிறுத்துவதும், முழு நிலவு தோன்றுவதும், இளவரசி யாமினி பிறவிக் குருடனை கவிஞன் நிலவை எப்படிப் பார்த்தான் என்று வியப்புணர்ச்சியை

வெளிப்படுத்தி நடிப்பதும் சபையோரை மெய்சிலிர்க்க வைக்கும். திரையைக் கிழித்து யாமினி கவிஞனைப் பார்க்கிறாள். அவனும் அவளைப் பார்க்கிறான். கவிஞன் கண்ணிழந்தவன் அல்லன் என்பதை உணர்கிறாள் யாமினி. அவள் நோய் கொண்டவள் அல்லள் என்பதைக் கவிஞனும் அறிகிறான் . இருவர் கண்களும் சந்திக்கின்றன. கவிஞன் மீண்டும் பாடுகிறான்.

மின்னற் குலத்தில் விளைந்ததோ! வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ!

கன்னல் தமிழ்க்கவி வானரின் உளக்
கற்பனையே உருப் பெற்றதோ!
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ! ஒரு

பூங்கொடியோ மலர்க்கூட்டமோ!
என்னவியப்பிது! வானிலே-இருந்

திட்டத்தோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ-புவிக்கு
ஏதிது போலொரு தண்ணாெளி?

அடடா! என்ன அருமையான கவிதை! இதைப் போன்ற இலக்கிய நயஞ்செறிந்த நாடகங்களை இனிப் பார்க்கப் போகிறோமா என்றே ஏக்கமுண்டாகிறது.

பில்ஹனனில் யாமினியின் தந்தை மன்னன் மதனனாக நடித்தார் தம்பி பகவதி. மன்னன், யாமினி, பில்ஹணன் மூவரும் வாதிடும் கட்டம் சபையோரிடையே சொல்லுக்குச் சொல் கை தட்டலைப் பெற்றது. அவ்வளவு உணர்ச்சிகரமான உரையாடல்களை எழுதியிருந்தார் ஏ. எஸ். ஏ. சாமி.

பில்ஹனனில் நகைச்சுவைப் பகுதி நாங்கள் எதிர்பார்த்த தைவிடச் சிறப்பாக அமைந்தது. மெய்க்கவியாக டி. என். சிவதானு தோன்றிச் சபையோரை வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார்.

யாமினியின் கனவுக்காட்சிகள் திரைப்படக்காட்சிபோன்று மிக உயர்ந்த முறையில் அமைக்கப் பெற்றிருந்தன. துஷ்யந்தன் சகுந்தலை சந்திப்பு; ராமர் சீதை கன்னிமாடச் சந்திப்பு; அம்பிகாபதி அமராவதி காதல்; குலோத்துங்கன் கோபாவேசத்தோடு வந்து வாளை வீசுதல் ஆகிய காட்சிகளை யாமினியின் படுக்கை அறையில் மெளன நாடகங்களாக மெல்லிய திரையுள்ளே நடித்துக் காட்டச் செய்தோம். ஒவ்வொரு காட்சி மாறும்போதும் சபையோர் ஆரவாரத்தோடு கரகோஷம் செய்தனார்!

திரைப்படத் துறை வரவேற்றது

ஏ. எஸ். ஏ. சாமியின் உரையாடல்கள் நன்றாக இருப்பதாகவும், உடனே வந்து நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் சகோதரர் சோமுவுக்குக் கடிதம் எழுதினேன். அவரும் தந்தி கொடுத்துவிட்டு மறுநாளே வந்தார். நாடகத்தைப் பார்த்தார். சாமியைச் சந்தித்தார். ஆறு படங்களுக்கு வசனம் எழுத உடனே ஒப்பந்தம் செய்தார். பில்ஹணன் 15 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் சென்னைக்குச் செல்லச் சித்தமானார் ஏ. எஸ். ஏ. சாமி. சாமியை அன்போடு ஆதரித்துத் திரையுலகில் முன்னுக்குக் கொண்டு வரவேண்டு மென்று கலைவாணருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பினேன். சென்னை சென்ற ஒரு வாரத்திற்குப்பின் சாமியிடமிருந்து கடிதம் வந்தது. கலைவாணர் தனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருவதாக எழுதியிருந்தார். திரைப் படத் துறையில் பணிபுரிய பல ஆண்டுகளாக முயன்று, பின் அம் முயற்சியையே கைவிட்டவர் ஏ. எஸ். ஏ. சாமி. இப்போது பில்ஹணன் நாடகத்தின் மூலம் அவரை இருகரம் கூப்பி வர வேற்றுக் கொண்டது திரைப்படத் துறை. ஈரோட்டை விட்டு சகோதரர் சாமி சென்னைக்குப் புறப்பட்டபோது அவரை மனதார வாழ்த்தி வழியனுப்பினேன்.

சம்பூர்ண இராமாயணமும் சாத்வீக மறியலும்

நாடகக் கலை மாநாடுவரை எங்களிடம் நட்பும் பாசமும் வைத்திருந்தார் பெரியார் ஈ. வே. ரா. அவர்கள். மாநாடு குழப்பம் எதுவுமின்றி நல்ல முறையில் நடந்தபின், அந்தப் பாசமும் பரிவும் சிறிது குறைவதுபோல் தோன்றியது. நான் அச்சகத்திற்கு அடிக்கடி செல்வேன். பெரியார் முன்போல் கலகலப்பாகப் பேசுவது இல்லை. எங்கள் மேல் ஏதோ சிறிது கோபமிருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனாலும் அதனைப் புலப்படுத்திக் கொள்ளாமல் வழக்கம் போல் அன்பாகவே பழகி வந்தேன்.

ஏறத்தாழ 11 மாதங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடை பெற்றன. நாடக வளர்ச்சிக்குரிய வகையில் நாடகக் கலை அபிவிருத்தி மாநாடும் நடந்தது. சிவாஜி, காளமேகம், பில்ஹணன் ஆகிய மூன்று இலக்கியச் சிறப்பு வாய்ந்த புதிய நாடகங்கள் அரங்கேறின. அடுத்தபடியாகத் திருப்பூருக்குப் போகத் திட்டமிட்டோம். அதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. எனவே காரைக்குடி ஷண்முக விலாஸ் தியேட்டர் பேசி முடிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் 1944 ஏப்ரல் 1ஆம் தேதி சம்பூர்ண இராமாயணம் பட்டா பிஷேக நாடகமாக வைக்கப்பட்டது.

நாடகத்திற்கு முந்திய நாள் அதிர்ச்சி தரத்தக்க ஒரு செய்தி பரவலாகக் காதில் விழுந்தது. நாளை நடைபெறவிருக்கும் இராமாயணத்தை யாரோ மறியல் செய்யப்போகிறார்கள் என்று. நான் நம்பவில்லை. நன்கு விசாரித்தேன். செய்தி உண்மைதான் என்று தெரிந்தது. நாடக அரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டு, “பகுத்தறிவுக்கு முரணான இந்தப் புராண இதிகாச நாடகங்களைப் பார்க்காதீர்கள்” என்று உள்ளே நுழைவோரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக மறியல் நடத்தும் பெரியார் அவர்களின் தொண்டர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். காலமெல்லாம் நாங்கள் நடத்திய இராமாயணம், பாரதம், சிவ வீலா, கந்தலீலா, கிருஷ்ணலீலா, மயில்இராவணன் எல்லா நாடகங்களையும் பார்த்துவிட்டு, எங்களுக்குப் பாராட்டுகளும் நடத்திப் பெருமைப் படுத்திய பெரியார் அவர்கள் ஏணிப்படிச் செய்கிறார் என்பது புரியாமல் தவித்தோம்.

பெரியண்ணா இச்செய்தியை அறிந்ததும் நாடகத்தன்று காலை போலீஸ் பெரிய அதிகாரியைச் சந்தித்தார். பெரியார்.அவர்களின் தொண்டர்கள் மறியல் செய்வதைத் தாம் தடை செய்ய வில்லையென்றும், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படாதவகையில் அமைதியாக மறியல் நடைபெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். போலீஸ் அதிகாரி தாம் வேண்டிய நடவடிக்கையெடுத்துக் கொண்டு அமைதி காப்பதாக வாக்களித்தார்.

எல்லோம் வருந்தினர்

நான் பெரியார் அவர்களைச்சந்திக்க முயன்றேன். அவர் அச்சகத்திலும் இல்லை; வீட்டிலும் இல்லை. எங்கு போய்ச் சந்திப்பது? பெரியாரின் தமையனார் ஈ. வே. கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களைச் சந்தித்து விபரங்களைச் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பெரியார் அவர்களின் கடவுள் பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடுடைய நண்பர்கள் ஈரோட்டில் ஏராளமாக இருந்தனார். அவர்களெல்லாம் செய்தியைக் கேட்டு வருந்தினார்கள். இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற கிளர்ச்சி சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த காலம் அது. அந்தக் கொள்கையிலே நாங்கள் முற்றிலும் மாறுபட்டு நின்றோம்.

சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே பெரியார் அவர்களோடு எங்களுக்கு நெருங்கிய உடன்பாடு இருந்தது. அவரது பெருமைக்குரிய தொண்டினை நாங்கள் சிறிதும் குறைத்து மதிப்பிடவில்லை. பெரியார் அவர்கள் என்றும் எங்கள் மதிப்புக்கு உரியவர்தாம். ஆனாலும் எங்கள் அடிப்படையான சில கொள்கைகளை இதற்காக இழக்க முடியாதல்லவா?

மாலை 6 மணி ஆயிற்று. அறிஞர் அண்ணா ஈரோட்டில் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவரைச் சந்திக்க இயல வில்லை. நாடக அரங்கின் முன் போலீசாரின் நடமாட்டம் அதிகரித்தது. ஆங்காங்கு சிலர் கூட்டங் கூட்டமாக நின்றார்கள். ஏதோ நடைப்பெறப் போவது போன்ற சூழ்நிலை காணப்படது. மணி 8 அடித்தது. டிக்கட் கொடுக்கும் அறை திறக்கப்பட்டது. மக்கள் ஆண்களும் பெண்களுமாக சாரி சாரியாக வந்து டிக்கெட் வாங்கினார்கள். வாயில் திறக்கப்பட்டது. பெரியண்ணாவும், கொட்டகைச் சொந்தக்காரர் முதலாளி சாய்புவும் சாய்மான நாற்காலிகளில் நுழை வாயிலருகே அமர்ந்திருந்தார்கள்.

சிவதானு பெற்ற பட்டம்

சரியாக 9.30க்கு நாடகம் தொடங்கப் பெற்றது. உள்ளிலும் வெளியிலுமாக மக்கள் குழுமியிருந்தனார். மரியல் எதுவும் நடை பெறவில்லை. எவ்விதக் குழப்பமும் இல்லை. நாடகம் அமைதியாக நடந்தது. அதற்கு முன் நடந்த எல்லா இராமாயண நாடகங்களையும் விட அன்று மிகச் சிறப்பாக் நடந்தது. தமிழ் நாடகக்கலை அபிவிருத்தி மாநாட்டினைப் பொறுப்பேற்று முன்னின்று நடத்திய எங்கள் நகைச்சுவை நடிகர் சிவதானுவை நாடக மாநாட்டின் வரவேற்புக் குழுவினரும், நகரப் பொதுமக்களும் பாராட்ட விரும்பினார். அதற்கு முன் கூட்டியே எங்கள் அனுமதியையும் பெற்றனார். ஈரோடு நகரப் பொது மக்கள் சார்பில் நகரசபைத் தலைவர்.திரு ஆர். கே. வேங்கடசாமிநாயக்கர் அவர்கள்.சிவதாணு வின் நாடகக்கலை ஆர்வத்தினையும் நகைச்சுவைத் திறனையும் பாராட்டி நகைச்சுவைச் செல்வன் என்ற சிறப்புப் பட்டம் பொறிக்கப் பெற்ற பொற்பதக்கத்தை வழங்கினார்.

அண்ணா தலையீட்டால் அமைதி நிலவியது

மறுநாள் விடிந்ததும் அறிஞர் அண்ணா அவர்கள் தலையீட்டினல் முன்னாள் இரவு மறியல் நடைபெறவில்லை என்பதை அறிந்தேன். நாடகக்கலை மாநாட்டன்று தலைவர் ஆர். கே. சண்முகம் அவர்களுக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறாமல் தடுத்ததும் இப்போது இராமாயணம் நாடகத்தை மறியல் செய்ய இருந்தவர்களுக்கு அறிவுரை கூறித் தடுத்து நிறுத்தியதும் அறிஞர் அண்ணா அவர்களிடம் நான் வைத்திருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின. அவருக்கு நன்றி கூறி நீண்ட கடிதம் எழுதினேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் பெரியார் அவர்கள்மீது என்னை பொறுத்த வரையில் மனத்தாங்கல் எதுவும் இல்லை. ஏப்ரல் 20 ஆம் தேதி கொட்டகை முதலாளி கான்சாகிப் சேக்தாவுத் அவர்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய விருந்து நடத்தினார். நகரப்பிரமுகர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள். பெரியார் அவர்கள் வந்து கலந்துகொள்ளாதது எனக்குப் பெருங்குறையாக இருந்தது, இருந்தாலும் விருந்து முடிந்ததும் நான் மட்டும் பெரியார் அவர்கள் இல்லம் சென்று வழக்கம்போல் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். மறுநாள் புறப்பட்டு காரைக்குடி வந்து சேர்ந்தோம்.