எனது நாடக வாழ்க்கை/ஸ்பெஷல் நாடக நடிப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்பெஷல் நாடக நடிப்பு

நீண்ட காலம் நாடகத்தில் நடித்துவிட்டு, ஊரில் வந்து வேறு வேலை எதுவுமின்றி இருந்ததால், நாஞ்சில் நாட்டிலுள்ள நாடக நண்பர்கள் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க என்னை அழைத்தார்கள். பெரியண்ணா இதை விரும்பவில்லை. இந்தத் தொந்தரவு அடிக்கடி ஏற்பட்டதால் தவிர்க்க முடியாமல் இரு நாடகங்களில் நடிக்க நேர்ந்தது. ஒன்று அல்லி அர்ஜூனா, மற்றொன்று சதாரம். ஸ்பெஷல் நாடக அனுபவம் எனக்கில்லை. என்றாலும் ஏராளமான ஸ்பெஷல் நாடகங்களைப் பார்த்திருப்பதால் சமாளித்துக் கொள்ளலாம் என்ற துணிவோடு ஒப்புக் கொண்டேன். முதல் நாடகம் அல்லி அர்ஜூனா, சுசீந்திரத்தை அடுத்த தாமரைக் குளத்தில் நடந்தது. என் தந்தையாரோடு இளமையில் நடித்த ஐயப்பன் உடையார் பிள்ளை, அன்று ஸ்ரீ கிருஷ்ணனக நடித்தார். நான் அர்ஜுனன், நாஞ்சில் நாட்டில் அப்பொழுது பிரபலமாய் இருந்த நாகர் கோவில் லக்ஷ்மி அல்லியாக நடித்தார்.

ஒசரவிளை உடையார்பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர். மிகச்சிறந்த ஐயப்பசுவாமி பக்தர். எப்போதும் இவருடைய வாய் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று துதித்த வண்ணமிருக்கும். நவாப் இராஜமாணிக்கம் கம்பெனிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் நாடகத்தை எழுதிப் பயிற்றுவித்தவர் இவரே தாம். மேலும் இவர் தம் பெரு முயற்சியால் நிதி வசூலித்து, இறுதியாகத் தாம் வாழ்ந்து வந்த கடுக்கரை என்ற சிற்றுாரில் ஐயப்ப சாமிக்கு ஒர் ஆலயம் அமைத்துள்ளார். இவர் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவராதலால் என்னைக் கண்டதும் அன்பு பாராட்டி அணைத்துக்கொண்டு பாசமும் பரிவும் காட்டினார்.

இரண்டாவது ஸ்பெஷல் நாடகம் சதாரம். நாகர்கோவில் மீனாட்சிபுரத்திலுள்ள ஸ்ரீமீனாம்பிகா தியேட்டரில் நடந்தது. அதில் நான் மயோனாக நடித்தேன். மற்றப் பாத்திரங்களைத் தாங்கி நடித்தவர்களின் பெயர்கள் எனக்கு நன்கு நினைவில்லை. சதாரத்தைச் சல்லாபம் செய்ய அழைக்கும் கட்டத்தில், நான் பாடிய காதல் பாட்டுக்களை ரசிகர்கள் பிரமாதமாக ரசித்துக் கைதட்டிப் பாராட்டினார்கள். சுவாமிகளின் நாடகங்களிலுள்ள எத்தனையோ காதல் பாட்டுக்களும், உரையாடல்களும் எனக்கு மனப்பாடமாய் இருந்ததால் சிறிதும் சிரமப் படாமல் சமாளித்தேன். தாமரைக் குளத்தைப் போலவே இங்கும் பெரும் புகழ் கிடைத்தது. இரண்டு ஸ்பெஷல் நாடகங்களிலும் பேரும் புகழும் பெற்று விட்டதால் ஸ்பெஷல் நாடகக் காண்ட்ராக்டர்கள் என்னை முற்றுகை யிட்டார்கள். ஆனால் எனக்கோ, என் சகோதரர்களுக்கோ இந்த நாடகங்கள் மகிழ்ச்சி அளிக்கவில்லை. நாடகத் துறையில் எங்களுக்கு ஒரு இலட்சியம் இருந்ததால், இந்த நாடகங்களின் மூலம் நல்ல வருவாய் வந்த போதிலும் கட்டுப்பாடில்லாத இந் நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை.

ஆடம்பரமும் அமுலும்

ஸ்பெஷல் நாடகத்திற்கு நான் நடிக்க ஒப்புக்கொண்டதும் எனது மருமகன் டி. என். சிவதாணுவுக்கும், எங்கள் பழைய நடிகரும் எங்கள் அன்புக்கு பாத்திரருமான கொல்லம் பால கிருஷ்ணனுக்கும் ஒரே குவி. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டு காரர்களுக்குச் சில கையாட்கள் நடத்தும் ஆடம்பரப் படாடோபங்களை எனக்கும் நடத்த இவர்கள் ஆசைப்பட்டார்கள். முதல் நாடகத்தன்று நான் காரில்போய் தாமரைக் குளம் நாடகக் கொட்டகைக்கு முன் இறங்கியதுமே இவர்களது இந்த அமுல் தொடங்கிவிட்டது. என் முன்னை கூடிநின்றவர்களை யெல்லாம் ‘விலகுங்கள் விலகுங்கள்’ என்று சொல்லி, அமளி துமளிப்படுத்தினார்கள். இது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. நான் எவ்வளவோ தடுத்து விலக்கியும் இவர்கள் கேட்கவில்லை. ஸ்பெஷல் நாடக ராஜபார்ட்டுக்கு இந்த ஆடம்பரமெல்லாம் தேவையென்று சொல்லி என் வாயை அடைத்து விட்டார்கள். காட்சி முடிந்து நான் உள்ளே வரும்போது, நாற்காலி கொண்டு  வந்து போடுவதும், சோடா வேண்டுமா, காபி வேண்டுமா என்று கேட்பதும், விசிறி கொண்டுவந்து வீசுவதுமாக, நாடகம் முடிந்து நான் மீண்டும் காரில் ஏறும்வரையில் அவர்கள் அரங்கிற் குள் நடத்திய பாவனை, படாடோபங்களை யெல்லாம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

பாலகிருஷ்ண சாஸ்திரி கம்பெனி

திடீரென்று ஒரு நாள் பாலகிருஷ்ண சாஸ்திரியிடமிருந்து கடிதம் வந்தது. மடிந்து கொண்டிருந்த பழைய ஜெகனாதையர் கம்பெனி நடிகர்களில் சிலர் அவருடைய நிருவாகத்தில் வேலூரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணசாஸ்திரி ஏற்கனவே எங்களுக்குப் பல ஆண்டுகளாக அறிமுகமானவர். மின்சாரம் இல்லாத கொட்டகைகளில் அவர்தான் இஞ்சின் கொண்டு வந்து, வாடகைக்கு மின்சாரம் கொடுத்து உதவுவார். எங்களிடம் அவருக்கு அபார நம்பிக்கை. வேலூருக்கு வந்து, தாம் நடத்தும் கம்பெனியில் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் கடிதம் எழுதியிருந்தார். ஊரில் சும்மா இருப்பதைவிடச் சில காலம் அவரது நிர்வாகத்தில் இருக்கலாமென எண்ணினோம், பெரியண்ணாவை ஊரில் அமைதியாக இருக்கவிட்டு நான், சின்னண்ணா, பகவதி மூவரும் வேலூருக்குப் பயணமானோம், வேலூருக்கு வந்தபின்தான் அறிந்தோம் கம்பெனியின் நிலைமையை.

பாலசுப்பிரமணியத்தின் அன்பு

கம்பெனியின் நிருவாகம் யாரிடத்தில் இருக்கிறதென்றே புரியவில்லை. சாப்பாட்டு நிருவாகம் ஒழுங்காக இல்லை. டி. பால சுப்பிரமணியம் தாயுடன் தனியே குடியிருந்தார். நாங்கள் வந்ததற்காக உண்மையில் சந்தோஷப்பட்டவர் அவர் ஒருவர்தாம். அவரும் நாங்களும் நன்கு அளவளாவி மகிழ்ந்தோம். அவருடைய தாயார் எங்களிடம் மிகவும் பரிவு காட்டினார்கள். டி. பால சுப்பிரமணியம் ஜெகனாதையரின் ஸ்ரீபால மீன ரஞ்சனி சங்கீத சபையில் இருந்தவர். பழம் பெரும் நடிகர். ஐயர் கம்பெனியில் சங்கரதாஸ் சுவாமிகள் ஆசிரியராக இருந்த காலத்தில், அவரிடம் பயின்றவர். சுவாமிகளிடம் அளவுகடந்த பக்தியுடையவர். இலக்கியப் பற்று மிகுந்தவர். சுவாமிகளின் பக்தி ரசக் கீர்த்தனை என்ற நூலினையும், லவகுசா நாடகக் கையெழுத்துப் படியினையும் அவர் காலமாகுமுன் எனக்குக் கொடுத்து உதவியவர் என்பதை நன்றியோடு இங்குக் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் போனபின் வேலூரில் சில நாடகங்கள் நடந்தன. வசூல் இல்லை. சாஸ்திரி அடிக்கடி வெளியூருக்குப் போய்க் கொண்டிருந்தார். சாப்பாட்டு நிருவாகம் ஒரே ஊழலாக இருந்தது. ஒருநாள் பகல் பதினொரு மணிவரை அடுப்பே எரியவில்லை. அதற்கு மேல் அரிசி காய் கறிகள் எல்லாம் வந்தன. சமையல் ஆரம்ப மாயிற்று. பிற்பகல் இரண்டரை மணிக்குத்தான் உணவு கிடைத்தது. நாங்கள், இருக்கும் நிலைமையைப் பார்த்து வருந்தினோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கம்பெனிக்கு யார் பொறுப்பாளி யென சாஸ்திரியைக் கேட்டோம். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. “நாங்கள் இந்த நிலைமையில் இங்கே இருப்பது சாத்தியமில்லை; எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள்” என்று வேண்டினோம். சாஸ்திரியும் சிந்தித்தார் கடைசியாய் எப்படியோ ஒருவகையாக நாங்கள் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தோம்:

எட்டையபுரத்தார் பரிவு

எட்டயபுரம் இளையராஜா காசி விஸ்வநாத பாண்டியன் சில காலம் சொந்தக் கம்பெனி வைத்து நடத்தினார். பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பெனி கலைக்கப்பட்டது. அக்கம்பெனியின் காட்சிகளும் உடைகளும் அவரிடமிருந்தன. அவற்றில் உபயோகமான பொருட்களை எங்களுக்கு கொடுத்து உதவுவதாகக் கூறினார். மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தினார்.

எங்களிடம் ஏற்கனவே இருந்த காட்சிகள், உடைகள் இவற்றுடன் எட்டையபுரம் இளைய ராஜா காசி விசுவநாதபாண்டியன் அவர்கள், அன்புடனளித்த சில சாமான்களையும் வைத்துக் கொண்டு மீண்டும் திண்டுக்கல்லிலேயே கம்பெனியைத் துவக்கினோம். பழைய நடிகர்களில் பலர் மறுபடியும் வந்து சேர்ந்தார்கள். புதிதாகச் சில நடிகர்களையும் சேர்த்துக்கொண்டோம். கம்பெனி ஒழுங்காக நடைபெற்றது.