என் சரித்திரம்/107 கண்டனப் புயல்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—107

கண்டனப் புயல்

சீகசிந்தாமணிப் புத்தகம் தமிழ் நாட்டாருடைய அன்புக்கு உரியதாயிற்று அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட அறிஞர்கள் என்னைப் பாராட்டியதோடு பத்துப் பாட்டுப் பதிப்பையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்கள். சீவகசிந்தாமணியின் முகவுரையிலும் நூலின் அடிக்குறிப்புக்களிலும் புறநானூறு முதலிய பல பழைய நூற் பெயர்களைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பதிப்பிக்க வேண்டுமென்று எனக்கு ஊக்கமளித்து வந்தார்கள்.

சிலர் விஷமச் செயல்

இப்படி அபிமானிகளுடைய ஆதரவு எங்கும் வளர்ந்து வந்த போது ஒரு பால் சில பொறாமைக்காரர்களின் விஷமச் செயல்களும் தலைதூக்கத் தொடங்கின. பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர் சீவக சிந்தாமணிப் பதிப்பைப்பற்றிப் பல வகையான கண்டனங்களைக் கூறியும் எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில் உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் பிழை திருந்தவேண்டுமென்பதன்று; எப்படியாவது கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே, கண்டனத்தின் முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித் தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் உலகத்தில் எந்தக் காலத்திலும் உண்டு.

பிழையும் திருத்தமும்

சிந்தாமணியை வெளியிட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அத்தகைய நூற்பயிற்சி எவ்வளவு மங்கியிருந்ததென்பதைத் தமிழுலகு நன்கு அறியும். அப்போது மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு காரியத்தில் பிழைகள் இருப்பது இயல்பே. நூற்பதிப்பு விஷயத்தில் வரவரப் பாடங்கள் திருந்துவதும், உண்மைப் பொருள் தெளிவாவதும், புதிய புதிய செய்திகள் புலப்படுவதும் புதியனவல்ல. எடுத்த எடுப்பிலே முற்றத் திருந்திய பதிப்பை வெளியிடுவதென்பது இயலாத காரியம். என் முதற் பதிப்புக்களில் அமைந்திருந்த பல பிழைகளைப் பிற்காலத்தில் நானே திருத்திப் பதிப்பித்திருக்கிறேன். புதிய புதிய ஆராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் அறிவால் பல காலமாகத் திருந்தாத செய்திகள் திருந்தியதுமுண்டு.

“அறிதோ றறியாமை கண்டற்றால்”

என்று திருவள்ளுவர் கூறியது பொய்யாகுமா?

சிந்தாமணிப் பதிப்பில் என் அறியாமையால் சில பிழைகள் அமைந்ததுண்டு. திருத்தக்கதேவர் மதுரைக்குச் சென்று சங்கவித்துவான்களைக் கண்டனரென்று முதற் பதிப்பில் எழுதியிருக்கிறேன். இது தவறென்று பிறகு தெரிய வந்தது. ஜைன சங்கத்தைச் சார்ந்தவர்களை அவர் கண்டாரென்ற உண்மையைப் பிற்கால ஆராய்ச்சியால் அறிந்து கொண்டேன். இப்படியே நூற்பெயர்கள், புலவர் பெயர்கள் முதலிய பலவற்றில் பிழையான உருவங்களைச் சிந்தாமணி முதற் பதிப்பிற் காணலாம். அவற்றை நாளடைவில் திருத்திக் கொண்டேன். இன்று இருக்கும் ஒரு பாடம் நாளைக் கிடைக்கும் புதிய பாடத்தால் பிழையாக நேர்வதும் உண்டு. மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒன்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்?

இதனை யாவரும் உணர்வர். ஆனால் பொறாமையால் தூண்டப் பெற்றவர்களுக்கு இத்தகைய விஷயங்களெல்லாம் புலப்படுவதில்லை. கும்பகோணத்தில் பள்ளிக்கூடத் தமிழாசிரியராக இருந்த மூவர் சிந்தாமணிக் கண்டனத்தில் ஊக்கங் கொண்டனர். அவர்கள் என்னாற் சில உபகாரங்களைப் பெற்றவர்களே. ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர்.

இந்தக் கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சில நாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப்பளிக்க மனம் வராது.

முருகனைப் பிரார்த்தித்தல்

ஒரு நாள் பத்துப் பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்னோடு திருமானூர்க் கிருஷ்ணையரும், குடவாயில் சண்முகம் பிள்ளையென்பவரும், வேறு சில மாணாக்கர்களும் இருந்தனர். கண்டனக் கூட்டத்தாருடைய செயல்களைப் பற்றிய பேச்சு வந்தது. நூலை ஆராய்வதில் உண்டாகும் சிரமத்தால் அலைவு பெற்ற என் உள்ளத்துக்கு இக்கண்டனக் கூட்டத்தாருடைய செயல் அதிக வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘இக்கண்டனத்துக்கு விடைகூற ஆரம்பித்தால் என் ஆராய்ச்சி வேலை நின்று விடுமே. நியாயமான கண்டனத்திற்குப் பதில் சொல்லலாம். அநியாயமான பொறாமைக் கூற்றுக்குப் பரிகாரம் ஏது?’ என்று எண்ணினேன். என் மனம் முருகக் கடவுளை நினைத்து உருகியது. உடனே அவ்வுள்ள உணர்ச்சி சில செய்யுட்களாக வெளிவந்தது. அவற்றிற் சில வருமாறு:

அகமே யொருசொல் அறைவன் னிகரில் .
மகமே ருவளைத் தருள்வள் ளலருள் .
குகனே முருகா குமரா திருவே.
ரகவே லவவென் றழைநீ தினமே.

[அகமே - மனமே.]

மலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன்
அலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ்
கலர்கண் டறியாக் கவினே ரகவெற் .
பலர்கண் டிகழும் படிவைத் ததெனே.

[அலர்-மலர். கலர் - கீழ் மக்கள். கவின் ஏரக என் பலர் கண்டு இகழும்படி வைத்தது எனே - அழகிய சுவாமி மலையை யுடையாய்! அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன்?]

ததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம்
பதையா துறையும் படிவைத் தருள்வாய்
உதையா திபனே ரொளியா யளியாய்
சிதையா துறையுந் திருவே ரகனே.

[ததை-செறிந்த, உதையாதிபன்-சூரியன், அளி-அருள்.]

நான் எழுதிய சமாதானம்

நான் விடையொன்றும் வெளியிடாமல் இருந்தது கண்டு கண்டனக்காரர்களுக்குப் பின்னும் அதிகக் கோபமே உண்டாயிற்று. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்று ஒரு பிரசுரம் வெளி வந்தது. பிழையல்லாதனவற்றையும் பிழையாக அதில் சொல்லியிருந்தனர். அவற்றிற்குச் சமாதானம் சொல்லத்தான் வேண்டுமென்ற கருத்து எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் இரவில் நாலாம் ஜாமத்தில் எழுந்து சமாதானம் எழுதிக்கொண்டிருந்தேன். மனம் மிக வருந்தியது. அப்போது கம்பளத்தான் ஒருவன் வீதியில் “ஐயா, உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்; கவலைப்பட வேண்டாம்” என்று தன் வழக்கப்படியே சொல்லி விட்டுப் போனான். அவன் வழக்கமாகச் சொன்னாலும் எனக்கு அது விசேஷமாகத்தோற்றியது. ஒருவாறு சமாதானத்தை எழுதி முடித்தேன். விடிந்தது.

காலைக் கடன்களை முடித்த பிறகு நான் எழுதிய சமாதானப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, சாது சேஷையரிடம் சென்றேன். கண்டனத்துக்கு நான் எழுதிய சமாதானத்தை வேறொருவர் படித்துப் பார்த்தால்தான் அதன் பொருத்தம் தெரியுமென்ற எண்ணத்தாலும், என்பால் பேரன்புடைய அவர் ஏதேனும் யோசனை கூறக் கூடுமென்ற கருத்தாலுமே அவரிடம் போனேன்.

சாது சேஷையர் உபதேசம்

நான் எழுதிக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து, “சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்குத் தெரியுமே. தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று. பிழையென்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன். பார்வையிட வேண்டும்” என்றேன். அவர் வாங்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்பார்த்து நின்றேன்.

அவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கலக்கமுற்றேன். அவர் என்னைப் பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்: “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திரிவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவரகள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறினார்.

முதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன். தீர்மானத்தோடு செய்த ஒரு காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே? ‘சிறிதும் யோசியாமல் கிழித்து விட்டாரே’ என்று எண்ணினேன்.

“என்னை யோசிக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும். உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும். அவர்கள் தங்கள் செயலை நினைந்து தாமே வருந்தினாலும் வருந்துவர்; ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டேயிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.

இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன. “நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை” என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன். இதற்கு மூல காரணம் சாது சேஷையரென்பதை என்றும் மறவேன்.

சிலர் கடிதங்கள்

ஒரு வகையாகக் கண்டனப் புயலினின்றும் ஒதுங்கிக் கொண்டேன். பத்துப்பாட்டில் மனம் தீவிரமாகச் செல்லலாயிற்று. ஆனாலும் அங்கங்கே இருந்த நண்பர்கள் கண்டனக்காரர்களுடைய இயல்பைக் கண்டித்து எனக்குக் கடிதம் எழுதினர். சிலர் தாங்கள் அவற்றைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரிவித்தனர். பூவை கலியாணசுந்தர முதலியார் முதலியவர்கள் இவ்வாறு எனக்கு எழுதினர். நான் “கண்டனங்களுக்குச் சமாதானம் எழுத வேண்டாம்” என்று தெரிவித்தேன்.

சென்னையிலிருந்த தி. த. கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து 12-11-1888ஆம் தேதி யன்று ஒரு கடிதம் வந்தது. பத்துப்பாட்டு விஷயத்தில் அவருக்கும் எனக்கும் போட்டியிருந்தும் அவர் எழுதிய கடிதத்திற் கண்ட விஷயங்கள் எனக்கு ஆறுதலையும் வியப்பையும் அளித்தன.

“. . . . .சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம் என்னுமொரு துண்டுப் புத்தகமுங் கைக்கெட்டியது. அதை வாசித்த போதே எழுதியோருடைய கருத்து நன்கு புலப்பட்டதாயினும், அவர் கூற்றினுஞ் சிறிதுண்மையிருக்கலாமென்ற ஐயப்பாட்டோடு என்னுடைய சிந்தாமணி எழுத்துப் பிரதியை எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். பார்த்தபோது அம்ம! ஒன்றும் அவர் கூறியபடியின்றித் தங்கள் பாடம் போன்றே யிருக்கக் கண்டேன். அது நான் செய்த, பாவந்தான்போலும். . . அவர் முறைமையோடு கூடாமையாலும், மனப் புழுக்கத்தோடு தெழித்துரைக்கின்றமையானும் அறிவுடையாரைத் தமக்குப் புறம்பாக்கிக் கொண்டன ரென்பதே என்னுடைய துணிபு. . . “ என்பது அக்கடிதத்தின் ஒரு பகுதி.

அவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கண்டனத்தால் விளைந்த மனவருத்தம் இந்த ஒரு கடிதத்தாலே நீங்கி விட்டதென்றே சொல்லலாம்.

புயல் வேறு திக்கில் திரும்பியது

கண்டனக்காரர்கள் என் மௌனத்தைக் கண்டு சலித்துப் போயினர். என்னுடன் இருந்து உதவி செய்து வந்த குடவாயில் சண்முகம்பிள்ளை நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கண்டனக் கூட்டத்தாரைக் கண்டிக்கப் புகுந்தார். அவர் பாஷைக்கு இவர் பாஷை தாழவில்லை. கண்டனம் பல பல துறையிலே சென்றது. ஒருவருக்கொருவர் அவரவர் பதிப்பித்த பாட புத்தகத்திலும் உரையிலும் உள்ளவற்றைப் பற்றிய கண்டனத்திலே புகுந்தனர். வசனமெழுதினர்; வசை பரப்பினர்; செய்யுளாகவும் இந்தச் சண்டை பரிணமித்தது. நேருக்கு நேரே சொல்லவும் நாணும் வார்த்தைகள் அச்சில் செய்யுளில் வந்து புகுந்தன. கடைசியில் மிஞ்சியது ஒன்றும் இல்லை.

இந்தச் சண்டையில் ஈடுபடத் தொடங்கியது முதல், என்பால் வருவதை நிறுத்திக்கொள்ளும்படி சண்முகம்பிள்ளையிடம் சொல்லி விட்டேன்.