என் சரித்திரம்/108 பத்துப்பாட்டுப் பதிப்பு
அத்தியாயம்—108
பத்துப்பாட்டுப் பதிப்பு
பத்துப்பாட்டைப் பதிப்பிக்கும் விஷயத்தில் பொருள் முட்டுப்பாடு நேர்ந்தால் என்ன செய்வதென்ற யோசனை எனக்கு உண்டாயிற்று. சிந்தாமணிக்குச் செய்தது போலவே இதற்கும் அன்பர்களிடம் கையொப்பம் வாங்கலாமென்று எண்ணி ஒரு பத்திரிகை அச்சிட்டுப் பலருக்கு அனுப்பினேன்.
கையொப்பம் வாங்கியது
பத்துப்பாட்டுப் பிரதி ஏதேனும் இருக்கிறதா என்று பொள்ளாச்சி வித்துவான் சிவன்பிள்ளை என்பவருக்கு எழுதியிருந்தேன். அவர் தம்மிடமிருந்த பிரதி ஒன்றை அனுப்பினார். ஒரு வகையாக ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு திருமானூர்க் கிருஷ்ணையருடன் சென்னைக்குப் புறப்படச் சித்தமானேன்.
ஆறுமுகத் தம்பிரான்
1888 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நல்ல நாளாக இருந்தது. அன்று காலையில் குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனமடத்துக் காறுபாறாகிய தாண்டவராயத் தம்பிரானும் அவ்வாதீன வித்துவானாகிய தில்லைநாத பிள்ளையும் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். “தங்களுடைய சகபாடியாகிய திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஆறுமுகத் தம்பிரானவர்களை எங்கள் ஆதீனத்துக்குச் சின்னப் பட்டமாக அபிஷேகம் செய்ய உத்தேசித்து அனுமதி கேட்பதற்காகத் திருவாவடுதுறைக்குப் போயிருந்தோம். ஸந்நிதானம் ஒப்புக் கொண்டது. தங்களிடத்திலும் இந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்துப் போக வந்தோம்” என்றார்கள். “எனக்கு அளவற்ற சந்தோஷம். படித்தவர்களை ஆதீனத் தலைவர்களாக நியமிப்பது நல்ல காரியம். ஆறுமுகத் தம்பிரான் நன்றாகப் படித்தவரே. நான் இன்று பத்துப் பாட்டை அச்சிடுவதற்காகச் சென்னைக்குப் புறப்படப் போகிறேன். இன்று இந்த நல்ல செய்தியைக் கேட்டது எனக்கு ஊக்கத்தை உண்டாக்குகிறது. உங்கள் முயற்சியும் என் முயற்சியும் அனுகூலமாக நிறைவேறுமென்று தோற்றுகிறது” என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினேன்.
அம்பலவாண தேசிகர் செய்த உதவி
பிறகு என் தந்தையாரிடமும் பிறரிடமும் விடை பெற்றுக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தேன். அங்கே ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகர் என் முயற்சியை அறிந்து மகிழ்ச்சியோடு எனக்கு உத்ஸாகமுண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லி அறுபது ரூபாய் பணமும் வழங்கிச் சென்னைக்கு அனுப்பினார்.
மறுநாள் நானும் கிருஷ்ணையரும் சென்னையை அடைந்து சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கினோம். அவர் அப்போது அலகாபாத்துக்குப் போயிருந்தார். கொண்டு சென்ற சாமான்களையெல்லாம் அவர் பங்களாவில் வைத்து விட்டு என் நண்பர்களைப் பார்க்கச் சென்றேன். தேரழுந்தூர் இராஜகோபாலாசாரியரைப் பார்த்து நான் வந்த விஷயத்தைச் சொல்லி அச்சுக்கூடமொன்றைத் திட்டம் செய்ய வேண்டுமென்று தெரிவித்தேன். அவர் சிந்தாமணியை அச்சிட்ட திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்திலேயே கொடுத்து விடலாமென்று சொல்லவே அங்கேயே பதிப்பிக்க ஏற்பாடு செய்தேன்.
அச்சுக்கூடத் தலைவர் கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு, “சிந்தாமணியை விட இதில் வேலை அதிகம் இருக்கிறது. இதற்கு அதிகக் கூலி கொடுக்க வேண்டும்” என்று கேட்டார். பழகின இடமென்ற எண்ணத்தால் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன்.
விடுதி
இராமசுவாமி முதலியார் பங்களாவில் ஜாகையும் புரசைப்பாக்கத்தில் ஒரு விடுதியில் உணவும் வைத்துக் கொண்டு அவதானம் பாப்பையர் வீதியிலிருந்த அச்சுக்கூடத்தில் அச்சு வேலையைக் கவனித்து வந்தேன். இது சிரமமாக இருந்தமையால் நான் உணவு கொள்ளும் விடுதியிலேயே ஓர் அறையில் தங்கி இரவு நேரங்களில் புரூப் முதலியன பார்த்து வந்தேன். அந்த அறையை வாடகைக்கு வைத்துக்கொண்டு படித்து வந்தவராகிய கதிராமங்கலம் சுப்பிரமணிய ஐயரென்னும் மாணாக்கரே இவ்வாறு செய்யலாமென்று சொல்லி எனக்காக ஏற்பாடு செய்தார்.
பத்துப்பாட்டு மூலப் பிரதியையே பாராத நான் சென்னையில் பின்னும் எங்கேனும் வித்துவான்கள் வீடுகளில் ஏடுகள் கிடைக்குமோ என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பெரிய வித்துவானுடைய ஞாபகம் வந்தது.
அண்ணாசாமி உபாத்தியாயர் வீடு
பல வருஷங்களுக்கு முன் மயிலாப்பூரில் திருவம்பலத்தின்ன முதம்பிள்ளையென்ற ஒரு பெரிய வித்துவான் இருந்தார். அவர் திருநெல்வேலி அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்; பழைய தமிழ் நூல்களில் தேர்ந்த அறிவினர்; பிள்ளையவர்கள் இளமைக் காலத்தில் சென்னைக்குச் சென்றிருந்தபோது அந்த வித்துவானிடம் சில நூல்களைப் பாடங் கேட்டார். திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையிடம் ஏட்டுச் சுவடிகள் இருந்தனவென்று என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
இந்தச் செய்திகள் என் நினைவுக்கு வந்தவுடனே, ‘மயிலாப்பூரில் அவர் வசித்த வீடு எங்கே இருக்கிறது? அவருடைய சந்ததியார் யார் இருக்கிறார்கள்?’ என்று விசாரிக்கத் தொடங்கினேன். அவர் எங்கிருந்தாரென்று சொல்வார் ஒருவரும் இல்லை. அக்காலத்தில் மயிலாப்பூரிலுள்ள திருவண்ணாமலை மடத்தில் சரவணச் சாமியார் என்ற ஒரு துறவி இருந்தார். யாழ்ப்பாணத்தாராகிய அவரை ஸ்ரீ ஆறுமுக நாலவர், ‘சபாப்பிரசங்க சிங்கமாகிய சரவணச் சாமியார்’ என்று பாராட்டியிருக்கிறார். அவர் தமிழ் வித்துவான்; வைத்தியத்தில் இணையற்ற திறமையுடையவர். பிராயத்தில் முதிர்ந்தவராகிய அவரைக் கேட்டால் ஏதேனும் விவரம் தெரியக் கூடுமென்று சிலர் கூறவே திருவண்ணாமலை மடத்துக்குச் சென்று அப்பெரியாரைப் பார்த்தேன். நான் பார்த்த காலத்தில் அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், ஆனாலும் கட்டுத் தளராத உடம்பும் எடுப்பான பார்வையும் உடையவராக இருந்தார். அவருடன் சில மாணாக்கர் இருந்து பணிவிடை செய்து வந்தனர். சித்த வைத்தியராகிய அவர் தம்மைத் தேடி வந்தவர்களுக்கு மருந்து கொடுத்து நோய்களை நீக்கி வந்தார்.
நான் அவரிடம் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையைப் பற்றி விசாரித்தேன். நல்ல வேளையாக அந்த வித்துவானைத் தமக்குத் தெரியுமென்றும், அவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றும், அவருடைய ஏட்டுப் பிரதிகளெல்லாம் மந்தைவெளியிலுள்ள அண்ணாசாமி உபாத்தியாயர் வீட்டில் ஒருகால் கிடைக்கலாமென்றும் அந்தப் பெரியார் கூறினார். மந்தைவெளி சென்று அண்ணாசாமி உபாத்தியார் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். அண்ணாசாமி உபாத்தியாயர் காலமாகிவிட்டமையால் அவர் மாப்பிள்ளையையே நான் பார்க்க முடிந்தது. அவருடைய சமயம் அறிந்து தக்க மனிதர்களுடன் போய்க் கேட்டபொழுது தம் வீட்டிலிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். அவற்றில் அபூர்த்தியாக இருந்த பத்துப்பாட்டு உரைப் பிரதி கிடைத்தது. திருமுருகாற்றுப்படை உரைப் பிரதி ஒன்றும் இருந்தது. அவற்றையும் வேறு சில சிறு நூல்களையும் எடுத்துக் கொண்டேன். பதினெண் கீழ்க்கணக்கு முழுவதும் உள்ள சிதிலமான பிரதி ஒன்று கிடைத்தது அதில்தான் கைந்நிலை என்ற நூல் இருந்தது.
பிறகு தபால் இலாகா ஸூபரிண்டெண்டாக இருந்த வி. கனகசபைப் பிள்ளையிடமிருந்து பத்துப்பாட்டு உரைப் பிரதியொன்று கிடைத்தது. இவற்றையெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டேன்.
பதிப்பு ஆரம்பம்
பத்துப் பாட்டு அச்சிட ஆரம்பித்தேன். மிக விரைவாக வேலை நடைபெற்று வந்தது. திருமானூர்க் கிருஷ்ணையர் இடை விடாமல் உடனிருந்து உதவி புரிந்தார். ஓய்ந்த நேரங்களில் எல்லாம் தேரழுந்தூர் இராஜகோபாலாசாரியரும் வந்து துணை செய்வார்.
பூண்டி அரங்கநாத முதலியார் சல்லாபம்
பூண்டி அரங்கநாத முதலியாரிடம் அடிக்கடி சென்று பேசிப் பழகினேன். இந்த முறை அவரது பழக்கம் பின்னும் அதிகமாயிற்று. அவரிடம் போனால் தமிழ்ப் பாட்டுச் சொல்லுவதும் தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேசுவதுமாகவே பொழுது போகும். நேரம் போவது தெரியாமல் உணவையும் மறந்து பேசிக்கொண்டிருப்போம்.
அக்காலத்தில் முதலியார் ‘கச்சிக் கலம்பகம்’ என்ற ஒரு பிரபந்தத்தை இயற்றிக் கொண்டிருந்தார். ஆதலின் கலம்பகங்களின் இலக்கணத்தைப் பற்றி நாங்கள் அதிகமாகப் பேசுவோம். நான் பிள்ளையவர்கள் இயற்றிய கலம்பகங்களிலிருந்தும் அவரிடம் பாடம் கேட்ட கலம்பகங்களிலிருந்தும் பல செய்யுட்களைச் சொல்வேன். பாட்டில் இன்னது சாரமான பாகமென்று விரைவில் அறிந்து சந்தோஷிக்கும் சக்தி அரங்கநாத முதலியாரிடம் மிக அதிகமாக இருந்தது. அவர் ஏகசந்தக் கிராகி. அவர் பாடல்களை முக மலர்ச்சியோடு கேட்பதும், கேட்கும்போது தம் மனம் முழுவதையும் அந்தப் பாடற் பொருளிலே செலுத்துவதும், அங்கங்கே நயம் காணும்போது மகிழ்வதும். அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாகப் புலப்படுத்துவதும் அவரோடு பழகும் நேரத்தை இன்பமயமாக்கின. “உங்களைப் போன்றவர்கள் இந்த ஊரில் இருந்தால் நன்றாகப் பொழுது போகும்” என்று அவர் அடிக்கடி சொல்வார்.
காலேஜ் விடுமுறை முற்றும் முடிந்தமையால் ஜனவரி மாதம் கும்பகோணம் புறப்பட வேண்டியவனாக இருந்தேன். ஆகவே அச்சுக்கூடத்தில் வேலை தடைப்படாமல் நடைபெறும்படி ஏற்பாடு செய்து திருமானூர்க் கிருஷ்ணையரைச் சென்னையிலேயே வைத்து விட்டு நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று நாள் விடுமுறை கிடைத்தாலும் சென்னைக்குப் போய்த் தங்கிப் பத்துப் பாட்டுப் பதிப்பைக் கவனித்து விட்டு வருவேன். அக்காலத்தில் புரசைப்பாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும், பிறகு தொழுவூர் வேலாயுத முதலியாரும் காலமாயினமை தெரிந்து மிக வருந்தினேன்.
சென்னை உத்தியோகத்தை மறுத்தது
பூண்டி அரங்கநாத முதலியார் அடிக்கடி எனக்குக்கடிதம் எழுதலாயினர். வசனமாகவும் செய்யுளாகவும் கடிதங்கள் வந்து சென்றன. ஒரு சமயம் அவர் எனக்கு, “தாங்கள் சென்னையிலுள்ள பிரஸிடென்ஸி காலேஜு க்கு வந்தால் உங்கள் பதிப்பு வேலைகள் நன்றாக நடைபெறும். நல்ல சௌகரியங்களும் கிடைக்கும். எனக்கும் திருப்தியாக இருக்கும். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வேன்” என்று எழுதியிருந்தார். முதலியாருக்குச் சென்னையிலிருந்த செல்வாக்கை நான் நன்றாக அறிந்தவன். அவர் மனம் வைத்தால் மிக எளிதில் என்னைப் பிரஸிடென்ஸி காலேஜுக்கு மாற்றும்படி செய்து விடுவார். எனக்கும் சென்னைக்குச் செல்வதில் விருப்பம் இருந்து வந்தது. நான் மேற்கொண்டிருக்கும் தமிழ் நூற்பதிப்புக்குச் சென்னை வாசம் எவ்வளவோ உதவியாக இருக்கும். கும்பகோணத்தில் இருந்தபடியே சென்னையில் பதிப்பை விரைவில் நடத்த முடியவில்லை. ஆதலின், “இறைவன் திருவருள் அரங்கநாத முதலியார் மூலம் தூண்டுகிறது” என்றுதான் முதலில் எண்ணினேன். திருவாவடுதுறைப் பழக்கம் விட்டுப் போகுமே என்ற நினைவு வந்து அந்த எண்ணத்தை மாற்றியது. சுப்பிரமணிய தேசிகர் என்னைக் கும்பகோணத்துக்கு அனுப்பியபோது, “இப்படியே பட்டணத்துக்கும் போய் மகாலிங்கையர், விசாகப் பெருமாளையர் ஆகியவர்கள் இருந்த இடத்திலும் இருந்து விளங்கவேண்டும்” என்று அன்போடு வாழ்த்தியது என் உள்ளத்தில அப்போது தோற்றியது. ‘பெரியார் அன்போடு கூறியது பலிக்கலாம். அது பலிக்கும் காலமும் இதுவாக இருக்கலாம்’ என்று நினைத்தேன்.
அரங்கநாத முதலியார் எழுதிய கடிதத்தை என் தந்தையாருக்குப் படித்துக் காட்டினேன். அவர், “நல்லதுதான். ஆனால் இங்கே கிடைக்கும் காவேரி ஸ்நானம் அங்கே ஏது? நான் ரெயில் வண்டியில் ஏறுவது இல்லையே. விருத்தாப்பிய காலத்தில் காவேரி தீரத்தை விட்டுப் போக மனம் இடம் கொடுக்கவில்லையே!” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் பல விதமாகத் தோற்றிய என் யோசனைகளை மாற்றின. நான் ஒரு முடிவுக்கு வந்தேன். “என் தந்தையாரது முதுமைப் பிராயத்தைக் கருதி இங்கே இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என்று முதலியாருக்கு எழுதி விட்டேன். இது 1889 ஆம் வருஷம் மார்ச்சு மாத ஆரம்பத்தில் நிகழ்ந்தது.
ஏப்ரல் மாத விடுமுறையில் நான் சென்னை சென்றபோது என் தந்தையார் கருத்தை முதலியாருக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். அந்த முறை அரங்கநாத முதலியார் தாம் இயற்றிய கச்சிக்கலம்பகச் செய்யுட்களை எனக்குக் காட்டினார். நான் பார்த்து எனக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைச் சொன்னேன். அவர் மிக்க திருப்தியோடு ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் திருவனந்தபுரம் காலேஜ் புரொபஸர் சுந்தரம் பிள்ளையைச் சந்தித்துப் பேசினேன். அவர் தாம் இயற்றிய மனோன்மணீயமென்னும் நாடகத்திற் பல பகுதிகளைக் காஸ்மொபாலிடன் கிளப்பில் அரங்கநாத முதலியாரிடமும் என்னிடமும் படித்துக் காட்டினார்.
பதிப்பு நிறைவேறியது
பத்துப் பாட்டின் பெருமையை உணர்ந்த இராஜகோபாலாசாரியார் அதிலுள்ள அரும் பதங்களையும், அருந்தொடர்களையும் தொகுத்து அகராதியாக வெளியிடலாமென்று சொல்லி அகராதி செய்யக் கருவியாகவுள்ள பெட்டி ஒன்றைக் கொணர்ந்து அகராதி செய்யும் முறையைக் காட்டினார். மிகவும் சுலபமாக அகராதி முடிந்ததைப் பார்த்து அந்தப் பெட்டியைப்போல இரண்டு செய்து வைத்துக்கொண்டேன். அது முதல் அகராதி செய்வதென்பது சிறிதும் சிரமமில்லாத காரியமாகி விட்டது.
இறைவன் திருவருளால் 1889-ஆம் வருஷம் ஜூன் மாதத்தில் பத்துப் பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறே மாதத்தில் அந்த நூல் பூர்த்தியானது பற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை.